மலையாள சினிமா வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்... படம் வெளியாவதற்கு முன்பே சிறந்த திரைப்படம், சிறந்த விசுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஆடை வடிவமைப்பு என மூன்று தேசிய விருதுகள்... மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் என ஏக பில்டப்புடன் களமிறங்கியது மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம். எப்படியிருக்கிறது மோகன்லாலின் இந்தப் பிரமாண்ட திரைப்படம்?

16ம் நூற்றாண்டில் கேரளாவில் போர்ச்சுகீசிய படைகளுக்கு எதிராக போரிட்ட மரைக்காயர்களின் வரலாற்றில், குஞ்ஞாலி மரைக்காயரின் பகுதியைப் பற்றிப் பேசுகிறது இத்திரைப்படம். சிறுவயது முதலே அம்மாவின் செல்லப் பிள்ளையாக வளரும் குஞ்ஞாலி மரைக்காயர், எப்படி மரைக்காயர்களின் இழந்த பெருமையை மீட்டெடுக்கிறார், இறுதியில் குஞ்ஞாலிக்கு என்ன ஆகிறது என்பதை மூன்று மணி நேர சினிமாவாக எடுத்திருக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபடத்தின் நடிகர் பட்டாளத்தையே தனிக்கட்டுரையாக எழுத வேண்டும். அத்தனை பேர் நடித்திருக்கிறார்கள். குஞ்ஞாலியாக மோகன்லால். சிறுவயது குஞ்ஞாலியாக ப்ரனவ் மோகன்லால். சிறுவயது குஞ்ஞாலியின் காதலியாக கல்யாணி பிரியதர்ஷன். குஞ்ஞாலியின் தாயாராக சுஹாசினி. குஞ்ஞாலியின் பாதுகாவலராக, உறவினராக சித்திக். இவர்கள் இல்லாமல் பிரபு, நெடுமுடிவேணு, மஞ்சு வாரியர், ஹரிஷ் பேரடி, அர்ஜுன், அசோக்செல்வன், கீர்த்தி சுரேஷ் அதுபோக மலையாள நடிகர்கள் என ஒவ்வொரு காட்சியிலும் ஒருவர் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறார். பாலிவுட்டில் இருந்து சுனில் ஷெட்டியை வேறு களமிறக்கியிருக்கிறார்கள்.
ப்ரனவ் மோகன்லால் சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகள், ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் க்யூட்டாக இருக்கிறார் ஜெய் ஜெ ஜக்ரிட். காமெடி கதாபாத்திரமாக வந்து போகிறார் பிரபு. படத்தில் எந்த நிலையிலும் நீதி தவறாது வரும் நல்லதொரு கதாபாத்திரம் அர்ஜுனுக்கு வாய்த்திருக்கிறது. அட்டகாசமாக நடித்துக்கொடுத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். என்ன தமிழ் டப்பிங்கில் அவர் மட்டும் பேச்சு வழக்கில் பேசுவது ஏனோ உறுத்துகிறது. சில நிமிடங்களே வந்தாலும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு ஒரு பாடல் ஒதுக்கியிருக்கிறார்கள். படத்திலேயே கீர்த்தி சுரேஷுக்கு மட்டும்தான் கொஞ்சம் பெரிய வேடம். மஞ்சு வாரியருக்கு எல்லாம் 'எப்படியும் இதான பண்ண போறீங்க, அதுக்கு ஏன் கிளைமேக்ஸ் வரை காத்திருக்கீங்க' வேடம்தான். அசோக் செல்வனுக்கு டெரரர் வேடம் என நம்பவைத்து கதை சொல்லியிருக்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ராபின்ஹூட் டு ராணுவ தளபதி, என ஒரு வரலாற்று நாயகனைத் திரையில் மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு மோகன்லாலுக்கு. அதைச் செவ்வனே செய்திருக்கிறார். இன்டர்வெல் பழிவாங்கும் காட்சி அவரின் நடிப்புக்கு ஒரு சோற்றுப் பதம்.

சண்டைக் காட்சிகள் அதற்கேற்ற பிரமாண்டத்துடன் எடுக்கப்பட்டிருக்கின்றன. கடலில் நடக்கும் போர்க் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன. திருவின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
நான்காம் மரைக்காயர் குஞ்ஞாலியைப் பற்றிய வரலாற்று தகவல்கள் பெரிதாக இல்லையென்பதால் கொஞ்சம் வரலாறு, நிறைய புனைவு என கலந்துகட்டி எடுத்திருக்கிறார்கள். ஆனால் எந்தவித எமோஷனல் கனெக்ட்டும் இல்லாமல் அந்தக் காட்சிகள் நகர்கின்றன. மூன்று மணி நேரம் நகரும் திரைப்படத்தில், ஒரு மணி நேரத்தைத்தாண்டியும் புதிய கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். அதிலும் துரோகம் என்கிற எபிசோடின் தேவைக்காக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அதற்கு ஒரு பாடல், அதற்கென ஒரு தனி கிளைக்கதை என ஏகப்பட்ட இழுவைகள். காட்சிகள் துண்டு துண்டாக எந்தவித தொடர்பும் இல்லாமல் இருக்கின்றன.
மோகன்லாலும், பிரியதர்ஷனும் இணைந்து எத்தனையோ மெகா ஹிட்களை கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் சில இன்றளவும் கிளாசிக்கலாக நிலை கொண்டிருக்கின்றன. இந்தப் படம் ஹிட்டாகிவிடும் என்றாலும் அந்த காம்போவின் கிளாசிக் பட்டியலில் இடம்பெறுவது சந்தேகமே. படத்தின் இறுதியில் இந்தியாவின் கப்பல் படைக்கும் மரைக்காயரின் பெயரை வைத்திருப்பதைப் பற்றிய ஸ்லைடுகள் வெளியிடப்படுகின்றன. அதைப் பார்க்கும் பொழுது அவ்வளவு பெருமிதமாக இருக்கின்றது. அப்படியெனில் அதற்கேற்ற உழைப்புடன் இன்னும் சிரத்தையுடன் நல்லதொரு திரைக்கதையை அந்த நாயகனுக்கு வழங்கியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.