ஒரு பெண் கலைத்துறையில் முன்னேறுவதற்காக, சாதிப்பதற்காக எதையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதுதான் அன்விதா தத் இயக்கத்தில், அனுஷ்கா சர்மா தயாரிப்பில் திரிப்தி டிம்ரி, ஸ்வஸ்திகா முகர்ஜி, பாபில் கான் உள்ளிட்டோர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள `Qala' படத்தின் ஒன்லைன்.

இந்திய அளவில் பிரபலமாகி பிரதமரின் விருதுகளை எல்லாம் வாங்கிய சினிமா பாடகி திரிப்தி டிம்ரி, தனது அம்மாவின் அங்கீகாரத்துக்காக ஏங்கித் தவிக்கிறாள். அப்படி, ஏங்குவதற்கு என்ன காரணம், அவள் அந்த இடத்தைப் பிடிப்பதற்காக என்னவெல்லாம் செய்கிறாள் என்பதுதான் 'Qala' படத்தின் மீதிக்கதை. கதை 1930களின் பிற்பகுதியில் நடக்கிறது. அந்தக் காலகட்டத்தில் இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் பெண்ணுக்கான தடைகள் வழக்கமானது என்றாலும் அதைத் திரைக்கதையாக மாற்றிய விதம் க்ளைமாக்ஸ்வரை நம்மை கை பிடித்து இழுத்துச் செல்கிறது.
தான் விரும்பிய துறையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவு, லட்சியத்துடன் பாடகி கலாவாக திரிப்தி டிம்ரி. பெண் என்பதாலேயே அவரின் முன்னெடுப்புகள் நசுக்கப்பட, தன் திறமைக்கான இடத்தைப் பிடிப்பதற்காகப் போராடும் காட்சிகளில் தன் முகபாவத்தாலும் தேர்ந்த நடிப்பாலும் நம் மனதில் எளிதாக வந்து அமர்கிறார் திரிப்தி டிம்ரி. நடிப்பிலும் உடையிலும் இரண்டு விதமான கெட்டப்புகளில் வித்தியாசம் காட்டி தனிக்கவனம் பெறுகிறார். 'லைலா மஜ்னு', 'புல் புல்' என நடிப்பில் தனிமுத்திரை பதித்தவருக்கு 'கலா' மற்றுமொரு மைல்கல் படம்.

ஆதரவற்றவராக இருந்தாலும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல், திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆணைத் தத்தெடுத்து வளர்க்கும் அம்மாவாக வந்தாலும், தனது மகளின் திறமையை அங்கீகரிக்காத முரண்பட்ட ஊர்மிளா மஞ்சுஶ்ரீ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஸ்வஸ்திகா முகர்ஜி. இனிமையான பாடகராவும் அதே நேரத்தில், தனது குரல் பறிபோனதால் எடுக்கும் அந்த முடிவிலும் நம் இதயத்தை கொய்துவிடுகிறார் பாபில் கான். மறைந்த நடிகர் இர்ஃபான் கானின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும் முதல் படத்திலேயே கொண்டாடும்படியான நடிப்பை வழங்கியுள்ளார் பாபில்.
ஒரு பெண் கலைத்துறையில் சாதிக்க எதையெல்லாம் சமரசம் செய்துகொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறாள் என்பதை கனவு, ஏக்கம், நிராகரிப்பு, ஏமாற்றம், சதி, குற்ற உணர்வு எனப் பல்வேறு உணர்வுகளின் குவியலாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அன்விதா தத்.

'பொண்ணா பொறந்தா என்ன இப்போ? உன் அப்பா மாதிரி உன்னாலயும் சங்கீத சக்ரவர்த்தியா ஆகமுடியும். இதெல்லாம் ஆம்பளைக்கு மட்டும்தான் கிடைக்குது. ஆனா, ஒரு பொண்ணா நீ ரொம்ப கஷ்டப்பட்டுதான் முன்னேற வேண்டி இருக்கும்'... 'ஆணுக்கு மட்டும் செகரட்டரின்னு சொல்றீங்க... ஆனா, பெண்ணை மட்டும் ஏன் ஃபீமேல் செகரட்டரின்னு சொல்றீங்க?' போன்ற வசனங்களும் அழுத்தமாய் மனதில் பதிகின்றன. எல்லா துறைகளிலும் பெண் என்பதாலேயே அவர்கள் ஒடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதில், கலைத்துறையில், குறிப்பாக இசைத்துறையில் ஒடுக்கப்படுவதை ஆவணமாய் காட்டும் 'Qala' படத்தைத் தயாரித்து கேஸ்ட் ரோலில் நடிகையாகவே வந்துபோகும் அனுஷ்கா சர்மாவிற்கு ஹார்ட்டின்ஸ்!
அனல் மேலே அமர்ந்திருந்தாலும் பனிச்சிகரத்தில் படுத்திருப்பதுபோல குளு குளு லெகேஷன்களைக் காண்பித்து இதயத்தை ஜிலீரிட வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த் திவான். இமாச்சல பிரதேசம், காஷ்மீரின் அழகு கண்கொள்ள விருந்து. இப்படியொரு ஒளிப்பதிவையே இரண்டாம் கட்டத்துக்குத் தள்ளுவது அமித் திரிவேதியின் இசையும் பாடல்களும்தான். கதைக்களமும் இசைதான் என்பதால் அதற்கான மெனக்கெடல்கள் காட்சிக்கு காட்சி அதிகமாகவே பிரதிபலித்திருக்கின்றன. கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களைவிட, படம் நெடுக ஒலிக்கும் அந்த இசைதான் நம்மிடம் அதிகமாக உரையாடுகிறது. பாடல்களில், 'Ghodey Pe Sawaar' ரிப்பீட் மோட் ரகம்.

நடிகர்களிடமிருந்து தேர்ந்த நடிப்பை வாங்கும் பணியைச் சிறப்பாகவே செய்திருக்கிறார் இயக்குநர் அன்விதா தத். 1930-களின் பிற்பகுதியில் நடக்கும் கதை என்றாலும் எந்தக் காலத்திற்கும் பொருந்துவதுபோல் கதையின் கரு இருப்பது கூடுதல் ப்ளஸ். திரைத்துரையில் பெண் படைப்பாளிகளுக்கு இருக்கும் சிக்கல்களைச் சமரசமின்றி காட்சிப்படுத்திய விதமும் பாராட்டத்தக்கது.
என்னதான் அங்கீகாரத்துக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் போராட்டமாகக் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் அவர் சந்திக்கும் சவால்களைத்தாண்டி அந்தப் பெண்ணின் மீதே வெறுப்பு ஏற்படும் அளவுக்கு பல காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதனால் அந்தப் பெண்ணின் மீது ஏற்படவேண்டிய கரிசனத்தைவிட கோபமே அதிகம் எட்டிப் பார்க்கிறது. இதனால் ஒரு கட்டத்தில் அவளுக்காக நிற்கவேண்டிய பார்வையாளர்களையும் அவளுக்கு எதிராக நிற்க வைத்துவிடுகிறார் இயக்குநர்.

குறிப்பாக, கதையின் போக்கைத் தீர்மானிக்கும் அம்மா கதாபாத்திரம்தான் நம்மிடமிருந்து முரண்பட்டு நிற்கவேண்டும். ஆனால், அந்தக் கதாபாத்திரம் சரியாக நடந்துகொண்டதுபோல் இறுதியில் நியாயப்படுத்தப்படுத்தப்பட்டிருப்பது முரண்.
இப்படியான முரண்கள் இருந்தாலும், ஒரு பெண் தனது கலையுலக கனவை நிறைவேற்றிக்கொள்ள எப்படியெல்லாம் போராடுகிறாள் என்பதற்காக `Qala' படத்தை ரசிக்கலாம்.