Published:Updated:

முதல் பாகத்தை மிஞ்சுகிறதா கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி-2

கருப்பு
முதல் பாகத்தை மிஞ்சுகிறதா கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி-2
முதல் பாகத்தை மிஞ்சுகிறதா கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி-2

இந்த வாரமும் 'மகிழ்மதியே இளைப்பாறு' தொடர்ந்து திரை அரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக இருப்பதால், பெரிதாக படங்கள் எதுவும் வெளியாகவில்லை. கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி இரண்டாம் பாகம் மட்டுமே பல திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. 
2020ம் ஆண்டு வரை கணக்கு போட்டு வாழ்ந்து வருவது மார்வெல்லும், டிசி காமிக்ஸ் நிறுவனங்களும் தான். இன்னும் 4 ஆண்டுகளுக்கு என்ன படம் ரிலீஸ் செய்யப்போகிறார்கள் என கடந்த ஆண்டே பட்டியல் வெளியிட்டு விட்டார்கள். மார்வெல் காமிக்ஸ் 2014-ம் ஆண்டு தயாரித்து வெளியிட்ட 'கார்டியன்ஸ் ஆஃப் த கேலக்ஸி' திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் வேட்டையாடியது. 

கிறிஸ் ப்ராட், WWE சூப்பர் ஸ்டார் பட்டிஸ்டா  என முன்னணி நடிகர்களுடன்  'ராக்கெட்' என்ற ரக்கூன் கதாபாத்திரத்துக்கு பிராட்லி கூப்பரும், 'க்ரூட்' என்ற மரமனிதன் கதாபாத்திரத்துக்கு வின் டீசலும் குரல் கொடுத்துள்ளனர். மேலும், சில்வர் ஸ்டோலனும் கேமியோ ரோல் ஒன்றில் நடித்திருக்கிறார். அதிலும், பல்வேறு மாடுலேஷனில் வின் டீசல் சொல்லும், 'ஐ ஆம் க்ரூட்' வசனம் தெறி. 
பூமியில் இருந்து வேற்று கிரகத்தைச் சேர்ந்த மனிதர்களால் சிறு வயதிலேயே கடத்தப்படுகிறான் கதாநாயகன் பீட்டர் கியுல். வேற்றுக்கிரக மனிதர்களோடு வளரும் அவனுக்கு, சக்தி வாய்ந்த பொருள்களைத் திருடி விற்பதுதான் தொழில். வெவ்வேறு சூழ்நிலைகளில் அறிமுகமாகும் சூப்பர் பவர் கொண்ட கதாநாயகியான கமோரா, 'ராக்கெட்' என்ற ரக்கூன், 'ஐ யம் க்ரூட்' என்ற ஒற்றை வசனம் மட்டுமே பேசும் மரமனிதனும் காலப்போக்கில் கதாநாயகனின் நண்பர்களாகிறார்கள். அவர்களோடு இணைந்து வெறித்தனமான வில்லனிடம் இருந்து, கதாநாயகன் பிரபஞ்சத்தை எப்படிப் பாதுகாக்கிறார் என்பதே முதல் பாகத்தின் கதை.

தன் பிடியிலிருந்து தப்பி தனக்கெதிராக செயல்படும் கதாநாயகனைத் தேடி வரும் 'யோண்டு'-வின் படை, தங்கள் கிரகத்திலிருந்து சக்தி வாய்ந்த பேட்டரிகளைத் திருடியதற்காகத் துரத்தி வரும் 'கிஸ்மெட்' என்ற வில்லியின் விண்கப்பல்களின் தாக்குதல்கள் இரண்டில் இருந்தும் கதாநாயகன் தப்பி வாழ்கிறார். பின்பகுதியில் கமோராவின் சகோதரி நெபுலாவும் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராகிறார். இதற்கு இடையே பீட்டர் கியுலின் தந்தையான ஈகோ (கர்ட் ரஸ்ஸல்), தன் மகனைத் தேடி வருகிறார். தன்னையும் தன் அம்மாவையும் தனியே தவிக்க விட்டுச் சென்றதால் தந்தை மீது முரண்பட்டாலும், அதன் பின் அவரோடு இணக்கமாகிறான் கதாநாயகன். அதன்பின் கதையில் நடக்கும் அதிரிபுதிரி ட்விஸ்ட்களும், வியக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகளும் திரையை விட்டு கண்களை விலக்க முடியாமல் செய்கின்றன. பெர்ப்ஃஎக்ட் சீக்வலை தந்து இருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் கன்.

முதல் காட்சியிலிருந்தே ஆக்சனும், கதாபாத்திரங்களின் ரகளையான காமெடியும் தொடங்கி விடுகிறது. முதல் பாகத்தின் இறுதிக் காட்சியில் வில்லனை அழிக்கும் முயற்சியில் சிதைந்துபோன மரமனிதனின் கதாபாத்திரம், 'பேபி க்ரூட்' என்ற சின்னஞ்சிறு செடியாக வருகிறது. பேபி க்ரூட் செய்யும் சேட்டைகளும், ராக்கெட் கதாபாத்திரத்தின் நக்கல் வசனங்களும் திரையரங்கில் கைதட்டல்கள் பெறுகின்றன.

தமிழ்த் திரையுலகமான கோலிவுட் ஆக்சன் வழியில் பயணித்துக் கொண்டிருக்க... ஹாலிவுட் திரையுலகம் ஃபேமிலி சென்டிமென்ட்டைக் கையில் எடுத்திருக்கிறது போல! அனிமேஷன் திரைப்படமான 'ஸ்மர்ப்ஸ் : தி லாஸ்ட் வில்லேஜ்' திரைப்படத்தில் நீல நிற க்யூட் ஸ்மர்ஃப்கள் 'வீ ஆர் ஃபேமிலி' என வசனம் பேசின. ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் வரிசையில் வெளியான எட்டாவது திரைப்படமான 'The Fate of the Furious' திரைப்படத்திலும் 'வீ ஆர் ஃபேமிலி' என சென்டிமென்ட் பிழிந்தனர். அந்த வரிசையில் இந்தப்படத்திலும் அதே வசனம் இடம்பெற்றிருக்கிறது.

படத்தின் டிரெய்லர்களுக்கு 

படம் முடிந்ததும், பைக் பார்க்கிங்கிற்கு விரைந்து சென்றுவிடாதீர்கள். போஸ்ட் கிரெடிட்ஸ் சீன் மட்டும் ஐந்து இருக்கிறது. திரையில் மூன்றாவது முறையாக சில்வர் ஸ்டோலன் வரும் காட்சியும் அதில் ஒன்று. படம் முழுக்க குட்டி மரமனிதன் செய்யும் ஜாலியான விஷயங்கள் செம்ம. ஆனால், அதற்கும் முடிவு கட்டிவிட்டது ஒரு கிரெடிட் சீன். முதல் பாகம் அளவிற்கு இல்லையென்றாலும், செம்ம ஜாலியான காமிக்ஸ் ரைட் இந்த கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி. அப்படியும் இந்த பார்ட் பார்க்க இஷ்டம் இல்லையா, அடுத்து வர இருக்கும் அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் படத்தில் சில கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி படத்தின் கதாப்பாத்திரங்களும் வர இருக்கிறார்கள். அவை யாரென தெரிந்து கொள்ள டோன்ட் மிஸ், ' ஐ ஆம் க்ரூட்'