Published:Updated:

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பயோபிக்கா `மேதகு'? உண்மையும், வன்முறையும், சில திருத்தங்களும்!

கார்த்தி

பிரபாகரனின் பிறப்பு முதல் அவரின் முதல் புரட்சிகர அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவான காரணம் வரை இந்த முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

LTTE தலைவர் பிரபாகரனின் ஆரம்பக்கட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பாக வந்திருக்கிறது BSvalue செயலியில் வெளியாகியிருக்கும் 'மேதகு'. படம் வெளியாகுமா, சென்சார் ஆகுமா என 'மேதகு' படத்துக்கு அத்தனை சர்ச்சைகள். தற்போது ஓடிடியின் வருகையால், 'மேதகு' வெளிச்சம் பெற்றிருக்கிறது.
மேதகு
மேதகு

90-களில் மதுரையில் நடக்கும் ஒரு தெருக்கூத்து வழியாக பிரபாகரனின் வாழ்க்கைச் சொல்லப்படுகிறது. பிரபாகரனின் பிறப்பு முதல் அவரின் முதல் புரட்சிகர அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவான காரணம்வரை இந்த முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. செல்வாவின் காந்திய வழி போராட்டங்கள், பண்டாரநாயகேவின் ஒப்பந்தங்கள், இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் என TNT (Tamil new Tigers) உருவானதற்கான காரணம்வரை படம் வரலாற்றின் பக்கம் நின்று சிற்சில சினிமாத்தனங்களுடன் கதை சொல்கிறது.

பிரபாகரன் குறித்த வரலாற்று ஆவணம் என்பது சர்ச்சைகள் நிறைந்தது. கோலிவுட் இயக்குநர்கள் தொடர்ந்து இதுகுறித்தும், ஈழம் சார்ந்தும் படம் எடுப்பதாக அறைகூவல் விடுத்தாலும், யாரும் இதுவரையிலும் அதற்கான சாத்தியமான முயற்சிகளில் ஈடுபட்டார்களா என்பது சந்தேகமே. அந்த வகையில் அறிமுக இயக்குநர் கிட்டுவுக்கு இது மிகப்பெரிய களம், பொறுப்பு. மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார். முதல் படம், அதுவும் வரலாற்று தகவல்கள் நிறைந்த படம். ஆனால், நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது 'மேதகு'.

பின்னணி இசையில் பிரவீன்குமாரின் உழைப்பு தெரிகிறது. ரியாஸின் ஒளிப்பதிவும் சிறப்பு. நூறு நிமிட சினிமா என்பதால், சுவாரஸ்யமான காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. பண்டாரநாயகே, அல்ஃபிரெட் துரையப்பா போன்ற கதாபாத்திரங்களுக்கான முக அமைப்பு தேர்வுகளில், மெனக்கெடல்கள் தெரிகின்றன. குறிப்பாக பிரபாகரனாக நடித்திருக்கும் சிறுவன். பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்காக உருவாக்கப்பட்டது போன்றதொரு முகம் அவனுடையது. படத்தில் நிறைய புதுமுகங்கள். தெருக்கூத்து நடிகர்களான ராஜவேலும், பெருமாளும் சிறப்பான கதை சொல்லிகள்.

மேதகு
மேதகு

பிரபாகரன் வன்முறையின் பாதை நோக்கி நகர்ந்ததற்கான காரணங்கள் தர்க்க ரீதியில் முன்வைக்கப்பட்டாலும், சில காட்சிகளில் வெற்றியை விடவும், வன்முறையின் மீதான ஆர்வமே மேலோங்குகிறது. படத்தின் களம் பெரிது. ஆனால், பட்ஜெட் சிறிது. அது பல இடங்களில் புருவம் உயர்த்த வைக்கிறது. குறிப்பாக தமிழ் ஆராய்ச்சி மாநாடு காட்சிகளும், பண்டாரநாயகே காட்சிகளும்! படத்தில் சில இடங்களில் வரலாற்று பிசகுகளும் இருக்கின்றன.

ஒருவரின் பயோபிக் என்பதால், மற்றவர்களை சிறுமைப்படுத்த வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. செல்வநாயகத்தின் காட்சிகள் அப்படித்தான் காட்சியமைக்கப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர்த்திருக்கலாம். அடுத்தடுத்த பாகங்களில் இன்னும் முழுமையான வரலாற்று ஆவணமாக இது மாறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. படத்தின் ஆரம்ப அனிமேஷன் காட்சிகளும், படத்தில் ஆங்காங்கே வரும் வாய்ஸ் ஓவர்களும் படத்துக்கு வலுசேர்க்காமல் அந்நியப்பட்டு நிற்கின்றன.

மனிதன் vs மிருகம்: வித்யா பாலன் நடிப்பில் அமேஸானில் வெளியாகியிருக்கும் Sherni-யை பார்க்கலாமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரபாகரனின் வாழ்க்கை பற்றிய முதல் திரைப்பட காட்சி வடிவமாக இது என்றும் நிலைத்திருக்கும். ஒரு ஈழ விடுதலைப் போரின் கதையைச் சொல்ல யாரும் கிஞ்சித்தும் முன்வராத சூழலில், இப்படியானதொரு முயற்சியே பாராட்டுக்குரியதுதான். அதுவும் இதை வெறுமனே முயற்சி என சிறுமைப்படுத்திவிடவும் முடியாத அளவுக்கு, சிறப்பாக எடுத்திருக்கிறார் கிட்டு. வாழ்த்துகள் இயக்குநரே! இன்னும் சற்று வரலாற்றின் பக்கம் நின்று சாய்வில்லாமல் எடுத்திருந்தால், தவிர்க்க முடியாத சினிமாவாக மாறியிருக்கும் மேதகு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு