Published:Updated:

ஒரு கிடாருக்காக அக்கப்போரா? - `அதாகப்பட்டது மகாஜனங்களே' படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
ஒரு கிடாருக்காக அக்கப்போரா? - `அதாகப்பட்டது மகாஜனங்களே' படம் எப்படி?
ஒரு கிடாருக்காக அக்கப்போரா? - `அதாகப்பட்டது மகாஜனங்களே' படம் எப்படி?

ஒரு கிடாய் வெட்டப்போன இடத்தில் நடக்கும் சம்பவத்தை வைத்து ஹிட் கொடுத்த படத்தை சமீபத்தில் பார்த்தோம். அந்த வரிசையில் ஒரு கிடாருக்காக ஹீரோ உள்ளிட்ட சகலரும் மல்லுக்கட்டும் படம்தான் `அதாகப்பட்டது மகாஜனங்களே'. தம்பி ராமையாவின் மகன்தான் ஹீரோ!

ஹீரோ உமாபதிக்கு கிடார் கலைஞனாக உலக ஃபேமஸ் ஆகவேண்டும் என்பதுதான் லட்சியம். காரணம், உமாபதியின் அப்பா பாண்டியராஜன் தபேலா கலைஞர். தாத்தா ஒரு கிடாரிஸ்ட். இப்படி இசை வெறி நாடி, நரம்பெல்லாம் ஊறித் திளைத்திருப்பதால் கிடாரில் தன் பயோடேட்டாவை போட்டோவோடு பிரின்ட் செய்து வாய்ப்புத் தேடித் திரிகிறார். பெசன்ட்நகர் பங்களா ஒன்றில் வேலைபார்க்கும் செக்யூரிட்டி ஒருவருக்கு நடுராத்திரி குழந்தை பிறக்க, விடியும் வரை காவல் காக்குமாறு தன் நண்பனான ஹீரோவிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார். கருமமே கண்ணாய் தன் கிடாரோடு காவல் காக்கிறார் உமாபதி. 

தமிழ் சினிமாவில் அப்பாவி ஹீரோக்களுக்கே உரிய ராசிப்படி அன்று கரெக்டாக அந்த வீட்டில் கன்னம் வைத்துத் திருட காம்பவுண்ட் ஏறி குதிக்கிறது ஒரு கும்பல். ஹீரோவை மயக்கமாக்கி, வீட்டில் உள்ளவர்களைத் தாக்கி... தேடித் துழாவி எதையுமே எடுக்காமல் வெறுங்கையோடு திரும்புகிறது அந்தக் கும்பல். இந்தப் பரபரப்புகளுக்கு நடுவே நாயகனின் கிடார்வேறு காணாமல்போய்விடுகிறது. போலீஸின் `தீவிர' விசாரணையில் திருட முயற்சி செய்த கும்பலில் ஒருவன் கிடார் வைத்திருந்ததாகத் தெரியவருகிறது. அது காணாமல்போன தன்னுடைய கிடார்தான் என்ற முடிவுக்கு வரும் ஹீரோ, தன் நண்பன் கருணாகரனுடன் சேர்ந்து அந்தக் கும்பலைத் தேடி அலைகிறார். கிடார் கிடைத்ததா இல்லையா? அந்தக் கும்பல் எதைத் தேடி அந்த வீட்டுக்குள் வந்தது என்பதுதான் கதை.

ஹீரோ உமாபதிக்கு நடனம் சூப்பராகவே வருகிறது. நடிப்பு - இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறோம் ப்ரோ! பல இடங்களில் தன் அப்பா தம்பி ராமையாவின் ரியாக்‌ஷன்களை அப்படியே காப்பியடிக்கிறார். காமெடி சீனுக்கு அதெல்லாம் ஓகே! ரொமான்ஸுக்குமா ப்ரோ? சினிமா கண்டுபிடித்த காலத்திலிருந்து ஹீரோயின்களுக்கு என்ன வேலையோ, அதேதான் இந்தப் படத்தின் நாயகி ரேஷ்மா ரத்தோருக்கும். ஸ்விட்ச் போட்டதுபோல் சிரிக்கிறார், ஆடுகிறார், அழுகிறார்... டாட்!

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் கருணாகரன். தொடக்கம் முதல் எண்ட் கார்டு வரை காமெடி கலாட்டா ஆடியிருக்கிறார். ஹீரோவுக்காக மீசை துடிக்கப் பாய்வது, வில்லன்களைப் பார்த்து... `வீட்டுக்கு ஒரே புள்ள, அப்பாகூட கிடையாது' எனப் பரிதாபமாகப் பம்முவது... - குட் வொர்க்ஜி! `ஆடுகளம்' நரேன், பாண்டியராஜன், மனோபாலா எல்லாம் அவ்வப்போது வந்து வந்து போகிறார்கள். அவ்வளவே!

`கும்கி'யிலிருந்து இமான் மீண்டே ஆகவேண்டும் எனத் திரும்பவும் நினைவுபடுத்துகிறது இந்தப் படம். பின்னணி இசை, பாடல்கள் என எல்லாமே ஏற்கெனவே கேட்ட ஃபீல்! வரணும்..புது ட்யூன்ஸோட பழைய பன்னீர்செல்வமா வாங்க இமான்! சில இடங்களில் அந்தரத்தில் சட்டெனக் காட்சிகளை வெட்டுகிறது எடிட்டர் ரமேஷின் கத்தரி. 

காமெடி படம்தான். அதற்காக படம் முழுக்கப் பேசிக்கிட்டே இருக்கிறது எல்லாம் நியாயம்ம்மாரே....?! `கிடாரைக் கண்டுபிடிக்கணும் கண்டுபிடிக்கணும்' என காயத்ரி மந்திரம்போல முணுமுணுத்துக்கொண்டே இருக்கும் ஹீரோ, பாதி நேரம் பெஞ்சில் உட்கார்ந்து அரட்டையடித்துக்கொண்டே இருக்கிறார். போலீஸாக வரும் யோக் ஜேபி, அதையே ஸ்டேஷனில் உட்கார்ந்து செய்கிறார்.  காமெடி ஒன்லைனர்களுக்கு யோசித்த அளவு கதைக்காகவும் யோசித்திருந்தால் படம் ஜாலி என்டர்டெயினராக இருந்திருக்கும்.

க்ளைமாக்ஸில் `ட்விஸ்ட் காட்டுறோம் பாரு'னு அந்த வில்லனை அறிமுகப்படுத்துவதும், அந்தத் திருட்டு கும்பலில் இருக்கும் கிடார் கலைஞனைக் காட்டுவதும் செம போங்கு ஆட்டம். `எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைங்க' என இரண்டே கால் மணி நேரம் உட்காரவைத்து மெசேஜ் சொல்வது எல்லாம்... அப்பப்பா... முடியலை. 

ஆனால், `என் முதல் படம் இதுதான்' என ஹீரோ உமாபதி சொல்லிக்கொள்ள கொஞ்சம் இடம் தரும் படம் இது.