
இதோ இன்னொரு இசைத்தமிழன்!
அமெரிக்காவில், ரம்மியமான ஒளி படர்ந்த ஓர் இசை அரங்கம்... அங்கு பியானோவில் விளையாடு கின்றன லிடியனின் விரல்கள்.. அந்த ரியாலிட்டி ஷோவுக்கு வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த நடுவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்ட, சின்னப் புன்னகையுடன் அதை ஏற்றுக்கொள்கிறான் தமிழ்ச்சிறுவன் லிடியன் நாதஸ்வரன். இந்த நிகழ்ச்சியின் வீடியோவை அமிதாப்பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து லிடியனுக்கு வாழ்த்துச் சொல்ல, வைரல் ஆனது அந்த வீடியோ. சென்னை, சாலிகிராமத்தில் உள்ள லிடியனின் வீட்டுக்குச் சென்றேன்.
லிடியனின் அம்மா ஜான்ஸி, “என் கணவர் சதிஷ் வர்ஷன் ஒரு இசையமைப்பாளர். அதனால் சின்ன வயசிலிருந்தே என் குழந்தைகளுக்கும் இசை மீது ஆர்வம் வர ஆரம்பிச்சது. லிடியனின் அக்கா அமிர்தவர்ஷினி ரெண்டு வயசில் பேச ஆரம்பிக்கும் போதே பாடவும் ஆரம்பிச்சுட்டா. என் குழந்தைகள் பொம்மைகளைவிட, இசைக்கருவிகள் கூடதான் அதிகம் விளையாடியிருக்காங்க. லிடியனுக்கு ரெண்டு வயசானப்போ, அவங்க அப்பா அடிக்கும் டிரம்ஸ் பீட்டை அப்படியே ரிப்பீட் பண்ணுவான். எங்க ரெண்டு பசங்களுமே கே.ஜி வகுப்புகள்வரைதான் ஸ்கூலுக்குப் போனாங்க. படிப்பைவிட இசை மேல ஆர்வம் இருக்குற பசங்களுக்கு ஏன் படிப்பைத் திணிக்கணும்னு, படிப்பை நிறுத்திட்டோம்” - என்று சர்ப்ரைஸ் கொடுத்த ஜான்ஸியைத் தொடர்ந்தார் சதிஷ் வர்ஷன்.


“இதுவரை ஒரு முறைகூட, ‘நீ இந்த இன்ஸ்ட்ரூமென்ட்தான் வாசிக்கணும்’, ‘நீ இந்த மாஸ்டர்கிட்டதான் கிளாஸ் போகணும்’னு எல்லாம் அவங்களைக் கட்டாயப்படுத்தினதில்லை. இன்னொரு பக்கம், அவங்க கத்துக்க ஆசைப்பட்ட எல்லா இன்ஸ்ட்ரூமென்ட்ஸையும் கத்துக்க வெச்சோம். லிடியனுக்கு நாலு வயசானப்போ, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு மியூசிக் நிகழ்ச்சியில் என்னுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசிச்சு அவ்ளோ கைத்தட்டல்கள் வாங்கினான். சொன்னா நம்ப மாட்டீங்க... தெருவில் நாய் குரைச்சாகூட, அது இந்த இசையில் குரைக்குதுன்னு சொல்லுவான். இப்படி அவனைச் சுத்தியிருக்கிற ஒவ்வொரு ஒலியையும் இசையா பார்ப்பான். அவன் கத்துக்க ஆசைப்படுற எல்லாக் கருவிகளுக்கும் முதல் ஆறு மாசம்தான் கிளாஸுக்குப் போவான். அதில் பேஸிக் கத்துக்கிட்டு அவனே வாசிக்க ஆரம்பிச்சுடுவான்’’ என்று சீரியஸாகப் பேசும் தன் அப்பாவைப் பார்த்துக்கொண்டிருந்த லிடியன், கூலாகப் பேசினான்.

“அமெரிக்காவில் நடந்த `Ellen DeGeneres’ என்ற டாக் ஷோவில் கலந்துக்கத்தான் நான் முயன்றேன். அந்த வாய்ப்பு கிடைக்கலை. ‘The World’s Best’ ஷோவில் கலந்துக்குற வாய்ப்பு கிடைச்சது. அப்பாதான் கூட்டிட்டுப் போனாங்க. எல்லா இன்ஸ்ட்ரூமென்ட்ஸும் வாசிக்கத் தெரிந்தாலும் பியானோ எனக்கு ரொம்பப் பிடிக்கும்ங்கிறதால அந்த நிகழ்ச்சியில் ‘The flight of the bumblebee’ என்ற இசைக் குறிப்பை வாசிச்சேன். இது கஷ்டமான இசைக் குறிப்பு என்பதால நிறைய பயிற்சி வேணும். நிகழ்ச்சியில் வாசிக்க நான் இதைத் தேர்வு செஞ்சிருக்கேன்னு சொன்னதுமே எல்லோரும் கிளாப்ஸ் பண்ணினாங்க. அடுத்த நொடி 208 பீட்ஸில் அதை இசைக்க, நடுவர்கள் ஷாக்கிங் சர்ப்ரைஸோடு பார்த்தாங்க. தொடர்ந்து அதை நான் 325 பீட்ஸில் வாசிக்க, நடுவர்கள் உட்பட எல்லோரும் எழுந்து கைதட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ டாடி அழுதுட்டே கிளாப் பண்ணினாங்க. என்னோட அந்த வீடியோவை ரஹ்மான் அங்கிள், அனிருத் அண்ணான்னு நிறைய பேர் ஷேர் பண்ணியிருந்தாங்க. யுவன் அங்கிள் போன் பண்ணிப் பாராட்டுனாங்க. இன்னொண்ணு தெரியுமா... ரஹ்மான் அங்கிள் இதுக்கு முன்னாடிகூட ஒருமுறை என்னோட வீடியோவை ஷேர் பண்ணிருக்காங்க. இந்த ரியாலிட்டி ஷோவில் அடுத்தடுத்து நிறைய ரவுண்ட்ஸ் இருக்கு. ஒவ்வொரு ரவுண்டிலும் ஒரு புதுத் திறமையைக் காண்பிக்கப் போறேன். நிச்சயமா ஜெயிப்பேன். பரிசுக்காக இல்ல, அப்பாவோட சந்தோஷத்துக்காக!’’ என்று மன உறுதியுடன் கூறிய லிடியன் இன்னொரு மகிழ்ச்சிச் செய்தியையும் பகிர்ந்துகொண்டார்... ‘` `The World’s Best’ ஷோவில் என்னுடைய பர்பாமன்ஸைப் பார்த்து `Ellen DeGeneres’ வாய்ப்பு இப்போ என்னைத் தேடி வந்துள்ளது.’’
ஆல் தி பெஸ்ட் லிடியன்!
- சு.சூர்யா கோமதி, படங்கள்: க.பாலாஜி