Published:Updated:

One Way விமர்சனம்: `விளையாட்டான' கதை, சிறப்பான மேக்கிங்; எப்படியிருக்கிறது இந்த த்ரில்லர் சினிமா?

One Way விமர்சனம்

நெட்ஃப்ளிக்ஸின் `ஸ்குவிட் கேம்', தமிழில் `சமர்' உள்ளிட்ட படைப்புகள் ஏற்கெனவே வந்திருந்தாலும் `ரஷ்யன் ரோலட்' (Russian roulette) என்னும் பழங்காலத் துப்பாக்கி விளையாட்டு இடம்பெறும் காட்சிகள் திகில் எபிசோடுகள்.

One Way விமர்சனம்: `விளையாட்டான' கதை, சிறப்பான மேக்கிங்; எப்படியிருக்கிறது இந்த த்ரில்லர் சினிமா?

நெட்ஃப்ளிக்ஸின் `ஸ்குவிட் கேம்', தமிழில் `சமர்' உள்ளிட்ட படைப்புகள் ஏற்கெனவே வந்திருந்தாலும் `ரஷ்யன் ரோலட்' (Russian roulette) என்னும் பழங்காலத் துப்பாக்கி விளையாட்டு இடம்பெறும் காட்சிகள் திகில் எபிசோடுகள்.

Published:Updated:
One Way விமர்சனம்
வறுமையின் காரணமாக வாழ்க்கையில் பல இழப்புகளைச் சந்திக்கும் இளைஞன், மற்றவர்களின் உயிர்களைப் பணயம் வைத்து விளையாடும் பணக்காரர்களின் அபாயகரமான ரசனை என இருவேறு உலகங்கள் சந்திக்கும் புள்ளிதான் `ஒன் வே' (One Way).

நாயகன் பிரபஞ்சனின் தந்தை, கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள ஒற்றை ஆளாய் குடும்ப பாரத்தைத் தூக்கிச் சுமக்கவேண்டியது அவருடைய பொறுப்பாகிவிடுகிறது. செல்போன் டவர் பழுதுபார்ப்பு முதல் லாரி க்ளீனர் வரை பல வேலைகள் பார்க்கும் பிரபஞ்சன், வளைகுடா நாடுகளுக்குச் சென்று வேலை செய்ய முடிவெடுக்கிறார். ஆனால் அதற்கான பயணம், அவர் அறியாத ஓர் அபாயகரமான இருட்டு உலகத்துக்குக் கொண்டு சென்றுவிடுகிறது. வாழ்வா, சாவா என்ற சாகச விளையாட்டில் பிரபஞ்சன் தப்பித்தாரா, தன் குடும்பத்தின் வறுமையை வென்றாரா என்பதை எதார்த்தமும் கொஞ்சம் சினிமாத்தனமும் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல்.

One Way விமர்சனம்
One Way விமர்சனம்

நாயகன் பிரபஞ்சன், வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையையும் வறுமையினால் துரத்தப்படும் கொடூரத்தையும் அழகாகச் சித்திரித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் ஒரு மரண விளையாட்டில் சிக்கி, மற்றவர்களைக் கொல்ல இயலாமல் தவிக்கும் பரிதவிப்பையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகியே இல்லாத இந்தப் படத்தில் பிரபஞ்சனின் தங்கையாக ஆரா. ஒருசில காட்சிகளே வந்தாலும் கடன் தொல்லையால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் ஒரு பெண்ணின் அச்சத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அண்ணன் - தங்கைக்கு இடையிலான உறவை விளக்கக் கூடுதல் காட்சிகள் இருந்திருந்தால் ஆராவின் பாத்திரம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு காமெடி அரசி என்ற பட்டத்துக்குப் பொருத்தமானவர் கோவை சரளா. மனோரமாவின் குணச்சித்திர நடிப்பையும் தன்னால் வழங்க முடியும் என்பதையும் இந்தப் படத்தின் மூலம் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார். வட்டார வழக்கில் தன் நிலையை நினைத்துப் புலம்புவது, கடன் கொடுத்தவரைத் துணிச்சலாக எதிர்கொள்வது ஆகியவற்றில் தன் முத்திரையை ஆழப்பதித்திருக்கிறார். இரண்டே காட்சிகள் என்றாலும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் வினோத்.

வறட்டு நிலப்பகுதி முதல் 'விளையாட்டு' நடக்கும் அரையிருட்டு அறைகள் வரை முத்துக்குமரனின் ஒளிப்பதிவு கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறது. பெரும்பாலும் க்ளோசப் காட்சிகளாகவே வைத்தே அதீத உணர்வுகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். சோகத்தையும் திகிலையும் கலந்து வழங்குவதில் அஷ்வின் ஹேமந்தின் இசை வென்றிருக்கிறது. குறிப்பாகப் படம் முடியும்போது, புதிய மெட்டில் ஒலிக்கும் பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே' பாடல் சிறப்பு. படத்தொகுப்பு, முக்கியமாக ஒலிப்பதிவு இரண்டுமே இந்த த்ரில்லர் படத்துக்கு ஏற்ற பிம்பத்தைக் கொடுத்திருக்கின்றன.

One Way விமர்சனம்
One Way விமர்சனம்
செல்போன் டவரில் இருந்து ஒரு தொழிலாளி தவறிவிழும் காட்சி நம்மையும் பதைபதைக்க வைத்துவிடுகிறது. அதேபோல் கடன் கொடுத்த வினோத், கோவை சரளா வீட்டில் நடந்துகொள்ளும் முறையும் அதிர்ச்சியை விளைவிக்கிறது. நெட்ஃப்ளிக்ஸின் `ஸ்குவிட் கேம்', தமிழில் `சமர்' உள்ளிட்ட படைப்புகள் ஏற்கெனவே வந்திருந்தாலும் `ரஷ்யன் ரோலட்' (Russian roulette) என்னும் பழங்காலத் துப்பாக்கி விளையாட்டு இடம்பெறும் காட்சிகள் திகில் எபிசோடுகள்.

தொடக்கத்தில் எதார்த்தமாக ஆரம்பிக்கும் படம், போகப்போக இன்டர்போல் போலீஸ், சாகச விளையாட்டு நடக்கும் அபாயகரமான இடம் என்று பல தடங்களில் லாஜிக் இன்றி பயணிப்பது பலவீனம். குறிப்பாகக் கவர்ச்சி காட்டும் பெண் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட பாத்திரங்கள், அவர்கள் போடும் மாஸ்டர்பிளான் போன்றவை படத்தில் ஒட்டாத உறுத்தல்கள். கோவை சரளாவின் குடும்பம் ஏதோ அந்தரப் பொட்டல் வெளியில் வசிப்பது, அந்த ஊர் மக்களின் வாழ்க்கையிலிருந்து அந்நியப்படுத்துகிறது. கடன்காரரின் பாலியல் அச்சுறுத்தல்களைக் காட்டும்போது, காவல்துறை என்கிற ஒன்றே அந்த ஊரில் இல்லையோ என்ற கேள்வியும் எழுகிறது. அதேபோல, நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தாலும் அவர்களின் உடல்மொழியில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

One Way விமர்சனம்
One Way விமர்சனம்
வாழ்க்கையின் விளிம்புக்குத் தள்ளப்படும் மனிதர்களின் துயரக்கதை, மரண விளையாட்டில் வதைபடும் மனிதர்களின் இருத்தலியல் பிரச்னைகள் என்ற இரட்டைப் பாதைகளில் மாறிமாறிப் பயணிக்காமல், ஏதேனும் ஒன்றில் மட்டும் கவனம் குவித்திருந்தால் இந்த 'ஒன் வே' பயணம் இன்னும் சிறப்பான ரைடாக இருந்திருக்கும்.