சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

ரஹ்மான்களை உருவாக்கும் கல்லூரி!

ஏ.ஆர்.ரஹ்மானுடன் லிடியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஏ.ஆர்.ரஹ்மானுடன் லிடியன்

மியூசிக்கில் ஆர்வம் இருந்தால் மட்டும் போதும், இந்தக் கல்லூரியில் படிக்க வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

மரங்களும் செடிகளும் பூக்கள் தெளிக்க, பெயர் தெரியாத பறவைகள் ராகம் இசைத்துப் பாட, முன்பக்க முன்றில் புல்வெளியில் அணில்கள் கொஞ்சி விளையாட, அந்தக் கல்லூரிப் பெயர்ப் பலகையின் பின்னாலிருந்து நம்மை ஒளிவீசி வரவேற்றான் வெய்யோன். ஆம், நாங்கள் இப்போது தலைகோதி நிற்பது, ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கல்லூரியின் காற்றில்...

சென்னை அரும்பாக்கத்தில் இயற்கை வனப்போடு ஓர் இசைப்பூங்காவாக அமைந்திருக்கிறது, `KM Music Conservatory.' அதன் நிறுவன முதல்வராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், நிர்வாக இயக்குநராக அவரின் சகோதரி பாத்திமா ரஃபீக்கும் இருக்கின்றனர். ஒருங்கிணைப்பாளராக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் ஆடம் கிரீக் (Adam Greig) பணியாற்றிவருகிறார். கட்டணம் பெற்றுக்கொண்டு இசை பயிற்றுவிக்கும் கல்லூரியாக மட்டும் இல்லாமல், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் எளிய குழந்தைகளைக் கண்டறிந்து, உலகத்தர இசையை இலவசமாக வழங்கிவரும் கொடை நிலையமாகவும் விளங்கிவருகிறது.

ரஹ்மான்களை உருவாக்கும் கல்லூரி!

கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தபோது, கண்ணாடி இழை பொருத்தப்பட்ட தனி அறைகளில் கீ போர்டு வாசித்தபடி இருந்தார்கள் சில மாணவர்கள். அவை பிராக்டிஸிங் ரூம்ஸ். அவற்றைக் கடந்து கல்லூரியின் முகப்புக் கதவைத் திறந்தவுடனேயே, எங்கிருந்தோ வந்த பியானோவின் இசை எங்கள் இதயத்தின் கைபிடித்து, அதன் திசைநோக்கி அழைத்துச் சென்றது. தரைத்தளத்திலிருக்கும் ரஷ்யன் பியானோ ஸ்டூடியோவிலிருந்து, `கலைநயமிக்க பியானோ மாஸ்டர்' சுரோஜீத் சாட்டர்ஜியின் (Surojeet Chatterji) மாணவர்கள் இசைக்கும் மெல்லிசைதான் அது. அந்த ஸ்டூடியோ சுவரில் `The World's Best' என்ற விருதைக் கையில் வைத்தபடி சிறுவன் லிடியன் நாதஸ்வரம் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. ஆம், செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் ஒரேநேரத்தில் இரு கைகளால் இரண்டு பியானோக்களை வாசித்து, அனைவரையும் கவர்ந்த லிடியன் நாதஸ்வரம், பியானோ பயின்றது இந்த ஸ்டூடியோவில்தான். 2019-ல் லிடியன் தனது 14 வயதில் `The World's Best' பட்டம் வென்றபோது, அவரை அழைத்துப் பாராட்டு விழா நடத்தியிருக்கிறார் ரஹ்மான்.

ரஹ்மான்களை உருவாக்கும் கல்லூரி!

கல்லூரியின் ஜி.ஆர்.ஓ கார்த்திகேயன் சொல்வதைக் கேட்டுக்கொண்டே, சூஃபி இசை கற்பிக்கும் கவாலி அறைக்குள் நுழைந்தோம். இந்துஸ்தானி பாரம்பர்ய இசைக்கலைஞரும், உருதுப் பாடகர்-பாடலாசிரியருமான முன்னா ஷௌகத் அலி (Munna Shaokath Ali), ஆர்மோனியம் வாசித்தபடி பாடிக்கொண்டிருக்க, மாணவர்களும் பின்தொடர்ந்து இசைத்துக்கொண்டிருந்தனர். இந்த அறையில்தான், இந்தியாவிலேயே சூஃபி இசையை முறைப்படி கற்றுக்கொடுக்கும் முதல் வகுப்பு தொடங்கப்பட்டிருக்கிறது.

அருகிலிருக்கும் அறையில், கிட்டாரிஸ்ட் மாஸ்டர் மேட் பேக்கனின் (Matt Bacon) கிட்டார் வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதனருகில் வரிசையாக பியானோ வாசித்துப் பழகும் தனியறைகள் மாணவர்களுடன் நிரம்பியிருந்தன.

முதல்தளத்தில் டிரம்ஸ் ஸ்டூடியோ, ஜெயன்ட் பியானோ, வயலின், மியூசிக் கம்போஸிங் அறை, வோக்கல் அறை என எல்லாமே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தன. அதன் மேற்தளத்தில், இசைக் கச்சேரிகள் நிகழ்த்தும் மிகப்பெரிய இண்டோர் ஆடிட்டோரியம் விரிந்திருந்தது.

ரஹ்மான்களை உருவாக்கும் கல்லூரி!

அனைத்தையும் கண்டு லயித்த பின்பு, கல்லூரியின் திட்டத் தயாரிப்புத் தலைவர் ஜோதி நாயரைச் சந்தித்துப் பேசினோம். ``நம் நாட்டில் நிறைய குழந்தைகள் கலைத் திறமையுடன் இருக்கிறார்கள். ஆனால், அந்தத் திறமையை முறைப்படி கற்றுக்கொண்டு மெருகேற்றும் வகையில் தகுந்த தொழில்நுட்ப வசதிகள் இல்லை. பலருக்கு வழிகாட்டுதல்களும் கிடைப்பதில்லை. இதை உணர்ந்துதான் அனைத்து இந்தியக் குழந்தைகளும், அனைத்து வகையான இசைத் தொழில்நுட்பங்களையும் கற்று உலக அளவில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக 2008-ம் ஆண்டு கே.எம்.இசைக் கல்லூரியைத் தொடங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்தியாவின் தலைசிறந்த மியூசிக் மாஸ்டர்களைக் கொண்டு, உலகின் அத்தனை வகையான முன்னணி இசைக்கருவிகளையும் நம் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் வசதி வாய்ப்பை இங்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறார். முழு நேரம், பகுதி நேரம், ஆன்லைன் கோர்ஸ் என ஐந்து வயதுக் குழந்தைகள் முதல் அனைவருக்கும் வயது வித்தியாசமின்றி இசை கற்பிக்கப்படுகிறது. இங்கு ஃபவுண்டேஷன், டிப்ளோமா-1, டிப்ளோமா-2 என மூன்றாண்டு இசைப் பயிற்சி பெற்ற மாணவர்கள், இறுதியாண்டுப் படிப்பை லண்டனில் போய்ப் படித்து முடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் டாக்டரேட் பட்டம் பெற்ற அதே லண்டன் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி மாணவர்களும் இறுதி ஆண்டைப் படித்து முடிக்கும் வகையில்தான் அந்தப் பல்கலைக்கழகத்துடன் கே.எம்.கல்லூரியை இணைத்திருக்கிறார்'' என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் லிடியன்
ஏ.ஆர்.ரஹ்மானுடன் லிடியன்

கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவர்கள் சிலரிடம் உரையாடினோம். ``மியூசிக்கில் ஆர்வம் இருந்தால் மட்டும் போதும், இந்தக் கல்லூரியில் படிக்க வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை. எந்த நேரத்திலும் எந்த வகையான இசைக்கருவிகளையும் கற்றுக்கொள்ள எங்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். இதே படிப்பை வெளிநாடுகளில் படிக்க வேண்டுமென்றால் பல மடங்கு செலவாகும். ஒப்பீட்டளவில் குறைந்த கட்டணத்தில் தமிழ்நாட்டிலேயே எல்லாவற்றையும் கற்கிறோம்’’ என்றனர்.

இதுதவிர, ஏ.ஆர்.ரஹ்மானின் `சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா' மூலம், சமூக மற்றும் பொருளாதாரரீதியில் பின்தங்கியிருக்கும் இசைத்திறன்கொண்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசப் பயிற்சியை கே.எம்.மியூசிக் கன்சர்வேட்டரி கொடுத்து

வருகிறது. சமீபத்தில் `விக்ரம்' படப் பாடலைப் பாடி பிரபலமான விழிச்சவால் கொண்ட பாடகர் திருமூர்த்தியை, கமல்ஹாசன் இங்குதான் இலவசமாக இசை கற்கச் சேர்த்திருக்கிறார்.

நூற்றுக்கணக்கான வருங்கால ரஹ்மான்கள் இந்த இசைக் கல்லூரியில் உருவாகிக்கொண்டிருக்கின்றனர்.

எல்லாப் புகழும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே!'