Published:Updated:

இசைப் படைப்பாளிகளுக்கு உரிமைத் தொகை - IPRS-ன் புதிய முன்னெடுப்பு சொல்வது என்ன?

“மற்ற மொழிகளுக்கு முதன்மை மொழியாகத் தமிழ் திகழ்வதால் தமிழ்நாட்டிலிருந்து இதனைத் தொடங்குகிறோம். உரிமையாளர்களுக்கான உரிமம் அவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.”

இசைப் படைப்பாளிகளுக்கு உரிமைத் தொகை - IPRS-ன் புதிய முன்னெடுப்பு சொல்வது என்ன?

“மற்ற மொழிகளுக்கு முதன்மை மொழியாகத் தமிழ் திகழ்வதால் தமிழ்நாட்டிலிருந்து இதனைத் தொடங்குகிறோம். உரிமையாளர்களுக்கான உரிமம் அவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.”

Published:Updated:

இன்பத்திலும் துன்பத்திலும் மனிதர்களின் மனதை மெருகூட்டுவது இசையே. அப்படிப்பட்ட இசைப் பாடல்களின்‌ உரிமையாளர்களுக்கு, அவர்களின் படைப்பிற்கான உரிமங்கள் சரியாகப் போய்ச் சேர்வதை இந்தியன் பெர்ஃபார்மிங் ரைட் சொசைட்டி லிமிடெட் (IPRS) என்ற அமைப்பு உறுதிசெய்துவருகிறது. இந்த அமைப்பு, இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசனால் 59 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

IPRS
IPRS

ஒரு கலைஞர் தனது வாழ்நாளில் ஒரு பாடல் உருவாவதற்கான படைப்புச் செயல்பாட்டில் தன் பங்கைப் பதிப்பித்துவிட்டார் என்று சொன்னால், அந்தப் பாடல் எங்கு ஒலித்தாலும் அதற்கான உரிமத்தொகை அக்கலைஞரைப் போய்ச் சேருதல் வேண்டும். அது டீக்கடை ஸ்பீக்கர்கள் தொடங்கி கோயில் திருவிழாக்கள் என எங்கு ஒலித்தாலும் அவர்களுக்கான உரிமைத் தொகை அவர்களை அடைதல் அவசியம். இதனை உறுதி செய்து கலைஞர்களுக்கு உதவும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக IPRS செயல்பட்டுவருகிறது.

உரிமங்கள் உரிமையாளர்களைப் போய்ச் சேராததற்கு போதிய விழிப்புணர்வின்மை ஒரு முக்கிய காரணம். இதனைக் கருத்தில் கொண்ட இந்நிறுவனம் தங்களது உறுப்பினர்களுக்கான தொடர் பயிலரங்கங்களை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான முன்னெடுப்பு சென்னையில் இன்று தொடங்கியது.
IPRS
IPRS

இந்தப் பட்டறையின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய IPRS-ன் தலைமை நிர்வாக அதிகாரி ராகேஷ் நீகம், "இந்திய இசைத்துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இது உலகம் முழுவதும் உள்ள பிரபலமான பாடலாசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு ஒரு தாயாக விளங்குகிறது. தொழில்துறையும் வேகமெடுத்து வளர்ந்துவரும் சூழலில் இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் தங்கள் உரிமைகளைப் பற்றி அறிந்திருப்பது அவசியமான ஒன்று. இதை நோக்காகக் கொண்டு எங்கள் உறுப்பினர்களை முதலில் விழிப்புணர்வு அடையச் செய்யும் முயற்சியாக இந்த பயிலரங்கங்களைத் தொடங்க உள்ளோம். இந்தியா முழுவதும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். மொழிகளினால் எந்த வேற்றுமையும் காட்டாமல் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். மற்ற மொழிகளுக்கு முதன்மை மொழியாகத் தமிழ் திகழ்வதால் தமிழ்நாட்டிலிருந்து இதனைத் தொடங்குகிறோம். உரிமையாளர்களுக்கான உரிமம் அவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடலாசிரியர் வைரமுத்து, "கலைஞர்களுக்கு ஒரு அட்சய பாத்திரமாக IPRS இயங்கிவருகிறது. கலைஞர்கள் பாவம், கலைஞர்கள் சட்டம் அறியாதவர்கள், கலைஞர்கள் உரிமை தெரியாதவர்கள், கலைஞர்கள் கற்பனாவாதிகள். பூமியில் நின்றுகொண்டு நட்சத்திரங்களில் தேன் குடிக்க ஆசைப்படுபவர்கள், தாய்ப்பாலுக்கும் நிலா பாலுக்கும் வேறுபாடு அறியாதவர்கள். அவர்கள் சட்டம் பற்றி ஏதும் அறியாதவர்கள். அப்படிப்பட்டவர்களுக்குத் தங்கள் உரிமத்தை வழங்கி தரப் போராடும் போராட்டக்காரர்களே IPRS" என்றார்.

மேலும், “மேல்நாடுகளில் ஒரு கலைஞர் 100 பாடல்கள் எழுதிவிட்டால் அவர் வாழ்வில் அதன் பிறகு அவர் சுவாசிப்பதைத் தவிர வேறு ஏதும் செய்யத் தேவையில்லை. ஆனால் இன்று 7,500 பாடல்களை எழுதி இருக்கும் நான் இவர்கள் அனுப்பக்கூடிய சில லட்சங்களுக்காகக் காத்திருக்கிறேன்” என்றார்.
வைரமுத்து
வைரமுத்து

IPRS-ன் உறுப்பினர்களான பாடலாசிரியர் மயூர் புரியும், கவிஞர் விவேகாவும் நிறுவனத்தின் செயல்பாட்டைத் தெளிவுபடுத்தும் விதத்தில் உரையாற்றினர்.

IPRS-ன் இந்தக் கற்றல் மற்றும் ஈட்டல் பயிலரங்கம் கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட இருக்கிறது. இப்படிப்பட்ட விரிவான செயல்பாட்டுடன் இசைப் படைப்பாளிகள் சமூகத்தை ஒருங்கிணைத்து பயிலரங்குகள் நிகழ்வது இதுவே முதல்முறை!

- சுபஸ்ரீ

(பயிற்சிப் பத்திரிகையாளர்)