Published:Updated:

`ரஜினியை சந்திக்க வெச்சிட்டா இமானுக்கு இதுதான் ட்ரீட்!' - இமான் - திருமூர்த்தி ஷேரிங்ஸ்

திருமூர்த்தி - இமான்
திருமூர்த்தி - இமான்

இசையமைப்பாளர் இமான் - பாடகர் திருமூர்த்தி பேட்டி.

`கண்ணான கண்ணே' பாடல் வெளியாகி கொண்டாடித் தீர்த்த பின்னும், மீண்டும் சமூக வலைதளங்களில் அப்பாடலானது செம ஹிட்டடித்தது. காரணம், நொச்சிப்பட்டியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரால். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், அந்தப் பாடலைத் தன் காந்தக் குரலால் பாடி அசத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதைப் பார்த்த இசையமைப்பாளர் இமான், அவரைத் தொடர்புகொண்டு ஜீவா நடிக்கும் `சீறு' படத்தில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். தனது பிரத்யேகக் குரலில் திருமூர்த்தி பாடிய `செவ்வந்தியே' எனும் பாடல், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் இமானையும் பாடகராக அறிமுகமாகியிருக்கும் திருமூர்த்தியையும் சந்தித்தேன். 

``என்ன தம்பி... நிறைய பேட்டி கொடுத்து களைச்சிட்டீங்க போல... ஆமா, ஒரு பேட்டியில ஏதோ பழமொழி சொன்னீங்களே... என்ன அது?" என இமான் கேட்க, ``ஓ அதுவா சார்... `திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் வந்துச்சாம்' அந்த மாதிரினு சொன்னேன் சார்" என்றார் திருமூர்த்தி. ``அப்புறம் இன்னொன்னு ஏதோ சொன்னீங்களே... ஓவர் நைட்ல... ஒபாமாவா..?" என்று இமான் கேட்டதும் திருமூர்த்திக்கு அப்படியொரு சிரிப்பு. அந்த மழலைச் சிரிப்போடு பேசத் தொடங்கிய திருமூர்த்தி, ``ஊர்ல இருக்கிற என் நண்பர்கள் என்னை டிவி, பத்திரிகையில பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. போன் பண்ணி வாழ்த்துகளும் சொன்னாங்க. இப்போ நான் எல்லாருக்கும் தெரியுறேன்னா, அதுக்கு அந்த வீடியோவை சோஷியல் மீடியாவுல பதிவிட்ட மதன் அண்ணன்தான் காரணம்" என்றார் திருமூர்த்தி.

இமான் - திருமூர்த்தி - இயக்குநர் ரத்னசிவா
இமான் - திருமூர்த்தி - இயக்குநர் ரத்னசிவா

`` பொதுவா ஒரு பாட்டைக் கம்போஸ் பண்ணி முடிச்சிட்டா, அனுபவமிக்க பாடகர்களைப் பாட வைக்குறதுக்கு முன்னாடி புது குரல்களை வெச்சு டெஸ்ட் பண்ணிப் பார்ப்பேன். ஆனா, திருமூர்த்திக்கு எடுத்தவுடனே பாட வைக்கிறேன்னு உறுதி கொடுத்துட்டேன். காரணம், இவர் பாடிய பாட்டு ரொம்ப சூப்பரா இருந்தது. அந்தப் பாட்டை பாடிய சித் ஶ்ரீராமும் திருமூர்த்தி வீடியோவை பார்த்துட்டு `சூப்பரா பாடுறார்'னு பாராட்டினார். பார்வையில்லாத பையன்னு இவரைப் பாட வைக்கலை. முழுக்க முழுக்க இது அவருடைய திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம். `கண்ணான கண்ணே' பாட்டைப் பொறுத்தவரை அதுல பயங்கரமான எமோஷன் இருக்கும். திருமூர்த்தி அதை சூப்பரா கையாண்டிருப்பார். அந்த மாதிரி தன்மைகொண்ட ஒரு பாட்டுதான் திருமூர்த்தி பாடுற முதல் பாடலா இருக்கணும்னு நினைச்சேன். அதுனாலதான் `செவ்வந்தியே' பாட்டைப் பாட வெச்சேன். இனி அடுத்தடுத்த பாடல்கள்ல வெவ்வேற களம் கொடுக்கணும். ஒரு வாரத்துக்கு முன்னாடியே ட்யூனை அனுப்பி திருமூர்த்தியைப் பயிற்சி எடுத்துக்க சொன்னேன். அவரும் அதுக்குத் தயாராதான் வந்தார். ரெக்கார்டிங்கும் பண்ணிட்டோம்" என்றார் இமான்.  

``என் அண்ணன் புகழேந்தியும் தம்பி முரளியும்தான் இமான் சார் ட்யூன் அனுப்பியதைச் சொன்னாங்க. பாடலுடைய வரிகளை மனப்பாடம் பண்றது எனக்குக் கொஞ்சம் சிரமம். கேட்டுக் கேட்டுதான் மனப்பாடம் பண்ணேன். அண்ணன் டாக்டர், தம்பி டி.என்.பி.எஸ்.சி எக்ஸாமுக்குப் படிச்சிட்டிருக்கான். ஆனா, எனக்காக அவங்களுடைய வேலையை விட்டுட்டு என்னை எல்லாப் பக்கமும் கூட்டிட்டுப் போயிட்டிருக்காங்க'' என்றார் நெகழ்ச்சியுடன்.

``நீங்க சொல்ற மியூசிக்கல் விஷயங்களை எப்படிப் புரிஞ்சிக்கிறார்'' என்ற கேள்வியை இமானிடம் கேட்க, ``ஏற்கெனவே வைக்கம் விஜயலட்சுமி என் இசையில பாடியிருக்காங்க. அப்போ கிடைச்ச அனுபவம்தான் திருமூர்த்தியைப் பாட வைக்கும்போதும் கிடைச்சது. நாம சொல்றதை அழகா கேட்ச் பண்ணி அசால்ட்டா பாடிருவாங்க. திருமூர்த்திக்கு வார்த்தை உச்சரிப்பு, ழகரம் பிரச்னை கொஞ்சம் இருந்தது. அதை மட்டும் சொல்லிக் கொடுத்தோம். டக்குனு கத்துக்கிட்டார். அதுக்கப்புறம் சின்னச் சின்ன நுணுக்கங்களைப் புரிஞ்சுக்கிட்டு அவர் பாடினது ஆச்சர்யமா இருந்தது. அதுதான் இவர் ப்ளஸ்னு நினைக்கிறேன். முதல்முறை திருமூர்த்தியைப் பாட வைக்கும்போது இயக்குநர் ரத்னசிவாவையோ, பாடலாசிரியர் பார்வதியையோ கூப்பிடலை. இவர் பாடினதை, ஒரு ரசிகனாவே மாறி ரொம்ப என்ஜாய் பண்ணேன். அதுக்கப்புறம்தான் அவங்களை வர வெச்சு, மேக்கிங்லாம் எடுத்தோம்'' என்றார் இமான்.

இமான் - திருமூர்த்தி - இயக்குநர் ரத்னசிவா - பாடலாசிரியர் பார்வதி
இமான் - திருமூர்த்தி - இயக்குநர் ரத்னசிவா - பாடலாசிரியர் பார்வதி

``முதல்ல நான் பாட்டு பாடும்போது பயமாவும் பதற்றமாவும் இருந்தது. ஆனா, இமான் சார்தான் என்னை ரிலாக்ஸ் பண்ணிப் பாட வெச்சார். `உன் முன்னாடி இருக்கவங்களையெல்லாம் முட்டாள்னு நினைச்சுக்கோ'னு சொல்லி நிறைய கத்துக்கொடுத்தார்'' என்ற திருமூர்த்தியை இடைமறித்த இமான், ``நான் எப்படி இருப்பேன்னு நினைக்கிற. இதே மாதிரி ஒவ்வொருவரையும் எப்படிப் பார்க்குற?''னு அவர்கிட்ட கேட்டேன். அதுக்கு, ``ஒவ்வொருவரும் எனக்கு உருவமா தெரியமாட்டாங்க. அவங்க பழகுறதை வெச்சு, குணமாதான் தெரிவாங்க சார்"னு அவர் சொன்ன பதிலைக் கேட்டு அசந்துபோயிட்டேன். இவரை அறிமுகப்படுத்தினதை நான் ரொம்ப பெருமையா நினைக்கிறேன். சாம் சி.எஸ் இவருடைய நம்பர் வாங்கியிருக்கார். அவர் இசையில சீக்கிரமாவே பாடுவார்" என்றார்.

``நீங்க எலிமினேட்டான ஷோவுக்கே உங்களை விருந்தினரா கூப்பிடும்போது எப்படி இருந்தது?'' என்ற கேள்வியை திருமூர்த்தியிடம் கேட்க, சிரித்துக்கொண்டே, ``என்னடா நடக்குது இங்கனு வடிவேலு சொல்லுவார்ல... அப்படித்தான் இருந்தது. வந்துட்டேன்னு சொல்லு... எப்படி எலிமினேட்டாகி வெளியில போனேனோ... அதே மாதிரி சீஃப் கெஸ்டா திரும்பி வந்துட்டேன்னு சொல்லுங்கிற ரஜினி சாருடைய வசனம்தான் என் மைண்ட்வாய்ஸா இருந்தது" என்றவர் ஊர் பற்றி பேசத் தொடங்கினார். ``எனக்கு என்ன பேர் போடலாம்னு சார் கேட்டவுடன் நொச்சிப்பட்டி திருமூர்த்தினு போட்டுக்கலாம்னு சொன்னேன். எனக்கு என் ஊர் ரொம்பப் பிடிக்கும். கிராமம்தான். ஆனா, எங்க கிராமத்துல இருக்கிற அரசு பள்ளியில படிச்சு நிறைய பேர் இப்போ டாக்டர் ஆகியிருக்காங்க. என்னால ஏதாவது ஊருக்குனு செய்ய முடியும்னா கண்டிப்பா செய்வேன். அதனாலதான் என் ஊரையும் டைட்டில்ல சேர்த்துக்கிட்டேன்'' என்றவரிடம் அவரின் ஆசை பற்றிக் கேட்டோம்.

திருமூர்த்தி - இமான்
திருமூர்த்தி - இமான்

``சினிமாவுல பாடணும்ங்கிற ஆசை நிறைவேறிடுச்சு. நல்ல பாடகனாகவும் இசையமைப்பாளராகவும் ஆகணும்னு ஆசை இருக்கு. அப்புறம் ஒரு முறையாவது சூப்பர்ஸ்டாரை சந்திச்சிடணும்னு ரொம்ப நாள் ஆசை" என்றார் அதே மழலைச் சிரிப்புடன். ``ரஜினி சாரை சந்திக்க வெச்சுட்டா எனக்கு என்ன கொடுப்ப?" என இமான் கேட்டதுக்கு, ``உங்களுக்கு பிரியாணி ட்ரீட் சார்" என்றார் திருமூர்த்தி.

ரஜினி படத்துக்காக இமானுக்கும், சாம் சி.எஸ் இசையில் பாடுவதற்காகத் திருமூர்த்திக்கும் வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.

அடுத்த கட்டுரைக்கு