Published:Updated:

Nenjuku Needhi Review: பிறப்பால் அனைவரும் சமம் என சட்டம் சொல்வதை சமூகம் ஏற்கிறதா?

நெஞ்சுக்கு நீதி

இந்தியில் இருந்த ஹீரோயிச தன்மையை குறைத்து, ஹீரோவை எதிர்பார்க்காத மக்களின் உரிமைக்குரலாக மாற்றிய வகையில் முத்திரை பதிக்கிறார் இயக்குனர் அருண் ராஜா காமராஜ்

Nenjuku Needhi Review: பிறப்பால் அனைவரும் சமம் என சட்டம் சொல்வதை சமூகம் ஏற்கிறதா?

இந்தியில் இருந்த ஹீரோயிச தன்மையை குறைத்து, ஹீரோவை எதிர்பார்க்காத மக்களின் உரிமைக்குரலாக மாற்றிய வகையில் முத்திரை பதிக்கிறார் இயக்குனர் அருண் ராஜா காமராஜ்

Published:Updated:
நெஞ்சுக்கு நீதி

இந்தியாவில் இருக்கும் சாதிய அடுக்குகள் குறித்து பெரிய புரிதல் இல்லாத ஒரு காவல்துறை அதிகாரி, அவர் ஊரில் காணாமல் போன ஒரு பெண்ணை தேடுவது தான் ' நெஞ்சுக்கு நீதி'

நெஞ்சுக்கு நீதி
நெஞ்சுக்கு நீதி

வெளிநாட்டில் இருந்துவிட்டு, சொந்த நகரத்துக்கு உதவி காவல் கண்காணிப்பாளராக வருகிறார் விஜய ராகவன். இங்கிருக்கும் சாதிய அடுக்குகளில் பெரிய புரிதலோ, அதன் மீதான அபிமானமோ இல்லாத விஜய்க்கு அந்த கிராமத்தில் நடக்கும் பல விஷயங்கள் பெரும் வியப்பைத் தருகின்றன. பணியில் அமர்ந்த இரண்டாம் நாளே இரு பெண்கள் தூக்கிலிடப்பட்டுக் கிடக்கிறார்கள். அது கொலையா , தற்கொலையா என்னும் கேள்விகளுக்குள் அதை மறைக்கும் பணியும் அவருக்குப் பின் நடக்கிறது. கொலைகளை மறைக்க வழக்கம்போல காவல்துறை நாடகம் ஆடுகிறது என அந்த மக்கள் சந்தேகம் கொள்கிறார்கள். அரசியல் காய் நகர்த்தல்களும் பின்னிருந்து இயங்க, நெருக்கடி சூழலுக்குத் தள்ளப்படுகிறார் விஜய ராகவன் . கொலை செய்தவர் யார் என்பதை விஜய் ராகவன் எப்படி கண்டுபிடித்தார்? பிறப்பால் அனைவரும் சமம் என சட்டம் சொல்வதை சமூகம் ஏற்கிறதா என்பதைச் சொல்லி முடிகிறது படம்.

கதையின் நாயகன் விஜய ராகவனாக உதயநிதி ஸ்டாலின். ஒரு ரீமேக் திரைப்படத்தில் கதை நாயகனின் பாத்திரத்தில் ஒரிஜினல் எப்போதும் கண் முன் வந்து போகும். ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல், தன்னால் இயன்ற நியாயத்தைச் செய்திருக்கிறார் உதயநிதி. சுரேஷ் சக்ரவர்த்தியிடம் திமிறிக்கொண்டு எழுவது ; பாதிக்கப்பட்ட பெண்களுக்காக கடைசி வரை போராடுவது என தன் கேரியரில் மிகச்சிறப்பான ஒரு படத்தில் நடித்த திருப்தி இனி உதயநிதிக்கு நிச்சயம் இருக்கும். சாதிவெறி ஊறிப்போன , தீட்டு பார்க்கும் இன்ஸ்பெக்டர் சுந்தரமாக சுரேஷ் சக்ரவர்த்தி. பார்க்கும் அனைவரும் அருவெறுப்பு கொள்ளச் செய்யும் கதாபாத்திரம். அதைச் சிறப்பாக செய்திருக்கிறார். ஏனைய காவல்துறை அதிகாரிகளாக வரும் மயில்சாமி, இளவரசு இருவரும் தங்கள் அனுபவ நடிப்பால் கதைக்கு கூடுதல் கனம் சேர்க்கிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து, அங்கிருக்கும் மக்களை ஒன்றிணைக்கும் மனிதராக ஆரிக்கு நல்லதொரு வேடம்.குறிஞ்சியாக வரும் ஷிவானி ராஜசேகர், வள்ளியாக வரும் சுஹாசினி சஞ்சீவ் ஆகிய இருவரும் கவனம் ஈர்க்கிறார்கள்.

நெஞ்சுக்கு நீதி உதயநிதி ஸ்டாலின்
நெஞ்சுக்கு நீதி உதயநிதி ஸ்டாலின்

2019ம் ஆண்டு இந்தியில் அனுபவ் சின்ஹா இயக்கிய ஆர்ட்டிக்கிள் 15 படம் பெரும் அதிர்வலைகளை இந்தியா முழுக்க ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளை நுண்பகடி செய்தது, சாதித் திமிரின் மீது பொளேரென அறைந்தது என ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான மிகச்சிறந்த படம் அது. அதை தமிழுக்கு ஏற்றவாறு ஆங்காங்கே மாற்றி , நம் நிலப்பரப்புக்கு இன்னும் நெருக்கமான படமாக மாற்றி பிரமாதப்படுத்தியிருக்கிறார் அருண்ராஜா காமராஜா. கொங்கு நிலப்பரப்பில் நிகழ்ந்த சில விஷயங்களையும் கதைக்குள் துருத்திக்கொள்ளாதவாறு நுழைத்து, இன்னும் அழுத்தமாக சாதிக்கு எதிரான அரசியலை முன்வைத்திருக்கிறார். இந்தியில் இருந்த ஹீரோயிச தன்மையை குறைத்து, ஹீரோவை எதிர்பார்க்காத மக்களின் உரிமைக்குரலாக மாற்றிய வகையில் முத்திரை பதிக்கிறார் இயக்குனர் அருண் ராஜா. தமிழரசன் பச்சைமுத்துவின் வசனங்கள் படத்துக்கு பெரும் பலம். " நம்மள இங்க எரிக்கத்தான் விடுவாங்க, எரிய விட மாட்டாங்க "; " சட்டம் தான் இங்க தேசிய மொழி " ; " அவங்க குளிச்சா அழுக்காகாத தண்ணி, நாங்க குடிச்சா அழுக்காகிடுமா சார்" " சட்டமா, எங்களுக்கும் அதுக்கும் இந்த நாட்டுல மரியாதை இருக்கா என்ன" என சாதிய மனநிலைக்கு எதிராக எழுதப்பட்ட வசனங்கள் ஒவ்வொன்றும் எல்லோருடைய மனசாட்சியையும் தட்டிக் கேட்கக்கூடியவை. மனசாட்சியைவிட பெரிய நீதிமன்றம் எதுவுமில்லை என்னும் காந்தியின் வரிகளுக்கு ஏற்ப, நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பு படத்துக்கு மிகப்பொருத்தமாய் இருக்கிறது. பாலியல் அத்துமீறல் தொடர்பான படத்தில், வலிந்து அதற்கென எந்தக் காட்சியும் வைக்காமலே பார்வையாளர்களுக்கு அந்த வலியைக் கடத்திவிட முடியும் என நிரூபித்து இருக்கிறது படக்குழு. ஒவ்வொரு வசனத்தின் வலியையும், இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்கிறது திபுவின் பின்னணி இசை. பாடல்களில் வரும் மாண்டேஜ்களிலும், ஒய்டு ஏங்கிள் காட்சிகள் தினேஷின் ஒளிப்பதிவு அபாரம். வினோத் ராஜ்குமார், லால்குடி N இளையராஜா கூட்டணியில் கலையும், ரூபனின் படத்தொகுப்பும் படத்தின் தேவையைத் தாண்டி எதையும் கூடுதலாய் காட்டவில்லை.

ஒரிஜினல் படத்தில் இருக்கும் தேர்தல் அரசியல் சார்ந்த காட்சிகளை முக்கால்வாசி நீக்கிவிட்டு அதற்குப் பதில் சில காட்சிகளை சேர்த்திருக்கிறார்கள். அரசியல் சார்ந்து வரும் காட்சிகளில் இன்னும் கூடுதல் அழுத்தம் கொடுத்திருக்கலாம். வழக்கத்திற்கு மாறான கனமான கதையில் வழக்கமான அரசியல் காட்சிகளை சேர்த்திருப்பது ஏமாற்றம். அதே போல், பலருக்கு சரியாய் வந்தாலும், சிலர் பேசும் கொங்கு மொழி வலிந்து திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. டப்பிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஒடுக்கப்பட்டவர்களின் வலியை, ஆதிக்க சக்திகளின் குற்றவுணர்வில்லா அதிகாரத்தை, தீண்டாமை எனும் கொடுந்தொற்றில் நம் அனைவருக்கும் இருக்கும் பங்கை நம் மனசாட்சி உறுத்த அழுத்தமாய் சொல்கிறது இந்த நெஞ்சுக்கு நீதி.