Published:Updated:

சூப்பர் ஹீரோக்களை லெஃப்ட்டில் அடிக்கும் சூப்பர் ஹீரோயின்! Wonder Woman படம் எப்படி?

கார்த்தி
சூப்பர் ஹீரோக்களை லெஃப்ட்டில் அடிக்கும் சூப்பர் ஹீரோயின்! Wonder Woman படம் எப்படி?
சூப்பர் ஹீரோக்களை லெஃப்ட்டில் அடிக்கும் சூப்பர் ஹீரோயின்! Wonder Woman படம் எப்படி?

பேட்மேன், சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் தொடங்கி, எல்லாமே சூப்பர் ஹீரோ படங்கள் தான். சூப்பர் ஹீரோ என்றவுடன் நினைவிற்கு வருவதும், பெரும்பாலும் ஹீரோக்களான ஆண்கள்தான். ஆனால் பெண்ணை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது வொண்டர்வுமன் (Wonder Woman). அதுவும் ஹாலிவுட்டில் பெரிதாக அறியப்படாத பெண் ஒருவர், இப்படத்தை இயக்கி இருக்கிறார். முதல் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே, இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. ஆக எப்படி இருக்கிறது வொண்டர் வுமன்?

 
மனிதர்களின் பார்வையில் இருந்து விலகி, தெமிஸ்கீரா தீவில் வாழ்கிறார்கள் அமேசான்ஸ். ஆரீஸை அழிப்பது மட்டுமே, தன் நோக்கமாகக் கொண்டு வளர்கிறாள் இளவரசி டயானா.அங்கு இருக்கும் ஆயுதங்களால் தான் ஆரீஸை அழிக்க முடியும் என உறுதியாக நம்புகிறாள். ஒருகட்டத்தில் ஜெர்மன் படையிடமிருந்து தப்பிவரும் ஸ்டீவை அவள் காப்பாற்றுகிறாள். ஜெர்மன் படையிடமிருந்து கைப்பற்றி வந்த புத்தகத்தை, லண்டனில் இருக்கும் தனது சீனியர்களிடம் ஸ்டீவ் தர வேண்டும். எனவே ஜெர்மனியின் தலைவர்தான் ஆரீஸ் என நினைக்கும் டயானா, ஸ்டீவுடன் தெமிஸ்கீரா தீவில் இருந்து கிளம்புகிறாள். பின்பு அவள் சந்திக்கும் பிரச்னைகள், யார் ஆரீஸ், டயானா இறுதியில் என்ன முடிவு எடுக்கிறாள் என்பதை அதிரடியுடன் எமோஷனலாய் சொல்கிறது வொண்டர் வுமன்.


 
பேட்மேன் என்றதும், (ரசிகனின் வயதுக்கேற்ப) மைக்கேல் கீட்டன், கிறிஸ்டியன் பேல், பென் அஃப்லெக் எனப் பலர் நினைவிற்கு வரலாம். ஆனால், இந்தப் படத்திற்குப் பின்பு, இன்னும் பத்து ஆண்டுகளுக்கு வொண்டர் வுமன் படத்தை எடுத்தாலும், கேல் கடோட் தான் பெஸ்ட் சாய்ஸாக இருப்பார்; அந்த அளவிற்கு பெர்ஃபெக்ட் மேட்ச் ஆகிறார், இந்த இஸ்ரேல் நடிகை. எனவே சூப்பர்மேன் என்றதும் எப்படி கிறிஸ்டோபர் ரீவ்ஸ் நினைவிற்கு வருவாரோ, அதே போல் இனி வொண்டர் வுமன் என்றால் கேல் கடோட் தான் . கடந்த ஆண்டு வெளியான பேட்மேன் VS சூப்பர்மேன் - டான் ஆஃப் ஜஸ்டிஸ் படத்திலேயே, கெஸ்ட் ரோல் போல சில நிமிடங்களே தலைகாட்டி இருந்தாலும், அதில் தெறி பெர்பாமென்ஸ் காட்டி இருப்பார் கேல் கடோட். வொண்டர் வுமனிலும் அது அப்படியே தொடர்கிறது. முதல் முறையாக குழந்தையை பார்த்ததும் ஓடிப்போய் கொஞ்ச முயல்வதாகட்டும், போருக்கு நடுவே இவர்களை நான் காப்பாற்ற வேண்டும் என துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே போய் கெத்தாக நிற்பதாகட்டும், கேல் கடோட் வருகின்ற ஒவ்வொரு ஃப்ரேமிலும் அசத்துகிறார். ஏறக்குறைய 6 அடி இருக்கும் கேல் கடோட், அடுத்து வர இருக்கும் ஜஸ்டிஸ் லீகிலும், பின்னிப் பெடலெடுப்பார் என நம்பலாம். படத்தில் சில காட்சிகளை ரீஷூட் செய்யும் போது, கேல் கடோட் ஐந்து மாத கர்ப்பிணியாம். CGI மூலம் அதை மறைத்ததாக சொல்கிறார் இயக்குனர் ஜென்கின்ஸ். ஸ்பெஷல் பாராட்டுக்கள் கேல் கடோட்


பெண்ணை மையப்படுத்திய சூப்பர்ஹீரோ படம் என்பதால், மிகவும் மெதுவாகவே மையக் கதையை நோக்கிக் காட்சிகள் செல்கின்றது. தெமிஸ்கீரா தீவில் ஆண்களே கிடையாது என்பதால், ஸ்டீவை ஆச்சர்யமாக பார்க்கும் டயானா, பின்பு வாட்ச், ஐஸ்கிரீம், திருமணம், புதிய உடைகள் என எல்லாவற்றையுமே ஆச்சர்யமாகவே பார்க்கிறார். சற்றே தொய்வான அந்தக் காட்சிகளையும், நகைச்சுவையான (சில 18+) வசனங்கள் மூலம் அழகாகக் கடத்தியிருக்கிறார்கள். 


படம் 140 நிமிடங்கள் என்றாலும், அதிரடி சண்டைக் காட்சிகள், சிறப்பான காமெடி, எமோஷனல் காட்சிகள் என செல்வதால், பெரிதாகச் சலிப்புத்தட்டவில்லை. இருப்பினும், படத்தின் இறுதியில் ஆரீஸ் பேசும் நீளமான வசனங்களைக் குறைத்து இருக்கலாம். ஒவ்வொரு அதிரடி காட்சியையும், மேலும் கர்ஜிக்க வைக்கிறது ரூபர்ட் க்ரெக்சனின் இசை. ரூபர்ட்டின் இசை - ஜென்கின்ஸின் இயக்கம் -  கேல் கடோட் இந்த மூன்றும் தான் படத்தின் ஹீரோக்கள். அதே போல, படத்தில் வரும் சண்டைக் காட்சிகளும் செம; ஜெர்மன் வீரர்களுடன் நடக்கும் முதல் சண்டையில் இருந்து, ஆரீஸுடன் நடக்கும் கடைசி சண்டை வரை எல்லாமே சூப்பர் ஸ்பெஷல். அதிலும் அந்த போர்க் காட்சிகளில் வரும் கடோட்டின் சாகசங்கள் எல்லாமே ++ லைக்ஸ்.

 
சமீப காலங்களில், ஹாலிவுட்டில் ஒரு பெண்ணை முதன்மைப்படுத்தி, பெரிதாக எந்தப்படமும் வெளியாகவில்லை. அப்படியே வெளியான கேட்வுமன், எலெக்ட்ரா போன்ற படங்களும், வந்த சுவடு காணாமல் அடுத்தடுத்து ஃப்ளாப் ஆக, பின்னர் வெளிவந்தவை எல்லாம் சூப்பர் ஹீரோ படங்கள்தான். டிசி எக்ஸ்டெண்டு யுனிவர்ஸின் முந்தைய படங்களான மேன் ஆஃப் ஸ்டீல், பேட்மேன் Vs சூப்பர் மேன் இரண்டுமே, ரசிகர்களை வாய் பிளந்து கொட்டாவி மட்டுமே விட வைத்தன. எனவே டிசி காமிக்ஸ் அவ்வளவுதான் என நினைத்த நேரத்தில், வில் ஸ்மித்தின் சூசைட் ஸ்குவாட் வெளியாகி, ரசிகர்களிடம் ஹிட் அடித்தது. ஆனால் அதுவும் விமர்சகர்களால் கழுவி ஊற்றப்பட்ட படம்தான்; இந்த நிலையில், பெரிதும் அறிமுகமில்லாத பேட்டி ஜென்கின்ஸ் இயக்கத்தில் வொண்டர் வுமன் எனச் செய்தி வர, இதுவும் அவ்வளவுதான் என்றே பேசப்பட்டது. ஆனால் விமர்சகர்கள், ரசிகர்கள் என இருவரிடமும் லைக்ஸ் அள்ளுவதோடு, மனிதமும் பேசுகிறாள் வொண்டர் வுமன்.