Published:Updated:

ஆணாதிக்கத்தின் முதுகெலும்பை உடைக்கத் தவறிய `குஸ்தி!'

Gatta Kusthi

படம் நிஜமான பெண்ணியம்தான் பேசுகிறதா... எதிர்பார்க்கும் ஆறுதலைத் தருகிறதா? இதோ... ‘அவள் விகடன்’ பார்வையில் ஓர் அலசல்.

ஆணாதிக்கத்தின் முதுகெலும்பை உடைக்கத் தவறிய `குஸ்தி!'

படம் நிஜமான பெண்ணியம்தான் பேசுகிறதா... எதிர்பார்க்கும் ஆறுதலைத் தருகிறதா? இதோ... ‘அவள் விகடன்’ பார்வையில் ஓர் அலசல்.

Published:Updated:
Gatta Kusthi

`ஆயிரம் பேசலாம். ஆனா, எல்லாம் ஆம்பளைக்கு கீழதான்’ என்கிற ஆணாதிக்க மனநிலை புரையோடிக்கிடக்கும் இந்தச் சமூகத்தில், `திருமணம்‘ என்பதையே ஒரு காரணமாகக் காட்டி பெண் நசுக்கப்படுவதையும், `குடும்பம்‘ என்பதற்காகவே அவளுடைய கனவுகள் பொசுக்கப்படுவதையும் பற்றிப் பேசிப் பேசி மாய்ந்துகொண்டுதான் இருக்கிறது இந்தச் சமூகம். ஆனால், தீர்வு என்ற ஒன்றை நோக்கி இச்சமூகம் நகர்வதாகவே தெரியவில்லை. இதற்கிடையில், இந்த விஷயம் தொடர்பாக பேசும் கட்டுரைகள், சீரியல்கள் மற்றும் சினிமாக்கள்தான் ஆறுதல்.

Gatta Kusthi
Gatta Kusthi

குஸ்தி சண்டையில் சாதிக்க நினைக்கும் பட்டதாரி பெண்ணுக்கும், `புருஷனுக்கு சோறாக்கிப்போட மட்டும்தான் பொண்டாட்டி’ என நினைக்கும் ஆணாதிக்க இளைஞனுக்கும் திருமணம் நடந்தால்..? இந்த ஒருவரியை பெண்ணியம் தடவிய காமெடியுடன் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.

ஆனால், படம் நிஜமான பெண்ணியம்தான் பேசுகிறதா... எதிர்பார்க்கும் ஆறுதலைத் தருகிறதா? இதோ... `அவள் விகடன்’ பார்வையில் ஓர் அலசல்.

கேரள மாநிலம், பாலக்காட்டில் வசிக்கும் பட்டதாரி பெண்ணான கீர்த்தி (ஐஸ்வர்ய லட்சுமி), கட்டா குஸ்தி எனும் கேரள வீரக்கலையில் ஈடுபட்டிருக்கும் வீராங்கனை. இந்தக் குஸ்தியில் சாதிக்க நினைக்கும் இவருக்கு தீவிரமாக மாப்பிள்ளை    தேடுகிறது குடும்பம். குஸ்தி போடும் பெண் வேண்டாம் என பலரும் நழுவிச்செல்ல, `100 பவுன் நகை, கார், ரொக்கம்‘ வேண்டும் என்று கேட்டபடி ஒரு குடும்பம் மட்டும் முன்வருகிறது. ``வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்றது ஒரு பொண்ணா எனக்கு அவமானம்“ என்று தவிர்க்கிறார் கீர்த்தி.

ஐஸ்வர்ய லட்சுமி
ஐஸ்வர்ய லட்சுமி

இதற்கிடையே, கல்லூரியில் தன் தங்கையைக் கேலி செய்யும் ஆண்களை, கீர்த்தி வெளுத்துத் துவைக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகிறது. இனி, கேரளாவில் மாப்பிள்ளை    கிடைக்க வழியே இல்லை என்ற நிலையில் தமிழ்நாட்டில் தேடுகிறார்கள். பொள்ளாச்சியைச் சேர்ந்த வீரா (விஷ்ணு விஷால்) 8-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத பணக்கார, கிராமத்து இளைஞன். பெற்றோரை இழந்த வீராவுக்கு ஆணாதிக்கவாதியான அவர் மாமா (கருணாஸ்) வழிகாட்டியாக இருக்கிறார். கட்டப்பஞ்சாயத்து, சீட்டாட்டம், குடி, கும்மாளமாகச் சுற்றும் வீராவுக்கு பெண் தேடுகிறார்கள். `நீண்ட கூந்தல் உள்ள, தன்னைவிடக் குறைவாகப் படித்த, அடக்க ஒடுக்கமான பெண்தான் வேண்டும்' என ஒற்றைக்காலில் நிற்கிறார் வீரா.

பால்ய நண்பர்களான வீராவின் மாமாவும், கீர்த்தியின் சித்தப்பாவும் (முனீஸ்காந்த்) சந்தித்துக் கொள்கிறார்கள். சில, பல பொய்களைக் கூறி கீர்த்திக்கும், வீராவுக்கும் கல்யாணத்தை முடித்து விடுகிறார் சித்தப்பா முனீஸ். திருமணத்திற்குப் பின் உண்மைகள் தெரியும்போது குடும்ப குஸ்தி என்ன என்பதுதான் மீதிக்கதை.

காட்சிக்குக் காட்சி காமெடி. வசனங்கள் பல இடங்களில் கைத்தட்டல்களை அள்ளினாலும்  சீரியஸாக பேச வேண்டிய இடங்களில் சிரிப்பு வசனங்களை வைத்திருப்பது வேதனையைக் கூட்டுகிறது. பெண் உரிமை பேசும் வசனங்களை விட, பெண்களைத் தரக்குறைவாகவும், கேலிசெய்தும் பேசும் வசனங்களே படம் முழுவதும் நிரம்பியிருப்பது கொடுமை.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

ஒரு கட்டத்தில் ஆணாதிக்க மனப்பான்மையிலிருந்து திருந்தும் ஹீரோ, ``ஆணுக்கு பெண் எந்த விதத்துலயும் குறைச்சல் இல்ல” என்று சமஉரிமை நியாயத்தைக் கையில் எடுக்கிறார். ஆனால், அதற்குப் பிறகும், ``நீ ஒரு ஆம்பளையா இருந்தா என்கூட வந்து சண்டை போடுடா” என்று எதிரியை அழைப்பது பகைமுரண்.

குடும்பத்துக்காகக் கனவைக் கைவிட்டு கல்யாணம் முடிப்பதில் தொடங்கி, பொய் சொல்லி திருமணம் செய்ய மறுப்பது, வரதட்சணைக்கு எதிராகப் பேசுவது, கணவனுக்காகச் சவுரி முடியுடன் மல்லுக்கட்டுவது, கணவனைக் காப்பாற்றப் புடவையை இழுத்துச் சொருகிக்கொண்டு எதிரியுடன் சண்டை போடுவது, எந்த இடத்திலும் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதது என வெளுத்து வாங்கியிருக்கிறார் கீர்த்தியாக வரும் ஐஸ்வர்ய லட்சுமி.

`பொம்பள புள்ள இப்படி இருக்கணும்; அப்படி இருக்கணும்னு எவ்ளோ நாள்தான் சொல்லுவீங்க. எங்களுக்குத் தெரியும் நாங்க எப்படி இருக்கணும்னு’ என்று உணர்ச்சி பொங்க வசனம் பேசும் இடங்களில் அப்ளாஸ் அள்ளுகிறார்.

ஆனால், பெண்ணுரிமை, பெண்ணியம் குறித்தான காட்சிகளும், உரையாடல்களும் பெரும்பாலும் பலவீனமாகவே இருக்கின்றன படத்தில். குஸ்தி பயிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் பயிற்சியாளர் கதாபாத்திரம் ஒன்று படத்தில் இடம் பெறுகிறது. அந்த வில்லனுக்கு பாடம் புகட்டும் வகையில் ஒரு காட்சியைக்கூட படத்தில் வைக்கவில்லை.

Gatta Kusthi
Gatta Kusthi

ஊருக்கு முன் எதிரிகளை அடித்து துவம்சம் செய்து கணவனைக் காப்பாற்றுகிறாள் மனைவி. கணவனோ, `ஒரு பொம்பள காப்பாத்தி நான் உயிர் வாழுறதா..?’ என்ற அவமானத்தில் உள்ளுக்குள் புழுங்குகிறான். ஊரார் தன் மனைவிக்குக் கொடுக்கும் மரியாதையை ஏற்றுக்கொள்ள முடியாமல், ஒரு கட்டத்தில் மனைவியை வீட்டை விட்டே துரத்துகிறான். அவளைவிட `தான்’ பலசாலி என்பதை நிறுவ, அவளுடனான குஸ்தி போட்டிக்குத் தயாராகிறான். ஆனால்,  ஹீரோயினுடன் ஹீரோ சண்டையிடுவதைத் தவிர்த்துவிட்டு, வழக்கம்போல வில்லனை சண்டையிட்டு ஹீரோ ஜெயிப்பதுபோல் கதையை முடித்ததில், அதுவரை படத்தில் பேசப்பட்ட கொஞ்ச நஞ்ச பெண்ணியமும் மொத்தமாக அடிபட்டுப்போகிறது.

மொத்தத்தில் பெண் அடிமை, பெண்ணுரிமை குறித்து அழுத்தமான கருத்துகளையும், காட்சிகளையும் பதிவு செய்யத் தவறியதால், ஆணாதிக்கத்தின் முதுகெலும்பையும் உடைக்கத் தவறிவிட்டது, இந்தக் கட்டா குஸ்தி!