Published:Updated:

Cold Case: ஐடியா ஓகே... இதுல எதுக்குங்க பேய்? பிரித்விராஜ் துப்பறியும் ஹாரர் த்ரில்லர் ஈர்க்கிறதா?!

பிரித்விராஜ், 'அருவி' அதிதி பாலன், லக்ஷ்மி ப்ரியா நடிப்பில் உருவான 'கோல்ட் கேஸ்' அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகியிருக்கிறது. ஹாரர், துப்பறியும் சஸ்பென்ஸ் த்ரில்லர் என இரண்டும் கலந்த ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படம் எப்படி?

கவரில் சுற்றப்பட்டுக் கிடைக்கும் ஒரு மண்டை ஓட்டை வைத்து அதன் பின்னணியைத் துப்புத் துலக்குகிறது பிரித்விராஜ் தலைமையிலான காக்கிப் படை. புதிதாக ஒரு வீட்டுக்குள் தன் மகளுடன் குடியேறும் புலனாய்வு நிருபரான அதிதி பாலன், அந்த வீட்டில் ஓர் அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்கிறார். பிரித்விராஜும் அதிதி பாலனும் தங்களுக்குக் கிடைக்கும் க்ளூக்களை வைத்து தனித்தனி பாதைகளில் ஆராய, இந்த இரண்டு பாதைகளும் எப்படி ஒரே புள்ளியில் இணைகின்றன என்பதை ஹாரர் கலந்த துப்பறியும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
அந்த மண்டை ஓடு யாருடையது, அதிதி பாலனின் வீட்டிலிருக்கும் அமானுஷ்யம் என்ன சொல்ல விரும்புகிறது? சுவாரஸ்யம் குறையாமல் விவரிக்க முயற்சி செய்திருக்கிறது 'கோல்ட் கேஸ்'.
Cold Case | கோல்ட் கேஸ்
Cold Case | கோல்ட் கேஸ்

பிரித்விராஜின் சமீபத்திய படங்களான 'அய்யப்பனும் கோஷியும்', 'டிரைவிங் லைசன்ஸ்' போன்றவை அவரின் இமேஜைக் கூட்டும் மாஸ் படங்களாக, ஜனரஞ்சகமான ஒன்றாகவே இருந்தன. தற்போது அதைவிடுத்து, கதையின் நாயகனாக மட்டுமே வந்திருக்கிறார். அசிஸ்டெண்ட் கமிஷனர் சத்யஜித்தாக போலீஸ் டெம்ப்ளேட்டில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். அதே சமயம், அவரின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் பாத்திரமாக இது இல்லை. கதைக்குத் தேவையானதை மட்டுமே செய்திருக்கிறார். 'அருவி' அதிதி பாலனுக்குக்குச் சற்றே முக்கியமான பாத்திரம். கிட்டத்தட்ட பிரித்விராஜுக்கு நிகரான ஸ்க்ரீன்டைம் அவரின் மேதா கதாபாத்திரத்துக்கும் கொடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

அதேபோல், விவாகரத்து என்ற ஒன்றை ஏதோ வாழ்க்கையை இழக்கவைக்கும் ஒன்றாகக் காட்டாமல், சரிவரவில்லை என்றால் பிரிவது நலம்தானே என்கிற பாணியில் சித்திரித்திருப்பது முதிர்ச்சி! வழக்கறிஞராக வரும் 'கர்ணன்' லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி கதைக்கு வெளியே இருக்கும் பாத்திரம்போல முதலில் தெரிந்தாலும் பின்னர் ஜோதியில் ஐக்கியமாகி இருக்கிறார். ஆங்காங்கே பெண் போலீஸாருக்கான முக்கியத்துவத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், விசாரணையில் அனைத்து க்ளுக்களையும் பிரித்விராஜ் மட்டுமே கண்டுபிடிக்கிறார். மற்ற அதிகாரிகள் அவர் சொல்வதை மட்டுமே செய்திருக்கிறார்கள். நியாயமே இல்லிங்கண்ணா!

Cold Case | கோல்ட் கேஸ்
Cold Case | கோல்ட் கேஸ்

படத்தின் பெரும்பலம், அந்த மண்டை ஓட்டை வைத்து காவல்துறையும் ஃபாரன்ஸிக்கும் நூல் பிடித்துத் துப்பறியும் அந்த முறை. அடையாளமே தெரியாத ஒருவரின் மண்டை ஓட்டை வைத்துக்கொண்டு அவரையும், அவரைக் கொலை செய்தவரையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பது ஆகாத காரியமாகத் தோன்றினாலும், அதிலிருந்து க்ளுக்களை கண்டறியும் யுக்தி அப்ளாஸ் ரகம் சேட்டனஸ்! அதற்கான ஃபாரன்ஸிக் அணுகுமுறைகள், அறிவியல் அதற்குக் கைகொடுக்கும் முறை என நிறைய இறங்கி வேலை செய்திருக்கிறார்கள். அதேபோல், கொரோனா பரவல், லாக்டௌன் போன்றவற்றை வைத்தே கேஸை கிராக் செய்திருக்கும் யுக்தி 'வாவ்' போட வைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃப்ரிட்ஜுக்குள் பேய் என்பது புதிய கான்செப்ட்டாகத் தெரிந்தாலும் 'காருக்கு எதுக்கு அச்சாணி?' என்பதுபோல 'இந்தக் கதையில் எதுக்குங்க பேய்?' என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை.

படத்தை இரண்டு ஜானர்களில் போட்டுக் கலக்கி, குழப்பியெடுக்காமல் ஒரு முழு நீள டிடெக்டிவ் த்ரில்லராக மட்டுமே கொண்டு சென்றிருந்தால் ஒரு 'த்ரிஷ்யம்' பாணி படமாக இது அமைந்திருக்கலாம். ஏனென்றால், நடந்த கொலையை மறைக்க, கொலையாளி செய்யும் பல தகிடுதத்தங்கள் நமக்கு அந்த உணர்வைத்தான் தருகின்றன. வசனங்களிலும் 'த்ரிஷ்யம்' ரெஃபரன்ஸ் வைத்திருக்கிறார்கள்.

Cold Case | கோல்ட் கேஸ்
Cold Case | கோல்ட் கேஸ்

எண்ணற்ற கதாபாத்திரங்கள் வந்துபோகின்றன. பிரித்விராஜின் மாமா, அதிதி பாலனின் அம்மா, பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து தற்கொலை செய்துகொண்ட அதிதியின் சகோதரி, வீட்டு வேலையாள், அதிதியின் 'சாமியார் பக்தி' மாமியார், கொலையானவரின் குடும்ப உறுப்பினர்கள், பேய் ஓட்டும் பெண், டிவி சேனலில் வேலை செய்பவர்கள் என அந்தப் பட்டியல் நீள்கிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் விசாரணையை, கதையைத் திசை திருப்பும் ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் த்ரில்லர் ரக மலையாளப் படங்களில் முதல் பாதியில் தேவையற்ற காட்சிகள், கதாபாத்திரங்கள் என நாம் நினைக்கும் விஷயங்களும் இரண்டாம் பாதியில் மிகப்பெரிய க்ளுக்களாக மாறிவிடும். அந்த யுக்தி இங்கே ஒரு சில கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகளில் மட்டுமே பிரதிபலித்திருக்கிறது. மீதி பாத்திரங்களை வைத்து கடைசிவரை சஸ்பென்ஸை மட்டுமே கூட்டியிருக்கிறார்கள்.

Ray: சத்யஜித் ரேவின் 4 சிறுகதைகள்... நெட்ஃப்ளிக்ஸின் `ரே' ஆந்தாலஜி சிரீஸ் எப்படி இருக்கிறது?

அதிதியின் வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யங்களைத் திகில் படர காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆங்காங்கே 'ஜம்ப் ஸ்கேர்' காட்சிகள் பிரகாஷ் அலெக்ஸின் பின்னணி இசை பலத்துடன் நம்மைப் பயமுறுத்துகின்றன. அதிதியின் குழந்தை வைத்திருக்கும் பொம்மை, சுவர் கடிகாரம், லைட் பல்ப், ஆழமான கிணறு, சுவரிலிருக்கும் போட்டோக்கள் எனத் திகில் ஐயிட்டங்களை அடுக்கியிருக்கிறார்கள். கிரீஷ் கங்காதரன் மற்றும் ஜோமோன் டி.ஜானின் ஒளிப்பதிவு த்ரில் காட்சிகளுக்கு வெயிட்டேஜ் ஏற்றியிருக்கிறது.

பேயுடன் சாமியார் பேச முற்படும் காட்சிகள் திகிலாகப் படமாக்கப்பட்டிருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல், சிரிப்பையே வரவைக்கின்றன. அதிலும் தெளிவான பெண்ணான அதிதி, வீடு முழுவதும் தண்ணீர் தேங்கியதற்கான காரணத்தைக்கூட யோசிக்காமல் மீண்டும் தூங்கச் சொல்வது என்ன லாஜிக்கோ!

Cold Case | கோல்ட் கேஸ்
Cold Case | கோல்ட் கேஸ்

அதிதியின் வீட்டு ஃப்ரிட்ஜுக்குள் பேய், பிரித்விராஜ் துப்பறியும் க்ளூக்களே இல்லாத கேஸ் என இரண்டுக்கும் பொருந்தும்படி 'கோல்ட் கேஸ்' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இரண்டு ஜானர்களை இணைக்கும் முயற்சியும் வரவேற்கத்தக்கது என்றாலும் அதிலிருக்கும் சவால் என்னவென்றால், இரண்டையும் சமமாக பேலன்ஸ் செய்வது. இங்கும் அதுதான் பிரச்னையாகி இருக்கிறது. பிரித்விராஜின் துப்பறியும் டிராக்கில் நிறைய விஷயங்கள் நடக்க, கொலைக்கான முடிச்சுகள் அவிழ, இங்கே அதிதியின் டிராக்கில் ஃப்ரிட்ஜ் பேய் கடைசிவரை பயமுறுத்திக்கொண்டு மட்டுமே இருக்கிறது. இடையில் பல காட்சிகள் கால்ஷீட் இல்லாததுபோல காணாமலும் போயிருக்கிறது.

இரட்டைக் குதிரை சவாரியில் ஒரு குதிரை மட்டும் ஓவர்டைம் பார்க்க மற்றொன்று தடுமாறியிருக்கிறது. மற்றபடி, சுவாரஸ்ய சினிமா என்ற வகையில் 'கோல்ட் கேஸ்' ஒரு சில்லிட வைக்கும் அனுபவம்தான்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு