Published:Updated:

Coffee with Kadhal விமர்சனம்: இதில் காதலும் இல்லை; காமெடியும் இல்லை!

Coffee with Kadhal

லிவ்-இன், ஒன்-நைட் ஸ்டாண்ட், திருமணத்திற்கு முன்பான கர்ப்பம் என இன்றைய நவீனக் காலத்துக் காதலையும் காட்ட நினைத்ததெல்லாம் சரிதான். ஆனால், எந்த ஒரு புரிதலுமின்றி மேம்போக்காகவே அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

Coffee with Kadhal விமர்சனம்: இதில் காதலும் இல்லை; காமெடியும் இல்லை!

லிவ்-இன், ஒன்-நைட் ஸ்டாண்ட், திருமணத்திற்கு முன்பான கர்ப்பம் என இன்றைய நவீனக் காலத்துக் காதலையும் காட்ட நினைத்ததெல்லாம் சரிதான். ஆனால், எந்த ஒரு புரிதலுமின்றி மேம்போக்காகவே அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

Published:Updated:
Coffee with Kadhal
மூன்று சகோதரர்களும் சிக்கல்கள் நிறைந்த அவர்களின் காதல் கதைகளும்தான் இந்த `காஃபி வித் காதல்'. `அரண்மனை', `கலகலப்பு' படங்களிருந்து வெளியே வந்து காமெடியை விடக் காதல் கொஞ்சம் அதிகமாக இருக்கும் ஒரு ரொமான்டிக் காமெடி படத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.

மூத்த அண்ணன் ஸ்ரீகாந்த் இசை கற்றுத்தரும் ஆசிரியர். வாலிபம் ஓய்ந்த திருமண வாழ்க்கையால் சலிப்படைந்து கிடக்கும் கணவர். அதிகம் பணம் ஈட்டும் வேலை, லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என பெருநகர வாழ்க்கையில் வெற்றிகொண்ட இளைஞனாக ஜீவா. எப்போதுமே ஜாலியாகச் சுற்றித்திரியும் கடைக்குட்டி ஜெய். இவர்களின் சகோதரியாக திவ்யதர்ஷினி கர்ப்பகாலத்தில் தாய்வீட்டில் இவர்களுடன் தங்கியிருக்கிறார். ஒரு ஆர்கானிக் உணவகம் வைக்கவேண்டும் என்பது ஜெய்யின் கனவு. அதற்கான இடத்தை கைப்பற்ற மாளவிகா சர்மாவைத் திருமணம் செய்ய முடிவுசெய்கிறார். ஆனால், அவர் காதலிப்பதோ தன் நீண்ட நாள் தோழியான அம்ரிதாவை.

Coffee with Kadhal
Coffee with Kadhal

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஜீவா பிரேக்-அப் சோகத்தில் ஊர் திரும்புகிறார். அங்கே தம்பி ஜெய்க்கு நிச்சயக்கப்பட்ட மாளவிகா சர்மாவிடம் காதல் வயப்படுகிறார். ஆனால், அவருக்கு நிச்சயிக்கப்படும் பெண் ரைசா வில்சன். அவர் ஏற்கெனவே ஸ்ரீகாந்துடன் திருமணம் தாண்டிய உறவில் ஒன் நைட் ஸ்டாண்டில் இருந்தவர். அதனால் இந்தத் திருமணத்தை நடத்த விடக்கூடாது என முடிவுசெய்கிறார் ஸ்ரீகாந்த். குழப்பமாக இருக்கிறதல்லவா? இதில் யார், யார் கையைப் பிடிக்கிறார்கள், ஜீவாவின் காதல் கைகூடியதா இல்லையா என்பதைக் கொஞ்சம் கூட சிரத்தையில்லாமல் வெறும் உணர்ச்சிகளற்ற காட்சிகளின் தொகுப்பாக இருந்து பதில் சொல்கிறது படம்.

கோபமும் அமைதியும் ஒருசேர இருக்கும் இளைஞனாக ஏற்கெனவே 'என்றென்றும் புன்னகை' போன்ற படங்களில் பார்த்த ஜீவாதான். அப்படியும் சகோதரர்கள் மூவரில் நடிப்பில் ஸ்கோர் செய்வது என்னவோ அவர் மட்டும்தான். நடிகைகளில் அம்ரிதா வழங்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். இதையே மற்றவர்கள் பற்றியும் சொல்லிவிட முடியாது. குறிப்பாகத் தமிழில் முதல் படத்தில் நடித்திருக்கும் மாளவிகா சர்மா நடிப்பில் கடக்க வேண்டிய தூரம் பல மைல்கள் இருக்கின்றன.

மொத்தமாகப் படத்தின் சர்ப்ரைஸ் டிடிதான். படத்தில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரமும் அவரதுதான். அதற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்திப்போகிறார். காமெடிக்கு யோகி பாபு(ஸ்), ரெடின் கிங்ஸ்லியை இறக்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே பார்த்த டயலாக் டெலிவரி, அதே உடல்மொழி என ரெடின் கிங்ஸ்லி காமெடிகள் சலிப்பு. யோகி பாபு ஆங்காங்கே சிரிக்கவைக்கிறார். ஆனால், உருவக்கேலியை மட்டும் அவர் விடுவதாக இல்லை.

சில வசனங்கள் ஈர்த்தாலும், பெரும்பாலானவை காட்சியிலிருந்து தனியாகச் செயற்கையாகத் துருத்திக்கொண்டு இருக்கின்றன. இவ்வளவு ஏன், சில காட்சிகளே கதைக்குத் தேவையற்ற ஒன்றாக துருத்தலான ஒன்றாகவே இருக்கின்றன. அதையும் வெட்டித் தூக்கியிருந்தால் படத்தின் நேரமாவது குறைந்திருக்கும்.

இது போன்ற படங்களுக்குப் பெரும் பலமாக இருக்க வேண்டியது இசைதான். ஆனால், பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்று ஒதுங்கிக்கொள்கிறார் யுவன். 'தியாகி பாய்ஸ்' தவிர்த்து எந்த பாடலுமே நினைவில் நிற்கவில்லை. அந்தப் பாடல் வந்த இடமும் வழக்கமான 'காதல் தோல்வி சூப் சாங்க்' தருணம்தான் என்பது அடுத்த நெருடல்.

கலர்ஃபுல் படமாக இதை மக்களுக்குக் கொடுப்பதில் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணாசாமி மற்றும் ஃபென்னி ஆலிவரின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கிறது. ஆனால், திரைக்கதையில் அப்படி எந்த மெனக்கெடல்களும் இல்லை. யார், யாரைக் கரம் பிடிக்கப்போகிறார்கள் என்பதை மிக எளிதில் கணித்துவிட முடியும் என்றாலும் அது எப்படி நிகழ்கிறது என்பதிலும் எவ்வித சுவாரஸ்யமும் இல்லை. கடைசியில் க்ளைமாக்ஸை நெருங்கும் போது நடப்பதையெல்லாம் பார்த்து 'ஏன் இதெல்லாம் நடக்கிறது?', 'இவர்கள் மீண்டும் சேர இதெல்லாம் ஒரு காரணமா?' எனப் பல கேள்விகள் நமக்குமே எட்டிப் பார்க்கின்றன. அதிலும் இறுதியில் மீண்டும் வரும் ஐஸ்வர்யா எப்படித் திரும்பிப் போனார், எதற்குத் திரும்பிப் போனார் என்பதற்கெல்லாம் வசன அளவில்கூட ஒரு லாஜிக்கான பதிலை இயக்குநர் யோசிக்கவே இல்லை.

Coffee with Kadhal
Coffee with Kadhal

லிவ்-இன், ஒன்-நைட் ஸ்டாண்ட், திருமணத்திற்கு முன்னான கர்ப்பம் என இன்றைய நவீன காதலையும் காட்ட நினைத்ததெல்லாம் சரிதான். ஆனால், எந்த ஒரு புரிதலுமின்றி மேம்போக்காகவே அவை அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜீவாவின் முதல் காதல் தொடர்பான காட்சிகள் அபத்தம்.

காமெடிக்கும் டிராமாவுக்கும் எந்தப் பஞ்சமுமில்லாத கதைக்களம். கூடவே, இத்தனை கதை மாந்தர்கள் இருந்தும், ஒரு நல்ல பீல்குட் படமாக இதை மாற்றத் தவறியிருக்கிறார் சுந்தர்.சி. நல்ல ஒளிப்பதிவு, எடிட்டிங், அழகிய லொகேஷன்ஸ் மட்டுமே ஒரு பீல் குட் படத்துக்கு போதாது, உணர்வுகளைக் கடத்தும் அழுத்தமான ஒரு திரைக்கதையும் முக்கியம் என்பதற்கு மற்றுமொரு சான்று இந்த `காஃபி வித் காதல்'!