Published:Updated:

Jathi Ratnalu: மூளையைக் கழற்றி வெச்சிட்டா ஹெவியா சிரிக்கலாம்... அதகளம் பண்ணும் தெலுங்கு சினிமா!

Jathi Ratnalu | ஜதி ரத்னாலு

மூன்று உருப்படாத நண்பர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நிகழும் காதல், கொலை முயற்சி, அரசியல் பிரச்னைகள், வழக்கு விசாரணை போன்ற சம்பவங்களை கேப்பே விடாத காமெடி சரவெடியாக்கி திரியைக் கொளுத்தும் படமே இந்த 'ஜதி ரத்னாலு' (நாட்டின் ரத்தினங்கள்).

Jathi Ratnalu: மூளையைக் கழற்றி வெச்சிட்டா ஹெவியா சிரிக்கலாம்... அதகளம் பண்ணும் தெலுங்கு சினிமா!

மூன்று உருப்படாத நண்பர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நிகழும் காதல், கொலை முயற்சி, அரசியல் பிரச்னைகள், வழக்கு விசாரணை போன்ற சம்பவங்களை கேப்பே விடாத காமெடி சரவெடியாக்கி திரியைக் கொளுத்தும் படமே இந்த 'ஜதி ரத்னாலு' (நாட்டின் ரத்தினங்கள்).

Published:Updated:
Jathi Ratnalu | ஜதி ரத்னாலு

குடும்பத் தொழிலான லேடீஸ் டெய்லரிங் கடையைப் பார்த்துக்கொள்ளும் ஜோகிபெட் ஶ்ரீகாந்த் (நவீன் பாலிஷெட்டி), சமையலென்றால் அதீத ஆர்வம்கொண்டிருக்கும் சேகர் (ப்ரியதர்ஷி), காதல் தோல்விகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் ரவி (ராகுல் ராமகிருஷ்ணா) என மூவரையும் குடும்பத்துடன் சேர்த்து அவர்களின் கிராமமே தூற்றுகிறது. 'பட்டினம் போய் உருப்படப்போகிறோம்' என அதே வெங்கட் பிரபு சினிமா டைப்பில் ஹைதராபாத் செல்கிறார்கள். அங்கே ஶ்ரீகாந்துக்குக் காதல் எட்டிப் பார்க்க, கூடவே மூன்று நண்பர்களின் மீதும் ஒரு பிரபல அரசியல்வாதியைக் கொலை செய்ய முயன்றதாக வழக்கும் வந்து சேர, அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள், அந்த அரசியல் விளையாட்டின் பின்னணி என்ன என்பதே மீதிக்கதை.

தொடக்கம் முதல் முடிவுவரை காமெடி, காமெடி, காமெடி மட்டுமே! நின்றால் காமெடி, நடந்தால் காமெடி என்பதுபோல, வரிக்கு வரி கவுன்ட்டர்கள், ஒருவர் சொன்ன பதிலை வைத்து அடுத்த காமெடியை போடுவது என பழைய கிரேஸி மோகன் - கமல் காம்போ சினிமாக்களை நினைவூட்டுகிறது படம்.
Jathi Ratnalu | ஜதி ரத்னாலு
Jathi Ratnalu | ஜதி ரத்னாலு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெலுங்கில் 2019-ல் வெளியான 'ஏஜென்ட் சாய் ஶ்ரீனிவாஸ ஆத்ரேயா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நவீன் பாலிஷெட்டிக்கு மீண்டும் ஒரு சிக்ஸர் அடிக்கும் வாய்ப்பு. சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தொடக்கம் முதலே அசால்ட் உடல்மொழி, எதற்கும் அஞ்சாமல் எல்லோரையும் கலாய்த்து அலம்பல் செய்வது, காதல் என்றவுடன் மட்டும் உருகுவது என தன் தடத்தை அழுத்தமாகப் பதித்துள்ளார். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில், நீதிமன்றத்தின் கூண்டில் நின்றுகொண்டு தொடர்வண்டி போல அடுத்தடுத்து ஜோக்குகளை கனெக்ட் செய்து அடுக்கிக்கொண்டே போகும் காட்சி பட்டாசு ரகம். அத்தனை கோர்வையாக எங்கும் உறுத்தாமல் அதே சமயம் கேப்பும் விடாமல் அடித்து நொறுக்கியிருக்கிறார். நவீன் நிச்சயம் தெலுங்கு சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நண்பர்களாக வரும் ப்ரியதர்ஷிக்கும், 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ராகுல் ராமகிருஷ்ணாவுக்கும் நாயகனுக்கு நிகரான பாத்திர வார்ப்புகள். இருவருமே அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். குறிப்பாக ராகுல் ராமகிருஷ்ணா போதையில் செய்யும் அலப்பறைகளும், சீரியஸான சமயங்களில்கூட, போனில் காதலியிடம் "நீ சொல்லு", "நீயே சொல்லு" என ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பதும் சிரிப்பு மத்தாப்பு! நாயகியாக ஃபரியா அப்துல்லாவுக்கு கதையில் சிறிது வேலையிருப்பது ஆறுதல். வக்கீலாக பிற்பாதியில் சில காட்சிகளில் கலகலப்பைக் கூட்டியிருக்கிறார்.

Jathi Ratnalu | ஜதி ரத்னாலு
Jathi Ratnalu | ஜதி ரத்னாலு

விளையாட்டுத் துறை அமைச்சர் பாத்திரத்தில் வில்லனாக வரும் முரளி ஷர்மா, நாயகியின் அப்பாவாக வரும் நரேஷ், நாயகனின் அப்பாவாக வரும் மூத்த நடிகர் தணிகல பரணி, ஜெயில் செல்மேட்டாக வெண்ணிலா கிஷோர் என அனைவரும் தங்கள் பாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள். இரண்டே காட்சிகளில் தோன்றினாலும் பிரம்மானந்தம் திரை முழுவதையும் ஆக்கிரமித்து கிச்சு கிச்சு மூட்டுகிறார். அதிலும் அந்த ஹாங்காங் நூடுல்ஸ் கலாட்டா வேற லெவல் மசாலா! நட்புக்காகக் கீர்த்தி சுரேஷ், விஜய் தேவரகொண்டா வந்து போயிருக்கின்றனர். 'சென்னை 28'-ன் மறக்க முடியாத 'கோபி பேட்' தீம் மியூசிக்கும் எட்டிப்பார்ப்பது ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்!

சமூக நிகழ்வுகள், மீடியா, சினிமா என அனைத்தையும் நக்கல் செய்வதுபோலவே பல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கொலை முயற்சி வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரையும் சித்திரித்து டிவி மீடியாக்கள் வெளியிடும் கற்பனை டாக்குமென்ட்ரிகளைக் கலாய்க்கும் சீக்குவன்ஸ், தலைவன் எது செய்தாலும் ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பரித்துத் தீக்குளிக்கவும் தயாராக இருக்கும் தொண்டர் படை, காதலை வெளிப்படுத்துவதில் சினிமாக்களில் இருக்கும் டிராமாவை கலாய்ப்பது, சினிமாவில் எழுதப்படாமல் இருக்கும் சின்ன சின்ன இலக்கணங்களையும் சாடுவது எனக் கிட்டத்தட்டப் பல இடங்களில் ஒரு ஸ்பூஃப் படமாக இது பரிணாம வளர்ச்சி அடைகிறது. சீரியஸ் பிரச்னைகளையும் இப்படி காமெடியாகவே டீல் செய்தது சற்றே உறுத்தல்.

Jathi Ratnalu | ஜதி ரத்னாலு
Jathi Ratnalu | ஜதி ரத்னாலு
ஆனால், காமெடி என்றான பின்னர், லாஜிக் வேண்டாம் எனத் தூரமாகத் தூக்கி எறிந்துவிட்டார்கள்போல! இதனால் முக்கியக் கதாபாத்திரங்கள் பிரச்னைகளில் சிக்கும்போதுகூட நம்மால் அதில் ஒன்றிப்போக முடியவில்லை. அதே சமயம், மனைவி மற்றும் பொதுவாகப் பெண்களைக் கலாய்க்கும் ஜோக்ஸ் ஒருவித ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அதை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்... அதில் சில கதையோடு ஒட்டமாலே இறுதிவரை பயணப்பட்டிருக்கின்றன. உதாரணமாகத் தோல்வியடைந்த பிசினஸ்மேனாக சுபலேகா சுதாகர் ஆரம்பம் முதலே அங்கங்கே எட்டிப்பார்க்கிறார். ஆனால், அவர் கதையின் ஓர் அங்கமாக மாற இறுதிவரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஒரு சில காட்சிகளை வெறும் சிரிப்புக்காக மட்டுமே வாலன்ட்டியராக அடிஷனல் ஷீட் வாங்கி நூல் கட்டிச் சேர்த்திருக்கிறார்கள். அது இல்லையென்றாலும் படத்திற்கு எந்தப் பாதிப்பும் வந்திருக்காது.

Jathi Ratnalu | ஜதி ரத்னாலு
Jathi Ratnalu | ஜதி ரத்னாலு

பாடல்களில் ஈர்க்கும் ரத்தனின் இசை, பின்னணியிலும் நகைச்சுவைப் படத்துக்குத் தேவையான அளவிற்குப் பலம் சேர்த்திருக்கிறது. சித்தம் மனோஹரின் ஒளிப்பதிவு கிராமம், நகரம் என அழகியல் ரீதியாகப் பிரித்துப் பதிவு செய்யாவிட்டாலும் கதைக்குத் தேவையானவற்றை மட்டும் செய்திருக்கிறது. ஸ்காண்டல் வீடியோவுக்கு ஏகப்பட்ட பில்டப் செய்துவிட்டு எண்டு கிரெடிட்ஸில் அது என்ன எனக் காட்டும் இடத்தில்... "உங்களுக்கெல்லாம் ஓவர் நக்கல்ங்க..." என்றே சொல்லத் தோன்றுகிறது.

லாஜிக்கை எதிர்பார்க்காமல் காமெடி மேஜிக்கை மட்டுமே முதன்மையாக வைத்து தியேட்டருக்கு விசிட் அடித்தால் சிரித்து மகிழலாம்!