Published:Updated:

`வீரமே வாகை சூடும்' விமர்சனம்: அதிரடி வியாழன்தான், ஆனா, வாகை சூட அது மட்டுமே போதாதே!

Veeramae Vaagai Soodum | வீரமே வாகை சூடும்

விஷால் நடிக்கும் மிலிட்டரி, காவல்துறை படங்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் விஷால் ஸ்பெஷலாக ஒரு 'அதிரடி வியாழன்' சீரிஸே போடலாம் போல!

`வீரமே வாகை சூடும்' விமர்சனம்: அதிரடி வியாழன்தான், ஆனா, வாகை சூட அது மட்டுமே போதாதே!

விஷால் நடிக்கும் மிலிட்டரி, காவல்துறை படங்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் விஷால் ஸ்பெஷலாக ஒரு 'அதிரடி வியாழன்' சீரிஸே போடலாம் போல!

Published:Updated:
Veeramae Vaagai Soodum | வீரமே வாகை சூடும்
எங்கெங்கோ நடக்கும் மூன்று கதைகள் ஒரு புள்ளியில் இணைகின்றன. அந்தப் புள்ளிகளில் யார் வில்லன் என்பதை எப்படிக் கண்டறிகிறார் விஷால் என்பதுதான் 'வீரமே வாகை சூடும்' படத்தின் ஒன்லைன்.

மோசமான தொழிற்சாலையால் பாதிக்கப்படும் கிராமம்; ஸ்டாக்கிங் செய்து விஷாலின் தங்கையை டார்ச்சர் செய்யும் ரவுடியின் தம்பி; கல்லூரியில் படிக்கும் பெண்ணை மிரட்டி பாலியலுக்கு அழைக்கும் பணக்கார கும்பல் என மூன்று கதைகள். மூன்றும் ஒரு தருணத்தில் தனக்கே தெரியாத வகையில் இணைகிறது. கொலைகளும், கொலைக்கான பழி பாவங்களும் தொடர்கின்றன. யார், ஏன், எதற்கு என எதுவுமே தெரியாத சூழல். ஆனாலும், விஷாலின் இழப்பு பெரிது என்பதால் கண்டுபிடித்து பழிதீர்க்க வேண்டும். அதை எப்படி அவர் கண்டுபிடிக்கிறார், ஏன் அந்தக் கொலை என்பதாக விரிகிறது அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கியிருக்கும் 'வீரமே வாகை சூடும்'.

Veeramae Vaagai Soodum | வீரமே வாகை சூடும்
Veeramae Vaagai Soodum | வீரமே வாகை சூடும்

காவல்துறை அதிகாரியாவதற்குக் காத்திருக்கும் VIPயாக விஷால். வங்கியில் வேலை செய்யும் நபராக டிம்பிள் ஹியாதி. இருவருக்கும் ஆறாம் வகுப்பிலிருந்தே காதல். விஷாலுக்கான உற்ற நண்பனாக யோகி பாபு. படத்தின் மையக்கரு ஆரம்பிக்கும் வரை, இவர்களை வைத்து சில காட்சிகளை எடுக்க வேண்டும். எல்லா கமெர்ஷியல் சினிமாக்களிலும் இப்படியான காட்சிகள் உண்டு. ஹீரோவும் காமெடியனும் பேசிக்கொள்வது, ஹீரோவும் ஹீரோயினும் டூயட் பாடுவதென. ஆனால், 'வீரமே வாகை சூடும்' அளவுக்கு எந்தப் படத்திலும் இந்தக் காட்சிகள் இவ்வளவு காலாவதியாக இருந்ததில்லை. திரையரங்கம் என்பதால், ரிமோட் வைத்து ஓட்டவும் முடியாது, ஒளியவும் முடியாது. படம் சில வாரங்கள் தாமதம் என தெரியும். ஆனால், இந்தக் காட்சிகளோ பல ஆண்டுக்கால தாமதாகவே இருக்கின்றன.

யோகி பாபுவின் முகத்தை மூலதனமாக வைத்து இன்னும் எத்தனை அவல நகைச்சுவை காமெடிகளை எடுப்பார்கள் எத்ட தெரியவில்லை. யோகிபாபுவால் இவற்றைச் சகித்துக்கொள்ள முடிகிறது. நம்மால்தான், இதையெல்லாம் இனி காமெடியாகவோ, ஒரு வசனமாகவோகூட கடந்து போக முடியவில்லை.

ஒரு படத்தில் சாதாரண காட்சிகளுக்கு எவ்வளவு மெனக்கெட வேண்டும் என்பது 'வீரமே வாகை சூடும்' படத்தைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. அதிலும், தந்தை காவல்துறை அதிகாரியாக இருந்தும், குற்றவாளிக்குப் பதிலாக ஆள் மாற்றுவதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார் விஷால். தியேட்டரில் கூட்டம் இல்லாத படங்களுக்கு ஏன் செல்வார்கள் என வியக்கிறார். நமக்கே ஒரு நிமிடம், ஆமீர் கானின் PK படம் போல, இதில் விஷாலின் கதாபாத்திரம் ஏதோ ஏலியனாக இருக்குமோ என்கிற சந்தேகம் வருகிறது.

அதிலும் விஷால் நடிக்கும் மிலிட்டரி, காவல்துறை படங்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் விஷால் ஸ்பெஷலாக ஒரு 'அதிரடி வியாழன்' சீரிஸே போடலாம் போல!
Veeramae Vaagai Soodum | வீரமே வாகை சூடும்
Veeramae Vaagai Soodum | வீரமே வாகை சூடும்

இந்தக் கண்டங்களைக் கடந்துவிட்டால், அதற்குப் பின்னான கொலைகளும், அதற்கான தேடல்களும் படத்தில் சுவாரஸ்யமாகவே கையாளப்பட்டிருக்கின்றன. பலபேர் கைமாறி நடக்கும் கூலிப்படை கொலைகளில், யாரை எப்படிக் கண்டுபிடிப்பது, எந்த நூலைப் பிடித்து எதை இழுப்பது என்பதாக திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும், அது லீனியராக சொல்லப்பட்டிருப்பதால் எதற்கு என்கிற கேள்வி எழாமலே சென்றுவிடுகிறது.

யுவனின் இசையில் 'தித்திக்கிறதே கண்கள்' பாடல் ஆடியோவில் கேட்கும்போது விண்டேஜ் யுவன் ஃபீலைக் கொடுக்கிறது. ஆனால், வீடியோ வெர்சனில் ஏதோ மிஸ்ஸிங். பின்னணி இசையில் சில இடங்களில் ஓகே. அனல் அரசு, ரவி வர்மாவின் சண்டைக் காட்சிகள் விஷால் படங்களுக்கென்றே அளவெடுத்த செய்யப்பட்ட சண்டைக் காட்சிகள். சப்வே சண்டைக்காட்சியும், பார் பைட்டும், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளும் மிரள வைக்கின்றன. அதற்காக தன் நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்திருக்கிறார் விஷால்.

Veeramae Vaagai Soodum | வீரமே வாகை சூடும்
Veeramae Vaagai Soodum | வீரமே வாகை சூடும்

சரவணனும், பொன் பார்த்திபனும் எழுதியிருப்பதில், "கொசு, ஆட்டுக்குட்டி, நாய், நரி, சிங்கம்", "எலிக்கதை", "ஒரு குற்றம் எங்க இருந்து உருவாகுது தெரியுமா? தன்னைக் காப்பாத்த எப்படியும் ஒருத்தன் இருக்கான்னு நினைக்கும்போதுதான்" போன்ற சில வசனங்கள் படத்தின் கருவுக்கு வலு சேர்க்கின்றன. அப்பாடா என எல்லாம் முடிந்து உட்கார்ந்தால், அதென்னப்பா பேரு போரஸ்? அப்படின்னா என்ன எனக் கேட்கிறார் ஐபிஎஸ் அதிகாரி. நிகழ்கால அரசியல் சூழலில் இருக்கும் அரசு அதிகாரிகளின் பொது அறிவை நக்கலடிக்கும் இந்தக் காட்சி அதி அற்புதம். (அட சர்காஸம் பாஸ்!)

ஒன்லைனை பிடித்ததோடு நில்லாமல், சாதாரண காட்சிகளுக்கும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு யோசித்திருந்தால், நிச்சயம் வாகை சூடியிருக்கும்.