Published:Updated:

விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? - இசை விமர்சனம்

விஜய், இயக்குநர் மகேந்திரன், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா ஆகியோரின் நடிப்பில், அட்லி இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘தெறி’. கடந்த ஞாயிறு வெளியான இந்தப் படத்தின் பாடல்களை இரண்டு நாட்களாக கேட்டபிறகு.. 

2006ல் வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷின் 50வது படம். பத்து வருடங்கள்.. 50 படங்கள். அதற்கு முதலில் பூங்கொத்துகள் ஜிவிபி!

இனி இசை விமர்சனத்திற்கு வருவோம்...

பாடல்:         ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
வரிகள்:      ரோகேஷ்
குரல்கள்:  தேவா, பாலசந்திரன்

விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? -  இசை விமர்சனம்

தேவா - பாலசந்திரன் இணைந்து பாடிய பாடல். டிரெய்லரிலேயே ஹிட்டடித்த டிரம்பெட் இசையுடன், தேவாவின் குரலில் தொடங்குகிறது பாடல்.  ரோகேஷ் வரிகள்.  அறிமுகப்பாடலாக இருக்கலாம். போலீஸின் பெருமை பேசும் வரிகள்.

பல்லவி முடிந்ததும் வரும் இசைக்கு வாய் தானாக ‘வாட்ட கருவாட்’ என்கிறது. சரணத்தின் மெட்டுகள் பாடலிலிருந்து விலகி பயணிப்பது குறையே. பல்லவியின் அதே டெம்போ இருந்திருக்கலாம். தேவாவின் குரலில் கேட்ட ஒரு சில கானாப்பாடல்களையும் ஞாபகப்படுத்துகிறது சரணத்தின் மெட்டுகள்.

கடைசி நாற்பது நொடிகள் குத்தாட்டம் போட வசதியாய் தாரை தப்பட்டையில் பின்னியிருக்கிறார் ஜிவிபி. விஜய் ரசிகர்களுக்கான பாடல்!

விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? -  இசை விமர்சனம்

                                          --------------------------------------------------------------------------

பாடல்:        என் ஜீவன்
வரிகள்:      நா. முத்துகுமார் (சமஸ்கிருத வரிகள் - ஆர். தியாகராஜன்)
குரல்கள்:  ஹரிஹரன், சைந்தவி, வைக்கம் விஜயலக்ஷ்மி

விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? -  இசை விமர்சனம்

ஈடன் கார்டனில் கங்குலி இறங்கி அடிக்கும் சிக்ஸராய் தன் ஃபேவரைட் ஜானரில் ஜி.வி. பிரகாஷ் போட்டிருக்கும் பாடல். கிடாரில் மென்மையாய் ஆரம்பித்து, வயலினும் அதோடு சேர்ந்து கொள்ள ‘உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே’ என்று சைந்தவி குரல் தொடங்கும்போது, மேலே அண்ணாந்து பார்த்து, ஒரு சொட்டு மழைத்துளி விழாதா என்ற ஏக்கம் வருகிறது. ‘உன் மார்பில் சாந்து சாகத்தோணுதே.. ஓ...’ வரிகளைத் தொடர்ந்து வரும் வயலின் இசை சுண்டியிழுக்கிறது. இதே மெட்டுக்கு முதல் சரணத்திற்குப் பிறகு ஹரிஹரன் குரலோடு இணைந்து வரும் புல்லாங்குழலும், இரண்டாம் சரணத்தில் அப்படியே சாதாரணமாய் எலக்ட்ரானிக் இசை இணைத்தும் ஸ்பெஷல் காட்டியிருக்கிறார் ஜிவிபி.  கூடவே பாடும் ஹரிஹரன் குரல் கேட்டதும் ‘ அட.. ஹரியா!’ என்று சந்தோஷப்படுவதற்குள் வைக்கம் விஜயலக்‌ஷ்மியின் குரலில் சம்ஸ்கிருத வார்த்தைகளோடு இடையிசை. சபாஷ் ஜிவிபி. நா.முத்துக்குமார் பற்றி சொல்வதற்கென்ன இருக்கிறது. ‘முடியாத பார்வை.. நீ வீச வேண்டும்.. முழுநேரம் என்மேல் உன்வாசம் வேண்டும்’ என்று கீபோர்டில் காதலைக் கொட்டி எழுதியிருக்கிறார்.

இரண்டாவது இடையிசை முழுவதும் வயலின் ‘வாவ்’ சொல்ல வைக்கிறது. பாடல் முடியும்போது கிடாரும் அதோடு சேரும் வயலினும்.. ஜிவிபி.. லவ் யூ மேன்!

விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? -  இசை விமர்சனம்

                       _____________________________________________________

பாடல்:       ஈனா மீனா டீகா
வரிகள்:     பா.விஜய் (ராப்: அருண் ராஜா காமராஜ்)
குரல்கள்:  உத்ரா உண்ணிகிருஷ்ணன், ஜிவி பிரகாஷ்குமார்.

விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? -  இசை விமர்சனம்

தந்தை மகளுக்கான பாடல். செல்லச் சண்டை உரையாடலில் ஆரம்பித்து டேக் ஆஃப் ஆகும் பாடலில் எலக்ட்ரானிக் இசைக்குப் பிறகு ஜிவிபிரகாஷ் குரலில் தொடர்கிறது பாடல். அப்பாவும் மகளும் செல்லம் கொஞ்சிக் கொள்ளும் பாடலின், ‘ஏ.. ஹே.. ஏஹேஹே’ ஆலாப்பில் இந்தி வாசம் வீசுகிறது. இடையிசையில் டிரம்ஃபெட்டும், ராக் அண்ட் ரோல் இசையும் கவர்கிறது. முதல் இடையிசையை விட, இரண்டாம் இடையிசை ஆட்டம் போடத் தூண்டுகிறது. வழக்கமான ஜிவிபிரகாஷின் ஜானரிலிருந்து கொஞ்சம் வேறு பட்டு அவர் முயற்சித்திருக்கும் பாடல். பாடலுக்கு ப்ளஸ் குரலில் தேன் கலந்திருக்கும் உத்ரா உண்ணிகிருஷ்ணன்!

விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? -  இசை விமர்சனம்

                       ________________________________________________

பாடல்:        ராங்கு.. ராங்கு
வரிகள்:      கபிலன்
குரல்கள்:  டி.ஆர், சோனு காக்கர், ஜிவிபி

விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? -  இசை விமர்சனம்

 ‘காயாத கானகத்தே என்று ’ஓல்ட்’ டைப்பில் துவங்கி, ‘மேயாத மானை’ திரும்பத் திரும்பச் சொல்லி,  ‘உன்னால நான் கெட்டேன்’ என்று இறங்கி அடிக்கும் டிபிகல் டி ஆர் ஸ்டைல் குத்துப்பாட்டு. விஜய், எமி ஜாக்ஸனுக்கான பாடல் என்று யூட்யூப் சொல்கிறது. சரணத்தில் கொஞ்சம் மெலடி எட்டிப்பார்ப்பது ஈர்க்கிறது.  தெறிக்க விடும் முடிவுடன் ஜிவிபி இசையமைத்திருக்கும் பாடல். டிரம்ஃபெட்டில் ஆரம்பித்து பாடல் முழுதும் குத்துதான். அதுவும் கடைசி ஒரு நிமிஷம் புல்லாங்குழலிசையுடன் வரும் குத்தில், தியேட்டரில் ஆட்டம் போடவேண்டும் என்றே செய்திருக்கிறார். மற்றுமொரு குத்துப்பாட்டு.  அவ்வளவுதான்.

விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? -  இசை விமர்சனம்

                    ____________________________________________________________

பாடல்:      செல்லாக்குட்டியே
வரிகள்:     கபிலன்
குரல்கள்: விஜய், நீத்தி மோகன்

விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? -  இசை விமர்சனம்

எங்கேயோ கேட்ட இசையில் ஆரம்பிக்கும் பாடல் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு செல்லாக்குட்டியே என விஜய் குரல் வரும்போது ஸ்பீட் எடுத்து, ‘ஐ ஃபார் யூ யூ ஃபார் மீ’-யில் செகண்ட் கியருக்குத் தாவி, ‘துள்ளி ஓடும் மீனே.. தூண்டில் போடுவேனே’ வில் டாப் கியரெடுக்கிறது. ‘ஐ ஃபார் யூ.. யூ ஃபார் மி’ மெட்டு, ‘சந்தங்கள் நீயானால்’ மெட்டை நினைவுக்கு கொண்டு வருகிறது. முதல் சரணத்திற்கு முன் வரும் ‘ஓர் ஊரில் காதல் இல்லையென்றால்...’ பாடலின் டெம்போவைக் குறைத்துவிடுகிறது. அந்தக் குட்டிப் போர்ஷனை வெட்டியிருக்கலாம். ‘மலையாளப்பூவுக்கு மாராப்பு..’ எனும் இரண்டாம் சரணத்தில் மீண்டும் டெம்போ ஏறுகிறது . இரண்டாவது இடையிசையிலும் கொஞ்சம் தடுமாற்றம். ஆரம்ப டெம்போவை அப்படியே கொண்டு போயிருக்கலாம். திரும்பத் திரும்ப வரும் ஹார்மோனியம் இசை டபுள் ஓகே. ஃபோக், எலக்ட்ரானிக் ஃப்யூஷன், என்று கலந்து கட்டும் தனித்துவமான இசை. நீத்தி மோகன் சொல்லும் அந்த ‘ஐ ஃபார்ர்ர் யூ’ குரலுக்காக காதலர்களும், ‘சொல்ரீ.. செல்லாக்குட்டீ’ என்ற விஜய் குரலுக்காக காதலிகளும் கேட்கலாம்.

விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? -  இசை விமர்சனம்

                   ______________________________________________________________

பாடல்:    தாய்மை வாழ்கென
வரிகள்:  புலவர் புலமைப்பித்தன்
குரல்:       பாம்பே ஜெயஸ்ரீ

விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? -  இசை விமர்சனம்

‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா’வின் 2016 வெர்ஷன். பாம்பே ஜெயஸ்ரீயும் குரலும், புலமைப்பித்தனின் வரிகளும் வசீகரிக்கின்றதென்றால், இடையிசையில் ஜிவிபி, புல்லாங்குழல் மெட்டில் கவர்கிறார். ஒரே சீராகப் போய்க்கொண்டிருக்கும் பாடல் ஒன்றரை நிமிடங்களுக்கு மேல் வேறொரு மெட்டில் பயணித்து கோரஸ் + புல்லாங்குழலில் அமைதியாக முடிகிறது. இன்னொரு ஜிவிபி ஜானர், சின்னப் பாடல்.

விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? -  இசை விமர்சனம்

                         ______________________________________________________________

பாடல் (அ) இசை:    டப் தெறி ஸ்டெப்
வார்த்தைகளும் குரலும்: அருண்ராஜா காமராஜ்

விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? -  இசை விமர்சனம்

தீம் இசை. அருண்ராஜா காமராஜ் அவரே எழுதி பாடியிருக்கிறார். டிரெம்ஃபெட்டில் தொடங்கி, எலக்ட்ரானிக் இசையில் எகிறத்தொடங்கி ‘தோட்டா தெறிக்க தெறிக்க..’ என்று ஆரம்பித்து ‘தெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றி’ என்று கெத்து காட்டும் பாடல் விசில் வரும்போது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து மீண்டும் ஸ்பீடாகிறது. ஆனா ஒண்ணு பாஸ்.. இந்த மாதிரி பாட்டெல்லாம் டெம்போ எறங்கவே கூடாது. அப்படியேஏஏஏஏ மேல மேல மேல-ன்னு போய்ட்டே இருக்கணும் பாஸ்!

விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? -  இசை விமர்சனம்

                                           --------------------------------------------------

ஜி.வி.பிரகாஷ்குமார் ஒரு பேட்டியில், ’நிச்சயம் ரசிகர்களை ஏமாற்றாது’ என்றார். விஜய் பாடல்கள் என்றாலே வெகுநாட்களுக்கு டிவியிலோ, ரியாலிட்டி ஷோக்களிலோ ரிப்பீட் ஆகிக் கொண்டே இருக்கும். இதிலும் ஏமாற்றவில்லை ஜி.வி.பிரகாஷ்குமார். அவர் பெயர் சொல்ல ‘என் ஜீவன்’ பாடல், விஜய் ரசிகர்களுக்காக ஜித்து ஜில்லாடி பாடல், குத்தாட்டம் போட டி ஆர் குரலில் ‘ராங்கு ராங்கு’ பாடல், காதலர்களுக்காக ஒரு செல்லாக்குட்டிப் பாடல், குடும்பத்துக்கு ஒரு தாய்மை பாடல், குட்டீஸ்க்கு ஒரு ஈனாமீனா பாடல் என்று கலந்து கட்டிய பேக்கேஜாக வந்திருக்கிறது தெறி இசை ஆல்பம்!

-சத்ரியன்

அடுத்த கட்டுரைக்கு