Published:Updated:

RRR விமர்சனம்: ராஜமௌலி - ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியின் பெருங்கனவு பலித்திருக்கிறதா?

RRR விமர்சனம்

RRR விமர்சனம்: ஓடிடி போதும் என உட்கார்ந்திருக்கும் சினிமா ரசிகனைத் திரையரங்குக்கு வரச் சொல்லி அழைக்கிறது இந்த 'இரத்தம் ரணம் ரௌத்திரம்'.

RRR விமர்சனம்: ராஜமௌலி - ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியின் பெருங்கனவு பலித்திருக்கிறதா?

RRR விமர்சனம்: ஓடிடி போதும் என உட்கார்ந்திருக்கும் சினிமா ரசிகனைத் திரையரங்குக்கு வரச் சொல்லி அழைக்கிறது இந்த 'இரத்தம் ரணம் ரௌத்திரம்'.

Published:Updated:
RRR விமர்சனம்
1920-களில் வெள்ளையர்களை எதிர்த்து நின்ற அல்லூரி சீதாராம ராஜு, கொமாரம் பீம் இருவரின் பெயர்களையும், பின்னணியையும் மட்டும் எடுத்துக்கொண்டு, தேவையான அளவு கற்பனை சேர்த்து பிரமாண்டமான பொழுதுபோக்குப் படமாக மாற்றியிருக்கிறார் ராஜமௌலி.

பழங்குடியின சிறுமி ஒருத்தியை வெள்ளைக்கார துரையும் அவர் மனைவியும் எடுத்துக்கொண்டு போய்விட, அந்த இனத்தின் காப்பானான கொமரம் பீம், அச்சிறுமியை மீட்க டெல்லி வருகிறார். இன்னொரு பக்கம் நீதி, நேர்மை என பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அடிபணிந்த காவல் அதிகாரியாக அல்லூரி சீதாராம ராஜு மண்ணின் மக்களையே எதிர்த்து நிற்கிறார். இந்த ராமனும், பீமனும் விதிவசத்தால் நண்பர்களாக மாற, இடையில் துரோகம் சென்டிமென்ட், நிறைய ஆக்ஷன், கொஞ்சம் காதல் என எல்லாமே எட்டிப் பார்க்க, மூன்று மணி நேரம் பிரமாண்ட விருந்தாக விரிகிறது இந்த 'இரத்தம் ரணம் ரௌத்திரம்'.

RRR விமர்சனம்
RRR விமர்சனம்

இரு வேறு முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்வில் இருக்கும் சில ஒற்றுமைகளை ஒன்றிணைத்து, அவர்கள் போராளிகளாக ஆவதற்கு முன் நண்பர்களாக வாழ்ந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற தன் கனவுக்குப் பிரமாண்டமாக உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இதற்கு அவருக்கு உறுதுணையாகத் தெலுங்கு சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகர்களான ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் தோள் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு ஹீரோக்களில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற கேள்விக்கே இடம் கொடுக்காதவாறு இருவரின் கதாபாத்திரங்களும் ரேஸில் மாறி மாறி முன்னுக்கு வந்து, இறுதியில் ஒன்றாகவே இறுதிக் கோட்டை வெற்றிகரமாகத் தொட்டிருக்கின்றன. இருந்தபோதும் ராம் சரணைவிட, ஒரு சில இடங்களில் மட்டும் ஒரு நடிகராக ஜூனியர் என்.டி.ஆர் மிளிர்கிறார். இருவரும் இணைந்து 'நாட்டுக் கூத்து' பாடலுக்குப் போட்டிப் போட்டு ஆடுவது தியேட்டருக்கான கொண்டாட்டம்.

சிறப்புத் தோற்றத்தில் அஜய் தேவ்கன் பிளாஷ்பேக் காட்சிகளில் பலம் சேர்க்கிறார். அவருக்கென அமைக்கப்பட்டிருக்கும் அந்த துப்பாக்கிச் சண்டை லாஜிக் பார்க்கக்கூடாத மேஜிக். அதன் இறுதியில் வரும் சென்டிமென்ட் தருணமும் படத்துக்குச் சரியான விதத்தில் பலம் சேர்த்திருக்கிறது. ஆலியா பட், சமுத்திரக்கனி, ஷ்ரேயா ஆகியோருக்குப் பெரிய வேலை எதுவும் இல்லை. வில்லன் ஸ்காட் துரையாக ரே ஸ்டீவன்சன் மிரட்டுகிறார். என்ன, அவர் ஒரே வசனத்தை மட்டுமே பன்சாக பேசிக்கொண்டிருப்பது சற்றே அயர்ச்சியைத் தருகிறது. அவரின் மனைவியாக அலிசன் டூடி கொடூர வில்லியாகப் பயமுறுத்துகிறார். ஜெனிஃபராக வரும் ஒலிவியா மோரிஸுக்கு 'வாம்மா துரையம்மா' ரோல். அவருமே கதையின் ஓட்டத்துக்கு உதவியிருக்கிறார்.

RRR விமர்சனம்
RRR விமர்சனம்
படத்தின் மிகப்பெரிய பலம் அதன் ஆக்ஷன் காட்சிகளும் அது உருவாக்கப்பட்ட விதமும். பேப்பரில் ஸ்க்ரிப்டாக, ஸ்டோரிபோர்டாகக் கனவு கண்ட அனைத்துக்கும் எந்தவித சமரசமுமின்றி பக்காவாக உயிர் கொடுத்திருக்கிறார்கள் ஸ்டன்ட் இயக்குநர்களான சாலமன் மற்றும் நிக் பவல். கே.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவும், விசுவல் எஃபக்ட்ஸை முன்னின்று செயல்படுத்திய ஶ்ரீனிவாஸ் மோகனும் இதில் சாதித்திருப்பது இந்திய சினிமாவின் அடுத்த கட்ட பாய்ச்சல்.

அந்தச் சிறுவனைக் காப்பாற்றும் கொடி சீக்வென்ஸ், இடைவேளைக்கு முன் வரும் அந்தப் பிரமாண்ட சண்டைக் காட்சி, ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர் மோதல், பின்னர் கிளைமேக்ஸில் வரும் சண்டை என எல்லாமுமே நம்மை இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்கின்றன. காட்சிகளாக விரியும் அவற்றுக்கு உயிரோட்டமாக ஒலிக்கிறது மரகதமணியின் (எம்.எம்.கீரவாணி) பின்னணி இசை. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் விசுவலாக அவை செய்ய வேண்டியதைக் கச்சிதமாகச் செய்திருக்கின்றன.

'யுத்தத்தைத் தேடி ஆயுதம் தன்னாலே வரும்', 'நரிகளை வேட்டையாடி என்ன செய்யப் போறோம், கொம்போட அலையற பேயைக் கொல்லலாம் வா' போன்ற வசனங்கள் மாஸ் மீட்டரை எகிற வைக்கின்றன.

பொதுவாகவே ராஜமௌலியின் படங்களில் பிரமாண்டத்தைத் தாண்டி அதன் உயிர்நாடியாக இருப்பது அதன் உணர்வுபூர்வமான காட்சிகள். கதாபாத்திரங்களின் சென்டிமென்ட், அவர்களின் உந்துசக்தியாக இருக்கும் பின்கதை போன்றவை இதில் ஏனோ நம்மைச் சற்றே சோதிக்கின்றன. மூன்று மணி நேரப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் உச்சபட்ச என்டர்டெயின்மெண்டாக இருக்க, சென்டிமென்ட் காட்சிகள் அந்த உச்சத்தைத் தொடாமல் சம்பிரதாயமான பழக்கப்பட்ட காட்சிகளாக மட்டுமே கடந்துபோகின்றன. பழங்குடி சிறுமியின் போர்ஷன்கள் தவிர மீதி அனைத்துமே பலமுறை அலசி காயப்போடப்பட்ட காலாவதியாகிப் போன சரக்குகள். சென்டிமென்ட் காட்சி என்றதும் ஏதோ ஒரு பாத்திரம் சத்தியம் வாங்குவதாகவும், வாக்குக் கொடுப்பதுமாகவே விரிவது 'சத்திய' சோதனை. இதனால் அத்தனை பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு அவர்களை வீணடித்துவிட்ட உணர்வே வந்து போகிறது.

RRR விமர்சனம்
RRR விமர்சனம்

மூன்று மணி நேரப் படம் என்பது இங்கு பிரச்னையே இல்லை. அதை பக்காவாக ஆக்ஷன், சென்டிமென்ட் என பாகங்களாகப் பிரிப்பதும் ஒரு திறமையான திரைக்கதை யுக்திதான். ஆனால், அந்த இரண்டில் ஒன்று சொதப்பினாலும் மூன்று மணி நேரம் எப்போது முடியும் என்ற உணர்வு வந்துவிடும். 'RRR' அப்படியானதொரு சிக்கலில்தான் சிக்கித் தவிக்கிறது. ஆக்ஷன், பிரமாண்டம், நடிப்பு, மேக்கிங் என எல்லா பாக்ஸிலும் டிக் அடித்துவிட்டு, சென்டிமென்ட் கட்டத்துக்கு வரும்போது மட்டும் அதை ஜஸ்ட் லைக் தட் கடந்துபோயிருப்பது படத்தின் ஆன்மாவைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

இயக்குநர் ராஜமௌலி 'மகதீரா', 'மரியாத ராமண்ணா', 'ஈகா', 'விக்ரமர்கூடு' எனத் தெலுங்குக்காக மட்டுமே யோசித்த கதைகள் பின்னர் பல மொழிகளில் ரீமேக்காகி அங்கும் கல்லா கட்டின. அதற்கு முக்கியக் காரணம் அதன் எமோஷனல் காட்சிகள். ஆனால் பான் இந்தியாவுக்காகவே யோசித்து எடுக்கப்பட்ட இந்தப் படம் ஏனோ எல்லா மாநிலத்துக்கும் க்ளிக்காகுமா என்ற கேள்வியைக் கேட்க வைக்கிறது.

RRR விமர்சனம்
RRR விமர்சனம்

மற்றபடி, இரண்டு வருட எதிர்பார்ப்புக்குத் திரையரங்கில் பிரமாண்ட விருந்து படைத்திருக்கிறது படக்குழு. பெரிய பட்ஜெட் கமர்ஷியல் படங்களை அதற்குரிய ஜனரஞ்சகத் தன்மையுடன் ஒரு சில இயக்குநர்களால் மட்டுமே அணுக முடியும். அதில்தான் மாஸ்டர் என்பதை மீண்டுமொருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறார் ராஜமௌலி.

ஓடிடி போதும் என உட்கார்ந்திருக்கும் சினிமா ரசிகனைத் திரையரங்குக்கு வரச் சொல்லி அழைக்கிறது இந்த 'இரத்தம் ரணம் ரௌத்திரம்'.