Published:Updated:

இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! #NonRajaHits

இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! #NonRajaHits

இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! #NonRajaHits

இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! #NonRajaHits

இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! #NonRajaHits

Published:Updated:
இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?! #NonRajaHits

இளையராஜா சிம்மாசனமிட்டு தமிழ்த் திரையிசையை ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டு வகையான பாடல்கள்தான் இருந்தன. ஒன்று இளையராஜா இசையமைத்த பாடல்கள். இன்னொன்று இளையராஜா இசையமைக்காத பாடல்கள். கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகத் தோன்றினாலும் உண்மை இதுதான். வேறு சில இசையமைப்பாளர்களின் பாடல்களும் அவ்வப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. ராஜா ஒவ்வொரு பாடல்களிலும் ஒவ்வொரு விதத்தில் நம்மை மயக்க, பிறரின் ஏதோ ஒரு பாடல் ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. அவற்றில் சிலவற்றை இன்றைக்குப் பார்க்கலாம்.

பருவராகம்

ஹம்சலேகா இசையில் 1987ல் வெளிவந்த படம் பருவராகம். தெறி ஹிட், மரண ஹிட் என்று என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். அப்படியான படம். பாடல்களும் அப்படித்தான். எல்லா பாடல்களும் ஹிட்டோ ஹிட் ரகம். இத்தனைக்கும் நேரடித் தமிழ்ப்படம்கூட அல்ல. ‘ப்ரேம லோகா’ என்ற கன்னடப்படத்தின் டப்பிங்தான். நடிகர் ரவிச்சந்திரன், இயக்குநராக அவதாரமெடுத்த படம்.

இதைப் படிப்பவர்கள், இந்தப் பதிவை Pause செய்துவிட்டு அந்த நாஸ்டால்ஜியாவில் ஓரிரு நிமிடங்களாவது மூழ்கப்போவது உறுதி. அப்படியான பாடல்கள். வைரமுத்து வரிகள்!

'கேளம்மா கேளம்மா என் சொல்லக் கேளம்மா’ என்றொரு பாடல். எஸ்.பி.பி அதகளம் பண்ணியிருப்பார். எஸ்.ஜானகி மட்டும் என்னவாம்! பேசிக் கொள்வதே பாடலாக மாறியிருக்கும். ஜூஹி சாவ்லா கல்லூரி வகுப்பிற்கு வரும் முதல்நாள். ப்ரின்சிபல் சோ ‘கேளம்மா கேளம்மா’ என்று ஆரம்பித்து அட்வைஸ் செய்வார்.  வராண்டாவிலே தியாகு உட்பட மாணவர்கள் (அப்ப அவங்க மாணவர்கள்தான் பாஸ்) கிண்டல் செய்வதில் துவங்கும் பாடல். துஷ்யந்தன் கதையை விஷ்ணுவர்த்தன் எடுத்துக் கொண்டிருக்க, ‘வர்றா சார்.. சகுந்தலா... வந்துட்டா சகுந்தலா...’ என்று ரவிச்சந்திரன் சொல்வார். விஷ்ணுவர்த்தன் பாடிக்கொண்டே க்ளாஸ் முன் நிற்கும் ஜூஹியிடம் ‘நீதானா சகுந்தலா?’ என்று கேட்க ‘இல்ல நான் சசிகலா’ என்று, நிறுத்தி தெளிவாக சொல்லும் எஸ்.ஜானகியின் குரல்.

வகுப்புக்குள் நுழையும் ஜூஹி, தடுக்கி விஷ்ணுவர்த்தன் மேல் விழுந்து முத்தமிட்டுவிட, ‘ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக்கொள்ளும் முத்தம்’ என்ற - இதே படத்தின் இன்னொரு பாடலை - புல்லாங்குழல், சாக்ஸ் கலந்து பி.ஜி.எம்மாகக் கொடுத்திருப்பார் ஹம்சலேகா . தொடர்ந்து ‘வந்ததும் மீட்டிங்கா, பார்த்ததும் கிஸ்ஸிங்கா? இஸ்பெல்லா தள்ளிப்போ.. சசிகலா உள்ளே போ!’ என்று துவங்கி க்ளாஸை பாடிக் கொண்டே ஒழுங்குபடுத்துவார் விஷ்ணுவர்த்தன். இப்படி ஒரு ஆசிரியர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எல்லாரையும் ஏங்க வைக்கும். செம பாடல்! சோ, தியாகு, விஷ்ணுவர்த்தன், ரவிச்சந்திரன் எல்லாருக்கும் எஸ்.பி.பிதான்! 

முதல் பாடலான ‘கிளிகளே ராகம் கேளுங்களேன்’, தொடர்ந்து கொஞ்ச நேரத்திலேயே வரும், ஜூஹியின் அறிமுகப்பாடலான ‘மின்னல் போல இங்கு முன்னால் வந்தது யாரு’ எனும் பாடல். அதுவும் ஹிட்தான். எனக்குப் பிடித்தது மேலே சொன்ன ‘கேளம்மா கேளம்மா’தான். ஆனால் ‘பூவே உன்னை நேசித்தேன்’தான் எங்கும் கேட்டுக் கொண்டிருக்கும். ரவிச்சந்திரனை கல்லூரியில் பயந்தவராக இருப்பார். வெளியில், தைரியசாலியாக தவறுகளைத் தட்டிக் கேட்கும் ஒருவரைத்தான் ஜூஹிக்கு பிடிக்கும். அது இதே அப்புராணி ரவிச்சந்திரன்தான். கல்லூரியில் விழாவுக்காக ‘கலையலங்காரங்கள்’ செய்து கொண்டே பாடுவார்கள். ‘பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன்’  என்று எஸ்.பி.பி. பாட.. ‘நீயா என்னை நேசித்தாய்.. கோழை போல யாசித்தாய்!’ என்று ஜூஹி அவரை உதாசீனப்படுத்துகிற பாடல். 

பூஞ்சிட்டு குருவிகளா புதுமெட்டுத் தருவிகளா...

ஒரு தொட்டில் சபதம் (1989) என்கிற படத்தில் வரும் பாடல் இது. சந்திரபோஸ் இசை. அவரே பாடிய பாடல். மெலடி வகைதான். பல்லவி முடிந்து முதல் இடையிசையின் டிரம்பெட் வசீகரிக்கும். அந்த இசை முடியும் இடத்தில் சட்டென்று தபேலா துள்ளலிசைக்குப் பயணப்படும். மீண்டும் ஆரம்பம்போலவே மெலடிக்குத் திரும்பும்.

ஏதேதொ கற்பனை வந்து

வாய்கொழுப்பு 1989ல் வந்த படம். ஆரம்ப இசை ஒருமாதிரிதான் இருக்கும். பல்லவி ஆரம்பிக்கும்போது வரும் பீட் பாடல் முழுவதும் வரும். இரண்டாம் இடையிசை முடியும்போது நிறுத்தி ஒரு தபேலா இசை வரும். அதுவும் நன்றாக இருக்கும்.
 

மூங்கிலிலைக் காடுகளே

சங்கர் கணேஷ் இசை. 1989ல் வெளியான பெண்மணி அவள் கண்மணி படப்பாடல். அருமையான மெட்டு. வாலியின் அட்டகாசமான வரிகள். பல்லவி, சரணமெல்லாம் இசை குறையே இருக்காது. எஸ்.பி.பி குரல்.. சொல்லவா வேண்டும்! முதல் இடையிசை கொஞ்சம் ஏமாற்றும்.. இரண்டாம் இடையிசை அசத்தும்.

நீலக்குயில்கள் ரெண்டு

சந்திரபோஸ் - விடுதலை. 1986. எஸ்.பி.பாலசுப்ரமணியன் ரொமாண்டிக் குரலுக்காகவே ஹிட்டான பாடல்களில் இதுவும் ஒன்று! இசையை விட, மெட்டுதான் அதிக கவனம் ஈர்த்தது. எஸ்.பி.பி காப்பாற்றிய பாடல் இது. மாதவி, ரஜினியை காதலிப்பார். விஷ்ணுவர்த்தனுக்கு மாதவிமீது மையல். இடையிசைகளெல்லாம் சாதாரணமாகத்தான் இருக்கும். பாடலின் வரிகளும், எஸ்.பி.பியின் ரொமாண்டிக் குரலும் பாடலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும். அதுவும் இரண்டாம் சரணத்தில் ‘கண்விழித்துப் பார்த்தேன் நல்ல காலைப்பொழுது..’ உருகியிருப்பார்.

துள்ளித் துள்ளிப் போகும்பெண்ணே...

ராஜா கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், இளையராஜாவோ என்று கொஞ்சம் ஏமாற்றுகிற பிற இசையமைப்பாளர்களின் பாடல்கள் பல உண்டு. ஆனால் ஒரு இசைக்கருவியில் இருந்து, அடுத்த இசைக்கருவிக்கு தாவுகிற இடத்திலோ அல்லது பல்லவியிலிருந்து முதல் இடையிசை எடுக்கும்போதோ, இடையிசை முடிந்து சரணம் துவங்கும் இடத்திலோ ‘நான் Non Raja” என்று காட்டிக் கொடுத்துவிடும். துள்ளித் துள்ளிப் போகும்பெண்ணே அப்படியாக கொஞ்சம் ஏமாற்றுகிற பாடல்தான். ஆனால் தபேலா, ராஜாவின் பாடலில் கேட்பது போல ‘டெப்த்’ ஆக இல்லாததும், பல்லவியின் கடைசி வரியின்போது தபேலாவின் தாளம் மாறுவதும் இது ராஜா இல்லையே என்று சொல்லிவிடும். மனோஜ் கியான் இசையில், வெளிச்சம் (1987) என்ற படத்தில் வந்த பாடல். கே.ஜே. ஏசுதாஸ் குரல்.

மாமரத்துப் பூவெடுத்து

ஊமை விழிகள். 1986ல் வந்த படம். மனோஜ் கியான் இசை. கண்மணி நில்லு காரணம் சொல்லு / ராத்திரி நேரத்து பூஜையில் / நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் என்று மற்ற பாடல்கள் ஹிட் என்றாலும் ‘மாமரத்துப் பூவெடுத்து’, ‘தோல்வி நிலையென நிலைத்தால்’ இரண்டும் மாஸ் ஹிட்.

‘மாமரத்துப் பூவெடுத்து’ பாடலின் ஆரம்பமே அசத்தலான மென்மையில் ஆரம்பிக்கும். எஸ்.என்.சுரேந்தர், சசிரேகா குரல்கள். பல்லவி முடிந்ததும்.. நின்று புல்லாங்குழல் ஆரம்பிக்கும். தொடர்ந்து ‘ஓஹோஹோ....... ஓஒ..... -- ஹொய்யா’ என்று ஆலாப். பின் தொடரும் இசை என்று கம்ப்ளீட் பேக். எங்கே நிறுத்தி எங்கே எடுக்க வேண்டுமோ அந்த பேட்டர்ன் அட்டகாசமாகப் பின்பற்றப்பட்டிருக்கும். பாடலின் இசையிலேயே காட்சிக்குத் தகுந்த மாதிரி - பயமுறுத்துவதோ.. ஆபத்து என்பதை உணர்த்துவதோ, சேஸிங்கோ.. - இசையிலேயே கொடுப்பதில் இளையராஜா என்றென்றும் ராஜா. இந்தப் பாட்டில் அதேபோல, இரண்டாம் இடையிசையில் விசில் சத்தத்துக்குப் பிறகு ஒரு பயமுறுத்துகிற இசை வரும். 2.56ல் கேட்டுப்பாருங்கள். 10 நொடிகள்தான். இந்தப் பாட்டு தெரிந்தவர்களுக்கு இந்நேரம் அந்த இசை மனதுக்குள் கேட்கும். கீழே வீடியோவிலும் கேளுங்கள்!

ஆவாரம் பூவு ஆரேழு நாளா

1984. அச்சமில்லை அச்சமில்லை. இசை யார் தெரியுமா? வி.எஸ். நரசிம்மன். பலரது ப்ளேலிஸ்டில் இந்தப் பாடல் இளையராஜா என்றே சேமித்துவைக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடலும், இதே பாடலின் ‘ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த’ பாடலும் ஹிட். ஆவாரம் பூவு - எஸ்.பி.பி, பி.சுசீலா. கேட்கவா வேண்டும்! இல்லல்ல.. கேட்கத்தான் வேண்டும்! தபேலா விளையாடும் பாடல். ஆனால் இடையிசையில் தபேலா நின்றுவிடும். மென்மையாகச் சென்று, சரணத்தில் தபேலா மீண்டும் ஆரம்பிக்கும். டிபிகல் ராஜா டைப்-பில் ஒரு உருட்டு உருட்டி தபேலா இசை பாடலோடு சேரும். இரண்டு இடையிசையுமே அப்படித்தான். பாடல் முடியும்போது.. சுசீலாவின் மெஸ்மரிசக்குரல் ஆலாப்பில் முடியும். வாவ் பாடல்! (அப்பறம்.. சொல்ல மறந்துட்டேனே.. சரிதா! அப்படி ஒரு அழகா இருப்பாங்க!)

ஓடுகிற தண்ணியில... -

அதே படம். இதுவும் பெண்குரல் பி.சுசீலா. ஆண்குரல் மலேசியா வாசுதேவன். பல்லவி முழுதும் பெண்குரல். சரணத்தில் ‘அடி கிராமத்துக் கிளியே..’ என்று பாடலில் சேர்வார் மலேசியா வாசுதேவன். மிஸ் யூ சார்! முடிக்கும்போது... இது Non Raja என்று காட்டுக்கொடுக்கும். :-)

அந்திநேரத் தென்றல் காற்று

இணைந்த கைகள். 1990. கியான் வர்மா இசை. படம் வந்தபோது நான் திரும்பத் திரும்ப தினமும் பாடிக்கொண்டிருந்த பாடல் இது. பாடலை நினைத்தாலே இசையும், ரயிலின் சத்தமும் கூடவே கேட்கும். எஸ்.பி.பி, ஜெயச்சந்திரன். ரயில் ஓட்டத்துக்கு ஏற்ப, கூடவே ஒலிக்கும் இசை.

‘தாலாட்ட அன்னை உண்டு, சீராட்ட தந்தை உண்டு, இன்ப துன்பம் எதுவந்தாலும் பங்குகொள்ள நண்பன் உண்டு’ என்று ஆபாவாணன் வரிகளும் பாடலின் ஹிட்டுக்கு முக்கியக் காரணம். இரண்டாம் இடையிசையில் குழந்தை அழுகையைத் தொடர்ந்து ஜெயச்சந்திரன், எஸ்.பி.பி இருவருமாய் 2.23 நிமிடத்தில் ‘ஆராரோ ஆரிராரோ..’ என்று ஆரம்பிப்பார்கள். கேட்டுப் பாருங்கள்! ‘பத்துத் திங்கள் முடிந்தபின்னே.. முத்துப்பிள்ளை அவனைக் காண்பேன்ன்ன்ன்’ என்று ஒரு சங்கதிபோட்டுவிட்டு உறங்காத கண்ணில் இன்று என்று தொடர்ந்து பரிவான நண்பன் தந்த-வில் நண்பனில் ஒரு சங்கதி போடுவார் எஸ்.பி.பி! ப்ச்.. என்ன சொல்ல! கோரஸாகப் பாடிக்கொண்டே பாடல்முடியும்போது.. ரயிலின் சத்தத்தோடு கூடவே புல்லாங்குழலும் சேர பயணத்தை இசையிலேயே கேட்க வைக்கும் பாடல்!

கண்ணுக்குள் நூறு நிலவா

1987. தேவேந்திரன் இசை. ' பாப்பப பாப்பப...'  என்று கோரஸில் ஆரம்பிக்கும் இசையில் தொடரும் கீபோர்ட். எஸ்.பி.பி. சித்ரா. மந்திரம் கற்றுக் கொண்டிருக்கும் ராஜா, அமலாவை சைட் அடிப்பதை உணர்த்த இடையிசையில் மந்திரம்.. பிறகு பாடல் என்று போகும். இடையிசையில் மிருதங்கம். ‘அம்பா சாம்பவி..’ என்று மந்திரங்கள், தொடரும் தபேலா என்று கலவையான பாடல்! 
 

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

1990. இதயதாமரை. சங்கர் கணேஷ். எஸ்.பி.பி - சித்ரா. மெல்ல ஒரு நதியின் ஓட்டம் போன்ற பாடல். இரண்டாம் இடையிசையில் ஜோடிகள் சைக்கிளில் போகும் வேகத்துக்கு இணையாக வயலின் ஒலிக்கும். இரண்டாம் சரணத்தில் முடிவில் வரும் ‘இயல்பானது’ மெட்டும்.. தொடரும் பல்லவியும் பாடலுக்கு அழகு சேர்க்கும்.

இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லையென்றாலும்.. இன்னொரு முக்கியமான விஷயம். இந்தப் பாடலை கீழே உள்ள வீடியோவில் பார்க்கும்போது.. பல ஃப்ரேம்கள் அள்ளி அணைத்துக் கொள்ளலாம்போல.. யார்யா கேமரா மேன் என்று கேட்கவைக்கும். 0.38 / 1.01 / 1.07 / 1.23 முதல் 1.33 / 2.34 / 3.01 இப்படிப் பல இடங்கள். எஸ். ஒன் அண்ட் ஒன்லி.. பி.சி.ஸ்ரீராம்!

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

அண்ணா நகர் முதல்தெரு. 1988. சந்திரபோஸ் இசை. இதைப் படிக்கும் ஆயிரம் பேரில் ஒருத்தராவது ‘அட.. இது ராஜா அல்லவா!?’ என்று நினைப்பது உறுதி. அப்படி பல கேசட் / சிடிக்களில் ராஜா பெயருக்கு மொய் வைக்கப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. எஸ்.பி.பி, சித்ரா முதல் சரணத்தில் எஸ்.பி.பி ‘உள்ளத்தை உன்னிடம் அள்ளித்தந்தேனே..’ என்று ஆரம்பித்து இசை நிறுத்தப்பட்டு குட்டியாக புல்லாங்குழல் பீட் கொடுத்து என்று ஆச்சர்யப்படுத்தியிருப்பார் சந்திரபோஸ். சரணம் மிக அருமையான மெட்டில் இருக்கும். சந்திரபோஸின் சிறந்தபாடல்களை வரிசைப்படுத்தினால் டாப் டென்னில் வரும் ஒரு பாடல்!

ஏற்கனவே இளையராஜாவின் இந்த 9 பாடல்களில் ஏதோ ஒன்றையாவது மிஸ் பண்ணிருப்பீங்க என்று நான் எழுதியபோது அதில் சில பாடல்களைக் குறிப்பிட்டு ‘இது Rare songஆ?’ என்று  நண்பர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். அதனால் இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். இந்தப் பாடல்கள் ஒரு வாரமாக அவ்வப்போது யோசித்துக் குறிப்பெழுதிக் கொண்ட பாடல்கள். நானே விட்ட பாடல்கள்கூட இருக்கும். அடுத்த பாகத்திற்காக சில ஸ்பெஷல் பாடல்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன்.

இதில் தேவா, டி.ராஜேந்தர் இருவரின் பாடல்களுமே தனித்தனியாக எழுத வேண்டிய பெரிய லிஸ்ட்! எனவே இருவரையும் சேர்க்கவில்லை.  

இன்னும் சில பாடல்களோடு அடுத்த பாகத்தில் சந்திக்கலாம்! அதில் நீங்கள் கமெண்டில் குறிப்பிடும் பாடல் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்கிறேன்!