Published:Updated:

Appan Review: டார்க் காமெடி, கலகலப்பு, சிறந்த நடிப்பு - ஆனால் மேக்கிங்?

அப்பன் திரை விமர்சனம்

ஒரு அப்பா எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்ற கருத்தை முன்வைத்து கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, பிடிவாதம் என எல்லாவற்றையும் கலந்து ரசிக்கவைக்கிறது சோனி லைவ் ஓடிடியில் வெளியாகியுள்ள ’அப்பன்’.

Appan Review: டார்க் காமெடி, கலகலப்பு, சிறந்த நடிப்பு - ஆனால் மேக்கிங்?

ஒரு அப்பா எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்ற கருத்தை முன்வைத்து கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, பிடிவாதம் என எல்லாவற்றையும் கலந்து ரசிக்கவைக்கிறது சோனி லைவ் ஓடிடியில் வெளியாகியுள்ள ’அப்பன்’.

Published:Updated:
அப்பன் திரை விமர்சனம்
படுத்தப்படுக்கையாகக் கிடக்கும் அப்பா எப்போது சாவார் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் குடும்பம், ’சாகலைன்னா என்ன நாமளே முடிச்சுவிட்டுடலாம்’ என்று கொல்லத்துடிக்கும் ஊர், அவரை டார்ச்சர் செய்து கொடூரமாகக் கொலை செய்யவேண்டும் என்று சிறையிலிருந்து பெயிலில் வரும் ரவுடி எனத் திரும்பிய திசையெல்லாம் கண்ணிவெடிபோல் மரணம் சூழ்ந்திருக்க, அந்த அப்பாவோ இவர்கள் அனைவருக்கும் எப்படி டஃப் ஃபைட் கொடுக்கிறார் என்பதுதான், சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ’அப்பன்’ படத்தின் ஒன்லைன்.

மருமகள், மருமகன், பேரப்பிள்ளைகள் எடுத்துவிட்ட வயதிலும்கூட சாராயம் காய்ச்சி குடித்துக்கொண்டே இருப்பது, பார்க்கிற பெண்களை எல்லாம் பாலியல் ரீதியாகவே அணுகுவது, கஞ்சா போதையில் திளைத்திருப்பது எனச் சுகபோக வாழ்க்கை வாழும் 'அப்பன்' இட்டியாக நடிகர் அலென்சியர் லே லோபஸ்.

அலென்சியர் லே லோபஸ்
அலென்சியர் லே லோபஸ்

இடுப்புக்குக் கீழே கால்கள் செயலிழந்து படுத்தப் படுக்கையாகிவிடுகிறார். படுக்கையிலிருந்து எழவேண்டும் என்றால்கூட தன் முன்னால் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை பிடித்துத்தான் எழுந்திருக்கமுடியும் என்ற சூழலில்கூட சாராயம், கஞ்சா, பெண்கள் என அனைவருக்கும் தொல்லை கொடுக்கிறார்.

அவமானத்தால் கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள், மருமகள், மருமகன் எனக் குடும்பமே அவரது சாவுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது. இதுகூட பரவாயில்லை, ’செத்துப்போனதும் அவனோட மூக்குல நான்தான் முதல்ல பஞ்சு வைப்பேன்’ என்கிற அந்த ஊர் ஆசிரியர், அவன் செத்தாதான் எனக்குக் கல்யாணம் நடக்கும் என்று கொலைவெறியோடு திரிந்துகொண்டிருக்கும் கரண்டு பில் கணக்கீட்டாளர் எனத் தெருவில் போகிறவர், வருகிறவர் எல்லாம் அந்த ஒருவரின் சாவுக்காகக் கொலை திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றனர். இப்படி, ஊரே அவரது மரணத்துக்காகக் காத்துக்கொண்டிருப்பது ஏன், அவரை கொல்லத் துடிப்பது ஏன், அவரே செத்தாரா, அல்லது கொலை செய்தார்களா என்பதுதான் 'அப்பன்' படத்தின் மீதிக்கதை.

'இப்படியொரு அப்பனைப் பார்த்ததுண்டா யுவர் ஹானர்' என்று கேட்கும் அளவுக்கு, அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து இட்டியாக நடித்திருக்கிறார் அலென்சியர் லே லோபஸ். படத்தின் நாயகன், வில்லன் இரண்டுமே இவர்தான். அவ்வளவு சீரியஸாக அந்தக் குடும்பத்தினர் யோசித்துக்கொண்டிருக்க, ’மொதல்ல ஆடலும் பாடலும் நிகழ்ச்சி வைங்கடா… அப்போதான்டா இந்தக் கட்டை வேகும்’ என்கிற ரேஞ்சுக்கு சேட்டை செய்பவராக இருக்கிறார். அவர் ஆசைப்பட்ட பெண்ணை வீட்டிற்குள் வரவழைக்கச் செய்யும் காட்சிகள் நகைச்சுவையாக அணுகப்பட்டிருந்தாலும் இன்னொரு பக்கம் பணம், சொத்து என்றால் மகன், மகள், மருமகன்கள் எப்படி மனம் மாறுகிறார்கள் என்பதை எல்லாம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியதுபோல் நுட்பமாகச் சொல்லிவிடுகிறது திரைக்கதை.

அப்பன் விமர்சனம்
அப்பன் விமர்சனம்

இப்படிப்பட்ட கணவன் இறக்கவேண்டும் என்ற ஆசை, அதேநேரத்தில் பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வது என இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் நடிகை பெளலி வல்சன். படம் முடிந்தபின்னரும் நம் மனதை பெளலியே ஆட்கொள்கிறார்.

அப்பாவைக் கொல்லவும் முடியாமல் உயிரோடு வைத்திருக்கவும் முடியாமல் திணறி, ஒரு நல்ல மகனாக மட்டுமல்ல, தன் குழந்தைக்கு ஒரு நல்ல அப்பாவாகவும் இறுதியில் ஸ்கோர் செய்கிறார் சன்னி வெய்ன். அவரது மனைவியாக நடித்துள்ள அனன்யாவுக்கு வழக்கமானதொரு கதாபாத்திரம் மட்டுமே.

இவ்வளவு ரணகளங்கள் நிறைந்த கதையைக் குதூகலமான திரைக்கதையாக மாற்றி படம் முழுக்கக் கலகலப்பூட்டி ரசிக்கவைத்திருக்கிறார் இயக்குநர் மஜு.
சன்னி வெய்ன்
சன்னி வெய்ன்

குறிப்பாக, தாய் வீட்டிற்குச் செல்லமுடியாத சூழலில் இருக்கும் மருமகள் அனன்யா, தாய் வீட்டிற்கு வரும் மகள் கிரேஸ் ஆண்டனி என இரண்டு கதாபாத்திரத்துக்கும் நடக்கும் உரையாடல் முக்கியமானது. ”உங்கப்பாவை பார்த்துக்குறதாலதான் எங்க அப்பா அம்மாவைக்கூட போயி பார்த்துட்டு வரமுடியல. நீ அப்பாவைக் கவனிச்சுக்கோ. வீட்டு வேலைகளைப் பார்த்துக்கோ. என் அம்மா வீட்டுக்கு இப்பவாது போயிட்டு வந்துடுறேன்” என்று மருமகள் அனன்யா கூறும்போது, ”நான் ரெஸ்ட் எடுக்கத்தான் இங்க வந்திருக்கேன். வேலை செய்ய வரல” என்கிறார் நாத்தனார் கிரேஸ் ஆண்டனி. ”நீ ரெஸ்ட் எடுக்க வர்ற மாதிரி அவ ரெஸ்ட் எடுக்க வேணாமா?” என்று மாமியாரே கேட்பதுபோல் காட்சி வைத்து, வீட்டுவேலைகளையே செய்துகொண்டிருக்கும் மருமகள்களின் வலியைப் பிரதிபலித்து லைக்ஸ் அள்ளுகிறார் இயக்குநர் மஜு.

சொத்துக்காகக் குடும்பமே சேர்ந்து அப்பாவின் ஆசைகளை நிறைவேற்றப் போராடுவது என டார்க் காமெடி கதகளி ஆடுவது படத்தின் பெரிய பலம். அதேநேரம், பழிவாங்க வரும் ரவுடி குறித்த ஓவர் பில்டப்புக்கும், அதன் பிறகு வரும் பெர்ஃபாமன்ஸுக்கும் துளிகூட சம்பந்தமில்லை. அவர் எதற்காகப் பழிவாங்க வருகிறார் என்பதை இன்னும்கூட அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். அதேபோல, ஷீலாவாக நடித்துள்ள ராதிகா ராதாகிருஷ்ணன் இவ்வளவையும் இதற்காகத்தான் சகித்துக்கொண்டிருக்கிறார் என்ற ட்விஸ்ட்டும் நம்பும்படியாக இல்லை. என்னதான் இருந்தாலும் ஒரு அப்பா கடைசிவரை இப்படி இருப்பாரா என்று யோசிக்க வைக்கிறது.

Appan Review
Appan Review

டான் வின்சென்டின் இசை படத்திற்குப் பலம். ஆனால், பப்புவின் ஒளிப்பதிவு இன்னமும் அந்த நிலப்பரப்பையும் அதன் மனிதர்களையும் சிரத்தையுடன் காட்சிப்படுத்தியிருக்கலாம். மேடை நிகழ்ச்சிகளைப் படம்பிடிப்பதுபோல, இரண்டு கேமராக்களைக் கொண்டுவந்து அந்த வீட்டிற்கு எதிரிலும் தோட்டத்திலும் வைத்துவிட்டுப் போய்விடுங்கள் என்று இயக்குநர் சொல்லியிருப்பார்போல. வீடு, தோட்டம் இந்த இரண்டு லோகேஷன்களைத் தவிர, படத்தில் வேறு லோகேஷன்களை பூதக்கண்ணாடி வைத்துத்தான் தேடவேண்டியிருக்கிறது.

ஒரு அப்பா எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்ற கருத்தை முன்வைத்து கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, பிடிவாதம் என எல்லாவற்றையும் கலந்து ரசிக்கவைக்கிறார் இந்த ’அப்பன்’.