Published:Updated:

‘சாரட்டு வண்டில’ தமிழ்நாட்டுப் பாணியில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து! #SaarattuVandiyila

பரிசல் கிருஷ்ணா
‘சாரட்டு வண்டில’ தமிழ்நாட்டுப் பாணியில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து! #SaarattuVandiyila
‘சாரட்டு வண்டில’ தமிழ்நாட்டுப் பாணியில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து! #SaarattuVandiyila

மார்ச் ஒன்றாம் தேதி வெளியானது இந்த ‘சாரட்டு வண்டில’ பாடல். ஃபிப்ரவரி 27-ம்தேதி சோனி மியூசிக் சார்பில் ஒரு ட்வீட் பார்த்தேன். “11 விநாடிகள் போதும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையின்மீது மையல்கொள்ள.. ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று பாடலின் 11 நொடிகளைப் பகிர்ந்திருந்தார்கள்.

கீழுள்ள வீடியோவில் 30-வது விநாடியில் இருந்து வரும் 11 விநாடிகள்தான் அவர்கள் பகிர்ந்திருந்தது. அந்த 11 நொடி இசையிலேயே ‘எப்பூடி?’ என்று கேட்க வைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். என்னமோ பச்சக்கென்று மனதில் ஒட்டிக்கொண்டது அந்த இசைத்துணுக்கு. பாடல் வெளியானதும் கேட்க ஆரம்பித்து, தினம் தினம் தவறாமல் கேட்க வைக்கிறது.

ஏ.ஆர்.ரஹைனா, திப்பு, நிகிதா காந்தி குரல்கள். வைரமுத்து வரிகள். வரிகளைப் பார்க்கும் முன், இசையைப் பற்றிப் பேசுவோம்.

ரசிகனைத் தாண்டி, ‘இது எந்தப் பாட்டு மாதிரி இருக்கு?’ என்று ஆராய்வதும் நம் பழக்கத்திலே ஒட்டிக் கொண்டுவிட்டதால், ஒரு சிலவற்றைக் கவனிக்க நேர்ந்தது.

‘சந்திரனைத் தொட்டது யார்’ பாட்டின் ஆரம்ப இசை, ‘ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா’ பாடலின் ஆரம்ப இசை ஆகியவற்றின் சாயல் இந்தப் பாடலின் ஆரம்ப இசையிலும் உண்டு. ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’வின் மூலமான பிரபல கும்மிப்பாடலான ‘ஆன வருகுது பாருங்கய்யா... ஆன அசைஞ்சு வருகுது பாருங்கய்யா’ வின் சாயல், இந்தப் பாடலின் பல்லவியிலும் உண்டு. அதுவும் போக ஒரு மலையாளப் பாடலின் அச்சு அசல் என்றும் சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

என்னைப் பொறுத்தவரை, இவையெல்லாம் புகார்கள் அல்ல. எங்கோ ஓரிடத்தில் ஓர் அழகான குழந்தை ஓடும்போது,  “அட... நம்ம எதிர்த்த வீட்டுக் குட்டிப்பாப்பா மாதிரியே இருக்குல்ல?” என்று ரசனையாகச் சொல்வோமே.. அப்படித்தான். 

பாடல் முழுவதுமே ஒரே நேர்கோட்டில் செல்லும் இசை. ஆனால், இடையிசையின் புல்லாங்குழலும், கூடவே வரும் ‘ஓ... ஓ’ கோரஸும் க்ளாஸிக் ரஹ்மான். படத்துக்கு ஒரு பாட்டாச்சும் இப்படிப் போடுங்க புயலே! 

வைரமுத்து. “என்ன வயசாச்சு உங்களுக்கு?” என்று கேட்க வைக்கிறார். Charriot வண்டிதான் சாரட்டு வண்டி என்பதுகூட ஓகே. சிகரெட் ஒளிதான்.. சீரட்டொளி. மெட்டுக்கென அப்படி டக்கென மாற்றியது.. சபாஷ் ஐயா.  

‘பொண்ணுதான் ரத்தினக் கட்டி... ஹா..  / மாப்பிள்ள வெத்தலப் பொட்டி / எடுத்து ரத்தினக் கட்டிய வெத்தல பொட்டியில் மூடச் சொல்லுங்கடி’ - வாவ் வரிகள்!  

பெண்ணை ஆண் ரசிப்பதை.. ஆண் எழுதுவது மிகவும் சவாலானது. ஏற்கெனவே ‘ஓரப்பார்வை வீசுவான்.. உயிரின் கயிறு அவிழுமே’ என்று எழுதியவர்தானே... இதில் அவனை ‘சீரட்டொளியில்’ ரசிக்கச் செய்திருக்கிறார். அதேபோலவே, ரொமான்ஸில் ஆண் பெண் விஷயங்களைப் பிரித்தெழுதுவதில்.. கவிப்பேரரசு கில்லாடி. 

மணிரத்னம் படங்களில் கல்யாணக் கொண்டாட்டப் பாடல் என்று தனியாகவே எழுதலாம். அதேபோன்ற ஒரு கல்யாணக் கொண்டாட்டப் பாடல்தான் இதுவும். ஆனால் இரண்டு விஷயங்கள்.

1. பாடலின் ஒருநிமிட வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இவ்வளவு ஜாலியான கிராமத்து ஸ்டைல் பாடலை கோட் சூட் போட்டுக்கொண்டு, நார்த் இண்டியன் ஸ்டைலில் கலர்ப்பொடிகள் தூவிக்கொண்டு பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அதுவும் ‘அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி..’ என்று காக்ரா சோளியில் நாயகி ஆடும்போது.. வலிக்குது சார்.  ‘அட.. படம் வர்றதுக்கு முன்னாடியே அவசரப்பட்டு கமென்ட் பண்றோமே’ என்றிருந்தாலும்... இதைச் சொல்லியே ஆகவேண்டும் என்று தோன்றியது. ‘ஒரு நார்த் இண்டியன் வெட்டிங்ல தமிழ்நாட்டுப் பாணியைப் பாராட்டிப் பாடறாங்க’ போல என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். 

2. வரிகள், இசை எல்லாவற்றையும் கவனித்தால்தான் ஒரு பாடலை ரசித்து அதைப் பற்றி எழுத முடியும். யூ ட்யூபுக்காக ஆங்கிலத்தில் வரிகளைப் போடுவதெல்லாம் ஓகே.. கீழேயாவது தமிழில் வரிகளைப் பதிவிடுங்கள் ஐயா. ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தின் ‘மறுவார்த்தை பேசாதே’ பாடலுக்கு அப்படித்தான் போட்டிருக்கிறார்கள். 

‘குத்தால சாரலே.. முத்தான பன்னீரே.. / வித்தார கள்ளிக்கு துள்ளாட்டம்’ - இந்த வார்த்தைகளில் ‘பன்னீரே’ என்று குரல் ஒலிக்கிறது. ‘பன்னீரு’ என்று திரையில் எழுத்து ஓடுகிறது. அதுகூட ஓகே.. ‘துள்ளாட்டம்’ என்பதை ஆங்கிலத்தில் எப்படி எழுதியிருக்கிறார்கள் பாருங்கள்.

கண்டிப்பாக கவிஞர் கண்களில் பட்டிருக்க வாய்ப்பில்லை!  ‘காதலனைக் கண்ட மகிழ்ச்சியில் தள்ளாடுவதுதான் அது’ என்று விளக்கம் கொடுக்கலாம். ஆனால் குரல் துள்ளாட்டம் என்றுதானே ஒலிக்கிறது!? அதைவிட இன்னொன்றும் சொல்லலாம். ‘சாரட்டு வண்டில’தான் பாடல். ஆனால் ஆங்கிலத்தில் ‘ Vandiyila’ - (வண்டியில)  என்றுதான் எழுதுகிறார்கள். ‘இதெல்லாம் இப்ப யார் சார் பார்க்கறாங்க’ங்கற மைண்ட் வாய்ஸ் கேட்குதுங்க!
 

பாடல் வரிகள்:

சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.

உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்.

சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.

உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்.

அடி வெத்தல போட உதட்ட எனக்கு
பத்திரம் பண்ணிக்குடு.

நான் கொடுத்த கடன திருப்பிக் குடுக்க 
சத்தியம் பண்ணிக்குடு.

என் ரத்தம் சூடு கொள்ள பத்து நிமிஷம்
தான் ராசாத்தி.

ஆணுக்கோ பத்து நிமிஷம் ஹ...
பொண்ணுக்கோ அஞ்சு நிமிஷம் ஹ...

பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பளய பொண்ணு
கிண்டிக் கெழெங்கெடுப்பா.

சேலைக்கு சாயம் போகு மட்டும்
உன்ன நான் வெளுக்க வேணுமடி.

பாடுபட்டு விடியும் பொழுது
வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி.

புதுப் பொண்ணே
அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி.

சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.

உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்.

சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.

உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்.


வெக்கத்தயே கொழச்சு கொழச்சு
குங்குமம் பூசிக்கோடி...

ஆசை உள்ள வேர்வைய போல் 
வாசம் ஏதடி

ஏ பூங்கொடி... வந்து தேன்குடி

அவன் கைகளில் உடையட்டும்
கன்னி கண்ணாடி


கத்தாழங் காட்டுக்குள் மத்தளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்.

குத்தாலச் சாரலே.. முத்தான பன்னீரே..
வித்தார கள்ளிக்கு துள்ளாட்டம்

அவ மன்மத காட்டுச் சந்தனம் எடுத்து
மார்பில் அப்பிக்கிட்டான்.

இவ குரங்கு கழுத்தில்
குட்டியப் போல தோளில் ஓட்டிக்கிட்டா

இனி புத்தி கலங்கற முத்தம் கொடுத்திரு ராசாவே... 
 
பொண்ணுதான் ரத்தினக் கட்டி... ஹா.. 

மாப்பிள்ள வெத்தலப் பொட்டி

எடுத்து ரத்தினக் கட்டிய வெத்தல பொட்டியில்
மூடச் சொல்லுங்கடி.

மொதலில் மால மாத்துங்கடி
பிறகு பால மாத்துங்கடி.

கட்டில் விட்டு காலையிலே கசங்கி வந்தா
சேலை மாத்துங்கடி..

மகாராணி.. அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி..

கத்தாழங் காட்டுக்குள் மத்தளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்.

குத்தாலச் சாரலே.. முத்தான பன்னீரே..
வித்தார கள்ளிக்கு துள்ளாட்டம்


கத்தாழங் காட்டுக்குள் மத்தளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்.

குத்தாலச் சாரலே.. முத்தான பன்னீரே..
வித்தார கள்ளிக்கு துள்ளாட்டம்


புதுப் பொண்ணே
அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி.

புதுப் பொண்ணே
அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி.

கத்தாழங் காட்டுக்குள் மத்தளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்.

குத்தாலச் சாரலே.. முத்தான பன்னீரே..
வித்தார கள்ளிக்கு துள்ளாட்டம்


புதுப் பொண்ணே
அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி.

புதுப் பொண்ணே
அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி.
     

-பரிசல் கிருஷ்ணா