Published:Updated:

Haseen Dillruba: அசத்தல் டாப்ஸி, ஆச்சர்ய விக்ராந்த்... ஆனாலும்?

கார்த்தி
Haseen Dillruba
Haseen Dillruba ( Netflix )

வீடு வெடிக்கிறது. அதில் இருந்து சிதிலமடைந்த ஓர் ஆணின் கை மட்டும் மிஞ்சுகிறது. கள்ளக் காதலனுடன் தப்பிச் செல்ல, கணவரைக் கொலை செய்தாளா ஆசைக்கார மனைவி? இதுதான் Haseen Dillruba கதையின் ஒன்லைன்.

'தப்பெல்லாம் தப்பே இல்லை... சரியெல்லாம் சரியே இல்லை... தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை' நெட்ஃபிளிக்ஸ்ல இரண்டு மணி நேரத்தை வீணடிக்கலாமா வேணாமான்னு யோசிச்சு க்ளிக் பண்ணா, கம்பி கட்டற கதையெல்லாம் சொல்ற மாதிரி, விஜய் ஆண்டனி பாட்டு லிரிக்ஸ எழுதி வச்சிருக்காங்கன்னு டென்ஷன் ஆக வேண்டாம். கதைக்குள் போவோம்.

Haseen Dillruba
Haseen Dillruba
Netflix
வீடு வெடிக்கிறது. அதில் இருந்து சிதிலமடைந்த ஒரு ஆணின் கை மட்டும் மிஞ்சுகிறது. கள்ளக் காதலனுடன் தப்பிச் செல்ல, கணவரைக் கொலை செய்தாளா ஆசைக்கார மனைவி? இதுதான் ஒன்லைன். பாக்கெட் நாவல் க்ரைம் த்ரில்லர் பாணிக் கதையுடன் நகர்கிறது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஹஸீன் தில்ரூபா.

ஹாட்டி நாட்டி ராணிக்கும், சாந்த சொரூபி ரிஷிக்கும் மேட்ரிமோனியல் மாடலில் சீதா கல்யாண வைபோகமே நடக்கிறது. 'காபி, கொஞ்சம் சக்கரை தூக்கலா' என எல்லாவற்றிலும் 'எக்ஸ்ட்ரா' லைஃப் வாழும் ராணிக்கு, டெட் ஸ்லோ ரிஷி கொடூர போர். "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" என ராணி புலம்பித் தள்ள, உள்ளே நுழைகிறார் ஆசைகளின் காதலனும், ரிஷியின் உறவினருமான நீல். அடுத்து என்ன நடக்கிறது, காதல் இல்லா மணவிழாவில் காமம் என்ன செய்கிறது; குற்ற உணர்ச்சிகளும், குரூரங்களும் என்ன ஆகிறது போன்றவற்றை, பாக்கெட் நாவல் பாணியில் நான் லீனியராக சொல்லிக்கொண்டு செல்கிறது வினில் மாத்யூ எழுதியிருக்கும் Haseen Dillruba.

Haseen Dillruba
Haseen Dillruba
Netflix

ஒரு கொலையை செய்துவிட்டு, அதிலிருந்து தப்பிக்க முயலும் ராணியாக டாப்ஸி. பாக்கெட் நாவல்கள் படித்துக்கொண்டு, மேக் அப் கிட்டுடன் அலையும் பெண். காவல்துறை காட்சிகள், விக்ராந்துடன் சச்சரவு, ஹர்ஷவர்தனை கண்டதும் காதல் என எல்லாவற்றிலும் வழக்கம் போல் அட்டகாசம் செய்திருக்கிறார். அரேஞ்சுடு மேரேஜ் மனைவியின் பெயரான ராணியை கல்யாணத்துக்கு முன்பே பச்சைக் குத்திக் கொள்ளும் அளவுக்கு சாதுவாக விக்ராந்த் மாஸே.

கடந்த சில ஆண்டுகளில், டாப்ஸியுடன் நடித்த நாயகர்களுள், டாப்ஸியை நடிப்பில் ஓவர்டேக் செய்யும் அளவு நடித்த முதல் நடிகர் என்னும் பெருமையை பெறுகிறார் விக்ராந்த். நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் நான்காவது விக்ராந்த் படம் இது. சில திரைப்படங்களில் ஏற்கெனவே நடித்திருந்தாலும், (A death in the gunj-ல் அசத்தல் அறிமுகம்) விக்ராந்த் இதில் காட்டியிருப்பது வேறு முகம். மனைவி செய்த விஷயங்களை நினைத்து மருகுவதாகட்டும், பழி வாங்கத் துடிப்பதாகட்டும்... ஒரு படத்தில் இரட்டை மேனரிஸம் என வெளுத்து வாங்கியிருக்கிறார். டாப்ஸியை எப்படியும் கம்பிகளுக்குப் பின்னால் நிற்க வைப்பேன் எனப் போராடும் காவல்துறை அதிகாரியாக ஆதித்யாவும் சிறப்பான தேர்வு.

Cold Case: ஐடியா ஓகே... இதுல எதுக்குங்க பேய்? பிரித்விராஜ் துப்பறியும் ஹாரர் த்ரில்லர் ஈர்க்கிறதா?!

எல்லாரும் சிறப்பாக நடித்திருந்தாலும், சில சமயங்களில் ஒரு கதை நமக்கு முழு திருப்தி தராமல் போகும். பாக்கெட் நாவலின் பர பர பக்கங்களைப் போல கதையின் சுருக்கம் இருந்தாலும், அதன் திரைக்கதை நம்மை சற்றே சோதிக்கிறது. த்ரில்லர் பாணி கதைகளின் முக்கிய அம்சமே, நம்மை சோஃபா நுனியில் (தியேட்டர் இல்லையே பாஸ்) உட்கார வைத்து, லாஜிக் பற்றியெல்லாம் யோசிக்க வைக்காமல் நகரும் திரைக்கதைதான். ஆனால், இதன் திரைக்கதையை எமோஷனலாக, நகர்த்தலாமா அல்லது த்ரில்லராக நகர்த்தலாமா என்கிற குழப்பத்தில், இரண்டாம் பாதியில் சற்று எல்லாமே ஓவர் டோஸ் ஆகிவிடுகிறது.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தாலும், ஏன் ராணி இப்படி மொத்தமாய் சரண்டர் ஆகிறார் என்பதில் ஆரம்பித்து 'வாழும் வள்ளலார்' போல் காட்சி தரும் ரிஷி ஏன் இப்படி சைக்கோத்தனமாக யோசிக்கிறார் வரை அத்தனை ஓட்டைகள். காவல் நிலையத்துக்குக் கூட வக்கீல் வைத்துக்கொள்ளாமல், அவர்கள் என்ன செய்தாலும் அப்படியே கேட்டு திரும்பிவரும் நபராக ராணி மாறிப் போயிருப்பதெல்லாம், என்னமோ போங்க கதியில் எடுக்கப்பட்டிருக்கிறது. பாக்கெட் நாவல் படித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு கட்டத்தில் சில பக்கங்களை ஸ்கிப் செய்துவிட்டு கடைசி பக்கத்தைப் புரட்டுவோம் அல்லவா, அதன் திரைப்பட வெர்ஷனாக ஓட்ட வைத்துவிடுகிறது ஹஸீன் தில்ரூபா.

HaseenDillruba
HaseenDillruba
Netflix
கதையே அப்படித்தான் என்பதால், சில அடல்ட் காட்சிகள் உண்டு. தமிழ் டப்பிங் என்பது கூடுதல் பிளஸ்.

அமித் த்ரிவேதியின் இசையில் பிசல் ஜாவும், மிலா யுனும் எவர்க்ரீன் மெலடிகள். சில ஆண்டுகளுக்கு முன் வந்த அந்தாதூன் போல், அட்டகாச த்ரில்லராக வந்திருக்க வேண்டியதை சில இடங்களில் தவற விட்டிருக்கிறது இத்திரைப்படம். சரி, விமர்சனத்தின் ஆரம்பத்தில் எழுதப்பட்டிருக்கும் பாடல் வரிகள் ஏன் என யோசிக்கிறீர்களா?

அதுகூட ஒரு சின்ன ஸ்பாய்லர்தான். Roald Dahl எழுதிய Lamb to Slaughter சிறுகதை படித்திருக்கிறீர்களா... த்ரில்லர்களின் ராஜா ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக் கூட இந்த சிறுகதையை வைத்து ஒரு குறும்படம் இயக்கியிருப்பார். இணையத்தில் எளிதாகவே இப்படம் கிடைக்கும். வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள். அது படத்துக்கான ஸ்பாய்லரா என்றால் 'ஆமான்னும் சொல்ல முடியாது, இல்லைன்னும் சொல்ல முடியாது' ரகம்தான்.

படத்தில் காவல்துறை அதிகாரி ராணியிடம் தன் மண வாழ்க்கை குறித்து கேட்கும்போது, Sometimes good... Sometimes not என்பார். படத்துக்கான விமர்சனமும் அதுதான்.
அடுத்த கட்டுரைக்கு