Published:Updated:

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்: புதிய கூட்டாளிகள், பழைய காமெடி - கம்பேக் கொடுக்கிறாரா வடிவேலு?!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
News
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

பழைய வடிவேலு அப்படியே வந்திருக்கிறார். ஆனால், ஸ்க்ரிப்ட்டும் அதேபோல இருந்தால் என்ன செய்ய! ப்ரெஷ்ஷாக எதையுமே யோசிக்காமல் பீச் குதிரை சவாரியாகவே பயணிக்கிறது கதை.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்: புதிய கூட்டாளிகள், பழைய காமெடி - கம்பேக் கொடுக்கிறாரா வடிவேலு?!

பழைய வடிவேலு அப்படியே வந்திருக்கிறார். ஆனால், ஸ்க்ரிப்ட்டும் அதேபோல இருந்தால் என்ன செய்ய! ப்ரெஷ்ஷாக எதையுமே யோசிக்காமல் பீச் குதிரை சவாரியாகவே பயணிக்கிறது கதை.

Published:Updated:
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
News
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
இந்த வெள்ளிக்கிழமை அதிகம் எதிர்பார்க்கப்பட்டது மாண்டஸ் புயலின் வருகையும் வைகை புயலின் வருகையும்தான். வைகை புயலின் `நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' நல்லபடியாகக் கரையைக் கடந்ததா?

ஆறு ஆண்டுகளாகக் குழந்தைப் பேறு இல்லாமல் தவிக்கும் வேல.ராமமூர்த்தி தன் குடும்பத்தோடு பைரவர் கோயிலுக்குப் போகும்போது, சாமியார் ஒருவர் அவருக்குத் தெய்வ அருள் பெற்ற நாய்க் குட்டி ஒன்றைத் தருகிறார். நாயோடு சேர்ந்து வேல.ராமமூர்த்தியின் குடும்பமும் செல்வச் செழிப்போடு வளர, கதாநாயகன் வடிவேலுவும் பிறக்கிறார். திடீரென ஒரு நாள் தெய்வ அருள் பெற்ற நாய் திருடப்படுகிறது.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

மறுபுறம், சமகாலத்தில் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து நாய்களைக் கடத்தி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் India's First Dog Kidnapper ஆக இருக்கிறார் நாய் சேகரான வடிவேலு. ஒரு நாள் 'நாய் மாற்றி', தாதாவான ஆனந்த் ராஜின் நாயை வடிவேலு கடத்துகிறார். வடிவேலுவைக் கொலை செய்யக் கிளம்புகிறார் ஆனந்த்ராஜ். ஆனந்தராஜிடமிருந்து தப்பித்தாரா, திருடப்பட்ட தெய்வ நாய் என்ன ஆனது, அந்த நாயை வடிவேலு மீட்டாரா என்ற கதையைச் சிரிக்கச் சிரிக்க சொல்ல முயன்றிருக்கிறது வடிவேலு - சுராஜ் கூட்டணி.

ஒரு காமெடி படத்திற்கு நாய்களை மையமாக வைத்துக் கதைக் கருவை எழுதியிருப்பதும், அதற்கு வடிவேலுவின் பிரபலமான 'நாய் சேகர்' என்ற கதாபாத்திரத்தின் பெயரை நாயகனுக்குப் பொருத்தியிருப்பதும் சரிதான். ஆனால், அந்தப் பெயருக்கும் கதைக்கும் படம் எந்த விதத்திலும் நியாயம் செய்யவில்லை. முதற்காட்சியிலேயே ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, இட்ஸ் பிரசாந்த் என தன் கூட்டாளிகளுடன் களமிறங்கும் வடிவேலு, 'இப்ப இவங்கதான் என் ஃப்ரெண்ட்டு; இதான் என் ட்ரெண்ட்டு' என ஓப்பன் ஸ்டேட்மென்ட்டை வைக்கிறார். இந்த ட்ரெண்ட் யுக்தி கூட்டாளிகளோடு நின்று விடுகிறது. காமெடியில் கரென்ட் ட்ரெண்ட்டை விட்டுவிட்டு பழைய பாணியையே கையாண்டிருக்கிறார்கள்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

நாயைக் கடத்தி விதவிதமான மாடுலேஷன்களில் உரிமையாளர்களை மிரட்டுவது, மாட்டிக்கொண்டு முழிப்பது, தப்பிக்க சாக்குப்போக்குகள் சொல்லி அடி வாங்குவது, வில்லன்களிடம் தன்னைத் தானே பில்டப் செய்துகொள்வது, நையாண்டி பாடிலாங்குவேஜ் என அதே பழைய வடிவேலு அப்படியே வந்திருக்கிறார். ஆனால், ஸ்க்ரிப்ட்டும் அதேபோல இருந்தால் என்ன செய்ய! ப்ரெஷ்ஷாக எதையுமே யோசிக்காமல் பீச் குதிரை சவாரியாகவே பயணிக்கிறது கதை. அதனால், திரைக்கதை மட்டுமல்ல காமெடி காட்சிகளும் எளிதில் யூகிக்கும்படியே இருக்கின்றன. சில இடங்களில், ரெடின் கிங்ஸ்லியுடன் வடிவேலு சேர்ந்து அடிக்கும் ஒன் லைன் காமெடிகள் கைதட்டல் பெறுகின்றன. ஆனால், அதற்குப் படத்தில் பல அபாய கிணறுகளைப் பார்வையாளர்கள் தாண்ட வேண்டியிருக்கிறது.

வில்லனாக வரும் ஆள் கடத்தல் மன்னன் ஆனந்த் ராஜ், சுமாரான காமெடி காட்சிகளைக்கூட, தன் இயல்பான நடிப்பால் சிரிப்பை வரவைக்கும் ஒன்றாக மாற்றிவிடுகிறார். அந்த வகையில் அவர் விஜய் டிவி ராமர், லொள்ளு சபா சேஷு போன்ற கூட்டாளிகளுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளும், வடிவேலுவுடனான காட்சிகளும் படத்திற்குப் பெரும் பலம். ஆனந்த் ராஜை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.

ட்ரெண்டிலிருக்கும் அனைவரையும் இறக்குவோம் என்பதாலோ என்னவோ வடிவேலுக்குக் கூட்டாளிகள் ஷிஃப்ட் அடிப்படையில் வருகிறார்கள், போகிறார்கள். திடீரென, ஷிவாங்கி, இட்ஸ் பிரசாந்த் காணாமல் போக, லொள்ளு சபா மாறன் வடிவேலுவுடன் இணைகிறார். ஆனால், அதிலும் எந்தப் பலனுமில்லை. காமெடிக்கு இவர்கள் தவிர, முனீஸ்காந்த், தங்கதுரை, கே.பி.ஒய் பாலா, சச்சு, ராஜா ராணி கார்த்தி, மனோபாலா, ராமர் என அரைடஜன் ஆட்கள் இருந்தும் யாரும் சிரிப்பு என்ற வஸ்து இருப்பதாகவே ஞாபகப்படுத்தவில்லை.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

வடிவேலுவைச் சந்தேகிக்கும் காட்சிகளில் மட்டும் மற்றொரு வில்லானான ராவ் ரமேஷ் கொஞ்சம் மிரட்டுகிறார். ஆனால், கடைசியில் அவரும் ஜோக்கராகி ஜோதியில் ஐக்கியமாகிறார். உருக்கமான சில காட்சிகளில், வடிவேலு தன் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். காமெடி ட்ராக்குகளை மட்டும் நம்பியிருக்காமல், இதுபோன்ற காட்சிகளின் எண்ணிக்கையைக் கூட்டியிருந்தால், படத்தோடு ஒன்றியிருக்க முடியும்.

ஏற்கெனவே ஹிட்டடித்த 'டீசன்ட்டான ஆளு', 'அப்பத்தா' என இரு பாடல்களும் ரசிக்கும் ரகம். பின்னணியிலும், சந்தோஷ் நாராயணன் அதிரடி காட்டுகிறார். காமெடி படத்திற்குத் தேவையான ஜாலியான சில செட்டுகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசுவிற்கும், படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கேவிற்கும் இந்தப் படம் பெரிய வேலையை வைக்கவில்லை.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
மொத்தத்தில், ட்ரெண்ட்டான கூட்டாளிகளுடன் சேர்ந்து, பழைய மாவையே மீண்டும் அரைத்து, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றத்தையே பரிசாக வழங்கியிருக்கிறது வடிவேலு - சுராஜ் கூட்டணி.