Published:Updated:

Babli Bouncer விமர்சனம்: வித்தியாசமான களம், உல்டா ஃபார்முலா - லேடி பவுன்சராக ஜெயித்தாரா தமன்னா?

பப்ளி பவுன்சர் | Babli Bouncer

'பப்ளி பவுன்சர்' ஓ.டி.டி விமர்சனம்: செம்ம லோக்கலாகக் கலக்கியிருக்கிறார் தமன்னா. பவுன்சர்களுக்கே உரிய உடல் திடத்தால், தம்ஸ் அப் சொல்ல வைக்கிறார்.

Babli Bouncer விமர்சனம்: வித்தியாசமான களம், உல்டா ஃபார்முலா - லேடி பவுன்சராக ஜெயித்தாரா தமன்னா?

'பப்ளி பவுன்சர்' ஓ.டி.டி விமர்சனம்: செம்ம லோக்கலாகக் கலக்கியிருக்கிறார் தமன்னா. பவுன்சர்களுக்கே உரிய உடல் திடத்தால், தம்ஸ் அப் சொல்ல வைக்கிறார்.

Published:Updated:
பப்ளி பவுன்சர் | Babli Bouncer
கல்வி, காதல் - இப்படி எதிலுமே வெற்றிபெற முடியாமல் தூக்கி வீசப்படும் பவுன்சர் தமன்னா, வாழ்க்கையில் எப்படியெல்லாம் மல்லுக்கட்டி சர்வதேச அளவில் புகழ் அடைகிறார், ஜெயிக்கிறார் என்பதுதான் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் `பப்ளி பவுன்சர்' படத்தின் ஒன்லைன்.

டெல்லியிலுள்ள அசோலா பவுன்சர் கிராமத்தினை மையப்படுத்தியதுதான் கதைக்களம். பத்தாம் வகுப்பு ஃபெயிலான கிராமத்துப் பெண் பப்ளியாக தமன்னா, டெல்லியில் பணிபுரியும் தனது பள்ளி ஆசிரியையின் மகன் அபிஷேக்கை ஒருதலையாகக் காதலிக்கிறார். காதலுக்காகக் கிராமத்திலிருந்து டெல்லி பப்பில் பவுன்சராக வேலைக்கும் சேர்கிறார். தமன்னாவின் காதல் கைகூடியதா, ஒரு லேடி பவுன்சராக தனது வாழ்க்கையில் வெற்றிபெற்றாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

தமன்னா
தமன்னா

’இறுதிச்சுற்று’ நாயகியை நினைவூட்டும் கதாபாத்திரமாக செம்ம லோக்கலாகக் கலக்கியிருக்கிறார் தமன்னா. பவுன்சர்களுக்கே உரிய உடல் திடத்தால், தம்ஸ் அப் சொல்ல வைக்கிறார். பெண் பவுன்சர்களை ஏற்றுக்கொள்ளாத கிராமத்தில் தனியொரு மனுஷியாக போராடி, பெண் பவுன்சர்களுக்கு பயிற்சி அளித்து பணிவாய்ப்பை உருவாக்கும் தமன்னாவின் கதாபாத்திரத்தில் செம்ம எனர்ஜி. பயிற்சியாளரின் முன்னால் தம்கட்டி தம்பிள்ஸ் எடுப்பது, கிராமத்தில் புல்லட்டில் சீறிப்பாய்வது, பப்பிற்குள் போதையில் இருக்கும் பெண்ணை அலேக்காக தூக்குவது, பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்ணைக் காப்பாற்றுவது என ஒரு பவுன்சராக மாஸ் காட்டுகிறார். ஆனால், அதே மாஸ் திரைக்கதையின் ஓட்டத்திலும் இருக்கிறதா, சுவாரஸ்யம் சேர்க்கிறதா என்பதுதான் ட்விஸ்ட்.

தமன்னாவுக்கு அடுத்தபடியாக பவுன்சர் குக்கியாகக் கவனம் ஈர்க்கிறார் நடிகர் சாஹில் வைத். தான் ஒரு தலையாகக் காதலிப்பவரைச் சந்திக்க, தன்னை ஒரு தலையாகக் காதலிக்கும் சாஹிலை தமன்னா ஏமாற்றும் காட்சிகளில் அவர் மீது நமக்குப் பரிதாபம் தொற்றிக்கொள்கிறது. நாம் இதுவரை பயமுறுத்தும் பவுன்சர்களைத்தான் பார்த்திருப்போம். ஆனால், பவுன்சர்களின் இலகிய முகத்தை சாஹில் வைத் கண்முன் நிறுத்துகிறார். அவர் மூலம் பவுன்சர்கள் மீதான பார்வை மாறும் என்பதில் சந்தேகமில்லை. மற்றபடி, காதலனாக மட்டுமே வந்துபோகிறார் அபிஷேக் பானர்ஜி. மல்யுத்த பயிற்சியாளராக தமன்னாவின் பாசமான தந்தையாக மட்டுமல்ல தன் மகளின் முன்னேற்றத்துக்காக ஊக்கப்படுத்துபவராகவும் செயல்படுகிறார் செளரப் சுக்லா. கண்டிப்பான தாயாக சுப்ரியா சுக்லா.

பப்ளி பவுன்சர் | Babli Bouncer
பப்ளி பவுன்சர் | Babli Bouncer

சண்டைக்காட்சிகள்கூட மிக எதார்த்தமாகத் தேவைப்படும் இடங்களில் மட்டுமே வைக்கப்பட்டிருக்கின்றன. தமன்னா, பப்களில் இரவுநேர பவுன்சர்களாக பணிபுரிய, கறுப்பு நிற கோட்டு சூட்டுடன் கிராமத்திலிருந்து புல்லட்டில் பயணிக்கும் காட்சிகளைக் கெத்தாகப் படம்பிடித்துக் காட்டுகிறது ஹிம்மான் தமிஜாவின் ஒளிப்பதிவு. ஆனால், மின்னல் வேகத்தில் வந்துபோகும் ஒரு சில காட்சிகளை வைத்துத்தான் இது கிராமம், இது டெல்லி என்பதையே யூகிக்கமுடிகிறது. இன்னும் கிராமத்தின் பேரழகினை படம்பிடித்துக் காட்டியிருக்கலாம். தனிஷ்க் மற்றும் கரண் மல்கோத்ராவின் பின்னணி இசையும் பாடல்களும் கூடுதல் பலம்தான்.

வில்லன்களால் நாயகிக்குப் பிரச்னை வரும். நாயகன் உடனடியாக வில்லன்களிடமிருந்து நாயகியைக் காப்பாற்றுவார். இதனால், நாயகன் மீது நாயகிக்குக் காதல் வந்துவிடும் என்கிற வழக்கமான சினிமா ஹீரோயி(னி)ஸ ஃபார்முலாவை, இயக்குநர் மதுர் பண்டார்கர் இதில் பயன்படுத்தியிருந்தாலும் திரைக்கதையின் போக்கு வேறு. அதேபோல், ஒரு தலையாகக் காதலிக்கும் பெண்ணைப் பார்க்க வழக்கமாக கதாநாயகர்கள்தான் வெளியூர், வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று சாகசங்கள் புரிவார்களா, காதலனுக்காகக் காதலி செல்லமாட்டாளா என்றெல்லாம் உல்டா அடித்திருப்பது 'ஓகே' சொல்லவைக்கிறது.

கல்வியறிவு இல்லாத தமன்னா, ஒரு லேடி பவுன்சராக எப்படி முன்னேறிக் காட்டுகிறார் என்பதைக் காதல், காமெடி, புறக்கணிப்பு, போராட்டம் என மிக்ஸிங் செய்து ஜனரஞ்சகமான படைப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இதெல்லாம் ஓகேதான். ஆனால், சிக்ஸர் அடித்திருக்கவேண்டிய படத்தை யூகிக்கும்படியான திரைக்கதையால் சிங்கிள் தட்ட வைத்துவிட்டார்.

பப்ளி பவுன்சர் | Babli Bouncer
பப்ளி பவுன்சர் | Babli Bouncer

பெண் பார்க்க வந்தவர்களை விரட்டுவதற்காக தமன்னா செய்யும் 'உவ்வே' செயல்கள் பப்ளி தமன்னாவின் கதாபாத்திரத்தின் மீது ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. மேலும், க்ளைமாக்ஸ் காட்சிகளில் எல்லாமே சுபமாக முடிக்கவேண்டும் என்பதற்காக திடீரென்று ஸ்போக்கன் இங்கிலீஷ் க்ளாஸுக்குச் சென்று ஆங்கிலம் பேசுவது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிடுவது என நிறைய சினிமாத்தனங்கள் எட்டிப் பார்க்கின்றன.

வித்தியாசமான, அதிகம் பேசப்படாத களத்தின் கதை என்பதற்காகவே கொண்டாடப்படவேண்டிய இந்த `பப்ளி பவுன்சர்' இப்படிப் பல காரணங்களால் பவுன்சராகி நம்மையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.