Published:Updated:

என் அப்பாவின் ஆசை நிறைவேறிடுச்சு! - ‘கானா’ இசைவாணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
என் அப்பாவின் ஆசை நிறைவேறிடுச்சு! - ‘கானா’ இசைவாணி
என் அப்பாவின் ஆசை நிறைவேறிடுச்சு! - ‘கானா’ இசைவாணி

இசையிலே தொடங்குதம்மா...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

யக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமும், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸும் இணைந்து ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' மியூசிக் பேண்டு மூலமாக நடத்திய இசை நிகழ்ச்சியின் ஹைலைட், கானா பாடல்கள். சாதிக்கு எதிராக, சமூகநீதி ஓங்கி ஒலித்த அந்தக் கானா குழுவின் ஒரே பெண் பாடகர், இசைவாணி. கலக்கலான கானா பாடல்களைப் பாடி அனைவரையும் ஈர்த்தவர்.

இப்போது `கலர்ஸ் தமிழ்' டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘சிங்கிங் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில், ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’வைச் சேர்ந்த முத்துவுடன் இணைந்து போட்டியாளராகக் களமிறங்கியிருக்கிறார்.

‘`என் அப்பா ஒரு பாடகர், கீ-போர்டு பிளேயர். எனக்கு இசையில் ஆர்வமில்லைன்னாலும் நான் வளர வளர, அப்பாவே எனக்குப் பாடச் சொல்லிக்கொடுத்தார். `நல்லா பாடுறே’னு சொல்லி, ஒரு கச்சேரியில் என்னை மேடை ஏற்ற, நான் தைரியமா பாடினேன். எல்லோரும் கைதட்டினாங்க. அந்தக் கைத்தட்டல் எனக்குப் பிடிச்சுப்போக, அதுக்கு அப்புறம்தான் ஈடுபாட்டோடு இசையைக் கத்துக்க ஆரம்பிச் சேன். கிட்டத்தட்ட 16 வருஷங் களா லைட் மியூசிக்கில் பாடிட்டிருந்தேன்’’ என்கிறவர், ‘கானா’ பாடத் தொடங்கியது குறித்துப் பேசுகிறார்.

என் அப்பாவின் ஆசை நிறைவேறிடுச்சு! - ‘கானா’ இசைவாணி

‘`கச்சேரியில் பாடும்போது கூட்டத்திலிருக்கிற அண்ணனுங்க கானா பாடச் சொல்லிக் கேட்பாங்க. எங்க ஏரியா அண்ணனுங்க பாடுற கானாவை கேட்டிருக்கேன் என்பதால, நானும் கானாவை எடுத்து விடுவேன். இப்படியே நான் பாடுற கச்சேரிகள்ல எல்லாம் என்னை கானா பாடச்சொல்லிக் கேட்க ஆரம்பிச்சாங்க. கானா ஒரு மகத்தான இசை வடிவம்னு, அதுக்குள்ள போனதுக்குப் பிறகுதான் புரிஞ்சுக்கிட்டேன்’’ என்பவரின் முகத்தில் பெருமிதம்.

‘`நர்சிங் படிக்கணும்னு ஆசைப்பட்டு, குடும்பச் சூழலால படிப்பைத் தொடர முடியாம போச்சு. லைட் மியூசிக்ல பாடுறதும் வாழ்க்கைக்கு பெருசா பயன் இல்லைன்னு அதை விட்டுட்டு ஒரு தனியார் நிறுவனத்துல வேலைக்குப்போக ஆரம்பிச்சேன். அப்பதான், பா.இரஞ்சித் அண்ணன் ஒரு கானா டீம் ஆரம்பிக்கிறாங்கன்னு மியூசிக் டைரக்டர் சபேஷ் அண்ணன் சொல்லி, என்னை ஆடிஷனுக்குப் போகச் சொன்னாங்க. நான் லைட் மியூசிக்ல பாடுறதால ஒரிஜினல் குரல்ல பாடாம வேற குரல் எடுத்துப் பாடுவேன். ஆடிஷன்ல இரஞ்சித் அண்ணன், முதல்ல அதை மாத்திக்கச் சொன்னார். ‘நீ பேசுற மாதிரியே பாடு’ன்னு சொன்னார். பேசுற மாதிரி எப்படிப் பாட முடியும்னு யோசிச்சேன். ஆனா, ஒரிஜினல் குரலில் பாடி அதைக் கேட்டப்ப எனக்கே புதுசா இருந்துச்சு.

நான் ஆடிஷன்ல செலெக்ட் ஆனதும் ‘வானம்’ நிகழ்ச்சியில் பாடுறதுக்காகப் பயிற்சிக்கு வரச்சொன்னாங்க. எங்க வீட்டுல அப்பதான் நான் ஆடிஷன்ல தேர்வான விஷயத்தையே சொல்லி, பிராக்டீஸுக்குப் போக அனுமதி கேட்டேன். அனுப்ப மறுத்துட்டாங்க. அவங்க பேச்சை மீறித்தான் ‘வானம்’ நிகழ்ச்சில பாடினேன். அங்கே வந்திருந்த என் குடும்பத்தினர் அந்த நிகழ்ச்சியையும், எனக்குக் கிடைச்ச வரவேற்பையும் பார்த்துட்டு, ‘உனக்குப் பிடிச்சதைப் பண்ணு’ன்னு சுதந்திரம் கொடுத்துட்டாங்க’’ என்கிறவர், சில நொடிகள் மெளனத்துக்குப் பின் தொடர்கிறார்.

‘`ப்ளஸ் டூ முடிச்சப்போ, கிளாஸிகல் மியூசிக்ல டிகிரி படிக்கலாம்னு அட்மிஷனுக்குப் போயிருந்தோம். முதல் கேள்வியா, நீங்க என்ன சாதின்னுதான் கேட்டாங்க. என் சாதியைச் சொல்லிட்டு, எனக்கு இந்தப் படிப்பே வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டேன். இசையில்கூட சாதி பார்க்குற கட்டமைப்பை உடைக்க உருவானதுதான் ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழு. `மனுஷனை மனுஷனா பாருங்க' என்பதுதான் நாங்க சொல்ற செய்தி. இந்த இசைக்குழு எனக்குத் தந்த வெளிச்சம் காரணமா நிறைய வாய்ப்புகள் கிடைச்சதோடு, இப்போ என் அப்பாவுடைய ஆசையையும் என்னால நிறைவேற்ற முடிஞ்சிருக்கு. ‘நாடோடிகள் 2’, ‘ஜெயில்’, ‘அசால்ட்டு’ன்னு மூணு திரைப்படங்களில் பாடியிருக்கேன்’’ என்கிறவரின் கண்களில் பிரகாசம்!

- வெ.வித்யா காயத்ரி,  படம்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு