Published:Updated:

சாய் பல்லவி, நாக சைதன்யாவின் 'லவ் ஸ்டோரி'... தெலுங்கு சினிமாவில் இது ஏன் ஒரு முக்கியமான படைப்பு?!

லவ் ஸ்டோரி

காதல் கதை என்றவுடன், சாதியப் பாகுபாடுகள், மத வேற்றுமைகள் என அதைச் சுற்றி மட்டும் பேசாமல், பெண் சுதந்திரம், பெண்களுக்குச் சிறுவயதில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் போன்றவைக் குறித்தும் துணிந்து பேசியிருப்பது சிறப்பு.

சாய் பல்லவி, நாக சைதன்யாவின் 'லவ் ஸ்டோரி'... தெலுங்கு சினிமாவில் இது ஏன் ஒரு முக்கியமான படைப்பு?!

காதல் கதை என்றவுடன், சாதியப் பாகுபாடுகள், மத வேற்றுமைகள் என அதைச் சுற்றி மட்டும் பேசாமல், பெண் சுதந்திரம், பெண்களுக்குச் சிறுவயதில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் போன்றவைக் குறித்தும் துணிந்து பேசியிருப்பது சிறப்பு.

Published:Updated:
லவ் ஸ்டோரி

தெலுங்கு சினிமாவின் மசாலா பிம்பத்தை உடைத்து நொறுக்கும் படங்கள் எப்போதாவது வெளிவருவது உண்டு. டோலிவுட்டின் பழங்கால இரும்புக் கதவுகளைத் திறக்கப் பார்க்கும் ஆத்மார்த்தமான படைப்புகள் அவை. ஆனால், அவ்வகை படங்களும் காதல், உணர்வுப்பூர்வமான குடும்ப சென்டிமென்ட், நண்பர்களின் கலாட்டா கதை, துப்பறியும் கதை என ஒருசில ஜானர்களுக்கு உள்ளாகவே தங்களின் எல்லைகளைச் சுருக்கிக் கொள்வதுண்டு. சமூக நீதி, சாதிய வேறுபாடுகள், மதப் பிரச்னைகள், பெண்ணியம் என ரிஸ்க்கான அரசியல் பிரச்னைகளை அவர்கள் பெரும்பாலும் நெருங்குவதில்லை. ஆனால், அவற்றைத் துணிந்து தொடும் படங்கள்தான் கிளாசிக்காகக் கொண்டாடப்படுகின்றன.

லவ் ஸ்டோரி
லவ் ஸ்டோரி
'கோதாவரி', 'ஹேப்பி டேஸ்', 'லீடர்', 'ஃபிதா' என வேறு பாதையில் தணித்து நடந்த இயக்குநர் சேகர் கம்முலாவின் இந்த 'லவ் ஸ்டோரி' ஒரு காதல் கதையாகவே இருந்தாலும், இதுவரை தெலுங்குப் படங்கள் பெரிதும் பேசாத விஷயங்களைச் சமரசமின்றி பேசியிருக்கிறது. நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவயானி, ஈஸ்வரி ராவ் எனப் பலர் நடித்திருக்கும் இந்த 'லவ் ஸ்டோரி' ஏன் தெலுங்கில் ஒரு முக்கியமான படைப்பு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிராமத்திலிருந்து ஐதராபாத் வந்து ஜும்பா ஃபிட்னஸ் ஸ்டுடியோ வைத்து வாழ்வில் முன்னேறும் கனவுடன் இருக்கும் இளைஞன் ரேவந்த். ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தினரைச் சாராமல் வாழ அதே ஐதராபாத்துக்கு, அதுவும் ரேவந்தின் பக்கத்து வீட்டுக்கே வருகிறார் மௌனிகா. வேலை எதுவும் கிடைக்காமல் போகவே தன்னுடைய அசாத்திய நடனத் திறமையால் ரேவந்த்தின் ஃபிட்னஸ் ஸ்டுடியோவில் பார்டனராக இணைகிறார். இருவருக்கும் இடையில் காதலும் மலர, நடுவில் அவர்களின் சாதி, மதம், இது போதாதென்று மௌனிகாவின் சிறுவயது பிரச்னைகளும் வந்து நிற்கின்றன. இந்தக் காதல் ஜோடி தடைகளை வென்றதா என்பதே கதை.

லவ் ஸ்டோரி
லவ் ஸ்டோரி

ரேவந்த்தாக நாக சைதன்யா. துள்ளல் நடனம், ஆக்ஷன் என தன்னுடைய வழக்கமான காம்போவில் ஆக்ஷனைக் கழற்றிவிட்டு, நடனத்தை மெருகேற்றி காதல் நாயகனாக மட்டுமே உலா வந்திருக்கிறார். தலித் கிறிஸ்துவராக தன் தாயுடன் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்து, கொடுமைகளை ஏற்று முன்னுக்கு வரத் துடிக்கும் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறார். ஒவ்வொரு முறையும் பணத்தேவைக்காக ஊரிலிருக்கும் தாயிடம் சென்று திட்டுவாங்குவதும் அடிவாங்குவதுமென ரணகள சிரிப்பு ஏரியாவிலும் கால் பதித்திருக்கிறார். அப்பப்ப இப்படி ஆக்ஷன் ஹீரோவுக்கும் லீவு விடுங்க சே!

ஆனால், படத்தில் நாக சைதன்யாவையும் ஓவர்டேக் செய்வது சாய் பல்லவிதான். ஆட்டோக்காரரிடம் ஐந்து ரூபாயை விட மனமில்லாமல் பேசும் முதல் காட்சியிலிருந்து சாய் பல்லவி மறைந்து மௌனிகா எனும் பாத்திரம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. 'பிரேமம்' படத்தின் சர்ப்ரைஸ் டான்ஸ் சீக்குவன்ஸ் போலவே இங்கேயும் கொட்டும் மழையில் ஒரு சீன் வைத்திருக்கிறார்கள். தன் நடனத் திறன் முழுவதையும் அதில் வெளிப்படுத்தியிருக்கிறார் சாய் பல்லவி.

இனிமேல் என்ன, என நினைக்கும்போதுதான் இரண்டாம் பாதியில் வரும் 'சாரங்க டரியா' பாடலில், நடனத்தில் வேறொரு தளத்துக்குப் பாய்ந்திருக்கிறார். அதேபோல், அவருக்குள் இருக்கும் அந்த மறக்க முடியாத இறந்தகால பிரச்னையையும் கூடவே சுமந்து கொண்டு திரியும் பெண்ணாக இயல்பாகவே ஸ்கோர் செய்கிறார்.

லவ் ஸ்டோரி
லவ் ஸ்டோரி

நாக சைதன்யாவின் அம்மாவாக ஈஸ்வரி ராவ் தன் பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். சாய் பல்லவியின் அம்மாவாக தேவயானி தொடக்கத்தில் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், இறுதி காட்சியில் அவரின் பாத்திரம் நச்சென மனதில் பதிகிறது. சாய் பல்லவியின் சித்தப்பாவாக ராஜிவ் கனகலா டெரர் காட்டியிருக்கிறார். நமக்கே ஒரு நிமிடம் அவரைப் பார்த்தால் பயம் வரத்தான் செய்கிறது. பவனின் இசை படத்தின் பெரும்பலம். பாடல்களும் அவை படமாக்கப்பட்ட விதங்களும் ஒரு காதல் கதைக்குத் தேவையான ஃப்ளேவரைக் கொடுத்திருக்கிறது.

முதலில் இயல்பாக நட்புடன் தொடங்கும் நாயகன், நாயகி உறவில் காதல் வெளிப்படும் அந்தத் தருணம் நெகிழ்ச்சியுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. காதல் வெளிப்பட்ட பின்னர், அதன் நீட்சியாக வரும் அந்த மருதாணி காட்சியும், மெட்ரோ முத்தமும் காதல் ஹைக்கூக்கள்! நாக சைதன்யா சிறு வயதில் சந்திக்கும் ஏற்றத் தாழ்வுகள் கிராமங்களில் அவலநிலையை எடுத்துரைக்கின்றன. நகர வாழ்வு எல்லாவற்றையும் மாற்றிவிடும், நகரம் நாகரிகமடைந்துவிட்டது என நினைத்தாலும் அங்கேயும் சாதி குறித்த வேறுபாடுகள், கீழாக நடத்துதல் போன்றவை இன்னமும் இருக்கின்றன எனத் தைரியமாகப் போட்டுடைக்கும் வண்ணம் காட்சிகள் அமைத்த இயக்குநர் சேகர் கம்முலாவுக்குப் பாராட்டுகள்.

அதேபோல், கிளைமாக்ஸ் காட்சியில் உயிருக்குப் பயந்து ஓடிக்கொண்டிருக்கையில், நாக சைதன்யா தன் அம்மாவிடம் பேசும் வசனங்களும் நச்! சமகால தெலுங்கு சினிமாவில் இப்படியான காட்சியமைப்புகள் அரிதிலும் அரிது!
லவ் ஸ்டோரி
லவ் ஸ்டோரி

அதேபோல் காதல் கதை என்றவுடன், சாதியப் பாகுபாடுகள், மத வேற்றுமைகள் என அதைச் சுற்றி மட்டும் பேசாமல், பெண் சுதந்திரம், பெண்களுக்குச் சிறுவயதில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் போன்றவைக் குறித்தும் துணிந்து பேசியிருப்பது சிறப்பு. இதற்கு முன்னர் 'டியர் காம்ரேட்' படமும் இது குறித்துப் பேசியிருந்தாலும், அங்கே பாலியல் வன்முறை அணுகப்பட்ட விதம் விமர்சனத்துக்கு உள்ளானது. அப்படியான குழப்பங்கள் ஏதுமின்றி இங்கே தெளிவாக அதைத் தொட்டிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக, நாக சைதன்யாவின் வசனங்களும் தேவயானி அதற்கு ஆற்றும் எதிர்வினையும் தியேட்டரை அதிர வைக்கிறது.

இத்தனை ப்ளஸ்கள் இருந்தும் முதல் பாதியில் காட்சிகள் ஆங்காங்கே சீரியல் பாணியில் நகர்ந்தது சறுக்கல். அதிலும் சாய் பல்லவியின் பிரச்னையை மூடிவைத்து அதற்கான சஸ்பென்ஸ் காட்சிகளை மட்டும் கூட்டிக்கொண்டே போனது ஒருவித அயர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனாலேயே உண்மை வெளிப்படும்போது அது ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் நம்மைக் கடந்துபோகிறது. ஃபுட்டேஜ் பிரச்னையோ, கொரோனா காலப் பிரச்னையோ தெரியவில்லை, படத்தின் கிளைமாக்ஸும் அவசர கதியில் முடிந்ததாக ஒரு ஃபீலைத் தருகிறது.

லவ் ஸ்டோரி
லவ் ஸ்டோரி

அதேபோல், ஒளிப்பதிவில் நிறைய இடங்களில் ஸ்கோர் செய்தவர்கள், சில இடங்களை மட்டும் செயற்கையாக அப்படியே விட்டிருக்கின்றனர். மொட்டை மாடிக் காட்சிகள், பாலத்தின் மீது மக்களோடு மக்களாகக் காதல் ஜோடி நடந்துபோகும் காட்சிகள் என அனைத்திலும் க்ரீன் ஸ்க்ரீன் எஃபெக்ட் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. இதனாலேயே அந்தக் காட்சிகளுக்கு உண்டான எமோஷன்கள் நமக்குக் கடைசிவரை கடத்தப்படவே இல்லை. துணைக்கு இன்னொரு காதல் கதை, அதில் வர்க்க முரண் என்ற ஐடியா சிறப்பு என்றாலும் அதைவிடுத்து இந்தக் கதையை அணுகினாலும் படத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்கப் போவதில்லை.

தெலுங்கில் காதல் கதை என்ற ஒரு ஈஸியான பாதையை விடுத்து அதில் சாதிய பாகுபாடு, பெண்ணியம் போன்றவற்றையும் கதையின் போக்கிலேயே துருத்தாமல் கலந்து, யாரும் பேசாத ஓர் உரையாடலையும் தொடங்கி வைத்திருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா. அதற்காகவும் சாய் பல்லவியின் அசத்தல் நடிப்புக்காகவும் இந்த 'லவ் ஸ்டோரி'யை ஒரு காவியமாகக் கொண்டாடப்படலாம்.