சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

வடிவேலு காமெடி விரும்பும் இளம் இசை ஜோடி!

``காபிக்கு சர்க்கரை போடலாமா..?''
பிரீமியம் ஸ்டோரி
News
``காபிக்கு சர்க்கரை போடலாமா..?''

கற்றுத்தந்தது வயலின் என்றாலும் கன்யாகுமரி முக்கியத்துவம் கொடுத்தது வாய்ப்பாட்டுக்கு. வகுப்பு எடுக்கும்போது குரு பாடுவதை சீடன் வயலினில் வாசிக்க வேண்டும்.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

மனைவி க்ருதி பட் பாடகி. கணவன் விட்டல் ரங்கன் இளம் வயலின் வித்வான். இந்த சங்கீத ஜோடியிடம் நேர்காணலுக்கு தேதியும் கிழமையும் நேரமும் குறிப்பதற்குப் பெருமுயற்சி தேவைப்பட்டது. காரணம், இருவரும் இணைந்து கச்சேரிக்காக அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணித்துவிடுகிறார்கள். அல்லது, பாடுவதற்கு க்ருதி பட் மங்களூருக்குப் போனால், வேறு பாடக / பாடகிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசிக்க மைசூருக்கு சதாப்தியில் ஏறிவிடுகிறார் விட்டல் ரங்கன்..!

ஒரு சுபயோக சுபதினத்தில் பாடகி காயத்ரி வெங்கட்ராகவனின் மகன் திருமணத்துக்குச் சென்றுவிட்டு, முகூர்த்த சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு காரில் வந்து இறங்கினார்கள், க்ருதியும் விட்டல் ரங்கனும். கிழக்கு அபிராமபுரத்தில் முன்தினம்தான் குடி வந்தது மாதிரி புது வாசம் மாறாத 2.5 BHK வீடு! சோபாவை நகர்த்தி வைப்பது, தரையில் ஜமக்காளம் விரிப்பது, வயலின் பெட்டியும் தம்புராவும் எடுத்து வருவது என்று எல்லா டாஸ்குகளையும் ஐ.டி தம்பதி மாதிரி க்ருதியும் விட்டலும் சேர்ந்தே செய்கிறார்கள்! அவ்வளவு ஏன், இருவரும் இணைந்துதான் எங்களுக்கு காபி கலந்து கொடுத்தார்கள்!

``தினமும் சமையல்கூட நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் செய்வோம்...'' என்றார் க்ருதி சிரித்துக்கொண்டே!

சென்ற வருடம் ஜூன் மாதம் தர்மஸ்தலாவில் நடந்த இவர்களின் திருமணத்தில்கூட இப்படித்தான். பெண் வீடு, மாப்பிள்ளை வீடு என்ற பாகு பாடெல்லாம் இருக்கவில்லை. திருமணம் நடந்த கிராமத்துக்குப் பதினைந்து நாள்களுக்கு முன்னதாகவே விட்டல் ரங்கன் குடும்பம் சென்றுவிட்டது. வாழைமரம் கட்டுவது, சீரியல் லைட் தொங்கவிடுவது போன்ற கல்யாணம் தொடர்பான அனைத்து அலங்காரங்களிலும் விட்டல் ரங்கனின் பங்கும் இருந்திருக்கிறது.

க்ருதி பட் - விட்டல் ரங்கன்
க்ருதி பட் - விட்டல் ரங்கன்

உடுத்தும் வேட்டியின் பார்டர் எந்த கலரில் நெய்யப்பட்டு இருக்கிறதோ, அதே கலரில்தான் சட்டையோ, ஜிப்பாவோ அணிவது விட்டலின் ஸ்டைல். விட்டல் அணியும் அதே ஜிப்பா கலரில் புடவை உடுத்துவது க்ருதியின் வழக்கமாம். மனமொத்த தம்பதி!

சென்னையில் பிறந்தவர் க்ருதி பட். குழந்தைப்பருவம் முதல் இசையில் இவர் ஆர்வம் கொண்டிருக்க, 'இவளுக்குப் பாட்டு நல்லா வரும்' என்று பாசமிகு பாட்டி கிருஷ்ணவேணி சான்றிதழ் வழங்க, அம்மாவும் பாடகியுமான ராஜராஜேஸ்வரி, க்ருதிக்கு குருவானார்.

மூன்று நான்கு வயதாகும்போது குழந்தையை அழைத்துக்கொண்டு ராஜராஜேஸ்வரி அமெரிக்காவுக்குச் சென்று செட்டிலாகிவிட்டார்.

``என்னுடைய பள்ளி, கல்லூரிப் படிப்பு ஹுஸ்டனில்தான். அங்கேயே அம்மாவுடனும், தனியாகவும் கச்சேரிகள் பாட ஆரம்பித்துவிட்டேன்... அவ்வப்போது இந்தியா வர நேரிடும்போது இங்கே சபாக்களில் பாடத் தொடங்கினேன்'' என்றார் க்ருதி.

இவரின் தாய்மாமா வயலின் இசைக் கலைஞர் விட்டல் ராமமூர்த்தியும் க்ருதிக்குப் பாட்டும் வயலினும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். தவிர, லால்குடி ஜெயராமன், டி.ஆர்.சுப்பிரமணியன் போன்ற லெஜெண்டரி கலைஞர்களிடமும் அவ்வப்போது நேர்முகமாக இசைகற்றுத் தெளிந்திருக்கிறார் க்ருதி.

``அதுமட்டுமல்ல... நெய்வேலி சந்தானகோபாலன், எஸ்.சௌமியா, அபிஷேக் ரகுராம் போன்றவர்களிடமும் இசையின் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறேன்'' என்று பெருமையுடன் கூறிக்கொண்டார் இந்த இளம் பாடகி. இவர் வயலினும் வாசிப்பார் - மேற்கத்திய வயலின் உட்பட!

2014-ல் ஒருமுறை வாணி மகாலில் விசாகா ஹரியின் `ஆழ்வார் வைபவம்' ஹரிகதை நிகழ்ச்சி. க்ருதியும் அவர் சகோதரி கீர்த்தனாவும் பின்பாட்டு... மேடையில் வயலினுடன் விட்டல் ரங்கன். க்ருதி - விட்டல் கண்கள் பேசிக்கொண்டன. இசை வழியே காதல் மலர்ந்தது. வாழ்க்கையில் இணைவதற்கு அதுவே ஆரம்பப் புள்ளி.

``விட்டல் குடும்பத்தினர்தான் முதலில் வந்து பெண் கேட்டார்கள்'' என்று வெள்ளந்தியாகச் சிரித்தார் க்ருதி. காதல்-கம்-பெரியவங்க பார்த்து ஏற்பாடு செய்த கல்யாணமாக இவர்களது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. கோவிட் காலத்தில் நடந்ததால், நிகழ்வுக்கு முக்கியமானவர்களை மட்டுமே அழைக்க முடிந்திருக்கிறது. அனைத்து உறவும் நட்பும் கண்டு வாழ்த்துவதற்கு வசதியாக, திருமணத்தில் ஒவ்வொரு பகுதியையும் லைவ் வெப்காஸ்ட் செய்தார்கள். இதன் முக்கியமான நிகழ்வுகள் யூடியூப் தளத்தில் காணக் கிடைக்கும். கடந்த ஒண்ணேகால் வருடத்தில் 76K ஜோடி கண்கள் இதைப் பார்த்து ரசித்து மகிழ்ந்திருக்கின்றன.

``காபிக்கு சர்க்கரை போடலாமா..?''
``காபிக்கு சர்க்கரை போடலாமா..?''

இன்று பெரும்பாலான பாடகர்களால் வயலினுக்கு விரும்பி அழைக்கப்படும் கலைஞர் விட்டல் ரங்கன். கொரோனா தாக்குதலுக்கு முன்னால் பார்த்தசாரதி சுவாமி சபாவில் அருணா சாய்ராம் பாடியபோது வயலின் வாசித்தவர் விட்டல். பாடிய ஆலாபனைகளுக்கும் ஸ்வரங்களுக்கும் பட்பட்டென்று இந்த இளம் வித்வான் பதிலடி கொடுக்க, அசந்துபோன அருணா மேடையிலேயே 'பேஷப்பா...' என்று பாராட்டியது இன்னமும் நினைவில் இருக்கிறது.

சங்கீத கலாநிதி ஏ.கன்யாகுமரி தன் குரு என்பதில் அதிகபட்ச பெருமிதம் விட்டலுக்கு. குருவின் பெயரைக் குறிப்பிடும்போதெல்லாம் இவரது முகம் மலர்ந்து பூரிக்கிறது. வரப்போகும் டிசம்பர் இசை விழாவின்போது மியூசிக் அகாடமியின் ப்ரைம் ஸ்லாட்டில் மையமாக குரு, பக்கத்தில் சீனியர் எம்பார் கண்ணன், இவர்களுடன் தானும் உட்கார்ந்து வயலின் ட்ரையோ வாசிக்கவிருக்கும் நாளை பேரார்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் விட்டல் ரங்கன்.

பெங்களூரில் பிறந்தவர் இவர். ஐந்தாவது வயதில் அம்மா சித்ரா பில்வத்திடம் (டி.எம்.தியாகராஜனின் மாணவி) வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். வயலினில் ஏபிசிடி தெரிந்துகொண்டது மறைந்த வித்வான் ஆர்.ஆர்.கேசவ மூர்த்தியிடம். தவிர, தானாகவே ஹார்மோனியமும் வாசிக்கப் பழகி, வீட்டில் நடக்கும் பஜனை நிகழ்ச்சிகளில் வாசித்தது உண்டு. ``ஒருமுறை பெங்களூரில் கன்யாகுமரி மேடம் வயலின் கச்சேரியைக் கேட்டேன். அது முதல் அவரிடம் சீடனாகச் சேர வேண்டும் என்பது என் கனவானது. 2003-ல் அது நிறைவேறியது'' என்கிறார்.

முதல் தடவை சந்திப்பின்போது `வாதாபி' வாசித்துக் காட்டியிருக்கிறார் விட்டல். இரண்டு வாரங்கள் கழித்து சென்னைக்கு அழைத்திருக்கிறார் கன்யாகுமரி. வயலினில் எல்.கே.ஜி வகுப்பு ஆரம்பமானது. தொடர்ந்து வார இறுதி நாள்களில் சென்னை வந்து போனார் விட்டல் ரங்கன். வாசிப்பில் முன்னேற்றம் காணத் தொடங்கியது.

க்ருதி பட் - விட்டல் ரங்கன்
க்ருதி பட் - விட்டல் ரங்கன்

கற்றுத்தந்தது வயலின் என்றாலும் கன்யாகுமரி முக்கியத்துவம் கொடுத்தது வாய்ப்பாட்டுக்கு. வகுப்பு எடுக்கும்போது குரு பாடுவதை சீடன் வயலினில் வாசிக்க வேண்டும். சமயத்தில் வயலினிலும் வாசித்துக் காட்டி ரிப்பீட் செய்யச் சொல்வாராம்.

சென்னையில் வகுப்புகள் மற்றும் கச்சேரிகளுக்குப் போன நாள்களில் வயலின் பெட்டியைத் தூக்கிக்கொண்டு பஸ்ஸில் விட்டல் போனதுண்டு. இன்னொரு பக்கம் படிப்பிலும் கில்லி! சி.ஏ. முடித்திருக்கிறார். திருமணத்திற்குப் பின் சென்னைக்குப் புலம்பெயர்ந்துவிட்டவர், இங்கே ரமேஷ் அண்ட் ராமச்சந்திரன் கம்பெனியில் பணிபுரிகிறார். கமல், ரஜினி, மாதவன் படங்களை விரும்பிப் பார்க்கிறார்.

சுபஸ்ரீ தணிகாசலம் வழங்கி வரும் QFR நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் தம்பதி சமேதமாகப் பாடியிருக்கிறார்கள் விட்டலும் க்ருதியும். பாரதிதாசன் எழுதிய கவிதை... `ஓர் இரவு' படத்துக்காக சுதர்சனம் மாஸ்டர் இசையமைத்த `துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து...' என்ற காலத்தால் அழியாத அற்புதப் பாடல் அது! பாடலின் நடுவே விட்டல் செந்தமிழில் வசனம் பேசியிருப்பது அழகு!

இந்த ஸ்வீட் இசை தம்பதிக்கு சங்கீதம் தவிர வடிவேலுவின் காமெடி என்றால் உயிர்!

``தினமும் ஒரு காட்சியாவது வடிவேலுவின் காமெடி பார்த்தால்தான் எங்கள் நாள் பூர்த்தியாகும்...'' என்றார் விட்டல் ரங்கன். புன்னகைத்தபடியே ஆமோதித்தார் க்ருதி பட்!