Published:Updated:

Parole Review: ராவான கதை, வித்தியாசமான திரைக்கதை யுக்தி - படமாக எப்படியிருக்கிறது `பரோல்'?

Parole Review | பரோல் விமர்சனம்

அண்ணன் - தம்பி என இருவேறு பார்வையிலிருந்து கதைசொல்லல், முன்னும் பின்னுமான காட்சியமைப்புகள், பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக், அத்தியாயம் அத்தியாயமான பகிர்வுகள், ட்விஸ்ட்கள் என சுவாரஸ்யமான திரைக்கதை இந்தப் படத்தின் பெரும்பலம்.

Parole Review: ராவான கதை, வித்தியாசமான திரைக்கதை யுக்தி - படமாக எப்படியிருக்கிறது `பரோல்'?

அண்ணன் - தம்பி என இருவேறு பார்வையிலிருந்து கதைசொல்லல், முன்னும் பின்னுமான காட்சியமைப்புகள், பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக், அத்தியாயம் அத்தியாயமான பகிர்வுகள், ட்விஸ்ட்கள் என சுவாரஸ்யமான திரைக்கதை இந்தப் படத்தின் பெரும்பலம்.

Published:Updated:
Parole Review | பரோல் விமர்சனம்
அண்ணன் மீது பொறாமையும் வெறுப்பும் கொண்ட தம்பி, சந்தர்ப்பச் சூழ்நிலையால் சிறைக்கைதியான அதே அண்ணனை பரோலில் எடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளும் சவால்களுமே `பரோல்'.

சிறுவயதிலேயே குற்றவாளியாகச் சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்லும் கரிகாலன், அங்கேயே மூன்று கொலைகள் செய்து பெரும் குற்றவாளியாக மாறுகிறான். சிறையிலிருந்து வெளியில் வந்து கூலிப்படை கொலைகாரனாக மாறும் கரிகாலனை, பாசம் மிகுந்த அம்மா கண்டிக்கிறார். தன் அண்ணன் கரிகாலன் மீது செலுத்தும் அன்பை அம்மா தனக்குக் காட்டுவதில்லையே என்று உள்ளுக்குள் புழுங்குகிறான் தம்பி கோவலன். அம்மாவின் விருப்பத்திற்கேற்ப திருந்தி வாழ நினைத்தாலும் சந்தர்ப்பச் சூழ்நிலைகள் கரிகாலனை மீண்டும் மீண்டும் குற்றம் செய்யத் தூண்டுகின்றன. அம்மா இறந்துவிட, தானே இறுதிச்சடங்குகளைச் செய்துவிடுவது என்று கோவலன் முடிவு செய்கிறான். கரிகாலன் நண்பர்களும் உறவினர்களும் அதைத் தடுக்கிறார்கள். விருப்பமே இல்லாமல் அண்ணனைப் பரோல் எடுக்க கோவலன் செய்யும் முயற்சிகள் பலித்தனவா என்பதைப் புதுமையான கதைசொல்லலில் முன்வைக்கிறது 'பரோல்'.

Parole Review | பரோல் விமர்சனம்
Parole Review | பரோல் விமர்சனம்

அண்ணன் கரிகாலனாக லிங்கா, தம்பி கோவலனாக ஆர்.எஸ்.கார்த்திக். இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அம்மா மீது பாசம் கொண்ட மகனாக, கொலை செய்யும் வன்முறையாளனாக, அதேநேரத்தில் சராசரி உணர்வுகளைப் பிரதிபலிப்பவனாக, காதலனாக என்று எல்லாப் பரிமாணங்களிலும் நிறைந்திருக்கிறார் லிங்கா. 'முறையாக வேலை செய்து பிழைக்கும் என்னைவிடக் கொலைகார அண்ணன் மீது அம்மா இவ்வளவு அன்பு பொழிவது நியாயமா? ஊரே அவனை ஹீரோவாகக் கொண்டாடுகிறதே' என்று புழுங்கிப் புலம்பும் தம்பியாக ஆர்.எஸ்.கார்த்திக் இயல்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொருமுறையும் நீதிமன்றத்தில் அவர் பல்பு வாங்கும் காட்சிகள் சுவாரஸ்யமானவை.

நாயகிகளாக கல்பிகா, மோனிஷா. இருவருக்குமான காட்சிகள் மிகக்குறைவு என்றாலும் அவை வழக்கமான காட்சிகளாக இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளாக இருப்பது சிறப்பு. படத்தின் இரண்டு முக்கிய பெண் பாத்திரங்கள் அம்மாவாக ஜானகி சுரேஷ் மற்றும் வழக்கறிஞராக வினோதினி வைத்தியநாதன். ஓர் எளிய குடும்பத்து அம்மா கேரக்டரை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் ஜானகி சுரேஷ். ஓர் அம்மா மது அருந்தும் காட்சி இடம்பெறும் முதல் சினிமாவாக இதுவே இருக்கக்கூடும்.

Parole Review | பரோல் விமர்சனம்
Parole Review | பரோல் விமர்சனம்

தன் மகனை எப்படியாவது குற்ற வளையத்துக்குள் இருந்து வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற பரிதவிப்பு, இரட்டை ஆயுள்தண்டனை பெற்ற மகனுக்காகக் கருணை மனுக்கள் வரை செல்லும் எத்தனம், தன் இளைய மகனின் ஆற்றாமையைப் புரிந்துகொள்வதுடன் அதை அங்கீகரிக்கும் முதிர்ச்சி என்று ஒரு முழுமையான அம்மாவாக வாழ்ந்திருக்கிறார் ஜானகி. எல்லா வழக்கறிஞர்களும் நிராகரித்த ஒரு குற்றவாளியின் வழக்கறிஞராக வினோதினி வைத்தியநாதன் பரோலுக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் சுவாரஸ்யமானவை. நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதார்த்தத்தை அதிகம் பிரதிபலித்திருக்கிறார்.

அண்ணன் - தம்பி என இருவேறு பார்வையிலிருந்து கதைசொல்லல், முன்னும் பின்னுமான காட்சியமைப்புகள், பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக், அத்தியாயம் அத்தியாயமான பகிர்வுகள், ட்விஸ்ட்கள் எனப் பலவற்றையும் கொண்ட சுவாரஸ்யமான திரைக்கதை இந்தப் படத்தின் பெரும்பலம். படத்தின் பெரும்பகுதி வசனங்களும் கவர்கின்றன. அதேநேரத்தில் இத்தனை முயற்சிகளும் அம்மா பாசம், அண்ணன் - தம்பி பிரச்னை என்ற தமிழ் சினிமாவில் பலமுறை பேசப்பட்ட வழக்கமான விஷயங்களுக்காகத்தான் என்பதே பெரும் பலவீனம். படத்தின் டைட்டில் டிசைன், போஸ்டர்கள், டைட்டில் கிரெடிட்ஸில் வரும் இசை போன்றவற்றில் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' வெப்சீரிஸின் தாக்கம் தென்படுகிறது.

Parole Review | பரோல் விமர்சனம்
Parole Review | பரோல் விமர்சனம்

வடசென்னையை மீண்டும் இந்தப் படமும் வன்முறைக்களமாகவே காட்டியிருக்கிறது. அண்ணன், தம்பி, அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் என்பதுடன் முடிந்துவிட்டதால் வடசென்னையின் வாழ்வியல் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் அரசியல் விரிவாகப் பதிவாகவில்லை. ஏராளமான வன்முறைக்காட்சிகள், கலாசார அதிர்ச்சியளிக்கும் சித்திரிப்புகள் நிறைந்தது என்பதால் நிச்சயமாக இது குடும்பத்துடன் பார்ப்பதற்கோ, 18 வயதுக்குக் கீழானவர்களுக்கோ ஏற்ற படமல்ல.

அதேநேரத்தில் ஒரு ராவான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை, வித்தியாசமான முயற்சி போன்றவற்றை ரசிப்பவர்களுக்கு ஏற்ற படம்.