Published:Updated:

குலு குலு விமர்சனம்: வித்தியாசமான சந்தானம்; டார்க் காமெடி; ச.நா மேஜிக் - ஆனாலும் என்ன மிஸ்ஸிங்?

Gulu Gulu | குலு குலு

ஸ்டார் வார்ஸ், வுல்வரின் தொடங்கிப் பல ஹாலிவுட் படங்களைக் கலாய்ப்பது, க்ரிஞ்ச், பூமர் அங்கிள் எனத் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது என ரத்னகுமாரின் பல கிரேஸியான ஜாலியான விஷயங்கள் அருமை!

குலு குலு விமர்சனம்: வித்தியாசமான சந்தானம்; டார்க் காமெடி; ச.நா மேஜிக் - ஆனாலும் என்ன மிஸ்ஸிங்?

ஸ்டார் வார்ஸ், வுல்வரின் தொடங்கிப் பல ஹாலிவுட் படங்களைக் கலாய்ப்பது, க்ரிஞ்ச், பூமர் அங்கிள் எனத் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது என ரத்னகுமாரின் பல கிரேஸியான ஜாலியான விஷயங்கள் அருமை!

Published:Updated:
Gulu Gulu | குலு குலு
யார் உதவி எனக் கேட்டாலும் ஓடோடிச் சென்று செய்யும் ஒருவன், ஒரு கடத்தல் டிராமாவில் சம்பந்தப்பட, அது தொடர்பாக அவன் சந்திக்கும் மனிதர்களும், அவர்களால் விளையும் களேபரங்களுமே இந்த `குலு குலு'.

அமேசான் மழைக்காடுகளில் வாழ்ந்த பழங்குடி இனத்தவராகச் சந்தானம். அவரின் இனம் அழிக்கப்பட்டு, போகும் இடமெல்லாம் ஒடுக்குமுறையைச் சந்தித்து, கடைசியாகத் தமிழ்நாட்டிற்கு வந்து வாழ்கிறார். நிராகரிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர் என்பதால், யார் உதவி என்று கேட்டாலும் ஓடோடிப்போய்ச் செய்கிறார். அப்படி ஒரு நண்பர் கூட்டம் ஒரு ஆள் கடத்தல் பிரச்னை தொடர்பாக இவரிடம் உதவி கேட்டு வர, அவர்கள் கேட்ட உதவியைச் செய்யப் போகும் சந்தானம், சில பல சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார். எப்படி அதிலிருந்து வெளியே வருகிறார், உடன் மாட்டிக்கொண்டவர்களை எப்படி மீட்டார் என்பதைக் கலகலப்பு பாதி, சீரியஸ் மீதி எனப் பங்கு பிரித்து விவரிக்கிறது இந்த 'குலு குலு'.

Gulu Gulu | குலு குலு
Gulu Gulu | குலு குலு

இறுக்கமான முகம், நோ கலாய் என ஆளே மாறிப்போன சந்தானம்! கூகுள் (அ) குலு பாய் என்ற கதாபாத்திரத்தில் ஒரு ஜிப்ஸியாக வருகிறார். உருவக் கேலி, பெண்களைக் கேலிசெய்யும் காட்சிகள், வசனங்கள், ரைமிங் காமெடி கவுன்ட்டர்கள் என்ற வட்டத்திலிருந்து வெளியே வந்து புதுமையான கேரக்டரில் முதன்முறையாக நடித்திருக்கிறார் சந்தானம். மிகவும் தன்மையான உடல்மொழியில் சந்தானத்தைப் பார்க்கும்போது நமக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.

'நக்கலைட்ஸ்' கவி, 'முதல் நீ முடிவும் நீ' ஹரீஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, யுவராஜ், மெளரீஷ் ஆகியோர் அடங்கிய நண்பர் கூட்டம் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கின்றது. ஒரு ஃப்ரண்ட்ஸ் கேங் என்று கடந்து போக முடியாமல் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே காட்சிகள் வைத்து முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். பல படங்களில் வில்லனாக மிரட்டிய பிரதீப் ராவத், இந்தப் படத்திலும் மிரட்டுகிறார். முதல் தாரத்தின் மகனான பிரதீப் ராவத்திற்கும் இரண்டாம் தாரத்தின் மகளான அதுல்யா சந்த்ராவுக்கும் இடையே ஒரு கிளைக் கதை ஓடுகிறது. இதுபோக ஈழத் தமிழர்களாக வரும் ஜார்ஜ் மரியம் கேங் செய்யும் அட்ராசிட்டீஸ் தனிக்கதை! இவர்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் ஒரு இடத்தில் வந்து நிற்கின்றனர். இப்படியான ரோலர் கோஸ்டர் 'ரோடு மூவி'தான் படம்.

Gulu Gulu | குலு குலு
Gulu Gulu | குலு குலு

பழங்குடி மக்கள், கெராஸ்கோஃபோபியா (வயது முதிர்ச்சியைக் குறித்த பயம்), மெனோபாஸ், மொழி அரசியல், ஈழத் தமிழர்களின் இருப்புச் சிக்கல்கள், பப்ஜி விளையாட்டும் சைனாவும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை எனப் படத்தில் பல விஷயங்களைத் தொட்டிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். நிறைய இடங்களில் பிளாக் ஹியூமர் நன்றாக வொர்க் அவுட்டாகி இருக்கிறது. குறிப்பாக, ஆங்காங்கே வரும் 'பாகற்காய் டிஷ்' குறித்த வசனங்களும் அவை இடம்பெறும் இடங்களும் அல்டிமேட்! 'இப்போ நம்ம எங்க இருக்கோம்' என்ற கேள்விக்கு, 'அங்கேயேதான் இருக்கோம்' என்பது போன்ற காமெடி பன்ச்களும் டைமிங்கில் க்ளிக்காகி இருக்கின்றன.

பப்ஜி விளையாட்டை வைத்து வரும் அந்த ஆக்‌ஷன் சீக்வென்ஸ் புதுமை! ஆனால், அதைத் தொடர்ந்து வரும் 'சீனா என்றாலே சகல ஜீவராசிகளையும் சாப்பிடுபவர்கள்' என்ற சித்திரிப்பு, படம் சொல்லும் 'இனவெறுப்பு கூடாது' என்ற கருத்துக்கே முற்றிலும் முரண். படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சந்தோஷ் நாராயணனின் இசை. பாடல்கள், பின்னணி இசை எனப் படம் முழுக்க ஃபங்கியான கிரேஸியான சந்தோஷ் நாராயணனைப் பார்க்க, சாரி... கேட்க முடிகிறது. மாஸ் காட்சிகளுக்கு சந்தோஷின் இசைக்கருவிகள் ஓவர்டைம் பார்த்து அதிர வைக்கின்றன. சந்தானத்தின் வீடு, அவருடைய வேன் என கலை இயக்கத்தில் வெரைட்டி காட்டியிருக்கிறார் ஜாக்கி. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு ஒரு பயணப்படத்துக்கான பரவலான உலகை அட்டகாசமாகத் திரைக்குள் அடக்கியிருக்கிறது.

Gulu Gulu | குலு குலு
Gulu Gulu | குலு குலு
க்ளைமாக்ஸில் இடம்பெறும் ஸ்டன்ட் காட்சிகளில் காமெடி சிறப்பாகவே வொர்க் அவுட்டாகி இருக்கின்றது. இதில் ஸ்டார் வார்ஸ், வுல்வரின் தொடங்கிப் பல ஹாலிவுட் படங்களைக் கலாய்ப்பது, க்ரிஞ்ச், பூமர் அங்கிள் எனத் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியது என ரத்னகுமாரின் பல கிரேஸியான ஜாலியான விஷயங்கள் அருமை!

அதே சமயம், சில காட்சிகளும் வசனங்களும், ஏன் சில கதாபாத்திரங்களுமே கூட எதற்காக வைத்திருக்கிறார்கள் என்பது புரியவில்லை. குறிப்பாக லாரியில் கடத்திச் செல்லப்படும் 'அட்ரஸ் கூட்டம்' எதற்காக என்பதற்கு காமெடி என்பதைத் தாண்டி அழுத்தமானதொரு காரணமும் இருந்திருக்கலாம். இதனாலேயே 'லொள்ளு சபா' மாறன் தொடங்கி பலரையும் வீணடித்த உணர்வு!

Gulu Gulu | குலு குலு
Gulu Gulu | குலு குலு

படம் ஆரம்பித்ததிலிருந்து கதை எதை நோக்கி நகர்கிறது என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள். அதைப் போக்க சில காமெடிகளைத் தூவி நம்மைச் சாந்தப்படுத்துகிறார்கள்.

சந்தானம் படம் என்றால் எதையெல்லாம் எதிர்பார்ப்பார்களோ அதையெல்லாம் முற்றிலும் நிராகரித்து புதிய விஷயங்களைக் கொடுத்த துணிச்சல் பாராட்டத்தக்கது. மெனோபாஸைக் கொண்டாடுவது முதல் உகாண்டா பழங்குடி வரை பல இலக்கண மீறல்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் முதல்பாதியில் நம்மை ஆச்சர்யப்படுத்தும் விஷயங்கள் இரண்டாம் பாதியில் அதே டெம்போவுடன் தொடராமல் ஆங்காங்கே தொய்வை ஏற்படுத்துவது முக்கியமான மைனஸ். வழக்கமான சந்தானத்தை எதிர்பார்த்துச் செல்கிறவர்களுக்கு ஏமாற்றத்தையும் புதிய அனுபவத்தை விரும்புபவர்களுக்கு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துவார் இந்த கூகுள் என்கிற குலுபாய்.