Published:Updated:

இரவின் நிழல்: பார்த்திபனின் துணிச்சல் - எப்படியிருக்கிறது உலகின் முதல் சிங்கிள் ஷாட் non-linear சினிமா?

Iravin Nizhal | இரவின் நிழல்

நான்-லீனியராக (Non-Linear) தன் கதையை விரிக்கும் ஒரு படத்தை சிங்கிள் ஷாட்டில் உலகிலேயே முதல் முறையாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறது 'இரவின் நிழல்'. எப்படியிருக்கிறது உலகின் முதல் சிங்கிள் ஷாட் non-linear சினிமா?

இரவின் நிழல்: பார்த்திபனின் துணிச்சல் - எப்படியிருக்கிறது உலகின் முதல் சிங்கிள் ஷாட் non-linear சினிமா?

நான்-லீனியராக (Non-Linear) தன் கதையை விரிக்கும் ஒரு படத்தை சிங்கிள் ஷாட்டில் உலகிலேயே முதல் முறையாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறது 'இரவின் நிழல்'. எப்படியிருக்கிறது உலகின் முதல் சிங்கிள் ஷாட் non-linear சினிமா?

Published:Updated:
Iravin Nizhal | இரவின் நிழல்
ஒருவர் தன் வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களை ஒரே இரவில் அசைபோடும் தருணங்களே இந்த `இரவின் நிழல்'.

நந்து என்கிற சினிமா ஃபைனான்சியர் பெரும் சிக்கலுக்கு உள்ளாகிறார். எல்லாம் முடிந்து மீதமிருக்கும் எதிரிகளை முடித்துத் தள்ள முடிவெடுக்கும் தருணத்தில் கடந்த கால வாழ்க்கையை எண்ணிப் பார்க்கத் தொடங்குகிறார். நந்துவின் வாழ்வில் நந்துவாக பலர் வந்துபோகிறார்கள். நந்து இந்தச் சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபராக, இந்தச் சமூகத்தைப் பாதித்த ஒரு நபராக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது என்பதைச் சொல்லிச் செல்கிறது 'இரவின் நிழல்'.

Iravin Nizhal | இரவின் நிழல்
Iravin Nizhal | இரவின் நிழல்

நந்துவாக பார்த்திபன், ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு, பிரவீன் குமார், ஜோஷுவா இப்படி நிறையப் பேர் நடித்திருக்கிறார்கள். நந்துவின் மனங்கவர் நாயகிகளாக சிநேகா குமாரி, பிரிகிடா சகா, சாய் பிரியங்கா ரூத் என மூவர் நடித்திருக்கிறார்கள். இதில் சில பெண்கள் நந்துவை நல்வழிக்கும், சிலர் நந்துவைத் தீய வழிக்கும் கொண்டு செல்கிறார்கள். இவர்களோடு வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் என அனுபவ நடிகர்களும் வருகிறார்கள். தெலுங்குப் பேசும் நபராக வரும் பிரிகடாவுக்கு நல்லதொரு பாத்திரம். சிறப்பாக நடித்து கதையின் முக்கியப் புள்ளியாக மனதைக் கவர்கிறார்.

இதற்கு முன்பு உலக சினிமாக்களில் பரிச்சார்த்த முயற்சிகளில் சிங்கிள் ஷாட் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. நீளமாகக் காட்சிகளை எடுத்துவிட்டு அவற்றை சிங்கிள் ஷாட் போல் காண்பிக்கும் உத்திகளிலும் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் நான்-லீனியராக (Non-Linear) தன் கதையை விரிக்கும் ஒரு படத்தை சிங்கிள் ஷாட்டில் உலகிலேயே முதல் முறையாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறது 'இரவின் நிழல்'.
Iravin Nizhal | இரவின் நிழல்
Iravin Nizhal | இரவின் நிழல்

சிங்கிள் ஷாட்டில் ஒரு முழு நீள சினிமாவை பிழையின்றி எடுப்பதே கடினம் என்னும் போது, ஒரு மனிதன் தன் வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் இருக்க, அவன் கண்முன் அவன் மொத்த வாழ்க்கையும் ரீவைண்டாக அதுவும் முன்னுக்குப் பின் மாறி மாறி நான்-லீனியரில் வந்தால் எப்படியிருக்கும் என யோசித்து ஒரு கதையை எழுதியிருக்கிறார் பார்த்திபன். நம் வாழ்க்கையை நாமே திருத்திக்கொள்ளும் ஒரு முயற்சியைப் போல, அந்தந்த காலகட்ட வாழ்க்கை நம் கண் முன்னர் விரிந்து நின்றாலும், ஒரு மௌனப் பார்வையாளனாய் மட்டுமே அதைப் பார்க்க முடியும். அப்படியானதொரு முயற்சியாக விரியும் கதைக்கு, அதற்கேற்ற திரைக்கதையைச் செதுக்கிப் பிரமாதப்படுத்தியிருக்கிறார் பார்த்திபன்.

"சிலர் செய்யற பாவம் கங்கைக்குப் போனா தீரும். சிலர் செய்ற பாவம் கங்கையோட போனாலும் தீராது"; "செருப்பால அடிப்பான்னு பார்த்தா சிரிப்பால அடிச்சா" எனப் படத்தின் பல வசனங்களில் பார்த்திபன் டச்.

சிங்கிள் ஷாட்டில் இடைவேளை என்பதே கிடையாது என்பதால், முதல் 30 நிமிடங்களுக்குப் படத்தின் மேக்கிங் காட்டப்படுகிறது. அதன் பிறகு இடைவேளை, அதற்குப் பிறகு படத்தின் அதாவது எடுக்கப்பட்ட 93 நிமிடங்களும் எந்தவித இடைநிற்றலும் இன்றி, நமக்குக் காட்டப்படுகிறது. வித்தியாசமான முயற்சி என்பதைத் தாண்டி, அந்த மேக்கிங் காட்சிகள் மொத்தப் படக்குழுவின் கடின உழைப்புக்குப் பெரும் அங்கீகாரம்.

படத்தின் பெரும்பலம் அதன் டெக்னிக்கல் டீம். பிள்ளையார் சுழி போடப்பட்டதிலிருந்து சுழல வேண்டிய பொறுப்பு ஆர்தர் வில்சனின் கேமராவுடையது. வெவ்வேறு இடங்களுக்குள் புகுந்து வெளியேறி, வெவ்வேறு உலகை எந்தத் தொந்தரவும் இல்லாமல் அடுத்தடுத்து காட்டி, இப்படியெல்லாம் எடுக்க முடியுமா என ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். படம் முழுக்க ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் என்பதால், அவை அனைத்துக்கும் நிறைய செட்கள் போட வேண்டும். ஆனால், படமே சிங்கிள் ஷாட்தான் என்பதால் அந்த செட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் போட வேண்டும். அதே சமயம், ஒரு அறைக்குக்கூட இரண்டு செட்கள் போடும் சூழ்நிலை எல்லாம் வந்திருக்கும். இந்த செட்களின் மூலமாக மட்டுமே, அந்தந்த காலகட்டங்களையும் காட்ட வேண்டும்.

Iravin Nizhal | இரவின் நிழல்
Iravin Nizhal | இரவின் நிழல்

இப்படியான பல்வேறு அழுத்தங்களுடன் செயலாற்றி இருந்தாலும், பிரமாதமாக செட்களை உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குநர் விஜய் முருகன். படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும். ஸ்ரேயா கோஷலின் குரல்களில் 'மாயவா தூயவா' இன்னொரு அதிரூப மெலடி. 'பாவம் செய்யாதிரு மனமே' அட்டகாசமான கர்னாடிக் என்றால், 'காயம்' பாடல் வேறொரு உலகத்துக்கு நம்மைக் கொண்டு சென்றுவிடுகிறது. பின்னணி இசையிலும் யாதொரு குறையும் இல்லை. டெக்னிக்கலாக தமிழ் சினிமாவை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது இந்த 'இரவின் நிழல்'.

சிங்கிள் ஷாட் படங்கள் என்றாலே குறைவான நடிகர்களுடன், ஒரு குறிப்பிட்ட, குறுகியதொரு விஷயத்தை நோக்கித்தான் கதை நகரும். ஏனெனில் அதில் பிழைகளுக்கான வாய்ப்புகள் குறைவு. இதுவரையில் எடுக்கப்பட்ட எல்லா சிங்கிள் ஷாட் படங்களுமே பலமுறை மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டவைதான். ஆனால், இதிலோ எக்கச்சக்க நடிகர்கள். எல்லோரும் சரியாக நடித்தால் மட்டுமே ஒரு ஷாட்டில் படத்தை முடிக்க முடியும்.

அதே போல், நான்-லீனியர் என்பதால், அதே நடிகர்கள் மீண்டும் வேறொரு காட்சியில், வேறொரு உடையில் தோன்ற வேண்டும். மிகவும் கடினமான ஒன்றைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள் என்றாலும், சில இடங்களில் தரையை மட்டும் தொடர்ந்து காட்டுவதும், அடுத்த காட்சிக்கு எடுத்துக்கொள்ளும் அவகாசமும் கண்கூடாகத் தெரிகிறது. அதேபோல், சில நடிகர்களின் நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாமோ என்றும் தோன்ற வைத்துவிடுகிறது. இதனாலேயே சில இடங்களில், ஒரு பிரமாண்ட அரங்கில், திரையின்றி நடத்தப்படும் நாடகமாகப் படம் விரிகிறதோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது 'இரவின் நிழல்'.

Iravin Nizhal | இரவின் நிழல்
Iravin Nizhal | இரவின் நிழல்

பார்த்திபன் படங்களில் எப்போதும் எட்டிப் பார்க்கும் இன்னொரு பிரச்னையான, 'எல்லா பாத்திரங்களும் பார்த்திபன் மையம்' என்னும் பிரச்னை இதிலும் நீள்கிறது. நந்து மட்டுமல்ல, எல்லோருமே பார்த்திபனைப் போலவே பேசுகிறார்கள். வசனங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் அது அந்தந்த கதாபாத்திரங்களின் தன்மையிலிருந்து விலகிவிடுகிறது. எல்லாவற்றையும் வித்தியாசமாய், பார்வையாளனுக்குப் புதியதொரு அனுபவத்தை மட்டுமே தர வேண்டும் என்று இவ்வளவு மெனக்கெட்டு கங்கணம் கட்டி அசத்தும் பார்த்திபன், ஏன் இன்னும் பெண்கள் என்றாலே தீயவர்கள் என்னும் மனநிலையுடன் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது மட்டும் புரியவில்லை. தீய பெண்கள் வெர்சஸ் நல்ல பெண்கள் அவர்கள் ஒரு மனிதரின் வாழ்வில் எடுக்க வைக்கும் முடிவுகள் என்னும் புள்ளியிலிருந்து எப்போது விலகுவீர்கள் பார்த்திபன்?!

குறைகள் மறந்து, இன்னும் இன்னும் ஏதாவது வித்தியாசமாய் செய்ய வேண்டும் என்கிற பார்த்திபனின் மெனக்கெடலுக்காக உங்கள் இரவினை, இந்த `இரவின் நிழலுக்கு' ஒதுக்கலாம்.