Published:Updated:

Irul: ஃபகத்தின் நடிப்பு, த்ரில்லிங் ஒன்லைன் என எல்லாமே பக்கா... ஆனாலும் ஏன்?!

கார்த்தி

ஒருமாத கால இடைவெளியில் படத்தை முடித்திருக்கிறார்கள். அதையெல்லாம் நாம் குறை சொல்ல முடியாதுதான். ஆனால், மெனக்கெட்டிருக்கலாம் என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது. ஒன்லைன் இருக்கிறது. வாருங்கள் திரைப்படமாக மாற்றிக்கொள்வோம் என்கிற மெத்தனமே ஒரு கட்டத்துக்கு மேல் தெரிகிறது.

மழையிரவொன்றில் தனித்து இருக்கும் பங்களாவில் மாட்டிக்கொள்கிறது ஒரு காதல் ஜோடி. அந்த வீட்டுக்குள் ஒருவர் இருக்கிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் 'இருள்'.
Irul
Irul

சீரியல் கில்லர் ஒருவரை புனைவின் நாயகனாக்கி நாவல் ஒன்றை எழுதுகிறார் சௌபின் சகீர். வக்கீல் வேலை பார்க்கும் காதலி தர்ஷனா ராஜேந்திரனுடன், லாங்க் டிரைவ் சர்ப்ரைஸ் செய்ய பிளான் எல்லாம் செய்துவிட்டு கார் ஏறினால், நடுவில் பிரேக்டௌன். ஆள் அரவமற்று இருக்கும் இடத்தில் ஒரு வீடு. அந்த வீட்டிலோ ஒரே நபர். அவர்தான் ஃபகத் ஃபாசில். இந்த இருவரில் ஒருவர் சீரியல் கில்லர். அங்கு ஒரு பெண்ணின் பிணம். அடுத்து நடப்பவை எல்லாம் தக் தக் திடுக் திடுக் சஸ்பென்ஸ் காட்சிகள். 'காதலிக்க நேரமில்லை' நாகேஷ் பாணியில் இந்தப் படத்தின் ஒன்லைனை அல்லு கிளப்பும் வகையில் சொல்லலாம்தான். ஆனால், படமாக பார்த்தபின்னர் அப்படி இல்லை.

ஒரு நாவலை மட்டுமே எழுதி அதுவும் பெரிதாய் க்ளிக் ஆகாத ஒரு பிஸினஸ்மேனாக சௌபின் சகீர். "ச்ச... என்ன வாழ்க்கைடா இது" என சப்புக்கொட்டி நகரும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும், அதற்கு இந்தியா சார்பாக இருக்கும் ஒரே நடிகர் சௌபின்தான். இந்தப் படத்திலும் அசத்தல். நடிப்பு என்பதற்கு உடலை வறுத்த வேண்டும், மெனக்கெட வேண்டும் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருக்கும் சூழலில், கிடைத்திருக்கும் அற்புத நடிகர் ஃபகத் ஃபாசில். 'Thondimuthalum Driksakshiyum' படத்தில் ஏற்கெனவே நம்மை ஃபகத் பழக்கப்படுத்திய கதாபாத்திரத்தின் ஒரு 'துக்கடா' தான் இது என்றாலும், அதை இன்னுமே மெருகேற்றியிருக்கிறார். கள்ளத்தனத்தின் மொத்த உருவாக மாறி, தான் அப்படி இல்லவே இல்லை நம்புங்கள் என மீண்டுமொரு சத்தியம் செய்திருக்கிறார் ஃபகத். இந்த இருவரில் யார் சீரியல் கில்லர் எனத் தீர்மானிக்கும் பொறுப்பு தர்ஷனா ராஜேந்திரனுக்கு. இருவருமே பொய்யில் உண்மையில் கலக்கிறார்கள் என்பதை அறிந்தும், அடுத்தடுத்து அவர் செய்யும் காட்சிகளில் இருவருக்கும் நடிப்பில் ஈடு கொடுத்திருக்கிறார் தர்ஷனா.

இருள்
இருள்

தர்ஷனா ராஜேந்திரன் முன் வைக்கப்படும் வாதங்களில் குழப்பங்கள் இருந்தாலும், பார்வையாளர்களுக்கு அந்தக் குழப்பங்களைக் கடத்த திரைக்கதை தடுமாறுகிறது. இந்த தடுமாற்றங்களை எல்லாம் மீறி படத்தைக் காப்பாற்றுவது மூவரின் நடிப்பும், படத்தின் டெக்னிக்கல் மாயாஜாலங்களும்தான். நீளமான காட்சிகள்; ஒருவர் பேசியதும், அப்படியே கேமரா அடுத்தவர் பக்கம் திரும்பி, அவரின் வாதத்தைப் பேச வைப்பது, வித்தியாசமான லைட்டிங், இசை என ஒவ்வொரு விஷயத்திலும் சுவாரஸ்யத்தைச் சேர்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஃபிரேமும் அதன் மீது பாய்ச்சப்பட்டிருக்கும் ஒளியால் ஓவியம் போல மாறி மின்னுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லாருமே நல்லாத்தான நடிச்சு இருக்காங்க. அப்புறம் ஏன் அதற்கு முந்தைய பத்தியில் திட்டி இருக்கிறீர்கள் என்கிறீர்களா? ஒரு படத்தில் மூன்று பிரதான கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து திரைக்கதை எழுதுவதென்பது லேசுபட்ட காரியம் அல்ல. அதற்கான காட்சிகளை அடுக்க வேண்டும். அவை நம்பும்படி இருக்க வேண்டும். சுவாரஸ்யமான ஒன்லைன் சறுக்க ஆரம்பித்தது இங்கேதான்.

இருள்
இருள்

Whodunit பாணி படங்களில் யார் கொலையாளி என கண்டுபிடிக்க நம்முன் ஆயிரம் விஷயங்கள் கொட்டப்படும். ஒரு கொலை அதை செய்வதற்கான வாய்ப்புகள், லாபங்கள் யாருக்கும் அதிகம் என்பதாக அக்கதைகள் விரியும். சமீபத்தின் வெளியான 'ராத் அகேலி ஹை', 'Knives Out' முதல் நம் ஈஸ்ட்மென் கலர் 'அதே கண்கள்' வரை இதே கதைதான். ஆனால், இத்தகைய படங்களில் ஒரு டஜன் கதாபாத்திரங்களை கதைக்குள் உலவவிடுவார்கள. 'இவனா இருக்குமோ, அவனா இருக்குமோ ' என நம் மூளைக்கு மூன்று பாக்ஸ் பாப்கார்ன் சேர்த்து சாப்பிடும் அளவுக்கு வேலை கொடுக்கும் திரைக்கதையை அமைத்திருப்பார்கள். 'இருள்' சோபிக்காமல் போனது இந்த இடத்தில்தான். ஒரு வீடு, அங்கிருக்கும் பேஸ்மென்ட், அதில் ஒரு பெண் என்பதைவைத்து இவ்வளவுதான் எடுக்க முடியும் என்றால், அது நம் பிழையில்லையே என்றுதான் தோன்றுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல், இதுல என்னத்த உருட்டிக்கிட்டு இருக்கீங்க என நம் மைண்ட் வாய்ஸ் சத்தமாகவே வெளியே கேட்க ஆரம்பித்துவிடுகிறது. ஹால்ல ரெண்டு நிமிஷம், இப்ப பேஸ்மென்ட், இப்ப மறுபடியும் ஹால் வருவோம், இப்ப மீண்டும் பேஸ்மென்ட் போவோம். இப்படியாக என்ன செய்வதென்றே தெரியாமல், நம்மை அலைக்கழிக்க ஆரம்பித்துவிடுகிறது திரைக்கதை. இருவரின் வாதங்களுமே குழப்பத்தை உருவாக்குகிறதே அன்றி, அடுத்த கட்டமான சுவாரஸ்யத்தை நோக்கி நகர மறுக்கிறது.

கொரோனா சூழலில் எடுக்கப்பட்ட திரைப்படம் 'இருள்'. ஃபகத் ஏற்கெனவே 'C U SOON' என ஒரு படமும் கடந்த மாதம் வெளியிட்டிருந்தார். ஒருமாத கால இடைவெளியில் படத்தை முடித்திருக்கிறார்கள். அதையெல்லாம் நாம் குறை சொல்ல முடியாதுதான். ஆனால், மெனக்கெட்டிருக்கலாம் என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது. ஒன்லைன் இருக்கிறது. வாருங்கள் திரைப்படமாக மாற்றிக்கொள்வோம் என்கிற மெத்தனமே ஒரு கட்டத்துக்கு மேல் தெரிகிறது.

Irul
Irul
'இருள்' சுவாரஸ்யமாக இல்லை என நீங்கள் வருத்தப்பட வேண்டாம். வரும் வாரமே 'ஜோஜி' எனும் படத்தை அமேஸான் ப்ரைமில் ரிலீஸ் செய்யவிருக்கிறார் ஃபகத். காத்திருப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு