Published:Updated:

Gargi விமர்சனம்: நீதி வேண்டி போராடும் மகள், நீதியின் பக்கமே நிற்கும் கதை - `கார்கி' படம் எப்படி?

Gargi | கார்கி

கோர்ட்ரூம் த்ரில்லராகத் தொடங்கி, விசாரணைப் படமாக விரைந்து, பெண்ணியம் பேசி, பெண்களின்பால் அரவணைப்பாக நிற்கும் காவியத்தலைவி ஆகிறாள் இந்த 'கார்கி'.

Gargi விமர்சனம்: நீதி வேண்டி போராடும் மகள், நீதியின் பக்கமே நிற்கும் கதை - `கார்கி' படம் எப்படி?

கோர்ட்ரூம் த்ரில்லராகத் தொடங்கி, விசாரணைப் படமாக விரைந்து, பெண்ணியம் பேசி, பெண்களின்பால் அரவணைப்பாக நிற்கும் காவியத்தலைவி ஆகிறாள் இந்த 'கார்கி'.

Published:Updated:
Gargi | கார்கி
கைது செய்யப்பட்ட தன் தந்தையை மீட்க மகள் நடத்தும் நீதிப்போராட்டமும் அது வெளிக்கொண்டுவரும் நெஞ்சைச் சுடும் உண்மைகளும்தான் இந்த `கார்கி' (Gargi).

தன் தாய், தந்தை மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார் பள்ளி ஆசிரியையான கார்கி. அவரின் தந்தை பிரம்மானந்தம் செக்யூரிட்டியாகப் பணியாற்றும் அபார்ட்மென்ட்டில் ஒரு ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட, நான்கு வடமாநிலத்தவர்கள் இது தொடர்பாகக் கைது செய்யப்படுகின்றனர். கார்கியின் மொத்தக் குடும்பத்தையே புரட்டிப்போடும் விதமாக, அதே வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக கார்கியின் தந்தை பிரம்மானந்தமும் கைது செய்யப்படுகிறார். முன் அனுபவமில்லாத வக்கீலான இந்திரன்ஸ் கலியபெருமாள் உதவியுடன் தந்தைக்காக நீதிப் போராட்டம் நடத்துகிறாள் மகள். அந்தப் போராட்டம் வென்றதா, அது வெளிக்கொண்டு வரும் உண்மைகள் என்னென்ன என்பதுதான் 'கார்கி' சொல்லும் கதை.

Gargi | கார்கி
Gargi | கார்கி

கார்கி என்னும் பள்ளி ஆசிரியையாகச் சாய் பல்லவி. தொடர்ந்து கதைக்கும், நடிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்துவரும் இவருக்கு அந்த வரிசையில் மற்றுமொரு சிறப்பான ஸ்க்ரிப்ட். சுற்றியிருப்பவர்கள் கை கழுவிவிட்ட பிறகும் சட்ட ரீதியாக விடாமுயற்சியுடன் போராடும் பாத்திரத்தில் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணின் பிம்பத்தைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறார். தன் தாயிடம், "என்ன இருந்தாலும் நான் உன் பையன் இல்ல, பொண்ணு. அதான் உனக்கு என்மேல நம்பிக்கை இல்லை, அப்படித்தானே?" என்னும் போது வெளிப்படும் அவரின் கோபம் கலந்த விரக்தி முகபாவங்கள் அத்தனை இயல்பு. ஊரே திரண்டு விரட்டும்போதும் சரி, உண்மையை உணரும்போதும் சரி, எதற்கும் பின்வாங்காமல் அவர் எடுக்கும் முடிவுகள் 'கார்கி' கதாபாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதை அற்புதமாக எடுத்துரைக்கிறது.

வக்கீல் இந்திரன்ஸ் கலியபெருமாளாகக் காளி வெங்கட் சிறப்பான தேர்வு. படு சீரியஸான கதையில், காளி வெங்கட் அவரின் இயல்பிலேயே வந்து போவது நகைச்சுவை இல்லாத குறையைத் தீர்த்து வைக்கிறது. சரளமாகப் பேசுவதில் பிரச்னை இருக்கும் அவர், வழக்கிலிருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் வாதாடும்போது கிளாப்ஸை அள்ளுகிறார். குடும்ப நண்பராக ஜெயப்பிரகாஷ், குற்றம் சாட்டப்படும் பிரம்மானந்தமாக ஆர்.எஸ்.சிவாஜி, பாதிக்கப்படும் சிறுமியின் தந்தையாகச் சரவணன், எஸ்.ஐ.பென்னிக்ஸாக கேப்டன் பிரதாப், வழக்கின் நீதிபதியாகத் திருநங்கை டாக்டர். சுதா ஆகியோர் அட்டகாசத் தேர்வுகள். மற்றொரு தயாரிப்பாளரான ஐஸ்வர்ய லட்சுமிக்கு நிருபராகச் சிறிய கேமியோ.

Gargi | கார்கி
Gargi | கார்கி

'ரிச்சி' இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கி இருக்கிறார். மெசேஜுடன் கூடிய ஸ்க்ரிப்ட், அதற்கேற்றவாறு எங்கேயும் நகரவிடாத திரைக்கதை, இறுதியில் பார்வையாளர்களைக் கலங்கடிக்கும் ட்விஸ்ட்டுடன் க்ளைமாக்ஸ் என எல்லா பெட்டிகளிலும் டிக் அடிக்கிறது படம். ஹரிஹரன் ராஜுவுடன் இணைந்து அவர் எழுதியிருக்கும் வசனங்களில் கதாபாத்திரங்களின் தன்மை ஆழமாகப் பிரதிபலிக்கப்படுகிறது. குறிப்பாக, திருநங்கை நீதிபதியை பப்ளிக் பிராசிக்யூட்டராக வரும் கவிதாலயா கிருஷ்ணன் இகழ்ந்து பேசும்போது, "எனக்கு ஆணின் திமிரும் தெரியும். பெண்ணின் வலியும் தெரியும். (I know the arrogance of a man and the pain of a woman) என்னைவிட இந்த வழக்குக்குப் பொருத்தமான தேர்வு யாரும் இருக்க முடியாது" என்று அவர் கூறும் வசனம் ஆயிரம் வாலா சரவெடி.

கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்தின் ஆகச்சிறந்த பலங்களில் ஒன்று. பின்னணியில் இரையும் வயலின், காட்சிகளுக்கான அதிர்வுகளைக் கச்சிதமாகக் கூட்டியிருக்கிறது. பல இடங்களில் வசனங்கள் இல்லாமல் வெறும் பின்னணி இசையை மட்டும் வைத்துக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன். குறிப்பாகச் சரவணன், சாய் பல்லவியின் வீட்டுக்குக் கத்தியோடு வரும் காட்சியும், அங்கு அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும் வசனங்கள் ஏதுமில்லாமலே நம்மைக் கட்டிப் போடுகின்றன. அதில் நடித்த அனைத்து நடிகர்களுமே சிறப்பானதொரு நடிப்பைத் தங்களின் பாத்திரம் அறிந்து வழங்கியிருந்தனர்.

Gargi | கார்கி
Gargi | கார்கி

படத்திலிருக்கும் சிக்கலான விஷயம் அது எங்குமே ஒரு நம்பிக்கையை நமக்கு விதைக்கவில்லை என்பது மட்டுமே. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் நம்மை அதிர்ச்சியில் கட்டிப்போட்டாலும், இறுதியில் காட்டப்படும் நிகழ்வுகள் சற்றே ஆறுதல் அளிப்பவை. ஆண்கள் மீதான விமர்சனங்கள், பெண்களின் சுதந்திரமின்மை குறித்த கேள்விகள் போன்றவற்றை அது கச்சிதமாக எழுப்பினாலும், ஒருவித விரக்தி மனநிலையையும், நம்பிக்கையற்ற வெறுமையுமே படம் நமக்குக் கொடுத்துச் செல்கிறது. ஆனால், அதுதான் படம் நமக்குக் கொடுக்கும் மெசேஜ் என்னும் கோணத்தில் பார்க்கும்போது, விழுங்குவதற்குக் கடினமான கசப்பான மருந்தாகவே படம் முடிவடைகிறது. நோய்க்கு மருந்துதானே தீர்வு?!

அதேபோல, குற்றவாளிகள் என்றாலே வடமாநிலத்தவர்களைக் கைகாட்டிவிடுவதும், உழைக்கும் வர்க்கத்தின் மீதே எல்லாப் பழிகளையும் தூக்கிப்போடுவதும் சற்றே களையப்படவேண்டிய மனப்பாங்குதான்.

கோர்ட்ரூம் த்ரில்லராகத் தொடங்கி, விசாரணைப் படமாக விரைந்து, பெண்ணியம் பேசி, பெண்களின்பால் அரவணைப்பாக நிற்கும் காவியத்தலைவி ஆகிறாள் இந்த 'கார்கி'.