சினிமா
Published:Updated:

எம்.எல்.வி. - 90

எம்.எல்.வி. - 90
பிரீமியம் ஸ்டோரி
News
எம்.எல்.வி. - 90

வீயெஸ்வி - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி, பாரதிராஜா

சென்னை, ஜார்ஜ் டவுன் பகுதியில் அவர்கள் வீடு. குடும்பத் தலைவர் அய்யாசாமி ஐயர், அப்போது சங்கீத குருவாகப் பலருக்கும் பாட்டு சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார். மனைவி லலிதாங்கி, பாடகியாகப் பிரபலம். வெளியூர்களுக்கெல்லாம் சென்று நிறைய கச்சேரிகள் நடத்திக்கொண்டிருந்தவர். தம்பதிக்கு ஒரே வாரிசு, 1928-ம் வருடம் ஜூலை மாதம் 3-ம் தேதி பிறந்த பெண் குழந்தை. `வசந்தகுமாரி’ எனப் பெயரிட்டார்கள்; `வசந்தி’ எனச் செல்லமாக அழைத்தார்கள். குழந்தையைத் தொட்டிலில் இடும் விழாவுக்குப் பலரையும் அழைத்திருந்தார்கள். மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரும் வந்திருந்தார். அவசரமாக ஒரு கச்சேரி மேடை தயாரானது.

வசந்திக்கு மூன்று வயதிலேயே ஸ்வரங்களும் ராகங்களும் வசமானதில் வியப்பேதுமில்லை. ஆனால், நிரந்தரமில்லாத இசை வாழ்க்கைக்குள் மகளைத் தள்ளிவிட, பெற்றோருக்கு அப்போது விருப்பமில்லை. வசந்தியை மருத்துவராக்கும் கனவுடன் கான்வென்ட்டில் சேர்த்துவிட்டார்கள். ஆனால், இயற்கை வேறு பாதையை அமைத்துக்கொடுத்தது. லலிதாங்கியிடம் சங்கீதம் கற்றார். ஸ்வரங்களைக் குறிப்பெடுக்கப் (Notation) பழகினார். தாயும் மகளும் இணைந்து `புரந்தர மணி மாலை’ என்ற நூலை ஸ்வரக் குறிப்புகளுடன் வெளியிட்டார்கள். வசந்திக்கு அப்போது 13 வயது!

எம்.எல்.வி. - 90

1941-ல் பெங்களூரில் லலிதாங்கிக்குக் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. வசந்தியும் உடன் சென்றாள். கச்சேரி தொடங்குவதற்குச் சில மணி நேரம் முன்பு, லலிதாங்கிக்கு ஆஸ்துமா பிரச்னை அதிகமாகிவிட, மகளையே கச்சேரி நடத்தச் சொல்லிவிட்டார்கள். வசந்திக்கு அதுவே முதல் கச்சேரி. `மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி’ என்று மைக்கில் பெயர் அறிவிக்கப்பட்டது. `எம்.எல்.வி’ என்று பெயர் சுருங்கியது; பிரபலம் விரிவடைந்தது.

லலிதாங்கி, டி.கே.பட்டம்மாள், ஜி.என்.பாலசுப்ரமணியம் மூவரும் ரெக்கார்டிங் ஒன்றுக்காக வானொலி நிலையம் சென்றனர். அம்மாவுடன் சென்றிருந்த இளம் வசந்தியை, அங்கே கவனித்திருக்கிறார் ஜி.என்.பி. சிறுமியைப் பாடச்சொல்லிக் கேட்டிருக்கிறார். குரல் இனிமையால் கவரப்பட்டவர், ``இவளை என்கிட்டே விட்டுடுங்க. நான் பாட்டு சொல்லித்தர்றேன்’’ என்றார்.

எம்.எல்.வி. - 90`ஜி.என்.பி பாணி’யில் இருந்த நெளிவு சுளிவுகளைக் கற்று முன்னேறிய எம்.எல்.வி., தனக்கென்று தனி ஸ்டைலை உருவாக்கிக்கொண்டு வெற்றிப் படிக்கட்டுகளில் மடமடவென ஏறினார். இவரின் கச்சேரிகளில் மும்மூர்த்திகளின் பாடல்கள் இருக்கும். தமிழில் கீர்த்தனைகள், தாசர் பதங்கள், அபங்கம் என எல்லாம் வரிசைகட்டும். முழுச்சாப்பாடு சாப்பிட்ட திருப்தியோடு ரசிகர்கள் வீடு திரும்புவார்கள்.

திரைத்துறையும் எம்.எல்.வி-யை இருகரம் நீட்டி அழைத்து அணைத்துக்கொண்டது. எம்.கே. தியாகராஜ பாகவதரின் சொந்தப்படம் `ராஜமுக்தி.’ சி.ஆர்.சுப்புராமன் இசையமைத்த இந்தப் படத்தில் எம்.கே.டி.பாகவதருடன் எம்.எல்.வி பாடிய `என்ன ஆனந்தம்...’, `மணமகள்’ படத்தில் `எல்லாம் இன்பமயம்...’ எனத் திரைப்படப் பாடல்களின் பட்டியல் நீளமானது!

மதுரையில் கச்சேரி. மேடையில் ஒரு பக்கம் அய்யாசாமி ஐயர் உட்கார்ந்து மகள் பாடுவதை கவனித்துக்கொண்டிருக்க, நிர்வாகிகளில் இளைஞர் ஒருவரின் முகம் சிவந்தது. `இந்த ஆள் எதுக்குத் தேவையேயில்லாமல் மேடையில். கீழே இறங்கச் சொல்லுங்க...’ என்றவர், உட்கார்ந்திருப்பவர் பாடகியின் அப்பா எனத் தெரிந்து மன்னிப்பு கேட்க, அப்படிக் கேட்ட இளைஞர்தான் பின்னாளில் எம்.எல்.வி-யை மணந்த `விகடம்’ கிருஷ்ணமூர்த்தி!

ஜனவரி 25, 1951-ல் திருப்பதியில் திருமணம். கல்கி கிருஷ்ணமூர்த்தியும் கஸ்தூரி சீனிவாசனும் சாட்சிக் கையெழுத்திட்டார்கள். மகன் சங்கரராமனும் மகள் ஸ்ரீவித்யாவும் (பிரபல நடிகை) பிறந்தார்கள்.

எம்.எல்.வி. - 90

வாழ்க்கையை நேசித்தவர் எம்.எல்.வி. சுற்றிலும் நிறைய நண்பர்கள் இருப்பார்கள். சமையற்கலையில் வல்லவர். நன்றாக பியானோ வாசிப்பார். கிரிக்கெட்டில் ஆர்வமிக்கவர். டிசம்பர் இசை விழா நேரத்தில் சென்னையில் டெஸ்ட் நடக்கும். பகலில் ஸ்டேடியம் சென்று கிரிக்கெட் பார்த்துவிட்டு, மாலை வீடு திரும்பிப் புடவை மாற்றிக்கொண்டு கச்சேரிக்குக் கிளம்பிவிடுவாராம்!

இசை ஆராய்ச்சியாளர் வி.ஸ்ரீராம் தனது `கர்னாடிக் சம்மர்’ நூலில் எம்.எல்.வி-யைப் பற்றி எழுதும்போது குறிப்பிட்டிருக்கும் சம்பவங்களில் இரண்டு...

ஒவ்வொரு வருடமும் இசை விழாவில் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று கிருஷ்ணகான சபாவில் எம்.எல்.வி பாடுவது பல வருட வழக்கம். 1988-ம் ஆண்டில் அந்தத் தேதியில் முதுகுவலி காரணமாக நர்ஸிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எப்படியும் கச்சேரிக்கு வந்துவிடுவதாக எம்.எல்.வி உறுதியளித்திருந்தாலும், சபா நிர்வாகிகளுக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கையில்லை. கச்சேரி தொடங்க சில நிமிடம் இருந்தபோது, ஆம்புலன்ஸ் ஒன்று சபா வளாகத்துக்குள் நுழைகிறது. ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்டு உள்ளே அழைத்துச் செல்லப்படுகிறார் எம்.எல்.வி. திரை விலகியபோது சிரித்த முகத்துடன் மேடையில் அவர்! கச்சேரி முடிந்ததும் மறுபடியும் ஸ்ட்ரெச்சர், ஆம்புலன்ஸ், நர்ஸிங் ஹோம் என மேலும் சில வாரங்களுக்கு சிகிச்சை தொடர்ந்தது.

வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் நிறையவே பார்த்தவர் எம்.எல்.வி.  இருந்தாலும் பிறருக்கு உதவும் தயாளகுணம் அவரிடம் எப்போதும் இருந்தது. தன் மகளின் திருமணத்துக்கு உதவி கேட்டு எம்.எல்.வி-யிடம் வந்திருந்தார் ஓர் அன்பர். ``கொஞ்சம் இருங்கோ...’’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார் எம்.எல்.வி. திரும்பிவரும்போது அவரது கையில் தங்கத்தாலி; கழுத்தில் மஞ்சள் கயிறு!

கடந்த செவ்வாயன்று (3-ம் தேதி) மியூசிக் அகாடமியில் `எம்.எல்.வி - 90’ விழா. அதை எம்.எல்.வி-யின் சீடர் சுதா ரகுநாதனின் சமுதாய அறக்கட்டளையும், சாருமதி ராமச்சந்திரன், வயலின் கன்யாகுமரி உள்ளிட்ட ஏராளமான சீடர்களும் இணைந்து ஒற்றுமையாக நடத்தினார்கள்.

எம்.எல்.வி., அரூபமாக உள்ளம் குளிர்ந்திருப்பார்!