Published:Updated:

`நான் மிருகமாய் மாற' விமர்சனம்: ஒன்லைன் ஐடியாவாக ஓகே, ஆனால் மேக்கிங் மற்றும் திரைக்கதை?!

நான் மிருகமாய் மாற

'சாமானியன்' சசிகுமார் கையில் கத்தியை எடுக்கிறார். நன்கு பயிற்சி பெற்ற கூலிப்படை ரவுடிகளைச் சரமாரியாகக் குத்தி சாய்த்துவிடுகிறார். ஒரு சாமானியன் எப்படி இப்படி ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகக் கண நேரத்தில் மாறினார் என்பதற்கான அழுத்தமான காட்சி எதுவுமே இல்லை.

`நான் மிருகமாய் மாற' விமர்சனம்: ஒன்லைன் ஐடியாவாக ஓகே, ஆனால் மேக்கிங் மற்றும் திரைக்கதை?!

'சாமானியன்' சசிகுமார் கையில் கத்தியை எடுக்கிறார். நன்கு பயிற்சி பெற்ற கூலிப்படை ரவுடிகளைச் சரமாரியாகக் குத்தி சாய்த்துவிடுகிறார். ஒரு சாமானியன் எப்படி இப்படி ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகக் கண நேரத்தில் மாறினார் என்பதற்கான அழுத்தமான காட்சி எதுவுமே இல்லை.

Published:Updated:
நான் மிருகமாய் மாற
`கழுகு', `சிவப்பு' போன்ற படங்களை இயக்கிய சத்யசிவா, சசிகுமாரை நாயகனாக வைத்து இயக்கியிருக்கும் பழிவாங்கும் த்ரில்லர் படம் `நான் மிருகமாய் மாற'.

சினிமா சவுண்டு இன்ஜினியர் பூமிநாதனாக வரும் சசிகுமாரின் தம்பியைக் கூலிப்படை ஒன்று கொலை செய்கிறது. அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தரச் சட்டத்தின் வழியை நாடாமல், வன்முறையைக் கையில் எடுத்துப் பழிவாங்கக் கிளம்புகிறார் கதாநாயகன் சசிகுமார். இந்த வன்முறை வழியால் சசிகுமாருக்கும் அவரது குடும்பத்திற்கும் என்னென்ன ஆபத்துகள் வருகின்றன, எல்லாவற்றையும் வென்று இறுதியில், தன்னையும் தன் குடும்பத்தையும் அவர் காப்பாற்றினாரா என்பதைக் கத்தியுடனும் ரத்தத்துடனும் தெறிக்கத் தெறிக்கச் சொல்கிறது 'நான் மிருகமாய் மாற'.

நான் மிருகமாய் மாற
நான் மிருகமாய் மாற

நாயகன் சசிகுமாரின் மீதே மொத்த படமும் சவாரி செய்கிறது. எதிரிகளை எளிதாகத் துவம்சம் செய்துவிடும் சசிகுமார், அழுகை, கோபம், இயலாமை, சோகம், பதற்றம் ஆகிய உணர்ச்சிகளோடுதான் அதிகம் மல்லுக்கட்டுகிறார். ஒரு சாமானியனின் பழிவாங்கும் கதையில், நாயகனின் எழுச்சி ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் அழுகையை மட்டுமே ஆயுதமாகக் கையாண்டிருக்கிறார்கள். சசிகுமார் அழுகிறார், அவரின் மனைவியாக வரும் ஹரிப்ரியா அழுகிறார், சசிகுமாரின் அம்மா அழுகிறார், அப்பா அழுகிறார். சில இடங்களில் மொத்த குடும்பமும் குமுறி அழுகிறது. இவ்வளவு ஒப்பாரி வைத்தும், அக்குடும்பத்தின் வேதனை நமக்கு எந்தவித பாதிப்பையும் கடத்தவில்லை. காட்சிகளில் அத்தனை பலவீனம்.

'சாமானியன்' சசிகுமார் கையில் கத்தியை எடுக்கிறார். நேராக எதிரிகளின் இடத்திற்குச் செல்கிறார். நன்கு பயிற்சி பெற்ற கூலிப்படை ரவுடிகளைச் சரமாரியாகக் குத்தி சாய்த்துவிடுகிறார். ஒரு சாமானியன் எப்படி இப்படி ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகக் கண நேரத்தில் மாறினார் என்பதைக் கடத்தும் வகையில் எந்த அழுத்தமான காட்சியும் இல்லை. கதையின் மைய சாரமே இப்படி 'தேமே' என்று இருப்பதால், எந்த நம்பகத்தன்மையும் இல்லாமலேயே படத்தோடு பயணிக்கும்படி ஆகிறது. நாயகன் சவுண்டு இஞ்சினியர் என்பதால், விபத்து செய்திகளையும் வில்லன் கொடுக்கும் மிரட்டல்களையும், அதன் பின்னணியில் கேட்கும் சவுண்டுகளை மட்டும் வைத்தே க்ளூக்களைக் கண்டுபிடிப்பது சுவாரஸ்ய எபிசோடு. இப்படியான புத்திசாலித்தனமான காட்சிகள் இன்னமும் இடம்பெற்றிருக்கலாம்.

நான் மிருகமாய் மாற
நான் மிருகமாய் மாற

இடைவேளைக்கு முன்பு, பிரதான வில்லனான விக்ராந்த்தின் வருகைக் கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில், அவரும் 'பத்தில் பதினொன்றாக' மாறிவிடுகிறார். வில்லனிஸ மிடுக்கிற்கு அற்புதமாகப் பொருந்திப் போகிறார். ஆனால், அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள டப்பிங் குரல், கிஞ்சித்தும் பொருந்தவில்லை. களத்தில் இறங்கி அடித்து ஆட வேண்டிய வில்லனை, வெறும் க்ளோஸ் அப் ஷாட்டிலேயே நிறுத்தி வைத்து, போனிலேயே மிரட்டிப் பேச வைத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள். விக்ராந்த், சசிகுமாருக்குத் தரும் அந்த அசைன்மென்ட் நம்மைச் சற்றே நிமிர்ந்து உட்கார வைத்தாலும், அதற்குப் பின் வரும் காட்சிகள் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை.

ரத்தம் தெறிக்கும் அதீத வன்முறை, பழிவாங்கும் வெறியோடு ஆக்ரோஷமாகவே சுற்றும் நாயகன், வில்லன் மற்றும் கூலிப்படை, எந்நேரமும் சோகத்துடனும் அழுகையுடனும் இருக்கும் நாயகனின் குடும்பத்தினர் எனத் திரை முழுவதும் உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடியும், அதில் ஒரு துளிக் கூட பார்வையாளர்களைத் தொட்டுவிடாதபடிக்கு சுவாரஸ்யமற்றதாக இருக்கிறது திரைக்கதை. அடிக்கடி, 'டேய் உன்ன வெட்டிக் கொன்றுவேன்டா' என வில்லன் விக்ராந்திடம் கத்துகிறார் சசிகுமார். தனது கோபத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகத் தேய்ந்த ரேடியோ போல அதையே சொல்லிக்கொண்டிருக்கிறார். ரிப்பீட் வசனத்தையாவது மாற்றியிருக்கலாம்.

நான் மிருகமாய் மாற
நான் மிருகமாய் மாற

இன்னொரு இணை வில்லனாக வரும் அப்பானி சரத் முதல் பாதியில் சிறிது ஸ்கோர் செய்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் அவரும் காணாமல் போய்விடுகிறார். பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே படமாக்கப்பட்டுள்ளதால், ராஜா பட்டாச்சார்ஜியின் கேமராவுக்கு நல்ல தீனி. படத்திற்கு ஆறுதலும் அதுதான். பின்னணி இசையில் ஜிப்ரான் கைகொடுக்காமல் ஏமாற்றியது, இந்த த்ரில்லர் படத்தை மேலும் பலவீனமாக்கியிருக்கிறது. முதல் சில காட்சிகளில் அட்டகாசமாகத் தொடங்கிய எடிட்டிங் ஸ்டைல், படத்தைத் தாங்கிச் செல்லும் என்று நினைத்தால், அதே எஃபெக்ட்டை படம் நெடுக வாரி இறைத்துச் சோதிக்கிறது. சவுண்டு இன்ஜினியரைக் கதையின் நாயகனாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படத்தில், சவுண்டு டிசைனே சுமார்; குறிப்பாக சில கதாபாத்திரங்களுக்கு டப்பிங் ஆங்காங்கே லிப் சின்க் இல்லாமல் சோதிக்கிறது. மழையே பெய்யாத ஷாட்களில் கூட பின்னணியில் மழைச் சத்தம் கேட்கிறது.

ஒரு குறும்பட அளவிலான கதைதான் என்றாலும், அதற்குச் சுவாரஸ்யமான திரைக்கதையை அமைத்திருந்தால் இந்த ரிவெஞ்ச் டிராமா கொஞ்சமேனும் ஈர்த்திருக்கும்.