Published:Updated:

``எமினம் என்ற இசைக் கலைஞனுக்கு `ஸ்டான்'கள் சார்பாக வாழ்த்துகள்!" #HBDEminem

எமினம்

பாப் பாடகரான மார்ஷல் ப்ரூஸ் மாதெர்ஸ் (எ) எமினம் பற்றிய பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

``எமினம் என்ற இசைக் கலைஞனுக்கு `ஸ்டான்'கள் சார்பாக வாழ்த்துகள்!" #HBDEminem

பாப் பாடகரான மார்ஷல் ப்ரூஸ் மாதெர்ஸ் (எ) எமினம் பற்றிய பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

Published:Updated:
எமினம்

டாக்டர் ட்ரே சொல்லிசையில் (ராப்) தேர்ந்தவர். அவர் ஸ்லிம் ஷேடி (SLIM SHADY) என்கிற ஒரு சொல்லிசை ஆல்பத்தைக் கேட்கிறார். அதுவரை ராப்பில் பேசாத, அல்ல பேசத் தயங்கிய அத்தனை அம்சங்களும் அதில் அடங்கியிருந்தன. ட்ரே அதைக் கேட்டபின் அசந்துபோய், உடனே அந்தப் பாடகரை அழைக்கிறார். வந்தவரைப் பார்த்து மேலும் அதிர்ச்சியடைகிறார். 'ராப்' அப்போது கறுப்பினத்தவரின் இசையாகவே கருதப்பட்டது. ஆகவே, ஆல்பத்தைப் பாடியவர் கறுப்பினத்தவராக இருப்பார் என எண்ணியிருந்தார். வந்தவரோ, ஒரு வெள்ளையர்!

எமினம்
எமினம்

அவரது அடுத்த ஆல்பத்தை இவர் தயாரிக்க முடிவுசெய்கிறார். எல்லோரும், 'ட்ரே ஒரு முட்டாள்தனமான காரியத்தைச் செய்கிறார்' என ஆருடம் கூறினார்கள். ஆனால், ட்ரே அவன்மேல் வைத்திருந்த நம்பிக்கையில் 'ஸ்லிம் ஷேடி எல்.பி' என்ற ஆல்பத்தை வெளியிட்டார். கிட்டத்தட்ட 30 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. மார்ஷல் ப்ரூஸ் மாதெர்ஸ், 'எமினம்' என்கிற ராப் இசைக் கடவுளாக உலகுக்கு அறிமுகமான தருணம் அது. அந்த சொல்லிசை மன்னனின் பிறந்தநாள் இன்று.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எல்லோருக்கும் கடந்துவந்த பாதை என்ற ஒன்று இருக்கும். பாதை எந்தளவுக்குக் கடினமானக இருக்கிறதோ, சேரும் இடம் அந்தளவிற்கு அழகாக இருக்கும். எமினமின் பாதையும் ஆரம்பத்தில் பிரச்னைகளோடு பிணைந்திருந்ததுதான். அவர் கடந்து வந்த அந்த முட்கள் நிறைந்த பாதைதான், எமினமின் திறமையை மெருகேற்றிக்கொள்ள உரமாகவும் அமைந்தது.

எமினம்
எமினம்

எமினம் 18 மாதக் குழந்தையாக இருக்கும்போதே, தந்தை அவனை விட்டுச் செல்கிறார். குழந்தையைத் தன்னுடன் தூக்கிக்கொண்டு டெட்ராய்டில் (Detroit) சாதாரண உழைக்கும் வர்க்கம் இருக்கும் பகுதியில் குடிவருகிறாள், அவனது தாய். கறுப்பினத்தவர்கள் வாழும் அப்பகுதியில், அவர்கள் மட்டுமே வெள்ளையர்கள். எனவே, அது பிரச்னையாக உருவெடுக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இனவெறி தாக்குதல்கள், மோசமான கேலிகளுக்கு உள்ளாகிறான், எமினம். ஒருமுறை சக மாணவர்களாலேயே தாக்கப்பட்டு, ஒரு வாரம் கோமாவில் கிடக்கிறான். விளைவு.. கேட்கும் திறன், பார்க்கும் திறன்களில் பாதிப்பு. யாருடனும் ஒன்றாத குணம் மற்றும் தனிமை. கிட்டத்தட்ட இருபது பள்ளிகள் மாறுகிறான், பல வீடுகளும் மாறுகிறார்கள். பிரச்னைகள் ஏறிய வண்ணம் இருக்க, அவன் தாய் போதைக்கு அடிமையாகிறாள். எல்லாமே அவனுக்குப் பிரச்னையாகவே தெரிகிறது, தாய் உட்பட! 'அனைத்து தாய்களும் நல்லவர்கள், என் தாயைத் தவிர!' என்று வேதனையுடன் ஒலித்திருக்கிறது, எமினமின் குரல். அப்போதுதான் இசையானது அவன் வாழ்க்கையில் நுழைகிறது. குறிப்பாக, ஹிப்-ஹாப் இசை!

எமினம்
எமினம்

சொல்லிசை மீது ஆர்வம் தொற்றிக்கொள்ள, ராப் பேட்டில் (RAP BATTLE) நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று, தனக்கும் சொல்லிக்கொடுக்குமாறு கேட்கிறான். எவரும் மதிக்கவில்லை. ஒவ்வொரு முறை ராப் பேட்டிலுக்காக இவன் மேடையேறியபோதும் தூற்றல்களே இவனை வரவேற்றன. அவனுக்கோ வார்த்தைகள் வர மறுத்தன. இருந்தும், அந்தத் தூற்றல்களை கைதட்டல்களாக மாற்ற ஒரே வழிதான் இருக்கிறது என்பதை உணர்ந்தான். ஜெயிக்கவேண்டும். அதற்கு, அபாரமாக உழைக்கத் தொடங்கினான்.

அவன் அகராதியைப் புரட்டத் தொடங்கினான். அகராதிதான் எமினமுக்கான சொல்லிசைக் கல்வி. எந்த வார்த்தை எதனோடு RHYME ஆகிறது என்பதை அறிந்துகொண்டு, அந்த வார்த்தையின் அர்த்தத்தோடு ஒரு நோட்டில் எழுதிக்கொள்வான். இப்போது எமினம் பாடல்களைக் கேட்கும் பலரும் அவரின் மொழி ஆளுமையைக் கண்டு வியக்கக்கூடும். அதற்கெல்லாம் விதை போட்டது, இளம் வயதில் படித்த அகராதி. RHYME ஆகும் வார்த்தைகளைக் கோத்து அவனே பாடத் தொடங்குவான். அவனுடைய அந்த நாள்கள் இசையில் தொடங்கி, இசையிலேயே முடிந்தன.

எமினம்
எமினம்

தன் திறமையை மேலும் வளர்க்க பல ராப் பேட்டில்களில் கலந்துகொண்டான். தூற்றல்களையும் மீறி, தன்னை நிரூபிக்கத் தொடங்கினான். வாழ்க்கையின் தாக்குதல்களை எதிர்கொண்டவனுக்கு இப்போது அது பெரிதாகத் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகள் அவன் பக்கம் திரும்பின.

நண்பர்கள் சிலர் கொடுத்த உற்சாகத்தில், 'இன்ஃபினிட்டி' என்ற ஆல்பத்தை வெளியிடுகிறான். ஆனால், அதை யாரும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. வாழ்க்கை நடுநிலையாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில், வேறொரு பக்கம் திருப்பம் அடைகிறது. தனது காதலியை மணந்துகொண்டு ஒரு பெண் குழந்தைக்குத் தகப்பனாகிறான், எமினம். முதல் ஆல்பம் சரியாகப் போகவில்லை. குடும்பத்தையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு. பணத் தேவை அதிகமானது.

தன் குழந்தைக்குப் பிறந்தநாள் பரிசுகூட வாங்கித்தர முடியவில்லை என்ற விரக்தியில், தற்கொலைக்குத் துணிந்து, பிறகு, மகளை நினைத்து அந்த முடிவிலிருந்து பின்வாங்குகிறான். சாதாரண வேலைக்கும் போக விருப்பமில்லை; சொல்லிசை மீதே அவன் பேராசை கொண்டிருந்தான். மீண்டும் ராப் பக்கம் செல்கிறான். தோல்வி குறித்த பயத்தோடும், கோபத்தோடும் 'ஸ்லிம் ஷேடி' ஆல்பத்தை உருவாக்குகிறான். ‘ஸ்லிம் ஷேடி’ எமினமின் குணத்திற்கு எதிர்முனையில் இருக்கும் ஒரு பாத்திரமாக அவரே உருவாக்கியது. அந்தப் பாத்திரம் சமூகவிரோதச் செயல்களைச் செய்யக்கூடிய காட்டுமிராண்டி பாத்திரம். இதுவரை எமினம் ‘கடந்து வந்த பாதை’ தோற்றுவித்த பாத்திரமும் எனலாம்!

எமினம்
எமினம்

பிறகு, ஒவ்வொரு ஆல்பமும் சாதனை படைக்க, எமினமுக்கென தனி ரசிகர் கூட்டம் உருவானது. 'என்னைப்போல பர்ஷனல் ராப்பர் இங்கு எவரும் இல்லை' இது எமினமே சொன்ன வார்த்தைகள். உண்மைதான். எமினமின் பாடல்கள் அனைத்திலும் வாழ்க்கை குறித்த வரிகளால் நிரம்பியிருக்கும். அதில் உண்மை இருக்கும். இத்தனை தீவிர ரசிகர்கள் எமினமிற்கு இருக்கக் காரணமும் அதுதான்.

மற்றவர்களின் ராப்கள் நமக்கான குரல்களாக இருக்கும். எமினமின் பாடல்கள் நம்முடைய குரல்களாகவே ஒலிக்கும். அவரின் பாடல்களில் இடம்பெறும் வரிகள் பெரும்பாலும் அவரின் வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பாகவே இருக்கும். அங்கே நல்ல பக்கங்கள் மட்டுமே இருந்திருந்தால், எமினமை மற்றுமொரு ராப்பர் என்று கடந்து சென்றிருப்போம். ஆனால், அங்கே அவனின் கோரப் பக்கங்களும், மனிதனின் ஆழ்மன இச்சைகளும் சேர்ந்தே நிரம்பியிருக்கும். அதுதான் எமினமை நம்முடைய குரலாக எடுத்துகொள்ள காரணம்.

எமினமின் தீவிர ரசிகர்கள் தங்களை 'ஃபேன்' என்று அழைத்துக்கொள்ள மாட்டார்கள். மாறாக, தங்களை ‘ஸ்டான்’ (STAN) என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள். காரணம், ‘மார்ஷல் மாதர்ஸ்’ ஆல்பமில் இடம்பெற்ற ஸ்டான் (STAN) என்ற பாடல். அவரது அதிதீவிரமான ரசிகர் ஒருவர் எழுதும் கடிதம்தான், அந்தப் பாடலின் தீம். எமினம் தன் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை அந்த ரசிகரின் கண்ணோட்டத்தில் விவரித்திருப்பார். அந்தப் பாடலில் வரும் ரசிகருக்கு ஸ்டான் எனப் பெயர் சூட்டிருப்பார், எமினம். அந்தப் பாடலைப் பார்த்து எமினமின் ரசிகர்கள் நெகிழ்ந்து, தங்களையும் 'ஸ்டான்' என்று செல்லமாக அழைத்துக்கொண்டார்கள்.

எமினம்
எமினம்

அவருடைய பாடல்களுக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் இது. பின்பு நடந்ததுதான் சுவாரஸ்யமான விஷயம். ஸ்டான் என்ற வார்த்தை ஆக்ஸ்போர்டு (OXFORD) அகராதியிலும் சேர்க்கப்பட்டது. அதற்கு அர்த்தமாக, 'ஒருவனின் அதிதீவிர ரசிகன்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆம்! எமினமிற்கு ரசிகர்களைவிட 'ஸ்டான்ஸ்’தான் அதிகம்.

எமினம் என்றால், மோட்டிவேஷன். 'இவரின் பாடல் உங்களை மோட்டிவேட் செய்யவில்லை என்றால், யாராலும் உங்களை மோட்டிவேட் செய்ய முடியாது' என்பது எமினம் பற்றிச் சொல்லப்படும் கூற்று. மோட்டிவேஷன் பாடல்களில் எமினம் பாடல்கள் இல்லையெனில், அந்தப் பட்டியல் முழுமை பெறாது. குறிப்பாக, ‘லூஸ் யுவர்செல்ஃப்’, ‘கிங்ஸ் நெவர் டை’ போன்ற பாடல்கள் ஆல்டைம் பெஸ்ட் மோட்டிவேஷன் பாடல்கள்!

பொதுவாக, ராப் இசைக்கு ஆஸ்கர் என்பதெல்லாம் நடக்காத காரியம். ஆனால், '8 மைல்’ படத்தில் இடம்பெற்ற ‘லூஸ் யுவர்செல்ஃப்’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டது.

இப்போதுள்ள சில ராப்பர்கள் வேகமாகப் பாடும்போது, 'mumbling' செய்வதுண்டு. அதாவது, வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்காமல் கடந்து செல்வது. எமினம் இதிலிலும் தனித்தவர். வேகமாகப் பாடுவதில் மட்டும் எமினம் கவனம் செலுத்தமாட்டார். அதிக வார்த்தைகள் கொண்ட ஜிங்கில் என கின்னஸ் சாதனை படைத்த ‘ராப் காட்’ பாடலில் நடுவில் ஓர் இடத்தில் 16.45 விநாடிகளில் 101 வார்த்தைகளைப் பாடியிருப்பார், எமினம். அந்தப் பாட்டை நீங்கள் வேகத்தைக் குறைத்து கேட்டுப்பாருங்கள். அதில் உள்ள வார்த்தைகள் எல்லாம் அச்சுப் பிசிறில்லாமல் தெளிவாக உச்சரிக்கப்பட்டிருக்கும். அதுதான், எமினம். அதனால்தான் அவர், ‘ராப் காட்’.

எமினம்
எமினம்

ஒரு ஆஸ்கர், 14 கிராமி விருதுகளையெல்லாம் தாண்டி அவர் கடந்து வந்த பாதைதான் அவரை இந்தளவு கொண்டாடச் செய்கிறது. இன்றும் எங்கோ ஒரு மூலை முடுக்கில் இருக்கும் தெருவில் சொல்லிசை பாடிக்கொண்டிருப்பவருக்கு இவர் வாழ்க்கை நம்பிக்கையூட்டுகிறதென்றால், அதுதான் எமினமின் வெற்றி. அந்த வகையில், எமினமின் கதை நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேஷன்!

உங்களின் ‘ஸ்டான்’களின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எமினம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism