Published:Updated:

வீரபாண்டியபுரம் விமர்சனம்: `நான் மகான் அல்ல', `ஜீவா' எடுத்த சுசீந்திரனுக்கு என்னாச்சு?

வீரபாண்டியபுரம் விமர்சனம்

இரு கிராமங்களுக்கு இடையே நடக்கும் ரத்த மோதலில், ஜெய் எப்படித் தனக்கான பழிவாங்கலைச் சாதிக்கிறார் என்பதுதான் சுசீந்திரன் இயக்கியிருக்கும் 'வீரபாண்டியபுரம்'.

வீரபாண்டியபுரம் விமர்சனம்: `நான் மகான் அல்ல', `ஜீவா' எடுத்த சுசீந்திரனுக்கு என்னாச்சு?

இரு கிராமங்களுக்கு இடையே நடக்கும் ரத்த மோதலில், ஜெய் எப்படித் தனக்கான பழிவாங்கலைச் சாதிக்கிறார் என்பதுதான் சுசீந்திரன் இயக்கியிருக்கும் 'வீரபாண்டியபுரம்'.

Published:Updated:
வீரபாண்டியபுரம் விமர்சனம்

கணக்கன்பட்டிக்கும், நெய்க்காரப்பட்டிக்கும் இடையே அரசியல் தகராறில் கொலைகள் தொடர்கின்றன. அதில் ஒரு சிறுமி காணாமல் போவதில் ஆரம்பிக்கும் கதை அப்படியே நூல் பிடித்து ஜெய், மீனாக்‌ஷி கோவிந்தராஜன் கோயில் திருமணத்தில் வந்து முடிகிறது. ஆனால், திருமணம் செய்யாமல், கிரிக்கெட் வீரர் தோனி போல "But I had other ideas" என ஜெய்க்கு வேறு சில யோசனைகள் வருகின்றன. மீனாக்‌ஷியின் தந்தையிடமே சென்று மீனாக்ஷியை ஒப்படைக்கிறார். ஒப்படைத்தால் மட்டும் வெத்தலை பாக்கு வைத்து பாராட்டவா போகிறார்கள் என்பது நம்மைப் போலவே ஜெய்க்கும் தெரிந்தே இருக்க, அடுத்து என்ன நடக்கிறது யார் யாரைக் கொல்கிறார்கள், ஏன் கொல்கிறார்கள், எதற்குக் கொல்கிறார்கள் என்பதை அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் இரண்டு மணி நேரத்தில் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

வீரபாண்டியபுரம் விமர்சனம்
வீரபாண்டியபுரம் விமர்சனம்

'சிவ சிவ' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்துக்கு 'வீரபாண்டியபுரம்' எனக் கடைசி நேரத்தில் மாற்றியிருக்கிறார்கள். 'சுப்ரமணியபுரம்' போல 'வீரபாண்டியபுரம்' என விநியோகஸ்தர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தலைப்பை மாற்றியதாக சுசீந்திரனே தெரித்திருந்தார். ஆனால், இந்தத் தலைப்புக்கான மெனக்கெடல் கூட இந்த சினிமாவுக்குப் போடப்பட்டதாகத் தெரியவில்லை. ஜெய்யை எடுத்துவிட்டு அப்படியே படத்தில் 'ஈஸ்வரன்' கெட்டப்பில் இருக்கும் சிம்புவைப் போட்டுவிடலாம். 'ஈஸ்வரன்', அடுத்து 'சிவ சிவ' என ஒரே மாதிரி டைட்டில் என்றுகூட யோசித்திருக்கலாம். ஏனென்றால், 'ஈஸ்வரன்' படத்தில் வரும் வீட்டு செட்டப்பைக்கூட மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். இல்லை அதே மாதிரியான வீட்டைத் தேடிப் பிடித்தார்களா தெரியவில்லை.

பாலசரவணனையும், காளி வெங்கட்டையும் அதே ஊரில் அப்படியே சுசீந்திரன் இருக்கச் சொல்லிவிட்டார் போல. கெட்டப் மட்டும் மாற்றிவிட்டு வந்திருக்கிறார்கள். வில்லனின் தந்தையும் வெள்ளை முடி வைத்த வில்லனே! ஆம், வில்லனில் அப்பா - மகன் டபுள் ஆக்ட் என்னும் புதுமையைச் செய்திருக்கிறார்கள். முழு படத்திலும் பால சரவணன் ஒரு இடத்தில் மட்டும் சிரிக்க வைத்து, தனக்கான பணியை நிறைவு செய்துவிடுகிறார். பிறகு காணாமலும் போய்விடுகிறார்.

மீனாக்‌ஷி கோவிந்தராஜனும், அகான்ஷாவும் கதைக்குத் தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான காட்சிகளோ ஒரு பாடலும், சில தூரம் நடப்பதும்தான் என்பதால் அவர்களுக்கும் பெரிய வேலையில்லை. நடிப்பதோடு சேர்த்து இந்தப் படத்தில் ஜெய்க்கு இசையமைப்பாளராக இன்னுமொரு பணி. வைரமுத்து வரிகளில் 'காட முட்டை' பாடல் மட்டும் ஓக்கே ரகம். ஜெய்யின் இசையும் அந்தப் பாடலில் தாளம் போட வைக்கிறது. ஆனால், அந்தப் பாடலைத் தவிர மற்ற பாடல்கள் ஏன் வருகின்றன, எதற்கு வருகின்றன ரகம்தான்.

வீரபாண்டியபுரம் விமர்சனம்
வீரபாண்டியபுரம் விமர்சனம்

ஒரு காட்சியின் வீரியத்தை பார்வையாளனுக்கு உணர்த்த வன்முறை காட்சிகள் என்பது அவசியம்தான். ஆனால், ஏன் என்றே தெரியாமல் எல்லோருமே சட்டையில் சிவப்பு மையை பூசியபடியே திரிகிறார்கள். 'நீங்க ஏன் சும்மா போறீங்க, வாங்க உங்க சட்டையில இன்க் அடிச்சு விடுறோம்' என ஸ்கூல் பசங்க கணக்காக காமெடி செய்திருக்கிறார்கள். கால் தனியாக அறுபட்டு அந்தரத்தில் நிற்பது, நிர்வாணமாக்கப்பட்டு கொலை எனப் படத்தில் எதற்கென்றே தெரியாமல் அத்தனை வன்முறை காட்சிகள். ரத்தம், வன்மம், பகை, க்ரோதம் என விநோதமான பின்னணி இசையும் நம்மைச் சேர்த்து சோதிக்கிறது.

படத்தில் எந்தவொரு வசனமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எல்லாமே ஏனோதானோவென்று செல்கிறது. பழிவாங்கும் ஒன்லைனைத் தவிர படத்தில் வரும் எல்லாமே எங்கோ கேட்ட ரகம்தான். சினிமா என்பது ஒரு கலை என்பதைக்கடந்து அதுவும் ஒரு வியாபாரம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதற்காக குடிசைத் தொழில் போல அடுத்தடுத்து படங்களை எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் எடுத்துக்கொண்டே இருப்பதை சகித்துக்கொள்ள முடியவில்லை சுசீந்திரன்.

'நான் மகான் அல்ல', 'வெண்ணிலா கபடிக் குழு', 'அழகர்சாமியின் குதிரை', 'ஜீவா', 'மாவீரன் கிட்டு' போன்ற படைப்புகளைக் கொடுத்த சுசீந்திரன் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. சமீபத்தில் வெளியாகிக்கொண்டிருக்கும் சுசீந்திரன் படைப்புகளில் மற்றுமொரு சுமார் ரக படைப்பாகத் தன்னைச் சுருக்கிக்கொள்கிறது 'வீரபாண்டியபுரம்'.