Published:Updated:

அபங் ஆச்சர்யம்!

அபங் ஆச்சர்யம்!
பிரீமியம் ஸ்டோரி
அபங் ஆச்சர்யம்!

வீயெஸ்வி - படம்: கே.ராஜசேகரன்

அபங் ஆச்சர்யம்!

வீயெஸ்வி - படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:
அபங் ஆச்சர்யம்!
பிரீமியம் ஸ்டோரி
அபங் ஆச்சர்யம்!

ஜூலை மாதம் கடைசி ஞாயிறன்று மங்களூர் டவுன்ஹால் அரங்கில் கொள்ளளவைவிட அதிகமான இசை ரசிகர்கள் அமர்ந்துகொண்டும் நின்றுகொண்டும்... வெளியே ஸ்பீக்கர் முன்பாக இன்னும் இருநூறு பேர்... உணர்ச்சி கொப்புளிக்கும் விட்டல நாமங்கள் பொழிந்து அவர்களை முழுவதுமாக நனையவைத்துவிட்டுத் திரும்பியிருந்தார்கள், ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள். அன்று அவர்கள் பாடியது, ஒன்லி அபங்!

அபங் ஆச்சர்யம்!

அதுதான் அபங் ஆச்சர்யம். பெரும்பாலும் மராட்டிய மொழியில் அமைந்த அபங் பாடல்கள், அளவில் சிறியவைதாம். 14-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் ஞானேஸ்வர், துக்காராம், ஏக்நாத் உள்ளிட்ட மகான்கள் விட்டலனைப் போற்றி இயற்றிய இந்த வகைப் பாடல்கள், கேட்போரைப் பரவசப்படுத்தும். அதிகம் அறியப்பட்டிருக்கும் நாமசங்கீர்த்தனம் மாதிரியானவை இவை. மெதுவாக ஆரம்பிக்கும். படிப்படியாக வேகமெடுக்கும். நிரவல் செய்வது மாதிரி ஒரே வரியைப் புரட்டி எடுத்துப் பாடுவார்கள். ஹைபிச்சில் உணர்ச்சிவசப்பட்டு `விட்டல... விட்டல...’ என்று முடிக்கும்போது `வாவ்’ என்று அரங்கம் குரல் கொடுக்கும். சிலருக்கு `சாமி’ வரும். சிலர் எழுந்து நின்று கை உயர்த்தி டான்ஸ் ஆடுவதும் உண்டு!

மங்களூருக்கு முன்பாக, ஜூலை 14-ம் தேதி ஆரம்பித்து போபால், இந்தோர், நாசிக், புனே, தானே என்று தொடர் விட்டலப் பயணம் செய்திருக்கிறார்கள் ரஞ்சனியும் காயத்ரியும்.

ஏன், எதற்கு, எப்படி?

``ஆஷாட மாதம் பண்டரிபுரம் விட்டலனுக்கு உகந்த மாதம். நமக்கு மார்கழி மாதிரி. அதுவும் `ஆஷாட ஏகாதசி’ ரொம்பவும் ஸ்பெஷல். `போலவா விட்டல்’ என்று பெயரிட்டு, கடந்த சில வருடமாக வெவ்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துவருகிறது, `பஞ்சம் நிஷாத்’ என்ற அமைப்பு. 2012-ம் வருடம் முதல் நாங்களும் இவர்களுடன் பயணம்செய்து பாடிவருகிறோம்” என்கிறார் இளையவர் காயத்ரி.

``மேடையில் முதலில் நான்கு பேர் சேர்ந்து பாடுவோம். பிறகு, நாங்கள் தனியாகப் பாடுவோம். நாசிக் மற்றும் புனேயில் கௌசிகி சக்ரபர்த்தி எங்களுடன் இணைந்து பாடினார். ஒவ்வோர் ஊரிலும் கச்சேரி முடிந்ததும் ரசிகர்கள் எங்களைச் சூழ்ந்துகொண்டு கண்ணீர் மல்க உருகியது நெகிழ்வான தருணங்கள். யார் பாடினாலும் விட்டல நாமாக்களுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம்” என்றார் ரஞ்சனி.

இன்று கர்னாடக இசையுலகில் உச்சத்தில் இருக்கும் ஒருசிலரில் இருவராகக் கொடிகட்டிப் பறந்துவரும் உடன்பிறப்புகளுக்கு, அபங் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

``சிறுவயதில் நாங்கள் மும்பையில் மாதுங்கா பகுதியில் இருந்தபோது ஆஷாட மாதங்களில் குழுக் குழுவாக கிருஷ்ண பக்தர்கள் அபங் பாடியபடியே பண்டரிபுரம் வரை நடந்தே செல்வார்கள். வீட்டுவாசலில் நின்றுகொண்டு கேட்போம். சிலிர்த்துப்போவோம். அபங் பாடல்களுக்கு அப்படித்தான் அடிமையானோம்” என்றார் காயத்ரி.

பெற்றோருடன் சகோதரிகள் சென்னையில் குடியேறினார்கள். ஒருசமயம் இவர்களின் பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கிறார் விஸ்வாஸ் என்கிற மராட்டியர். உலக வங்கியில் அதிகாரி. அபங் பாடுவதில் ஆற்றல்மிக்கவர். ஒருநாள், `பண்டரிகே பூத் மோடே...’ என்ற அபங் பாடலை விஸ்வாஸ் பாட, அதைப் பதிவுசெய்து வைத்து, பாடிப் பழகினார்கள். பிறகு மும்பை, கோலாப்பூர் போன்ற ஊர்களுக்குப் பயணிக்க நேர்ந்தபோது அங்கு இருக்கும் பண்டிதர்களிடம் அபங் கற்றிருக்கிறார்கள்.

``நாளடைவில் நாங்களே பாடல்களைத் தேர்வுசெய்து, மெட்டமைத்துப் பாடிப் பழகினோம். கச்சேரிகளின் முடிவுப் பகுதியில் அபங் பாட ஆரம்பித்தோம். ரசிகர்களுக்குப் பிடித்துப்போனது. நல்ல வரவேற்பும் கிடைத்தது” என்று ரஞ்சனியும் காயத்ரியும் கோரஸாகச் சொன்னது உண்மைதான்.

இன்று அபங் பாடாமல் இவர்கள் கச்சேரிகளை முடித்துவிட்டால், ரசிகர்கள் கொடி பிடித்துப் போராட்டத்தில் குதித்துவிடுவார்களோ என நினைக்கும் அளவுக்கு இருவரும் தனி முத்திரை பதித்துவிட்டார்கள்!