Published:Updated:

இந்தப் படம் நாக சைதன்யாவுக்கு சொல்லும் நீதி இதுதான்! - 'ராரண்டோய் வீடுக சுட்டம்' படம் எப்படி?

பா.ஜான்ஸன்
இந்தப் படம் நாக சைதன்யாவுக்கு சொல்லும் நீதி இதுதான்! - 'ராரண்டோய் வீடுக சுட்டம்' படம் எப்படி?
இந்தப் படம் நாக சைதன்யாவுக்கு சொல்லும் நீதி இதுதான்! - 'ராரண்டோய் வீடுக சுட்டம்' படம் எப்படி?

நாக சைதன்யாவுக்கு இந்த வருடத்தின் முதல் படம் இது. இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இதற்கு முன் நாகார்ஜுனா நடிப்பில் இயக்கிய 'சோகாடே சின்னி நயனா' சென்ற வருட ஹிட் லிஸ்டில் இணைந்த படம். அந்த ஹிட் கொடுத்த மகிழ்ச்சியில் 'ராரன்டோய் வீடுக சுட்டம்' வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் நாகார்ஜுனா. அந்தப் படம் போல இதுவும் மனம் கவர்கிறதா? 

பிரமராம்பா (ரகுல் ப்ரீத் சிங்) குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை என்பதால் அப்பா சம்பத் மற்றும் குடும்பத்தினர் பாசத்தைக் கொட்டி வளர்க்கிறார்கள். தன் பாட்டி சொல்வது போல தன்னை மணந்து கொள்ள ஒரு ராஜகுமாரன் வருவான் என நம்பிக் காத்திருக்கிறார் ரகுல். ரகுலின் தோழி திருமணத்துக்கு மாப்பிள்ளைத் தோழனாக வருகிறார் சிவா (நாக சைதன்யா).  ரகுலைப் பார்த்ததும் நாக சைதன்யாவுக்கு காதல். தான் இருக்கும் விசாகப்பட்டினத்துக்கு ரகுல் எம்பிஏ படிக்க வந்திருக்கிறார் என்றதும், அவரை சந்திக்கிறார் சைதன்யா. அதன் பின்பு இருவருக்கும் இடையில் நட்பு உருவாகிறது. தன் காதலை ரகுலிடம் சொல்லும் முன், தன்னைக் காதலிக்கும் ஐடியா இருந்தால் இப்போதே நாம் பிரிந்துவிடலாம் என ரகுல் கூறிவிட, காதலை மறைத்துவிடுகிறார் நாக சைதன்யா. இதன் பிறகு சில திருப்பங்களுக்குப் பிறகு நாக சைதன்யாவின் காதல் என்ன ஆகிறது என்பதுதான் கதை. நாக சைதன்யா, ரகுல் ப்ரீத் சிங், சம்பத், ஜெகபதிபாபு, கௌசல்யா, வெண்ணல கிஷோர், போசானி கிருஷ்ண முரளி, சப்தகிரி, தாகுபோது ரமேஷ் எனப் பெரிய பட்டாளமே இருக்கிறது படத்தில். ஆனால், புதிதாக எதுவும் கிடையாது என்பது தான் சிக்கல். 

நாக சைதன்யா வழக்கம்போல் ஒரே நடிப்பைத்தான் வழங்குகிறார். துறுதுறுப்புடன் திருமண வீட்டிற்குள் சுற்றிவருவது, ரகுல் அழைத்தவுடன் பதறிக் கொண்டு ஓடுவது என்ற வேலைதான். அதை ஓரளவு நிறைவாக செய்கிறார். குறிப்பாக அந்த இடைவேளைக் காட்சியில் ரகுலிடம் வெறுப்பாக பேசும் இடத்தில் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால், இன்னும் எத்தனை படங்களில் இதையே செய்து கொண்டிருப்பார் எனத் தெரியவில்லை. படத்தின் சில காட்சிகளில் நாக சைதன்யா, "இதிலிருந்து நாம தெரிஞ்சுக்கும் நீதி என்ன தெரியுமா?" எனக் கேட்பார். அந்த விதத்தில் இந்தப் படம் மூலம் நாக சைதன்யா தெரிந்து கொள்ள வேண்டிய நீதி, கதைத் தேர்விலும், நடிப்பிலும் இன்னும் முன்னேற்றம் காட்ட வேண்டும் என்பதுதான். வழக்கமாக ஹீரோவை சுற்றவிடும் லூசுப் பெண் கதாபாத்திரம்தான் ரகுலுக்கு என்றாலும், நடிப்பில் கவனிக்க வைக்கிறார். தன் கணவரைப் பற்றி குழந்தைத் தனமாக விவரிக்கும் காட்சி, பாட்டியிடம் சென்று "நீ என்ன ஏமாத்திட்ட" என அழும் காட்சி, நாக சைதன்யா பற்றி தோழியிடம் சொல்லும் காட்சி எனப் பல இடங்களில் கவர்கிறார். சம்பத்திற்கு மகள் மேல் பாசம் கொண்ட அப்பா வேடம், 'இதெல்லாம் எனக்கு சாதாரணம்' என்பது போல் நடித்திருக்கிறார். ஜெகபதிபாபு, கௌசல்யா, மனைவியிடம் கரண்டியால் அடிவாங்கும் வெண்ணல கிஷோர் என எல்லோரும் தங்கள் ரோலை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஜெகபதிபாபு - சம்பத் இடையிலான பகைக்கு சொல்லப்படும் ஃப்ளாஷ்பேக், அதற்குள் இருக்கும் திருப்பங்கள் எல்லாம் பழைய என்கிற வார்த்தையும் விட பழையது. படத்தின் மெய்ன் ப்ளாட் நாக சைதன்யா - ரகுல் காதல். அதிலும் எந்த வித அழுத்தமும் இல்லாமல், மிக சாதாரணமாக கடக்கிறது. ஒரு கட்டத்தில் 'பிரமராம்பா லேகுண்டா நேனு உன்டலேனு' என்று கிளம்புகிறார் நாக சைதன்யா. ஆனால், நமக்கு மட்டும், இருவரும் சேர வேண்டுமே என எந்த தவிப்பையும் ஏற்படுத்தாமல் "சரி அப்பறம்" என்று அலுப்பை ஏற்படுத்துகிறது. 

ஃபேமிலி ட்ராமாவிற்கு இசையமைப்பதென்றால் தேவி ஸ்ரீபிரசாத்திற்கு அசால்ட்டு மேட்டர். பல சென்டிமென்ட் காட்சிகளை இவரது பின்னணி இசைதான் காப்பாற்றுகிறது. ஜாவத் அலி குரலில் தகிட தகஜம் பாடல் ஃப்ரெஷ் மெலடி. விஸ்வேஷ்வர் ஒளிப்பதிவு அந்த திருமண வீட்டு குதூகலத்தை அதே கலர்ஃபுல் டோனில் பதிவு செய்திருந்தது. நாக சைதன்யா கபடி விளையாடும் காட்சி, க்ளைமாக்ஸுக்கு முந்தைய சண்டைக்காட்சி ஆகியவை மாஸ்.

ரகுல், காதலை உணர்ந்த பின்பு "என் பக்கத்திலேயே இருந்தும் இதுதான் நான் விரும்பியது எனத் தெரியாமல் போய்விட்டதே" எனக் கதறுவார். அதுபோல கதையும் காட்சிகளும் அழுத்தமாக இருந்திருந்தால் ஃபீல் குட் படமாக இருந்திருக்கும்.