Published:Updated:

நட்சத்திரம் நகர்கிறது Review: மூன்று வால் நட்சத்திரங்களும் அவற்றின் நகர்வுகளும் சொல்லும் சேதி என்ன?

நட்சத்திரம் நகர்கிறது

வால் நட்சத்திரங்கள் மிகவும் அபூர்வமாக வானில் தோன்றுபவை. அப்படியானதொரு அபூர்வமான படைப்புதான் 'நட்சத்திரம் நகர்கிறது'.

நட்சத்திரம் நகர்கிறது Review: மூன்று வால் நட்சத்திரங்களும் அவற்றின் நகர்வுகளும் சொல்லும் சேதி என்ன?

வால் நட்சத்திரங்கள் மிகவும் அபூர்வமாக வானில் தோன்றுபவை. அப்படியானதொரு அபூர்வமான படைப்புதான் 'நட்சத்திரம் நகர்கிறது'.

Published:Updated:
நட்சத்திரம் நகர்கிறது
பல்வேறு மக்கள் இணைந்து காதல் குறித்த ஒரு மேடை நாடகத்தை அரங்கேற்றும் வைபவமே இந்த `நட்சத்திரம் நகர்கிறது'.

இனியனும் ரெனேவும் காதலர்கள். ஏதோவொரு பிரச்னை காரணமாக இருவரும் பிரிய நேர்கிறது. பிரிவின் துயருடன் சாலையில் நடந்து செல்லும் ரெனே வால் நட்சத்திரம் ஒன்றைக் காண்கிறார். துயரத்தைக் கடந்து ஒரு மகிழ்ச்சி அவளிடம் வெளிப்படுகிறது.

வெவ்வேறு மனநிலை கொண்ட மனிதர்கள் பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு அரங்கில் கூடுகிறார்கள். அங்கு காதல் பற்றிய நாடகம் ஒன்றை உருவாக்கத் திட்டமிடுகிறார்கள். காதல் குறித்து இனியன், ரெனே, அர்ஜுன், சில்வியா, ரோஷினி, மெடிலின் எல்லோருக்கும் ஒரு பார்வை இருக்கிறது. எல்லோரின் பார்வையும் இணைந்து ஒரு நாடகமாக உருவெடுக்கிறது. நாடகம் அரங்கேறியதா, காதல் குறித்த அவர்களின் பார்வை எதை நோக்கி நகர்கிறது என்பதாக விரிகிறது பா.இரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது'.

நட்சத்திரம் நகர்கிறது
நட்சத்திரம் நகர்கிறது

படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருப்பவர் ரெனேவாக வரும் துஷாரா விஜயன். அவர் சொல்லும் ஒவ்வொரு பதிலும், இனியனுக்கும் அர்ஜுனுக்கும் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்துக்குமானது என்பதை சில காட்சிகளில் குறிப்பால் உணர்த்துகிறார் இயக்குநர். தமிழ் சினிமாவில் வந்த பெண்மைய கதாபாத்திரங்களில் முக்கியமான ஒன்றாக எழுதப்பட்டிருக்கிறது ரெனேவின் கதாபாத்திரம். அதற்கெனவே பிறந்தது போல பிரமாதப்படுத்தியிருக்கிறார் துஷாரா விஜயன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முற்போக்காளராக இருந்தாலும், ஆணாதிக்கம் மிகுந்த இனியன் கதாபாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராம். ரஞ்சித் படங்களில் எப்போதும் இருக்கும் கலையரசனுக்கு இதிலும் நல்லதொரு வேடம். ஜீன்ஸ் பேன்ட், நாடகக் காதல் போன்றவற்றை பகடி செய்து, ஒருகட்டத்தில் அந்த உலகிலிருந்து வெளியேறத் துடிக்கும் ஒரு கதாபாத்திரம். இவர்கள் மட்டுமல்லாமல் பல கதாபாத்திரங்கள் தன்பால் ஈர்ப்பாளர்களாக படத்தில் வருகிறார்கள். தன்பால் ஈர்ப்பாளர்களை மிகவும் கண்ணியமாக காட்சியப்படுத்தியதற்காகவே படக்குழுவினரைப் பாராட்டலாம். படத்துக்குள்ளேயே 'மெட்ராஸ்' சேகர் கதாபாத்திரத்தை மெட்டா முறையில் சேர்த்திருக்கிறார்கள்.

நட்சத்திரம் நகர்கிறது
நட்சத்திரம் நகர்கிறது

Gustav Klimt-ன் ஓவியம் வரையப்பட்ட சுவரை நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் திரையில் காட்டியபடியே, அமெரிக்க பாடகியான நீனா சிமோனின் பாடலை பின்னணியில் ஒலிக்கவிடுகிறார்கள். அப்போது அங்கு இளையராஜாவின் பாடல் ஒன்றைப் பாடுகிறார் நாயகி. நாயகனுக்கும் நாயகிக்கும் சண்டை வர அதுவே காரணமாகவும் மாறுகிறது. இப்படியானதொரு காட்சியை நாம் இதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் கண்டதில்லை. அரசியலிலிருந்து விலகியே இருக்கும் ராஜா, அரசியலுக்குள் தள்ளப்படுகிறார். தமிழ் சினிமாவின் தனக்கான இடம் நிரந்தரம் என்பதை இந்த அறிமுகக் காட்சியிலேயே அழுந்தப் பதிய வைத்துவிடுகிறார் இயக்குநர் இரஞ்சித். 'Political correctness' என்பதே நாம் இருக்கும் வெளியைப் பொறுத்து மாறுபடுவதுதான் போன்ற இடங்களில் வசனங்கள் அருமை. அதே போல, யார் ஆண்ட பரம்பரை என்கிற வெற்றுக்கூச்சல் எல்லா ஜாதியிலும் ஊறிப்போய் இருக்கிறது என்பதையும் சம்மட்டையடியாய் பதிவு செய்கிறார்.

இரஞ்சித்தின் பெரும்பலம் அவரின் படங்களில் வரும் துணைக் கதாபாத்திரங்கள். அவர் படங்களில் துணைக் கதாபாத்திரங்கள் என்றாலே ஸ்பெஷல்தான். எல்லோருக்குள்ளும் ஒரு வாழ்க்கை இருக்கும். இதில் நாயகன் நாயகி - காதலைக் கடந்து பல்வேறு காதல்கள் கதைக்குள் செலுத்தப்பட்டிருக்கின்றன. அவை வெறுமனே சம்பிரதாயமானதாக இல்லாமல் உணர்வுபூர்வமாக இருக்கின்றன. டான்சிங் ரோஸ், ஜானி தொடங்கி இதில் எண்ணற்ற புதிய கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

படத்தின் பெரும்பலம் அதன் டெக்னிக்கல் டீம். சுவர்களை நோக்கிப் பயணிக்கும் கிஷோர் குமாரின் கேமரா நம்மை ஒரு உலகத் திரைப்பட திருவிழாவுக்கு அழைத்துச் சென்ற திருப்தியைத் தந்துவிடுகிறது. ரெனேவின் அறையில் இருக்கும் நட்சத்திரங்கள், நாடக அரங்கு என பல இடங்களில் கலை இயக்குநர் ஜெயரகுவின் உழைப்பு பளிச்சிடுகிறது. ஆங்காங்கே கதை 'Non-Linear'யாகச் சென்றாலும், அதை எந்தக் குழப்புமின்றி காட்டுகிறது RK செல்வாவின் படத்தொகுப்பு. தென்மாவின் இசையில் 'ரங்கராட்டினம்', 'பருவமே', 'நட்சத்திரம் நகர்கிறது' பாடல்கள் நெஞ்சைத் தொடுகின்றன. பின்னணி இசையிலும் படத்தின் ஆன்மாவாக மாறியிருக்கிறார்.

நட்சத்திரம் நகர்கிறது
நட்சத்திரம் நகர்கிறது

மூன்றாவது ஆக்ட்டில் அறிமுகப்படுத்தப்படும் புதியதொரு கதாபாத்திரம் படம் அதுவரையில் சென்றுகொண்டிருந்த அலைவரிசையை கொஞ்சம் சிதைத்துவிடுகிறது. அதே போல், நீளமானதொரு படத்தில் பெரும்பாலான காட்சிகளில் வசனங்களே ஆக்கிரமித்திருக்கின்றன. அது ஒரு சில இடங்களில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ரெனே மூன்று முறை வால் நட்சத்திரங்களைப் பார்க்கிறார். முதல் முறை இனியனுடன்; அடுத்து இனியனைப் பிரிந்தவுடன்; பின் மீண்டுமொருமுறை. வால் நட்சத்திரங்கள் மிகவும் அபூர்வமாக வானில் தோன்றுபவை. அப்படியானதொரு அபூர்வமான படைப்புதான் 'நட்சத்திரம் நகர்கிறது'.