Published:Updated:

ஸ்கைப் குரு... ஷார்ப் சிஷ்யன்!

ஸ்கைப் குரு... ஷார்ப் சிஷ்யன்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்கைப் குரு... ஷார்ப் சிஷ்யன்!

வீயெஸ்வி - படங்கள்: பிரியங்கா

ஸ்கைப் குரு... ஷார்ப் சிஷ்யன்!

வீயெஸ்வி - படங்கள்: பிரியங்கா

Published:Updated:
ஸ்கைப் குரு... ஷார்ப் சிஷ்யன்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்கைப் குரு... ஷார்ப் சிஷ்யன்!

கிடைத்த வாய்ப்பை மெஸ்ஸி மாதிரி நழுவவிடாமல், கிறிஸ்டியானோ ரொனால்டோ மாதிரி முழுவதுமாகப் பயன்படுத்திக்கொண்டார் கோகுல் ஷ்யாம்சுந்தர். 14 வயது பாலகன்.

அண்மையில் மியூசிக் அகாடமி அரங்கில் கோகுலின் கிடார் கச்சேரி. `ஆலாப்’ ஏற்பாடு. காலில் ஷூ, நீல நிற ஜீன்ஸ், நீண்ட தலைமுடி, கறுப்பு டீ ஷர்ட் அணிந்து, நின்றபடியே காலால் தாளமிட்டுக்கொண்டே கிடார் வாசிக்கவில்லை கோகுல்; மேடையில் சம்மணமிட்டு அமர்ந்து, தோளில் மாட்டியிருந்த கிடாரை மடியில் வைத்து வாசித்தார். பக்கவாத்தியமாக வயலின் எம்பார் கண்ணன், பருப்பள்ளி ஃபால்குன் மிருதங்கம், கிரிதர் உடுப்பா கடம் என, சுத்தபத்தமான கர்னாடக கிளாசிக்கல் கச்சேரி அது. சென்னையில் கோகுல் வாசிக்கும் முதல் சோலோ!

கர்னாடக இசை உலகில் கிடார் என்றால் நினைவுக்குவருபவர் ஆர்.பிரசன்னா. இவர்தான் கோகுலுக்கு குரு. 1989, ஆகஸ்டில் மியூசிக் அகாடமியில் மேடையேறினார் பிரசன்னா. இப்போது அதே மேடையில் சீடனை ஏற்றி, முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தார்.

ஸ்கைப் குரு... ஷார்ப் சிஷ்யன்!

கச்சேரி தொடங்கும் முன் பிரசன்னாவுக்கு குரு காணிக்கை வழங்கிய கோகுல், அவர் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி ஆசி பெற்றார். எழுந்ததும் சீடனுக்குக் கையுயர்த்தி `ஹைஃபை’ கொடுத்து மகிழ்ந்தார் குரு. கச்சேரி தொடங்கும் சமயம் இன்னொரு ஹைஃபை! சம்பிரதாயமும் நவீனமும் சங்கமித்த வேளை அது.

பிரசன்னாவும் கோகுலும் இணைந்து 45 நிமிடத்துக்கு கேதாரகௌளை ராகத்தில் வாசித்த ஸ்வரங்களை, சமூகவலைதளத்தில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு - கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். இருவரும் சென்னையில் மார்கழியில் இணைந்து கிடார் டூயட் வாசித்தது உண்டு. அபுதாபி,  துபாய், ஷார்ஜா, பெங்களூரு போன்ற இடங்களில் கோகுல் சோலோ கச்சேரிகள் நடத்தியிருக்கிறார்.

துபாயில் பிறந்து வளர்ந்துகொண்டிருப்பவர் கோகுல்.  இப்போது பெங்களூரு - துபாய் என்று ஷட்டில் அடித்துக்கொண்டிருக்கிறார். ``எங்கள் வீட்டில் எப்போதும் கர்னாடக இசை ஒலித்துக்கொண்டிருக்கும். முக்கியமாக, தந்தி வாத்தியங்கள் நிறைய கேட்போம். எனவே கோகுலுக்கும் வாத்திய இசை மீது நாட்டம் ஏற்பட்டது. குறிப்பாக, கிடார் மீது’’ என்றார் கோகுலின் தாய் லதா.

மூன்று வருடங்களுக்கு முன்பாக பிரசன்னாவிடம் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். இவர் இருப்பது அமெரிக்காவில். எனவே, துபாய் வரும்போதெல்லாம் `ஒன்-டு-ஒன்’ க்ளாஸ் எடுப்பார். மற்ற நேரத்தில் ஸ்கைப் வழியே வகுப்பு!

``நானும் கோகுலும் குரு - சிஷ்யன் என்பதை மீறி நண்பர்கள் மாதிரி பழகுவோம். ஜோக் அடித்துச் சிரிப்போம்... சண்டை  போட்டுக்கொள்வோம்’’ என்றார் பிரசன்னா. லதா மேடத்தின் சமையல் இவருக்கு மிகவும் பிடிக்குமாம்!

மேடையேறியவுடன் `ஏறு மயில் ஏறி...’ என்ற திருப்புகழை வாசித்தார் கோகுல். முன்னதாக `வாதாபி’ ஸ்வரங்களில் எம்பார் கண்ணனுடன் கபடி விளையாடினார். இவரது கிடார் வாசிப்பில் வெளிப்பட்டது துல்லிய ஓசை. சில சமயம் மாண்டலின், சில வேளைகளில் வீணை மாதிரியும் ஒலித்துக் குளிர்வித்தது.

விஜயநாகிரி ராகத்தில் முத்தையா பாகவதர் `விஜயாம்பிகே...’ பாடலை வாசித்து, தான் எல்.கே.ஜி. பருவத்தைக் கடந்துவிட்டதை நிரூபித்தார். குருவின் குரு கன்யாகுமரி இயற்றிய தில்லானாவும், குரு பிரசன்னாவின் `Bowling for peace’ என்ற ராகமாலிகைப் பாடலும் வாசித்துக் கச்சேரியை முடித்துக்கொண்டார் கோகுல். டிசம்பரில் சபாக்கள் இவரைத் தயக்கமின்றி மேடையேற்றலாம்.

அரங்கில் நுழையும்போது கோகுல் வாசிக்கப்போகும் பாடல்களின் பட்டியலை ராக விவரங்களுடன் வழவழ காகிதத்தில் அச்சிட்டுக் கொடுத்தார்கள். ஆனால், கச்சேரி ஆரம்பமானதும் எதையுமே படிக்க இயலவில்லை. காரணம், அரங்கில் ஏனோ விளக்குகளை அணைத்து இருட்டாக்கி விட்டார்கள்!

பதின்பருவத்துக்குள் நுழைந்துவிட்டதால் `மழலை மேதை’ என்று கோகுலை அழைக்க முடியாது. `மேதை’ என்று சொல்லலாமா? அதைக் காலம் தீர்மானிக்கும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!