Published:Updated:

ரஜினி - சந்தோஷ்நாராயணன் காம்போ - ரஜினி ரசிகர்களை ஈர்த்திருக்கிறதா?

ரஜினி - சந்தோஷ்நாராயணன் காம்போ - ரஜினி ரசிகர்களை ஈர்த்திருக்கிறதா?
ரஜினி - சந்தோஷ்நாராயணன் காம்போ - ரஜினி ரசிகர்களை ஈர்த்திருக்கிறதா?

ரஜினி - சந்தோஷ்நாராயணன் காம்போ - ரஜினி ரசிகர்களை ஈர்த்திருக்கிறதா?

கபாலி இசை வெளியான வேகத்தில் மீண்டும் பற்றிக் கொண்டிருக்கிறது ‘நெருப்புடா’ ஜுரம். எதிர்பார்த்தது போலவே, பாடல்களைப் பற்றி பலப்பல கருத்துக்கள். ஒவ்வொரு பாடலிலும் என்ன விசேஷம்... மொத்த இசைத் தொகுப்பிலும் கவர்ந்தது எது..? பார்க்கலாம்!

பாடல்:         உலகம் ஒருவனுக்கா
வரிகள்:     கபிலன் / ராப் - விவேக்
குரல்கள்:  அனந்து, சந்தோஷ் நாராயணன், கானாபாலா

சாதாரணமாக ஆரம்பித்து, டிபிகல் சந்தோஷ் நாராயணன் ஸ்டைலில் அவர் குரலிலேயே இரண்டாவது வரியில் ‘நீ நீயாய் வந்தாய்...’ என்று ஹைபிட்ச் தொட ‘அட.. பிடிச்சுடும்’ என்று நம்பிக்கை தருகிறது பாடல். முதல் இடையிசைக்கு முன் வரும் ‘எண்ணத்தில் நூறு திட்டமிட்டு.. கபாலி வாரான் கையத்தட்டு’ ராப் - கச்சிதம். நெருப்புடா பாடலில் வரும் அதே கபாலி விசில். ’மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேட்காது’ போன்ற வரிகள் பா.ரஞ்சித்தின் ஆளுமையைக் காட்டுகிறது.

பாடல்:         மாயநதி
வரிகள்:       உமாதேவி
குரல்கள்:   அனந்து, ப்ரதீப்குமார், ஸ்வேதா மோகன்

‘நம்ம ஸ்டைலிலேயெ போடுவோம்’ என்று சந்தோஷ் நாராயணன் முடிவெடுத்து போட்டிருக்கும் மற்றொரு பாடல். ஆரம்ப ஸ்டிரிங்ஸ் இசை சூப்பர்! ‘நெஞ்சமெல்லாம் வண்ணம்’ என்று ஆரம்பிக்கிற பாடலில் ‘மாயநதி இன்று மார்பில் வழியுதே’ வரிகளின் மெட்டு மிகக் கவர்கிறது. குக்கூவின் வாசனைக் கொஞ்சம் அடிக்கிறது. உமாதேவியின் இனிய தமிழ் வரிகளுக்கு ஆயிரம் விருப்பங்கள் (லைக்ஸ்!). 

 பாடல்:    வீரத்துறந்தாரா
வரிகள்:   உமாதேவி (English Rap: Roshan Jamrock)
குரல்கள்: கானா பாலா, லாரன்ஸ், ப்ரதீப்குமார்

ஒரு லவ் சாங்குக்கு உண்டான ஆலாப்-புடன் ‘தும்தும் தாராரா’ என்று ஆரம்பித்து கொஞ்சம் வேகமெடுத்து ‘வீரத்துறந்தரா.. எமை ஆளும் நிரந்தரா’ என்று தொடர்கிறது பாடல். கொஞ்சம் கடினமான மெட்டுக்கு, நல்ல தமிழ் வரிகள். ஃப்ளாஷ்பேக் ரஜினிக்கான பாடல் என்று கணிக்க முடிகிறது. இடையில் ஆங்கில ராப்பில் டான் புகழ் பாடுகிறார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை சீராகச் செல்லும் ஒரே மெட்டு கவர்கிறது.

 பாடல்:  வானம் பார்த்தேன்
வரிகள்: கபிலன்
குரல்கள்: ப்ரதீப்குமார்

‘நதியென நான் ஓடோடி’ என்று பரிதாபக் குரலில் ஆரம்பிக்கிற பாடல். சந்தோஷ் நாராயணன் பிராண்ட் பாடல். ‘இடப்பக்கம் துடித்திடும் இருதய இசையென இருந்தவள் அவள்’ என வரிகளில் கபிலன் பவுண்டரி அடிக்க பார்ட்னர்ஷிப் கொடுக்கிறது ப்ரதீப் குமாரின் மென்குரல். முதல் இடையிசை முழுவதும் அமைதியான, மனதைப் பிசைகிற புல்லாங்குழல். இரண்டாம் இடையிசையில், கோரஸுக்குப் பிறகு அதே புல்லாங்குழல் சிறு உற்சாகத்துடன் ஒலிப்பது க்ளாஸ்! கோரஸும், புல்லாங்குழலும், பாடலுடனே வரும் பீட்-டும் அருமை.

பாடல்:    நெருப்புடா
வரிகள்: அருண்ராஜா காமராஜ்
குரல்:      அருண்ராஜா காமராஜ்

சாலையில் ஆம்புலன்ஸ், போலீஸ் வண்டிகளின் சைரன் கேட்டால்கூட, இந்த மியூசிக்தான் ஞாபகம் வருகிறதென்ற அளவுக்கு மனதில் பதிந்து போன ‘நெருப்புடா’ ஆரம்ப டோன். பாட்டு ஆரம்பித்ததுமே.. ’நெருப்புடா நெருங்குடா...’ என்று மிரட்டுகிறது. கனல் வரிகள் நரம்பைச் சூடேற்ற, வெறித்தனக் குரலில் பாடியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ். நடுவில் ரஜினி குரலில் வரும் ’நான் வந்துட்டேன் சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு. 25 வர்ஷத்துக்கு முன்னால எப்டிப் போனாரோ கபாலி அப்டியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு’... ரஜினி ரசிகர்களுக்கான டபுள் டமாக்கா குதூகலம். முதல் இடையிசையில் விசிலில் வரும் கௌபாய் டைப் இசையில் ‘கபாலீஈஈஈஈஈ’ அப்டியே உட்காருகிறது.

கபாலி இசை குறித்த ஒரு பெரிய பின்குறிப்பு:-

16 வயதினிலேவில் ஆரம்பித்த கமல் - ராஜா காம்போ, நடுநடுவில் விட்டாலும் சபாஷ் நாயுடு வரை தொடர்கிறது. ரஜினியைப் பொறுத்தவரை, ரஜினி - இளையராஜா என்கிற கூட்டுச் சாம்ராஜ்யத்தை சந்திரபோஸ், அம்சலேகா என்று சிலர் எட்டிப் பார்த்துவிட்டுப் போனாலும், தேவாதான் அண்ணாமலை படம் மூலம் அதை மெள்ள ஆக்ரமித்தார். ’தேவாவா.. ரஜினி படத்துக்கா...” என்று சலிப்போடு பாடல் கேட்டால் ‘வந்தேண்டா பால்காரன்’, ‘வெற்றி நிச்சயம்’ தவிர வேறெதுவும் ஒட்டவில்லை. ஆனால், படம் பார்க்கப் போனால், ரஜினிக்கு டைட்டில் கார்டில் ‘ஹே.. ஹே...’ என்றொலிக்க ஸ்பெஷல் இசை போட்டு ரசிகர்களைத் தன் பக்கம் இழுத்துவிட்டார் தேவா. படம் பார்த்தபின் ‘கொண்டையில் தாழம்பூவும்’, ‘ஒரு பெண்புறாவும்’ ஓகேதானே என்று தோன்றியது. அதே கதைதான் பாட்ஷாவிலும். ‘நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்’தான் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த பாடல். அந்தப் படத்தின் பிற பாடல்கள், படம் வந்த பிறகுதான் பரவால்லியோ என்று தோன்ற ஆரம்பித்தது.

பாட்ஷா வெளியான அதே வருடத்தின் பின்பாதியில் வந்தது முத்து. முதன்முறையாக ரஜினி - ரஹ்மான் காம்போ. இவரும் ஏமாற்றவில்லை. ‘ஒருவன் ஒருவன் முதலாளியும்’ ‘தில்லானா தில்லானாவும்’ திரும்பத் திரும்ப கேட்க வைத்தது. குலுவாலிலே - உதித் நாராயணன் குரல் கேட்டதும், படம் வரும் முன் ரஜினி ரசிகர்கள் திட்டித்தீர்த்தார்கள். ரஜினிக்கு அவர் குரலை கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை. ஆனால் அப்போதைய ஹாட் டாபிக்கான கட்சி, அரசியலை வரிகளில் நுழைத்திருந்ததால் படம் பார்க்கும்போது மன்னித்திருந்தார்கள். படம் வந்தபின் தில்லானா தில்லானாவுக்காக, அந்தப் பாடல் முடிந்ததும், எழுந்து போகிற ரிப்பீட் ஆடியன்ஸ் வர ஆரம்பித்தார்கள். விடுகதையா இந்த வாழ்க்கையும் இப்போதும் கேட்க முடிகிற pathos தான். அதன்பிறகு சந்திரமுகி பாடல்களில் வித்யாசாகரும் கவரவே செய்தார்.

இப்போது சந்தோஷ் நாராயணன் முறை. ‘யாருக்காகவும் சமரசம் செய்துகொள்வதில்லை. இது என் இசை’ என்று இறங்கியிருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால், கல்யாணத்துக்கு நுனி இலை போட்டு அதில் பாயாசம் வைக்காமல் பீட்சா வைக்கிற கதையாய், எஸ்.பி.பி எங்கே? அது ஒரு பெரிய ஏமாற்றம்.

நெருப்புடா, உலகம் ஒருவனுக்கா இரண்டும் ரஜினி பாடல்களாக இருந்தாலும் அடிநாதமாக சந்தோஷ் டச்சை விடவில்லை அவை. மற்ற பாடல்கள்.. ஸ்லோ.. ரஜினி ஸ்டைலில் இல்லையென்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. சிலருக்குக் கேட்டவுடன், சிலருக்கு கேட்கக் கேட்க என்று எப்படியேனும் பிடித்துப் போகிற வகைதான்.

பாடல்கள் பற்றி தீர்ப்பு எழுதாமல், படத்துக்காக இன்னும் காத்திருக்கலாம்.... அதுவரை பாடல்களை இன்னும் பலமுறை கேட்கலாம்!
 

-பரிசல் கிருஷ்ணா

அடுத்த கட்டுரைக்கு