Published:Updated:

Cobra Review: விக்ரம் என்னும் மகாநடிகன்; அடடே இர்ஃபான் பதான்; ஆனால் படமாக `கோப்ரா' எப்படி?

Cobra Review | கோப்ரா விமர்சனம்

இன்டர்வெல் ட்விஸ்ட் ஆச்சர்யம் என்றாலும், இரண்டாம் பாதியில் அந்த விசாரணை காட்சி தவிர்த்து நீண்ட நெடிய ஃப்ளாஷ்பேக் ஒன்றும் ஓடுகிறது. ஆனால், அது எந்தவித எமோஷனுமின்றி 'ஒரு தகவலுக்காக' என்கிற ரீதியிலேயே கடந்துபோகின்றது.

Cobra Review: விக்ரம் என்னும் மகாநடிகன்; அடடே இர்ஃபான் பதான்; ஆனால் படமாக `கோப்ரா' எப்படி?

இன்டர்வெல் ட்விஸ்ட் ஆச்சர்யம் என்றாலும், இரண்டாம் பாதியில் அந்த விசாரணை காட்சி தவிர்த்து நீண்ட நெடிய ஃப்ளாஷ்பேக் ஒன்றும் ஓடுகிறது. ஆனால், அது எந்தவித எமோஷனுமின்றி 'ஒரு தகவலுக்காக' என்கிற ரீதியிலேயே கடந்துபோகின்றது.

Published:Updated:
Cobra Review | கோப்ரா விமர்சனம்
கணித அறிவை வைத்து தடயமே இல்லாமல் கொலைகள் செய்யும் சர்வதேச கொலைகாரனுக்கும் அவனைத் தேடும் இன்டர்போல் அதிகாரிக்கும் நடக்கும் பாம்பு - கீரி யுத்தமே இந்த `கோப்ரா'.

சர்வதேச அளவில் இறங்கி மாட்டிக்கொள்ளாமல் கொலைகள் செய்கிறார் கணித மேதையும், வாத்தியாருமான மதியழகன். ஸ்காட்லாந்தில் அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதும், அந்த வழக்கைக் கையில் எடுக்கிறார் இன்டர்போல் அதிகாரியான அஸ்லாம். அதற்கும் தமிழ்நாட்டில் நடந்த ஒரு கொலைக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து இங்கே வந்து இறங்குகிறார். அவருக்கு உதவியாகக் கணிதம், கிரிமினாலாஜி என ஆராய்ச்சிப் படிப்பில் இருக்கும் மாணவி ஒருவரும் கைகொடுக்க, 'கோப்ரா' என அடைமொழி சூட்டப்பட்ட அந்த ஜீனியஸ் 'மதியழகனை' இவர்கள் நெருங்கினார்களா, அவரின் இறந்த காலம் ஒளித்து வைத்திருக்கும் ரகசியம் என்ன என்பதற்கான விடைகளை சில ட்விஸ்ட்கள் சேர்த்துச் சொல்கிறது 'கோப்ரா'.

Cobra Review | கோப்ரா விமர்சனம்
Cobra Review | கோப்ரா விமர்சனம்

அப்பாவி கணக்கு வாத்தியார், பல கெட்டப்கள் போட்டு சர்வதேச அளவில் கொலைகள் செய்யும் கொலைகாரன், மற்றுமொரு சர்ப்ரைஸ் (!) பேக்கேஜ் என விக்ரமின் நடிப்பு ஆர்வத்துக்கு இது மெகா சைஸ் விருந்து. ஒரு சில கெட்டப்கள் வெறும் மாறுவேடமாகத் தெரிந்தாலும், தனது உடல்மொழி மூலம் அதன் நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கிறார் விக்ரம். குறிப்பாக அந்த விசாரணைக் காட்சி, மற்றுமொரு 'அந்நியன்' ஸ்டைல் ட்ரீட். அந்தக் காட்சியில் 'Inside' என்றொரு குறும்படத்தின் பாதிப்பு இருந்தாலும், விக்ரமின் தனித்துவமான நடிப்பு அதற்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது.

ஶ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிர்ணாளினி ரவி என மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள். ஆனால், மீனாட்சி மற்றும் மிர்ணாளினியின் பாத்திரங்கள் கதையோடு ஒன்றிய அளவிற்கு ஶ்ரீநிதியின் பாத்திரம் அமையவில்லை. வெறும் பாடல்கள், ரொமான்ஸ் காட்சிகளில் மட்டுமே அட்டென்டன்ஸ் போடுகிறார். நாயகனுடன் ஒப்பிடும்போது வில்லன் ரோஷன் மேத்யூவுக்குக் குறைவான காட்சிகள்தான் என்றாலும் தான் வரும் காட்சிகளில் டெரர் கிளப்புகிறார். சற்று ஓவர் ஆக்ட்டிங் பாவனைகள் தெரிந்தாலும் அந்தப் பாத்திரத்துக்கான நியாயத்தைச் செய்திருக்கிறார். ஆனால், பார்க்கும் அனைவரையும் ஜாலியாக கொலைகள் செய்யும் அவர், ஒரு பெரிய கார்ப்பரேட் வாரிசா, ஒரு மாபியா குழு தலைவனா, இல்லை இரண்டுமா என்பது கடைசிவரை குழப்பமாகவே இருக்கிறது.

தமிழ் நடிகராக மற்றுமொரு புதுவரவு கிரிக்கெட்டர் இர்ஃபான் பதான். இன்டர்போல் அதிகாரியாகப் படம் முழுவதும் வரும் பாத்திரம். சில டப்பிங் பிரச்னைகள் இருந்தாலும், நடிகராக பாஸ் மார்க் பெறுகிறார்.
Cobra Review | கோப்ரா விமர்சனம்
Cobra Review | கோப்ரா விமர்சனம்

இயக்குநர் அஜய் ஞானமுத்து ஒரு 'Larger Than Life' கதையை அதற்குரிய பிரமாண்டத்துடன் கொடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், அதை நம்பும்படியாகக் கொடுப்பதில் சறுக்கியிருக்கிறார். சர்வதேச கொலைகள் 'காதுல பூ' ரகமாகவே விரிகின்றன. இதற்கு எதற்கு இத்தனை வெளிநாட்டுப் பயணங்கள், பில்டப்புகள் எனக் கேட்கும் அளவு ஸ்க்ரிப்ட்டில் அத்தனை லாஜிக் ஓட்டைகள் எட்டிப் பார்க்கின்றன. நம்மூரில் நடக்கும் கதையாகவே எடுத்திருந்தாலும்கூட, சில ஓட்டைகளை அடைத்திருக்கலாம். சாதாரண பத்திரிகையாளராக வரும் கே.எஸ்.ரவிக்குமாரை அண்டர்கவரில் சர்வதேச லெவலில் ஆபரேஷன்கள் செய்பவராகக் காட்டிவிட்டு, பின்னர் அவரையே காமெடி பீஸ் ஆக்கியிருக்கிறது திரைக்கதை.

இன்டர்வெல் ட்விஸ்ட் ஆச்சர்யம் என்றாலும், இரண்டாம் பாதியில் அந்த விசாரணை காட்சி தவிர்த்து நீண்ட நெடிய ஃப்ளாஷ்பேக் ஒன்றும் ஓடுகிறது. ஆனால், அது எந்தவித எமோஷனுமின்றி 'ஒரு தகவலுக்காக' என்கிற ரீதியிலேயே கடந்துபோகின்றது. நிறைய ட்விஸ்ட்களை முடிச்சுகளாக ஆங்காங்கே வைத்துவிட்டு, எல்லாவற்றையும் ஒரே ஃப்ளாஷ்பேக்கில் 'நான்-லீனியராக' அவிழ்க்கிறேன் என்கிற ரீதியில் கதையை நகர்த்தியிருக்கின்றனர். ஆனால், அதில் ஒருவித தெளிவின்மையே எட்டிப் பார்க்கிறது.

Cobra Review | கோப்ரா விமர்சனம்
Cobra Review | கோப்ரா விமர்சனம்

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஏற்கெனவே வைரலான 'தும்பி துள்ளல்', 'அதிரா' தாண்டி மற்ற பாடல்கள் கதையோடு ஒட்டவில்லை என்றாலும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் 'Gibberish'ஆக ஒலிக்கும் தீம் மியூசிக், அந்த மழை ஸ்டன்ட் காட்சி என எல்லாவற்றிலும் இசைப்புயலின் ராஜ்ஜியம்தான். வெளிநாட்டில் எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டு வழியின்றி நிற்கும்போது விக்ரம் மனதுக்குள் கணக்குப் போடும் காட்சிக்கு அட்டகாசமாக உயிர்கொடுத்திருக்கிறது படத்தின் கிராபிக்ஸ் குழு. புவன் சீனிவாசன் மற்றும் ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவு பனிப்பிரதேசங்களின் அழகையும், மழை சண்டைக் காட்சியில் அதன் பதைபதைப்பையும் அதற்குரிய அழகியலுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது.

திக்கற்று குரூப்புல டூப்பாக நிற்கும் ரொமான்ஸ் காட்சிகளைக் கத்தரித்து, லாஜிக் என்ற விஷயத்தை இன்னமும் கவனத்துடன் கையாண்டிருந்தால் விக்ரம் என்னும் மகாநடிகனின் உழைப்புக்கு நியாயம் சேர்த்திருக்கலாம். இந்த `கோப்ரா'விடம் விஷமில்லை, சீற மட்டுமே செய்திருக்கிறது.