Published:Updated:

நித்தம் ஒரு வானம் விமர்சனம்: வித்தியாசமான திரைக்கதையுடன் ஒரு ஃபீல்குட் டிராவல் சினிமா!

நித்தம் ஒரு வானம்

இயல்பான மனிதர்கள் நிரம்பிய ஃபீல்குட் கதைதான் என்றாலும், அதில் மூன்று டிராக், ஒவ்வொன்றுக்கும் ஒரு சஸ்பென்ஸ், ஒரு க்ளைமாக்ஸ் என்று திரைக்கதையில் வெரைட்டி காட்டுகிறார் அறிமுக இயக்குநர் Ra.கார்த்திக்.

நித்தம் ஒரு வானம் விமர்சனம்: வித்தியாசமான திரைக்கதையுடன் ஒரு ஃபீல்குட் டிராவல் சினிமா!

இயல்பான மனிதர்கள் நிரம்பிய ஃபீல்குட் கதைதான் என்றாலும், அதில் மூன்று டிராக், ஒவ்வொன்றுக்கும் ஒரு சஸ்பென்ஸ், ஒரு க்ளைமாக்ஸ் என்று திரைக்கதையில் வெரைட்டி காட்டுகிறார் அறிமுக இயக்குநர் Ra.கார்த்திக்.

Published:Updated:
நித்தம் ஒரு வானம்
"ஒரு டிராவல் போயிட்டு வா... லைப் மாறிடும்" என்ற சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஃபீல்குட் சினிமா இந்த `நித்தம் ஒரு வானம்'.

கொல்கத்தா பயணமாகச் செல்லும் அசோக் செல்வனின் விமானம் கேன்சலாகிவிட, ஒடிசாவிலிருந்து பேருந்திலாவது சென்றுவிடலாம் எனப் பேருந்து நிலையம் வருகிறார். அங்கே தமிழ்ப் பெண்ணான ரிது வர்மாவைச் சந்திக்க, அவரிடம் தன்னுடைய கதையைப் பகிர்ந்து கொள்கிறார். தான் படித்த இரண்டு கதைகளின் நிஜமான கதை மாந்தர்களைத் தேடியே தான் இந்தப் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக அவர் சொல்ல, அந்தக் கதைகளின் முடிவை அறிய, ரிது வர்மாவும் அவருடன் கொல்கத்தா, இமாச்சலப்பிரதேசம் என்று பயணிக்கிறார். இந்தப் பயணம் அசோக் செல்வனுக்குக் கொடுக்கும் படிப்பினைகள்தான் இந்த 'நித்தம் ஒரு வானம்'.

நித்தம் ஒரு வானம்
நித்தம் ஒரு வானம்

வீரா, அர்ஜுன், பிரபா என மூன்று பரிமாணங்களில் அசோக் செல்வன். கல்லூரி இளைஞன் ரக்கட் பாயாகவும், காவல்துறை அதிகாரியாகவும் ஸ்கோர் செய்பவர், அகவயத்தன்மை கொண்ட இன்ட்ரோவெர்ட்டாக மட்டும் ஏனோ ஈர்க்க மறுக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அவர் இன்ட்ரோவெர்ட்டா, அல்லது அவருக்கு இருப்பது பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு என்று அழைக்கப்படும் 'Obsessive–compulsive disorder, OCD'-யா, Germaphobia-வா (கிருமிகள் குறித்த அச்சம்) என்பதிலும் சரியான தெளிவில்லை. உடல்மொழியிலும் அப்படியே ஆங்கில டிவி தொடரான 'தி பிக் பேங் தியரி'யின் ஷெல்டன் கூப்பர் கதாபாத்திரத்தை நகலெடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், அந்த நகைச்சுவை பாணி நடிப்பு சுத்தமாக மிஸ்ஸிங்.

ஒரு டிராக்கில் வரும் அபர்ணா பாலமுரளிக்கு ரக்கட் கேர்ள் பாத்திரம். 'சூரரைப் போற்று' பொம்மியை நினைவூட்டினாலும், அவரும் அழகம்பெருமாளும்தான் அந்தக் கதையை இன்னும் ரசிக்கும்படி மாற்றியிருக்கிறார்கள். ரிது வர்மாவால் கதையில் எந்தவித மாற்றங்களும் இல்லையென்றாலும் அவரின் பாத்திரத்தைச் சிறப்பாகவே கையாண்டிருக்கிறார். ஷிவதா, ஷிவாத்மிகா, நட்புக்காக ஜீவா, அபிராமி என மற்ற நடிகர்களின் நடிப்பிலும் குறையேதுமில்லை.

நித்தம் ஒரு வானம்
நித்தம் ஒரு வானம்

இயல்பான மனிதர்கள் நிரம்பிய ஃபீல்குட் கதைதான் என்றாலும், அதில் மூன்று டிராக், ஒவ்வொன்றுக்கும் ஒரு சஸ்பென்ஸ், ஒரு க்ளைமாக்ஸ் என்று திரைக்கதையில் வெரைட்டி காட்டுகிறார் அறிமுக இயக்குநர் Ra.கார்த்திக். கொஞ்சம் சறுக்கினாலும் புரியாமல் போய்விடக்கூடிய திரைக்கதை அமைப்பு மேல் வெற்றிகரமாகப் பயணித்துக் கவனிக்க வைக்கிறார். தொடக்கம் மட்டும் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான மலையாள சினிமாவான 'North 24 Kaatham'-ஐ நினைவூட்டுகிறது.

காலேஜ் லவ் ஸ்டோரி டிராக்கும் சரி, ஊரில் மாப்பிள்ளை பார்க்கும் கதையும் சரி சுவாரஸ்யமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. சஸ்பென்ஸை நெருங்கும் வரை அவற்றின் ஃபீல்குட் தன்மையில் எந்தக் குறையுமில்லை. ஒரு கதை சீரியஸ் என்றால் மற்றொன்று காமெடி என அதிலும் ஒரு பக்காவான பேலன்சிங் இருக்கிறது. அந்த இரண்டு கதைகளை முடித்த விதத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அந்த இடத்தில் மட்டும் வழக்கமான டெம்ப்ளேட் மெசேஜ், அது அசோக் செல்வனின் வாழ்க்கையில் உண்டாக்கும் மாற்றம் எனப் 'பழைய' சினிமா இலக்கணத்துக்கு மாறிவிடுகிறது படம்.

நித்தம் ஒரு வானம்
நித்தம் ஒரு வானம்

விது அய்யனாவின் ஒளிப்பதிவு கொங்கு மண்டலம், மேற்கு வங்கம், இமாச்சலின் பனிப்பிரதேசம் எனப் பல இடங்களின் எழில் கொஞ்சும் அழகை அப்படியே அள்ளி வந்திருக்கிறது. கோபி சுந்தரின் பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை என்றாலும், தரணின் பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளை அதிகப்படுத்தி அதற்குரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.

குறைகள் இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதை, ஃபீல்குட் கதை(கள்), அழகான டிராவல் என ரசிக்கவே வைக்கிறது இந்த `நித்தம் ஒரு வானம்'.