Published:Updated:

சோர்வான ஜெமினிகணேசனும் சுறுசுறுப்பு சுருளிராஜனும்! - 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
சோர்வான ஜெமினிகணேசனும் சுறுசுறுப்பு சுருளிராஜனும்! - 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' விமர்சனம்
சோர்வான ஜெமினிகணேசனும் சுறுசுறுப்பு சுருளிராஜனும்! - 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' விமர்சனம்

தான் காதலித்து ஏமாற்றிய பெண்களுக்கு, தன் திருமண அழைப்பிதழைக் கொடுக்க அவர்களைத் தேடிச் செல்கிறார் ஜெமினி கணேசன். அவருக்கு உதவுகிறார் சுருளிராஜன். 

இந்தக் கதையைக் கேட்டதும், பவர் க்ளாஸ், பிரெஞ்சு தாடியுடன் சேரன் ஞாபகத்துக்குவருகிறாரா? இந்தப் படத்தில் அதர்வாவும் அதே `ஞாபகம் வருதே' கெட்டப்பில்தான் வருகிறார். `ஆட்டோகிராஃப்' படத்தின் நாயகன் அப்பாவி என்றால், இந்தப் படத்தின் நாயகனோ `அடப்பாவி'. நடிகர் ஜெமினி கணேசனின் ரசிகரான சிவா, தன் மகன் அதர்வாவுக்கும் அவர் பெயரையே சூட்டுகிறார். மேலும், காதல் மன்னனின் கதைகளைப் பெருமையாகச் சொல்லியும் வளர்க்கிறார். மனதளவில் காதல் மன்னனாகவே மாறிவிடும் அதர்வா, பல பெண்களைக் காதலிக்கிறார்; காதலிக்கவும் வைக்கிறார். ஆனால், கல்யாணம் என்ற பேச்சு வரும்போது மட்டும் கிரேட் எஸ்கேப்! இப்படியாக, கீழ் வீட்டு ரெஜினா, மேல் வீட்டு அதிதி, ஊட்டி ப்ரணிதா, கருணை இல்லம் ஐஸ்வர்யா ராஜேஷ் என எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோகிறது. கடைசியாக, `ப்ளேபாய்' அதர்வா இந்த வீணாப்போன விளையாட்டை நிறுத்தினாரா, யாரோடு டும்டும்டும், அவர் காதலித்துக் கழட்டிவிட்ட பெண்களின் தற்போதைய நிலை என்ன என்பதை காமெடியாகச் சொல்லியிருக்கிறார்கள். 

அதர்வாவை `ப்ளேபாய்' எனச் சொன்னால், பத்தில் ஒன்பது பேர் நம்பும் அளவுக்கு கதாபாத்திரத்தில் `நச்' எனப் பொருந்துகிறார். ஆனால், அழகு, பொருத்தத்தைவைத்து என்ன செய்வது, ஸ்க்ரிப்டில் நடிக்க ஸ்கோப் இல்லையே! அதனால் பயிற்சி, முயற்சி என எந்தச் சிரமும் இல்லாமல் வந்துபோகிறார் அவ்வளவே! காதலிகளாக வரும் ரெஜினா, ப்ரணிதா, அதிதி மூவரும் வெறும் கிளாமருக்கு மட்டுமே. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓகே. ரெஜினாவும் அதிதியும் அதர்வாவைப் பார்த்த மாத்திரத்திலேயே கொஞ்சிக் கொஞ்சிப் பேச ஆரம்பிக்கிறார்கள். சாதாரணமாகப் பேசும்போதுகூட காதல் மயக்கத்திலேயே பேசுகிறார்கள். அதர்வா சொல்லும் அனைத்து பொய்களையும் நம்புகிறார்கள். கமர்ஷியல் மசாலா படம்தான். அதற்காக ஓவர் மசாலா தூவி, கண்கள் எரிகின்றனவே!

அப்பாவாக சிவா. தன் மகன் ஒவ்வொரு பெண்ணைக் காதலிக்கும்போது, ‘இப்படிப் பண்றானே’ என வருத்தப்படும் கேரக்டர். ஆனால், காட்சியமைப்பால் ‘இப்படிக் காதலிக்கிறானே!’ என, மகனை நினைத்துப் பொறாமைப்படுவதுபோல உல்டாவாகத் தெரிகிறது. அதேபோல் ‘நீ இப்படியெல்லாம் பண்ணினேனு அப்பா சொல்லித்தான் எனக்கே தெரியும்பா’ என்று மகனுக்கு புத்திமதி சொல்லும் அப்பாவி அம்மாவாக சோனியா. இப்படியான அப்பா, அம்மா நம்ம பக்கத்து வீட்டில் கிடையாது, எதிர்த்த வீட்டில் கிடையாது, ஏன் அடுத்த தெருவில்கூட கிடையாது; தமிழ் சினிமாவில் மட்டும்தான் இருப்பார்கள்.

படத்தைத் தாங்கிப்பிடிப்பது என்னவோ சூரிதான். பேஸிக்கலாவே சூரி மதுரக்காரர் என்பதால் மதுரை வட்டார மொழியில் அவ்வளவு அசால்ட்டாக அதகளம் செய்கிறார். நான்கு கதாநாயகிகளைவிட சூரியோடுதான் அதர்வாவுக்கு கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது. அவரும் முதல் பாதியில் செயற்கையான, சிரிப்பே வராத பன்ச்களைப் பறக்கவிட்டு நம்மைச் சோதித்தாலும், இடைவேளைக்குப் பிறகு ஃபார்முக்கு வந்து பட்டையைக் கிளப்புகிறார். சமீபத்திய தமிழ் சினிமா ட்ரெண்ட்டின்படி மொட்டை ராஜேந்திரனும் இருக்கிறார். மொட்டை ராஜேந்திரனின் ட்ரெண்டின்படி தல-தளபதிகளின் டயலாக்குகளையும் அச்சு பிசகாமல் ஒப்பிக்கிறார். 

படத்தின் முதல் பாதியில் வரும் காதல் காட்சிகளை, இன்னும் சுவாரஸ்யமானதாக உருவாக்கியிருக்கலாம். காட்சிகள் அனைத்தும் அரதப்பழசு. காதலியின் மனதில் இடம்பிடிக்க, பிச்சை எடுக்கும் ஒருவரின் தாடியை ஷேவ் செய்துவிட்டு சால்வையைப் போத்திவிடுவது எல்லாம் பாகவதர் காலத்துப் பழைய பக்கோடா. அதைப் பார்த்து பல பெண்கள் அதர்வா மீது காதலாய்க் கசிந்துருகுவது... ஹய்யோ... ஹய்யோ... அந்த ஜெமினி கணேசன் காலத்திலேயே இதெல்லாம் பார்த்தாச்சு ப்ரோ. குழந்தை வரம்வேண்டி மரத்தில் கட்டியிருக்கும் தொட்டிலில், கருணை இல்லத்தில் வளரும் குழந்தைகளின் புகைப்படத்தை வைக்கும் காட்சி, ரிஜிஸ்டர் ஆபிஸில் `சசிக்குமார்னு சொல்லும்போதே நினைச்சேன்' என மயில்சாமி அடிக்கும் பன்ச், பேருந்து நிலையத்தில் அந்த ட்விஸ்ட் என ஓரிரண்டு காட்சிகள் மட்டுமே உருப்படி. பெண்களின் நிறத்தைவைத்து கிண்டல்செய்யும் அபத்தம், எப்போதுதான் தமிழ் சினிமாவைவிட்டு விலகும் எனத் தெரியவில்லை. 

இசையும் ஒளிப்பதிவும் ஓ.கே. திரும்பத் திரும்ப வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை எடிட்டர் அப்படியேவிட்டது ஏனோ? ஸ்க்ரிப்ட் பேப்பரில் பிள்ளையார்சுழிக்குக் கீழே, `காமெடி படம்' என எழுதிவிட்டுப் படம் எடுத்திருக்கும் `ஓடம்' இளவரசு, ஆரம்ப காட்சிகளில் சிரிக்கவைக்க சிரமப்பட்டிருப்பது தெரிகிறது. ஆனால், போகப்போக ஓரளவு பிக்கப் செய்திருக்கிறார். காதல் காட்சியில் நகைச்சுவை குறைந்து செயற்கைத்தனங்கள் அதிகமாக இருப்பதால், ஜெமினி கணேசன் சோர்ந்து காணப்படுகிறார். அந்த நேரங்களில் சுருளிராஜன் அடித்திருக்கும் சிக்ஸர்களுக்காக இருவரையும் ஒருமுறை பார்க்கலாம். அப்படியே `பண்டிகை' விமர்சனமும் படிச்சிருங்க மக்கா!