Published:Updated:

"என்னிடமிருந்து இசை வந்துகொண்டே இருக்கும். அதற்கு முடிவில்லை!" - இளையராஜாவுடன் ஒரு சாட்!

இளையராஜா
இளையராஜா

திடீரென இளையராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். புது ஸ்டுடியோவிற்கு வந்திருந்த அவர்களிடம் சிறு உரையாடலும் நடத்தினார்.

'இசையின் ராஜா' இளையராஜா, எப்போதும் வெளிப்படையாகத் தன் கருத்துகளை முன் வைப்பவர். தான் நினைப்பதை எந்த மேடையிலும் பேசிவிடும் குணம் கொண்டவர். பேரக் குழந்தையுடன் பியானோ வாசிக்கும் வைரல் வீடியோ, அடுத்தடுத்து படங்கள் எனத் தற்போதும் பிஸியாக இருக்கும் மகா கலைஞன்! அப்படிப்பட்டவர், திடீரென பத்திரிகையாளர்களைச் சமீபத்தில் சந்தித்தார். புது ஸ்டுடியோவிற்கு வந்திருந்த அவர்களிடம் சிறு உரையாடலும் நடத்தினார். அந்த உரையாடலிலிருந்து சிறு துளிகள்...

பேரக்குழந்தைகளுக்கு பியானோ சொல்லிக் கொடுக்கிறீர்களே?

"நான் எங்கே கற்றுத்தருகிறேன். குழந்தைகளிடமிருந்து தானே நாம் கற்க வேண்டியிருக்கிறது. அவர்கள்தானே நமக்கு எல்லாம் சொல்லித் தருகிறார்கள். அவர்களுக்கு இசையறிவும், ஆர்வமும் இருப்பது ஆச்சர்யம் இல்லை. எல்லாம் ரத்த உறவுகள்தானே... அப்படித்தான் இருக்கும்."

இன்னமும் உங்கள் பாடல்களைத்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்...

இளையராஜா
இளையராஜா

"இருபது வருஷமாக என் பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பாட்டு என்பது அப்போதுதான் பூத்த மலர் மாதிரி இருக்கணும். இசைன்னா இப்போதுதான் பூத்த மாதிரி இருக்கேன்னு நினைப்பை தூண்டிக்கிட்டே இருக்கணும். மனசு எப்பவும் புதுசைத்தான் நாடும். பழையதை திரும்பிப் பார்க்காது. என் பாடல்களை எல்லோரும் திரும்பிப் பார்ப்பதற்குக் காரணம் இது புதுசாக இருக்கு என்பதுதான்!

இன்னமும் மியூசிக் அமைக்கணும்னு தோணிக்கிட்டே இருக்கே. புது ஸ்டுடியோ வந்திருக்கோம். என் இசை என்னிடமிருந்து வந்துகொண்டே இருக்கும். அதற்கு முடிவில்லை."

தஞ்சையில் இசைப் பல்கலைக்கழகம் வைக்க வேண்டுமென முன்பு கலைஞரிடம் கோரிக்கை வைத்தீர்கள். இப்போதும் அந்தக் கோரிக்கை தொடர்கிறதா?

"எனக்கு அந்த மாதிரி எண்ணம் அப்போது இருந்தது. இசைக் கலைஞர்களுக்கு சிலை வைக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்கிறது. மேலைநாடுகளில் இசைக்கலைஞர்கள் உபயோகித்த கருவிகளைக் கூட பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். இங்கே அது மாதிரி செய்வதில்லை. செய்தால் நல்லதுதான்."

அடுத்த கட்டுரைக்கு