Published:Updated:

டிரான்ஸ்ஃபார்மர்ஸ் 5 - ஆப்டிமஸ் ப்ரைமே... எம்மைக் காப்பாற்றுமய்யா?

ப.சூரியராஜ்
டிரான்ஸ்ஃபார்மர்ஸ் 5 - ஆப்டிமஸ் ப்ரைமே... எம்மைக் காப்பாற்றுமய்யா?
டிரான்ஸ்ஃபார்மர்ஸ் 5 - ஆப்டிமஸ் ப்ரைமே... எம்மைக் காப்பாற்றுமய்யா?

‘டிரான்ஸ்ஃபார்மஸ்' படங்களில் கதைகளும், டிரன்ஸ்ஃபார்ம்ஸ் க்யூபும் ஒன்று. முதல் பாகத்தில் அம்மாம்பெருசாக இருந்த அந்த க்யூப், இறுதியில் தம்மாத்துண்டாக மாறுமோ, அதேபோல் முதல் பாகத்தில் மட்டும் கதை எனும் அம்சம் பெரியதாக இருந்து, அடுத்தடுத்த படங்களில் குறைந்துபோனது. முதல் பாகத்தைத் தவிர அடுத்து வெளியான மூன்று பாகங்களையும் விமர்சகர்கள் ஆசிட்டால் கழுவி ஊற்றினார்கள். ஐந்தாம் பாகமான `தி லாஸ்ட் க்நைட்' படத்துக்கும் `அதுக்கும் மேல'  ரகம்தான். 

கி.பி. 484-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசர் ஆர்தர் தலைமையிலான படைக்கும், பண்டைய ஜெர்மானிய படைக்கும் இடையே போர் நடக்கிறது. ஒருகட்டத்தில் போரில் ஜெர்மானியர்களின் கை ஓங்க, ஆர்தரின் மந்திரவாதி மெர்லின் பிரிட்டிஷ் படைக்கு உதவ முன்வருகிறார். 12 டிரான்ஸ்ஃபார்மர்கள் பூமியில் மறைவு வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள். `நைட்ஸ் ஆஃப் லேகான்ஸ்' என அழைக்கப்படும் அவர்களிடம் உதவி கேட்கிறார் மெர்லின். அவர்களும் ஒரு மந்திரக்கோலை மெர்லினிடம் எடுத்துக் கொடுக்க, அதைக் கொண்டு ஜெர்மானிய படையை ஆர்தரின் படை வீழ்த்துகிறது. நிகழ்காலத்தில், டிரான்ஸஃபார்மர்கள் மனித சமூகத்துக்கு எதிரானதாக அரசுகளால் அறிவிக்கப்படுகிறது. ஒருபுறம், புதுப்புது டிரான்ஸ்ஃபார்மர்கள் பூமிக்கு வந்துகொண்டே இருக்க... மறுபுறம், டி.ஆர்.எஃப் குழுவினர்கள் அவற்றை தடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி ஒரு புது டிரான்ஸ்ஃபார்மர் பூமியில் வந்து விழுகிறது. மரணிக்கும் தருவாயில் இருக்கும் அந்த டிரான்ஸ்ஃபாமர், தன்னிடம் இருக்கும் உலோக தாயத்தை நாயகன் கேட் ஈகரின் உடலில் பொருத்துகிறது. அந்த தாயத்து அவன் உடம்பில் பிண்ணிப் பினைந்து, உயிரைக் காக்கும் கவசமாகச் செயல்படுகிறது.

முந்தைய பாகத்தில் தன் தாய் கிரகமான சைபர்ட்ரானைத் தேடிச் சென்ற ஆப்டிமஸ் ப்ரைம், இந்தப் பாகத்தில் சல்லி சல்லியாக நொறுங்கி கிடக்கும் சைபர்ட்ரான் கிரகத்தைப் பார்த்துப் பெருங்கோபம்கொள்கிறது. அங்கே தன்னை சைபர்ட்ரானையே படைத்தவளாகச் சொல்லிக்கொள்ளும் க்யுன்டஸா, `பூமியிலிருந்து அந்த மந்திரக்கோலை என்னிடம் எடுத்து வா. பூமிதான் நம் பரம்பரை எதிரி. அந்த மந்திரக்கோலின் சக்தி மூலம் பூமியின் சக்தியை உறிந்து இந்தக் கிரகத்தையே நான் பழைய நிலைக்கு மாற்றிக் காட்டுவேன்' என ஆப்டிமஸ் ப்ரைமை மூளைச்சலவை செய்கிறாள். ஆப்டிமஸ் ப்ரைமும் பூமியை நோக்கிக் கிளம்புகிறது. இங்கே, கதையின் நாயகன் கேட் ஈகர் (மார்க் வால்பெர்க்), பூமியில் வாழ்ந்த டிரான்ஸ்ஃபார்மர்களின் வரலாற்றை ரகசியமாகக் காத்துவரும் `விட்விக்கன்' குடும்பத்தில் மிச்சமிருக்கும் ஒரே வாரிசு. கதையின் நாயகி விவியான், மந்திரவாதி மெர்லினின் வம்சத்தில் பிறந்தவள் என்ற உண்மைகளை வரலாற்றாசிரியர் மற்றும் வானியல் வல்லுநரான பர்டன் அவர்களிடத்தே சொல்கிறார். அந்த மந்திரக்கோல் எங்கே, ஆப்டிமஸ் ப்ரைம் கைக்கு அந்த மந்திரக்கோல் சென்றதா, க்யுன்டஸா நினைத்தது நடந்ததா? நாயகனும் நாயகியும் பூமியைக் காப்பாறினார்களா என்பதை, படத்தைப் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். 

பல ஹாலிவுட்  படங்களில் பார்த்து சலித்துப்போன அதே அரதபழசான திரைக்கதை. எப்போதும் ஏலியன்கள் மிகப்பெரிய ஸ்பேஸ் சிப்பை கொண்டுவந்து பூமிக்கு மேல் நிப்பாட்டுவார்கள். இந்தப் படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக, அவர்களின் கிரகத்தையே கொண்டுவந்து நிப்பாட்டுகிறார்கள். பூமியை ஏலியன்களிடம் காப்பாற்றும் ஹீரோ, அவருக்குத் துணையாக அமெரிக்க ராணுவம். மந்திரக்கோல் மூலம் சக்தி பெறுவது என இதுவரை நாம் பார்த்த பல படங்களை மறுக்கா ஒருமுறை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொடுத்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை டொங்கலாக இருந்தாலும், டெக்னிக்கலாக படம் மிரட்டுகிறது. படத்தில் அவ்வளவும் சிஜி காட்சிகள்.  அதிலும், ஆரம்பக் காட்சிகளில் சின்னச் சின்னப் பாகங்களாகப் பிரிந்து, மீண்டும் ஒரே உருவமாக பம்பிள்பீ மாறும். அதேபோல், வெஸ்பா வண்டியை ரீமாடல் செய்த அந்தக் குட்டி ஸ்கூவீக்ஸ் ஆகட்டும்.எல்லாமே செம அடுத்தடுத்த பாகங்களில் சிஜி-யில் கலக்கும் படக்குழு, சற்றேனும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம். முதல் பாகம் தொடங்கி ஒவ்வொரு பாகமும் 150 நிமிடங்களுக்கு அதிகமாக ஓடுகிறது. ஆனால், `தி லாஸ்ட் நைட்' திரைப்படம் ஏனோ 240 நிமிடம் படம் பார்த்த ஓர் அயர்சியைத் தருகிறது.  

 பின்னனி இசை, ஒளிப்பதி, ஆங்காங்கே சிரிக்கவைக்கும் சில காமெடி ஆகியவை, படத்துக்குக் கூடுதல் பலம் சேர்க்கின்றன. `டிரான்ஸ்ஃபார்மர்' படங்களின் வெறியன் என்றால் தாராளமாகப் பார்க்கலாம். மற்றவர்கள் விஷுவல்களைப் பார்த்துப் பிரமித்துவிட்டு வரலாம். 

படத்தின் போஸ்ட் கிரெடிட்ஸ் காட்சிகளைப் பார்த்து `மீண்டும் க்யுன்டஸாவா!' என அச்சம் கொள்ளத் தேவையில்லை. அடுத்த பாகத்துக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன (2019). அப்போது ஃபீல் செய்துகொள்ளலாம்.  அடுத்த ஆண்டு, தனிக்கதையாக வெளியாக இருக்கும் பம்பிள்பீயாவது நன்றாக இருக்க, எல்லாம்வல்ல ஆப்டிமஸ் ப்ரமை வேண்டுவோம்.