தமிழகச் சிற்றூர் ஒன்றிலிருந்து நாட்டின் உயரிய கல்வி நிறுவனத்திற்கு நடைபோடும் ஒரு சாமானிய பெண்ணின் வெற்றிக்கதையே இந்த ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி.’
துடுக்குத்தனம் நிரம்ப திருவையாற்றின் நடுக்காவேரியை வலம் வரும் பெண் கமலி. ‘பொம்பளைப் பிள்ளைகளுக்கு எதுக்குப் படிப்பு’ எனும் கிராமத்து அப்பா, படிப்பே ஏறாத அண்ணன், சேட்டைகளுக்கெல்லாம் துணைபோகும் அம்மா, பாட்டி என அவரின் உலகமே இந்தக் குடும்பம்தான். திடீரென ஏற்படும் உந்துதலால் சென்னை ஐ.ஐ.டியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்கிற வெறி கமலிக்குள் உருவாக, பயிற்சி மையங்களைத் தேடித் திரிகிறார். அப்போதுதான் ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான பயிற்சிக்கு, பெருநகரங்களைத் தவிர்த்து வேறெங்கும் வாய்ப்புகள் இல்லை என்கிற உண்மை தெரியவருகிறது. போதிய வசதிகள் இல்லாத அவ்வூரில் கமலி மேல் பாவப்பட்டு அவருக்குப் பாடமெடுக்கிறார் ஒரு ஓய்வுபெற்ற பேராசிரியர். கமலி தேர்வில் வென்றாரா, அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.

முழுக்க முழுக்கத் தன்னைச் சுற்றியே கதை நகரும் முக்கியமான ரோல் ஆனந்திக்கு. பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார். சின்னச் சின்னக் குறும்புகள், வெள்ளந்தியான காதல், படிப்பின் மீது காட்டும் அக்கறை என, படம் பார்ப்பவர்களை ஈர்க்கிறார். அவருக்கு அடுத்தபடியாக கவனம் பெறுவது ஸ்ரீஜா. அப்படியே அச்சு அசல் கிராமத்துப் பெண்ணின் சாயல். அப்பாவாக வரும் அழகம்பெருமாள், ஆசிரியராக வரும் பிரதாப் போத்தன் போன்ற சீனியர்களும் ஜூனியர்களோடு போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். படம் லேசாகத் தயங்கி நிற்கும்போதெல்லாம் சிரிப்பு வெடிகளைக் கொளுத்திப் போட்டு முன்னகர்த்துகிறார் இமான் அண்ணாச்சி.
தீனதயாளன் இசையில் பாடல்கள் ஓகே ரகம். படம் முழுக்க பச்சையைப் போர்த்தியபடி பயணித்துக் கண்களைக் குளிர்விக்கிறது ஜெகதீசன் லோகையனின் கேமரா. எடிட்டர் கோவிந்தராஜின் கத்திரி இன்னமும் சிறப்பாகவே நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

சாமானியர்கள் பெருங் கல்வி நிறுவனங்களுக்குள் கால் வைப்பதிலிருக்கும் நடைமுறைச் சிக்கல்களைப் பேசுகிறது படம். ஆனால் தேர்வுக்குத் தயாராகும் ஆனந்தியோடு சேர்த்து, படம் நமக்கும் பாடமெடுப்பதுதான் விஷப்பரீட்சை ஆகிவிடுகிறது.
படம் முழுக்க கமலி கல்வி கற்க படும் சிரமங்கள் அனைத்தும், அவர் ஐ.ஐ.டியில் நுழைய முற்படுவதற்குச் சொல்லப்படும் காரணத்தில் அடிபட்டுப்போகிறது. முடிவு தெரிந்தபின் நிகழும் கடைசி 15 நிமிடங்கள் சுவாரஸ்யம் அளிக்க மறுக்கின்றன.
ட்ரீட்மென்ட்டை மாற்றி விறுவிறுப்பு சேர்த்திருந்தால் கமலி இன்னும் நல்ல கிரேடாகவே வாங்கியிருப்பார்.