Published:Updated:

The Ghost Review: கொஞ்சம் பீஸ்ட், விஸ்வாசம், லூசிஃபர் கலந்தால் அண்டர்வேர்ல்டை அடக்கும் கோஸ்ட் ரெடி!

The Ghost

நமக்கே இடைவேளையின் போது ஃபிரெஞ்ச் ஃப்ரைஸுக்குப் பதிலாக நாலு தோட்டாக்களும், தக்காளி சாஸுக்குப் பதிலாக ரத்தமும் கொடுக்கும் அளவுக்குப் படத்தில் அவ்வளவு வன்முறை.

The Ghost Review: கொஞ்சம் பீஸ்ட், விஸ்வாசம், லூசிஃபர் கலந்தால் அண்டர்வேர்ல்டை அடக்கும் கோஸ்ட் ரெடி!

நமக்கே இடைவேளையின் போது ஃபிரெஞ்ச் ஃப்ரைஸுக்குப் பதிலாக நாலு தோட்டாக்களும், தக்காளி சாஸுக்குப் பதிலாக ரத்தமும் கொடுக்கும் அளவுக்குப் படத்தில் அவ்வளவு வன்முறை.

Published:Updated:
The Ghost
சர்வதேச காவல்துறை அதிகாரியான நாகர்ஜுனா, தன் குடும்பத்தில் நடக்கவிருக்கும் ஒரு கொலையைத் தடுத்து நிறுத்தும் வைபவமே தெலுங்கில் வெளியாகியிருக்கும் `தி கோஸ்ட்'.

அரேபியாவின் ஏதோவொரு இடத்தில் ஸ்னைப்பர் வைத்து தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்துகிறார் நாகர்ஜுனா. அவருக்குப் பக்கபலமாக இணைந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சண்டை போடுகிறார் அவரின் துணைவியான சோனல் சௌஹான். இப்படிச் சுட்டுக்கிட்டே இருந்தா எப்படி என யோசிப்பதற்குள் படம் துபாய்க்கு வந்துவிடுகிறது. 'ரட்சகன்' படத்திலிருந்தே நாகர்ஜுனாவின் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனாலும் வீம்பாய் அதைக் கட்டுப்படுத்த முயல்கிறார் சோனல்.

The Ghost
The Ghost

இதற்கிடையே ஒரு சிறுவனைத் தீவிரவாதிகள் கடத்திவிட, மீண்டும் துப்பாக்கிகளுடன் கிளம்பி துபாயை சல்லடையாக்குகிறார் நாயகன். ஆனால், காப்பாற்ற வேண்டிய சிறுவன் தற்செயலாய் இறந்துவிட, மீண்டும் மன அழுத்தத்திற்குச் சென்றுவிடுகிறார் நாகர்ஜுனா. 'ஹைய்யா... விஜய் நடிச்ச பீஸ்ட் வந்துருச்சா?!' சரி, அதென்ன மீண்டும் மன அழுத்தம் என்கிறீர்களா? முதல் மன அழுத்தம் நமக்குத்தான்!

டான் மாஃபியா போன்ற கொலை கொள்ளைக்கார கூட்டங்களால் இனியும் ஒரு உயிர், ஒரு துளி ரத்தம் துபாயில்கூட சிந்தக்கூடாது என முடிவு செய்கிறார் நாகார்ஜுனா. துபாயில் இருக்கும் ஒட்டுமொத்த கும்பலையும் கூண்டோடு தீர்த்துக்கட்டுகிறார். தீர்த்துக்கட்டும் காட்சிகள் பிளாக் & ஒயிட்டில் ஓட, அதோடு எழுத்தும் போடுகிறார்கள். சரி, 'தி கோஸ்ட்' என்பது புதிய வகையான குறும்படம் போல எனத் திரையரங்கை விட்டு எழுந்தால், அங்கே இன்னொரு ட்விஸ்ட். அதன் பின்னர்தான் படமே ஆரம்பிக்கிறதாம். அதாவது மெயின் கதையே இனிதானாம்!

The Ghost
The Ghost

இப்படியாக தன் கோபத்தைக் குறைத்துக்கொள்ளவே முடியாத நாகார்ஜுனா சர்வதேச காவல்துறை அதிகாரி (?) என்னும் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிடுகிறார். ஆனால், அவருக்கு இன்னொரு மிஷன் வருகிறது. அது அவர் வளர்ந்த வீட்டில் தன் சகோதரியைப் போல இருக்கும் ஒரு பெண்ணைக் காப்பாற்றுவது. யப்பா, இது மலையாள 'லூஃசிஃபர்'ல என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், இன்னொரு ட்விஸ்ட். அந்தப் பெண்ணோடு அவர் மகளையும் காப்பாற்ற வேண்டும். மகள் நம் 'விஸ்வாசம்' பட சிறுமியான அனிகா சுரேந்திரன். ஆனால், நாகர்ஜுனா தன்னை அனிகாவிடம் பாடிகார்டு என்று மட்டுமே அறிமுகம் செய்துகொள்கிறார். அட, 'விஸ்வாசம்' படமும் வந்திருச்சுல்ல.

இப்படியாக இது இந்தப் படம், அது அந்தப் படம் என நம்மை நோலன் படம் பார்ப்பது போல விடாமல் யோசிக்க வைத்து யோசிக்க வைத்து திணற திணற துப்பாக்கிகளால் சுட்டுத் தெளிய வைக்கிறது இந்த `தி கோஸ்ட்'. ஒரு கட்டத்தில் இது சீரியஸான ஸ்பூஃப் சினிமாவோ என்றெல்லாம்கூட கேள்வி எழுந்தது.
The Ghost
The Ghost

டானுக்கு எல்லாம் டானாக நீளமான வாள் கொண்டு சண்டையிடும் சாமுராயாக நாகர்ஜுனா. அதே இளமையான ஸ்டைலான நடிகராக இன்னமும் ஆச்சரியப்பட வைக்கிறார். அவருக்கும் சோனல் சௌஹானுக்குமான ரொமாண்டிக் காட்சிகள்கூட சண்டைக் காட்சிகள் அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. துப்பாக்கி, கத்தி ஸ்னைப்பர், ஷார்ட் ரேஞ்ச், 'கைதி' படத்தில் க்ளைமேக்ஸில் வரும் மெஷின் கன் என படத்தில் எல்லாமே வருகின்றது. பன்ச் வசனங்களோ, எமோஷனல் காட்சிகளோ பெரிதாக இல்லை. எல்லாமே டமால் டுமீல்தான். நிச்சயம் அதிக அளவிலான தோட்டாக்களும், ரத்த மாதிரிகளும் பயன்படுத்தப்பட்ட படம் என்பதால் தேசிய விருதில்கூட புதிதாக ஒரு விருதை உருவாக்கி இந்தப் படத்தைக் கௌரவிக்கலாம்.

நமக்கே இடைவேளையின் போது ஃபிரெஞ்ச் ஃப்ரைஸுக்குப் பதிலாக நாலு தோட்டாக்களும், தக்காளி சாஸுக்குப் பதிலாக ரத்தமும் கொடுக்கும் அளவுக்கு படத்தில் அவ்வளவு வன்முறை. தென் கொரியப் படங்களை ஓ.டி.டி தளங்களில் பார்த்துப் பார்த்து நாமும் இப்படியான படங்களை எடுப்பதில் தவறில்லை என்றாலும், நமக்கே உரிய ஹீரோ, ஹீரோயின் என்றால் துப்பாக்கி குண்டுகள் அவர்கள் மேல் படாது என்னும் பழைய லாஜிக்கை மட்டும் இயக்குநர்கள் மீற மறுக்கிறார்கள். ஏதோ ஒரு சண்டை, ரெண்டு சண்டை என்றால் பொறுத்துக்கொள்ளலாம். படம் முழுவதிலுமே வில்லன் கேங்கிலிருந்து ஒருவர்கூட குறிவைத்து சுடவில்லை என்பது என்ன லாஜிக்கோ! அதுவும் நேருக்கு நேர் நின்றுகொண்டு துப்பாக்கி குண்டு மேலே படாமல் தப்பிப்பது எல்லாம்...

The Ghost
The Ghost

சரி, சண்டைக் காட்சிகளை விட்டுவிட்டு, கதையாவது தேறுகிறதா என்று பார்த்தால், அதிலும் ஏமாற்றமே! மொத்த அண்டர்வேர்ல்டும் தனி நபர் ஒருவரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்கள். ஒரு கட்டத்தில் நாமுமே தியேட்டர் உள்ளே வந்தது தப்புதான் என மன்னிப்பு கேட்டுவிடலாமா என்று தோன்றும் அளவுக்கு காதில் மல்லிப்பூவைச் சுற்றுகிறார்கள்.

இப்படியாக கதையில் தோட்டா அளவுக்குக்கூட லாஜிக் இல்லை என்பதுதான் பெரும் சோகம். சண்டைக் காட்சிகளில் மெனக்கெட்ட அளவுக்கு திரைக்கதை மற்றும் இன்னபிற விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருந்தால், இந்த `தி கோஸ்ட்' நிச்சயம் நம்மை பயமுறத்தாமலாவது இருந்திருக்கும்.