Published:Updated:

ஃபகத்தின் `மாலிக்' - பிராண்டோவின் `காட்ஃபாதர்', கமல்ஹாசனின் `நாயகன்' கிளாஸிக் வரிசையில் சேருமா?!

கார்த்தி

மைனாரிட்டிகளின் நிலங்களை பிடுங்கித்தின்ன வரும் அரச அதிகார வர்க்கம், அதற்குத் துணை போய் தோட்டாக்களை அவிழ்த்துவிடும் காவல்துறை என ஒரு நாயக பிம்ப சினிமாவுக்குள் அத்தனை அரசியலைப் பேசியிருக்கிறார் இயக்குநர் மகேஷ் நாராயணன்.

சுலைமான் மாலிக் தன் வாழ்வின் முக்கிய நிகழ்வான ஹஜ் பயணத்துக்குக் கிளம்புகிறார். தன் கோட்டையான ரமத பள்ளியைவிடுத்து சுலைமான் வெளியேற, காவல்துறை அவரைக் கைது செய்கிறது. யார் இந்த சுலைமான் என்பதை ரத்தமும் சதையும் கலந்த கதையாகச் சொல்கிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் மகேஷ் நாராயணனின் மாலிக்.

பாராட்டிப் பாராட்டி அலுத்துப்போனாலும், அதைவிட இன்னும் பிரமாண்டமாய் நடித்து பாராட்டைப் பெற்றுவிடுகிறார் ஃபகத். சிறுவயது கெட்அப்புக்கு 20 கிலோ வரை குறைத்து வேறு மனிதராக தோன்றும் ஃபகத், வயதான தோற்றத்துக்கு அப்படி எதையும் பெரிதாக மெனக்கெடவில்லை. இல்லை அப்படியெல்லாம் மெனக்கெட்டது போலத் தெரியவில்லை. நான்கு நாள்கள் சாப்பிடாமல் இருக்கும் வறியவனின் முகபாவனைகளைக்கூட வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு செய்துவிடக்கூட லாவகம் ஃபகத்துக்கு வாய்த்திருக்கிறது. தளர்ந்த நடையும், வார்த்தைகள் வந்து விழும் வேகமுமே அவரை முதிர்ந்த நபராக நம்மை நம்ப வைத்துவிடுகிறது. சிறுவயதில் வரும் சிரிப்பின் அளவுகூட கொஞ்சம் கொஞ்சமாக இறுகிப்போய், மனம் கனத்து மாறிவிடுகிறது. ஆனாலும், கடைசி நொடிவரை தன் மக்களின் மேல் கொள்ளும் நம்பிக்கை, கண்களில் மிளிர்கிறது.

மாலிக்
மாலிக்

பொதுவான நாயக பிம்ப சினிமாக்களில், நாயகிகள் ஒன்று மரித்துப்போவார்கள் அல்லது காணாமல் போவார்கள். மாலிக்கின் சரிபாதியாக படம் முழுக்க வருகிறார் ரோஸ்லினான நிமிஷா சஜயன். தன் வயதை ஒத்த கதாபாத்திரங்கள் பெரும்பாலும், நிமிஷாவுக்குக் கிடைப்பதில்லை. 'தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும்', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்', 'நாயாட்டு' எனப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அதனாலேயே சிறுவயது கதாபாத்திரத்தில் நிமிஷாவை சட்டென நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால், அதற்கெல்லாம் சேர்த்து அடுத்தடுத்த பகுதிகளில் பர்ஃபாமன்ஸில் அள்ளிவிடுகிறார்.

காதல் கிறக்கத்தில் ஃபகத்தைப் பார்ப்பதெல்லாம் அவர் ஜஸ்ட் லைக் தட் செய்வதுதான். அதே சமயம், மரணச் செய்தி கேட்டு உடையும் மூன்று காட்சிகள், மூன்றுக்கும் வெவ்வேறான உணர்ச்சிகள்... உடல் அலுத்து இனி அவ்வளவுதான் எனத் தெரியும் நிலையில் பெரிதாய் என்ன செய்ய முடியும். போராடிப் பார்த்து இயலாமையின் உச்சத்தில் உடையும் தருணம் உடைந்துவிடக்கூடாது என்கிற வைராக்கியம் பிறக்கும். எதிர்பார்த்த முடிவை நோக்கி கனத்த பெருமூச்சுடன் அமரும் அந்த நொடியில், இருப்பத்தி நான்கே வயதான நிமிஷா சஜயன், இந்தச் சினிமாவில் இன்னும் இருக்கும் ஆண்டுகளில் என்னென்ன செய்யக் காத்திருக்கிறார் என்பதைச் சொல்லிச் செல்கிறார்.

கூடவே இருந்து 'அரசியல்' செய்யும் அபு பக்கராக திலீஷ் போத்தன். உற்ற நண்பன் டேவிட்டாக வினய் ஃபோர்ட். சுலைமானின் அம்மா ஜமீலாவாக, அவன் செய்த தவறுகளுக்கு எல்லாம் நீதியின்படி தண்டனை பெற்றுத்தர முயலும் ஜலஜா, துணை ஆட்சியர் ஜோஜு ஜார்ஜ் என எண்ணற்ற சிறப்பான கதாபாத்திரத் தேர்வுகள். சில காட்சிகளே வந்தாலும், காவல்துறை அதிகாரியாக இந்திரன்ஸ் காட்டியிருப்பது காவல்துறைக்கே உரித்தான குரூர முகம். அவ்வளவு இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு எவ்வித ஈவு இரக்கமும் இன்றி பேசுவது ஒரு கலை. அது எல்லோருக்கும் எளிதாக வாய்ப்பதில்லை.

மாலிக்
மாலிக்
மாலிக்கின் வீட்டில் நிகழும் முதல் காட்சியிலேயே ஒளிப்பதிவாளர் சனு ஜான் வர்கீஸின் உழைப்பு பளிச்சிடுகிறது. 12 நிமிடங்களுக்கு மேல் நீளும் அந்த ஷாட்டில், ஒவ்வொரு தருணத்திலும் கதை விரிவடைகிறது. மகேஷ் நாராயணன் எனும் தேர்ந்த கதை சொல்லி, நம்மை இந்தக் கதைக்குள் 150 நிமிடங்கள் உட்கார வைப்பதற்கான அனுமதியை அந்தக் காட்சியில் பெற்றுவிடுகிறார்.

2009-ம் நடந்த பீமபள்ளி கலவரத்தின் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ரமதபள்ளி என்னும் கிராமத்தை கட்டியெழுப்பி இருக்கிறார்கள். "இங்க இருக்குற ஜீசஸை கவனிச்சியா. அவரோட கைகளை நீட்டி மசூதில வர்ற மக்களை ஆரத் தழுவிக்கறாப்ல இருக்குல்ல" எனக் கேட்கும் அந்த ஒற்றை வரிதான் மாலிக் எழுப்பி வைத்திருக்கும் ரமதபள்ளி கிராமத்தின் அரண். அங்கிருக்கும் கிறுஸ்துவ இஸ்லாமிய புகைச்சல்கள், அந்த தீ அணையாத வண்ணம் பார்த்துக்கொள்ளும் அரசியல் கட்சிகள். மைனாரிட்டிகளின் நிலங்களை பிடுங்கித்தின்ன வரும் அரச அதிகார வர்க்கம், அதற்குத் துணை போய் தோட்டாக்களை அவிழ்த்துவிடும் காவல்துறை என ஒரு நாயக பிம்ப சினிமாவுக்குள் அத்தனை அரசியலைப் பேசியிருக்கிறார் மகேஷ் நாராயணன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலிவுட்டின் முதல் ‘கான்!’

சித்ராவின் குரலில் வரும் 'தீரமே' பாடலும், அதன் மான்டேஜ் காட்சிகளும் அவ்வளவு இனிமை. அதேபோல், பீமபள்ளி கிராமத்து மக்களின் மொழிநடை படுவேகமாகச் செல்கிறது. அதற்கான மெனக்கெடல் என்பதற்கு படத்தில் வரும் தமிழ் வசனங்களே சாட்சி. மாஸ் காட்சிகளுக்கோ, குற்றவுணர்ச்சியை மேலெழும்பச் செய்யும் காட்சிகளுக்கோ படத்தில் குறைவில்லை. தியேட்டரில் பெரிய திரையில் பார்க்க முடியவில்லை என்பது மட்டும்தான் குறை.

மாலிக்
மாலிக்

இத்தனை இருந்தும் படம் சறுக்குவது அதன் டெம்ப்ளேட்டிலும், கிளேஷேவான சில காட்சிளிலும்தான். மணிரத்னத்தின் 'நாயகன்' படத்தில் இருக்கும் பிரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலோவின் 'காட்ஃபாதர்' அளவைவிட, 'மாலிக்'கில் அதிகமாக 'நாயகன்'-ன் பகுதி இருக்கிறது. பல காட்சிகளில் நம்மையும் மீறி 'நாயகன்' நமக்கு ஞாபகம் வருகிறது. கடத்தல், பழி தீர்க்கும் வைபவங்கள், ஹீரோவுக்கான ஸ்டேஜிங் என 'நாயகன்' பாணி படம் முழுக்க வருகிறது. விட்டு வைத்துவிட்டு வரும் விதைகள்தான் விருட்சமாகின்றன என்பதற்கு மாலிக்கும் விதிவிலக்கல்ல. ஆனால், அந்த காட்சியையும் நாயகனில் பார்த்திருக்கிறோம். படத்தின் மத பூசல்கள், பர்ஃபாமன்ஸ் எல்லாவற்றையும் மீறி தொடர்ந்துவரும் இந்த 'நாயக' நிழல் படத்தை ஒரு படி அதன் தரத்தில் இருந்து கீழ் இறக்கிவிடுகிறது.

எல்லாவற்றையும் கடந்து இந்த ஆண்டின் ஒரு மிகச்சிறந்த சினிமாவாக உருவாகி நிற்கிறது மாலிக். எழுபதுகளில் காட்ஃபாதர், எண்பதுகளில் நாயகன் என்றால், 2020க்குப் பின்னர் 'மாலிக்'குக்கும் ஒரு தனித்த இடமுண்டு. அதற்கான அத்தனை தகுதிகளையும் தன்னகத்தே பெற்றிருக்கிறது இத்திரைப்படம். தவறவிடாதீர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு